கலைக்களஞ்சியம்/அல்தூசியஸ்
அல்தூசியஸ் : ஜோஹானஸ் அல்தூசியஸ் என்னும் ஜெர்மன் அறிஞர் 1603-ல் அரசியல் முறைகளின் சுருக்கம் என்னும் நூலை இயற்றினார். அவர் இராச்சியத்தை வரம்பற்ற அதிகாரத்தின் நிலைக்களமாகக் கருதவில்லை. குடும்பம், நகரம், மாகாணம், நாடு என்பவைபோன்ற சமூக வரிசையில் தலைமையானது இராச்சியம் என்று அவர் கருதினார். “இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டவுடனேயே சிறு சமூகங்களின் உரிமைகள் மறைந்துபோகமாட்டா; சிறு சமூகங்களின் அதிகாரத்திற்கு உதவியாகத் தமது பரந்த கடமைகளைச் செய்யவேண்டியதற்குத் தேவையான அளவு அதிகப்படி உரிமை மட்டும் இராச்சியத்துக்கு உண்டு ; மக்களிடையே ஏற்படும் ஒரு சமூக ஒப்பந்தத்தின் மூலமே இராச்சியம் ஏற்படுகிறது” என்று அவர் கூறுகிறார். ஆயினும் ஹாப்ஸ் கூறுவதுபோல இராச்சியம் ஒப்பந்தத்தின் மூலம் செயற்கை முறையில் அமைந்தது என்று கூறாமல் மனிதனுடைய இயற்கைப் பண்பிற்கேற்ப அமைந்தது என்பர். ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளும் உரிமை, சிறு சமூகத்துக்கு இயல்பாக அமைந்துள்ள, நீக்க முடியாத ஓர் உரிமையாகும் என்பது. அவர் கருத்து. அவர் கருத்துப்படி இரண்டு சமூக ஒப்பந்தங்கள் உண்டு. இராச்சியத்தை அமைப்பது முதல் ஒப்பந்தம் ; அரசாங்கத்தை அமைப்பது இரண்டாவது ஒப்பந்தம். ஆகவே அரசாங்கத்திற்கு அவர் கருத்துப்படி ஆதிபத்தியம் (Sovereignty) இல்லை. மேலும் பொதுமக்கள் நல்வாழ்வுக்குச் சாதனமாக உதவும் பல பல சிறு குழுக்கள் முதலிலிருந்தே சுயேச்சையுடன் தோன்றி வளர்ந்தவையாதலால் நாட்டு அரசாங்கத்துக்கு அவற்றை அடக்கவோ முறிக்கவோ உரிமையில்லை என்ற இவரது கொள்கை பின்னர் கீர்க்கி (Gierke), மெயிட்லண்ட் (Maitland)போன்ற ஆசிரியர்களால் விளக்கி விவரிக்கப்பட்டது.