கலைக்களஞ்சியம்/அலெர்ஜிக் அடித்தோலழற்சி
அலெர்ஜிக் அடித்தோலழற்சி (Allergic Dermatitis) இது சிறு பிள்ளைகளிலிருந்து மிகவும் வயதானவர்கள் வரையிலும் காணப்படும். சில பொருள்கள் சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை (பார்க்க : அலெர்ஜி). உடம்பில் ஏதாவது ஒரு பாகத்தில் சிறு காயம் ஏற்பட்டவுடன் அது ஆறாமல் மீண்டும் மீண்டும் புண்ணாகக் கிளைத்துக்கொண்டே இருக்கும். இப்படிப் புண்ணாக ஆனபிறகு மிக எளிதில் உடம்பின் பல பாகங்களில் இந் நோய் ஏற்படக் காரணமாகிறது. இந்த நோய் கழுத்தின் பிடரிப் பாகத்திலும், கீல்களிலும், முன்னங்கைக் குழியிலும், முழங்காலின் பின்புறத்திலுள்ள குழியிலும், பாதங்களின் மேல்பாகங்களிலும் காணப்படும். நோய் முதலில் காணும்பொழுது நமைச்சல் அதிகமாக இருக்கும். நமைச்சல் ஏற்பட்டவுடன் அதிலிருந்து தண்ணீர்போன்ற கசிவு வெளிப்படும். சிறு குழந்தைகளுக்கு உடம்பு முழுவதுமே இம்மாதிரி ஆகலாம். கசிவது நின்றபின் தோல் காய்ந்து, கைகளையும் கால்களையும் மடக்க முடியாமல் தொல்லையாக இருக்கும். அந்தச் சமயத்தில் தோலைப் பார்த்தால் காயம் வந்து ஆறுவதற்கு முன் சிவந்து இருப்பதுபோலிருக்கும். பின்பு செதில் செதிலாகக் காணப்படும். அதன் பிறகு தகுந்த சிகிச்சை செய்தாலும் அல்லது தானாகவும் அடியில் ஆறி, இந்தச் செதில் போலிருக்கும் பொருக்கு விழுந்துவிடும். சில சமயங்களில் நோய் அறவே குணமாகாமல் ஏதாவது ஒரு பக்கத்தில் நிலையாக நின்று விடலாம்.
நோய்க்கூறு : முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்களாவன : நோய் உடம்பின் மடக்கும் பாகங்களில் இருக்கும். நோய் வெகுநாள்பட்டதாக இருக்கும். நமைச்சல் அதிகமாக இருக்கும். தோலிலே காணப்படும் செதில்களைச் சோதித்துப் பார்த்தால் அதில் நுண்ணுயிர் ஒன்றும் இராது. மேலும் இந்த நோயுள்ளவருடைய தாய் அல்லது தந்தைக்கு இந்த நோயோ அல்லது காசமோ, அர்ட்டிக்கேரியா அம்மையோ இருந்திருக்கலாம். சிகிச்சை செய்வதற்கு முன் நோய் எக்காரணத்தினால் ஏற்பட்டதென்று கண்டுபிடிக்க வேண்டும். இது சற்றுக் கடினமானது. ஏனெனில் சில சமயங்களில் தோட்டங்களில் இருக்கும் செடிகளினால் கூட இந்த நோய் ஏற்படலாம். அல்லது சில சாயங்களினாலும், பெண்கள் தடவிக்கொள்ளும் முகப்பொடியினாலும் ஏற்படலாம். சிறு பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் ஒத்துக் கொள்ளாதது முக்கியமான காரணம். சற்று வயதான பிறகு முட்டை, மீன், இறால், பாகற்காய் இவைகள் ஒத்துக்கொள்ளாமை காரணமாக இருக்கின்றது. எதனால் ஏற்படுகிறதோ அதை விலக்கி விட்டால் நோய் தானாகவே குணமாகும். இருந்தாலும் நோய் குணமாகும் வரை உணவில் மீன், இறால், நல்லெண்ணெய், கடுகு, பாகற்காய், வெண்காயம், வெள்ளைப்பூண்டு முதலியவற்றைத் தள்ளி வைப்பது நல்லது. நோய் மிகவும் கடுமையாக இருக்கும்பொழுது வெறும் பழச்சாறும், பாலும் மட்டும் சாப்பிட்டு வந்தால் நோய் விரைவில் குணம் அடையும். பிறகு ஒவ்வோர் உணவாகக் கூட்டி வரவேண்டும். அதாவது முதல் 4, 5 நாட்களுக்கு ஆரஞ்சுப் பழச் சாறும், பாலும் மட்டும் சாப்பிடுவது. இப்படிச் சாப்பிட்டு, நோய் அதிகமாகா விட்டால் தக்காளிப்பழம் சேர்த்துக்கொள்ளலாம். இன்னும் 4, 5 நாட்கள் கழிந்த பிறகு சோறும் உண்ணலாம். பிறகு ஆப்பிள் பழம் உண்ணலாம். இப்படி 5, 6 நாளைக்கு ஒரு முறை ஒவ்வோர் உணவுப் பொருளாகக் கூட்ட வேண்டும். எப்பொழுதாவது நோய் அதிகப்படுமானால் கடைசியாகச் சேர்த்துக் கொண்ட உணவினால் என்று தீர்மானித்து அதை நீக்கிவிட வேண்டும். நோய் கடுமையாக இருக்கும்பொழுது தோலுக்குத் துன்பங் கொடுக்காத லோஷனைத் தடவிப் பிறகு சிறிது குணம் கண்ட பிறகு களிம்பு தடவ வேண்டும். ரெ. சு.