கலைக்களஞ்சியம்/அல்பெரூனி

அல்பெரூனி : அபுரிஹன் அல்பெரூனி என்பார் குவாரிசம் (Khwarizm) நாட்டில் பிறந்த பெரிய அரபு அறிஞர். இவர் சமஸ்கிருத மொழியைக் கற்று, அதில் தேர்ச்சி பெற்றார். விஞ்ஞானம், தத்துவ ஆராய்ச்சி, கணிதம், வானவியல், வரலாறு முதலிய பல கலைகளில் வல்லவர். கஜினி முகம்மதின் இந்தியப்படையெடுப்புக் காலத்தில் அவனுடன் இந்தியாவுக்கு வந்து பஞ்சாபில் வசித்து வந்தார். இந்துக்களின் பண்பாட்டை நன்றாகத் தெரிந்துகொண்டார். உபநிடதங்கள், பகவத்கீதை முதலிய தத்துவ நூல்களைப் படித்துப் பல துறைகளில் மேம்பாடடைந்திருந்த இந்தியப் பண்பாட்டை மெச்சிக் கிதாப்-உல்-ஹிந்து என்ற நூலை கி. மு. 1030-ல் எழுதினார். பதினோராம் நூற்றாண்டில் வட இந்தியாவின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளக் கிதாப் மிகவும் பயன்படும் நூல். இவர் சமஸ்கிருத மொழியிலிருந்து பல நூல்களை அரபு மொழியில் பெயர்த்தார்.

இவர் முகம்மதுடன் போர் புரிந்த பல இந்து அரசர்களின் வீரத்தைப் புகழ்ந்து எழுதியிருக்கிறார். சிறப்பாக இவருடைய மனத்தைப் பாடிண்டா, முல்தான் முதலிய இடங்களில் ஆட்சி புரிந்த இந்து ஷாஹி அரசர்களின் நீதி, கம்பீரமான தோற்றம், நடத்தை முதலியவை கவர்ந்தன.

அல்பெரூனி காலத்தில் வடமேற்கு இந்தியாவில், பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்துவந்தார்கள். முகம்மதின் கொடிய செய்கைகளால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகைமை அதிகரித்ததாகவும், இந்து அறிஞர்கள் பஞ்சாப் நாட்டை விட்டுக் கீழ்ப் பிரதேசங்களுக்குச் சென்றுவிட்டதாகவும் அல்பெரூனி குறித்திருக்கிறார். தங்கள் பண்பாட்டுக்கு ஈடான பண்பாடு வேறு நாடுகளில் இருக்காது என்ற மனப்பான்மையை இந்துக்கள் கொண்டிருந்தது அவருக்கு வருத்தமாயிருந்தது வேறுபாடில்லாமல் மற்ற மதத்தினர்களின் மேன்மையையும், பண்பாட்டையும் போற்றி எழுதின அல்பெரூனி அக்காலத்துச் சிறந்த அறிஞர்களில் ஒருவர். கே. ஆர். வெ.