கலைக்களஞ்சியம்/அழுகுதல்

அழுகுதல் (Putrefaction): இயற்கையில் நிகழும் உயிர்ப்பொருள் ரசாயன விளைவுகளில் அழுகுதல் முக்கியமானது. இது நொதித்தல் (த. க.) என்ற பொது விளைவின் வகை. பாக்டீரியா என்னும் சிற்றுயிர்கள் கரிமப்பொருள்களைச் சிதைத்து, எளிய பொருள்களாக மாற்றுவதை அழுகுதல் என்கிறோம். இதில் விளையும் ரசாயன மாறுதல்களை 1876-ல் நென்கி (Nencki) என்னும் ரசாயன அறிஞர் தெளிவாக்கினார். புரோட்டீன்கள், பாஸ்பட்டைடுகள், பிரிமிடீன்கள், புயுரைன்கள் ஆகிய பொருள்கள் அழுகுவதால் டோமெயின்கள் (Ptomaines) என்னும் நச்சுப் பொருள்கள் தோன்றுகின்றன. இவை இயற்கையிற் கிடைக்கும் ஆல்கலாயிடுகளை யொத்தவை.

புரோட்டீன்களின் அழுகல் இரு படிகளில் நிகழ்கிறது. (1) புரோட்டீன்கள் நீர் முறிந்து அமினோ அமிலங்களாக மாறுகின்றன. (2) அமினோ அமிலங்கள் உப்பு மூலங்களாக மாறுகின்றன. மற்றப் பொருள்களும் இவை போலவே கரிம மூலங்களாக மாறுகின்றன. இவற்றுள் பல மனித உடலைப் பெரிதும் பாதிக்கவல்லவை. இவற்றுள் சில பொருள்கள் கொடிய நஞ்சானவை. உயிர்ப்பொருள்கள் அழுகும் போது வீசும் கெட்ட நாற்றம் ரசாயன விளைவினால் வெளிப்படும் வாயுப்பொருள்களால் தோன்றுவது. உதாரணமாக முட்டைகள் அழுகும்போது ஹைடிரஜன் சல்பைடு வாயு வெளிவந்து நாற்றமடிக்கிறது.