கலைக்களஞ்சியம்/அல்-மான் சூர்
அல்-மான் சூர்(712-775) முகம்மது. நபியின் மாமனான அப்பாசின் குலத்தோன்றல்களான காலிபுகளில் இரண்டாவது மன்னன். இவனது ஆட்சிக் காலம் 754-775. இவன் முகம்மதிய அரசை நன்றாக நிலைபெற அமைத்தான். 762-ல் இவன் பக்தாது நகரை அமைக்கத் தொடங்கினான். இவன் பாரசீகர்களை ஆதரித்தான். பார்மிசைடுகள் இவனுடைய மந்திரிகளாயிருந்தனர்.
அல்-மான் சூர்(?-1002): ஸ்பெயினில் இடைக் காலத்தில் முகம்மதிய மன்னர்கள் ஆண்டுவந்தனர். அவர்களில் 11-ம் அல்-ஹகாம் என்னும் அரசனிடம் வேலை பார்த்து வந்தவன் அல்-மான் சூர். 11-ம் ஹீஷாம் என்னும் சிறுவன் அரசனாக இருந்தபோது இவன் இரண்டாந்தரப் படைத்தலைவனா யிருந்தான். அப்போது வட ஸ்பெயினிலிருந்த கிறிஸ்தவர்களை எதிர்த்து, இவன் படையெடுத்துச் சென்றான் ; திரும்பி வந்ததும் அரசனுடைய பிரதிநிதியை நீக்கிவிட்டுத் தானே அந்தப் பதவியை மேற்கொண்டான். சைனியத்தையும் இராச்சிய நிருவாகத்தையும் சரிவரத் திருத்தியமைத்தான். வட ஆப்பிரிக்காவிலிருந்த முகம்மதிய நாடுகளின் மீதிருந்த ஆதிக்கத்தை நீக்கிக்கொண்டான். புலவர்களையும் கலைஞர்களையும் போற்றி ஆதரித்தான். 991-ல் பிரதிநிதி பதவியைத் துறந்தான். இவன் ஸ்பெயினில் பதவி வகித்த முகம்மதிய ஆட்சியாளர்களில் சிறந்த ஒருவன்.