கலைக்களஞ்சியம்/அலோபதி

அலோபதி (Allopathy) என்பது பண்டைக் காலமுதல் மேனாட்டில் நடந்துவரும் வைத்திய முறைக்கு வழங்கிவரும் பெயராகும். இந்தப் பெயரைக் கொடுத்தவர் ஜெர்மன் நாட்டிலிருந்த ஹானிமன் என்பவர். அவர் நோய்ச் சின்னங்களை ஒத்த சின்னங்களை நோயில்லாதவரிடம் உண்டாக்கும் மருந்துகளை நோயாளிக்குக் கொடுத்துச் சிகிச்சை செய்தபடியால் தமது வைத்திய முறைக்கு ஹோமியபதி (ஹோமேர்-ஒத்த, பதி-சிகிச்சை முறை) என்றும், பண்டைக்கால முதல் வழங்கிவந்த வைத்தியமுறை நோய்ச் சின்னங்கட்கு வேறுபட்ட அல்லது எதிர்த்த சின்னங்களை உண்டாக்கும் மருந்துகளைக் கொடுத்துச் சிகிச்சை செய்வதாகக் கருதியபடியால் அம்முறைக்கு அலோபதி (அலோ-வேறு பட்ட, பதி-சிகிச்சை முறை) என்றும் பெயரிட்டார். இந்த அலோபதி முறையே தற்காலத்தில் பொதுவாக உலக மெங்கும் வழங்கிவரும் விஞ்ஞான வைத்திய முறையாகும். மூலிகைகளைக் கொண்டும், ஆயுதங்களைக் கொண்டும், மின்சாரம், எக்ஸ்கதிர், தேகப்பயிற்சி போன்றவற்றைக் கொண்டும் செய்யப்பெறும். பலவிதமான சிகிச்சைகள் எல்லாம் அலோபதி முறையுள் அடங்கும். அலோபதி என்னும் மேனாட்டு வைத்திய முறையின் தத்துவத்தையே இந்திய நாட்டிலுள்ள ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யுனானி ஆகியவைகளும் உடையனவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அலோபதி&oldid=1503197" இலிருந்து மீள்விக்கப்பட்டது