கலைக்களஞ்சியம்/அவசரச்சட்டம்

அவசரச்சட்டம் (Ordinance) : சட்டசபையால் இயற்றப்படாமல் ஆட்சியிலுள்ள அதிகாரிகள் ஓர் அவசர நிலைமையை முன்னிட்டுப் பிறப்பித்து, உடனே அமல் செய்யும் உத்தரவுகளுக்கு அவசரச் சட்டங்கள் என்று பெயர். இங்கிலாந்தில் இடைக்காலத்தில் இவ்வகைச் சட்டங்கள் அரசனால் பிறப்பிக்கப்பட்டன. பல காரணங்களால் அந்நாட்டில் பிற்காலத்தில் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கும் முறை குறைந்து வந்துள்ளது. இங்கிலாந்தில் இவ்வகைச் சட்டங்களைத் தற்காலத்தில் கவுன்சில் உத்தரவுகள் என்று கூறுகின்றனர். இவற்றை மந்திரிசபையே இயற்றுகிறது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபோது ஏற்பட்ட அவசரச் சட்டங்கள் பல. தேசிய இயக்கத்தை அடக்கவும், போர்க்கால அவசரத்தை முன்னிட்டும் பல அவசரச் சட்டங்கள் இயற்றப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகும் இந்தியாவில் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. இவற்றைச் சட்டசபை கூடிய விரைவில் அங்கீகரிக்கவேண்டும் என்ற விதி இந்திய அரசியல் சட்டத்தின் 213ஆம் ஷரத்து ஆகும். 'ஜனநாயக அரசியலில் சட்டசபையாலன்றி நிருவாகக் குழுக்களால் பிறப்பிக்கப்படும் அவசரச் சட்டங்கள் மிகக் குறைவாயிருக்கவேண்டும். இல்லையேல் அது யதேச்சாதிகாரமாக மாறிவிடும் என்பது அரசியல் நூல் கருத்து.