கலைக்களஞ்சியம்/அழுத்திகளும் ஊதிகளும்
அழுத்திகளும் ஊதிகளும் (Compressors and blowers) : காற்றையோ, வாயுக்களையோ உயர்ந்த அழுத்தத்திற்கு அழுத்தும் அமைப்பு அழுத்தி எனப்படும். இவ்வமைப்புத் தாழ்ந்த அழுத்தத்தில் வாயுவை வெளியே அனுப்பினால் ஊதி எனப்படும். இயங்கும் விதத்தையொட்டி இது பலவகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
முன்னும் பின்னும் அசையும் அழுத்தி, திரவங்களை இறைக்கப் பயனாகும் சாதாரணப் பம்பை ஒத்தது. ஆனால் இதில் வாயுவைக் குளிர்விப்பதற்காக இதன் உருளையின் வெளியே சிறகுகள் இருக்கும். இதன் வால்வுகள் அகலமாகவும் இலேசாகவும் இருக்கும். நடுத்தர அளவுள்ள உருளைகளில் வாயுவை வெளியேற்றும் அழுத்தத்திற்கும், அது உள்ளே அனுமதிக்கப்படும் அழுத்தத்திற்கும்
உள்ள விகிதம் 7 லிருந்து 8 வரை இருந்தால் தான் சூடு அதிகமாக வெளிப்படாமல் இருக்கும். பெரிய உருளைகளில் இந்த விகிதம் 3 லிருந்து 4 வரை இருக்கும். உயர்ந்த அழுத்தங்களைப் பெற வாயுவானது படிப்படியாக அழுத்தப்படுகிறது. வாயு ஒவ்வொரு முறை அழுத்தப்பட்டதும் அதைக் குளிர்விப்பதால் உருளைகளைச் சிறியனவாக அமைக்க முடிகிறது. சதுர அங்குலத்திற்கு 50 ராத்தல் அழுத்தம் கொண்டு, நிமிஷத்திற்கு 8,000 கன அடி வாயுவை அழுத்துமாறு அமைக்கப்படும் எந்திரங்கள் மிக்க திறமையுடன் இயங்கும்.
மையவிலக்க ஊதிகளிலும், இருசோட்ட ஊதிகளிலும் (Axial flow blowers) சுழலும் தகடுகள் இருக்கும். இவை வாயுவிற்கு இயக்கச் சக்தியைத் தந்து அழுத்துகின்றன. இந்த அழுத்தம் பல படிகளில் நிகழலாம். ஒரே படியில் அழுத்தும் ஊதி நிமிஷத்திற்கு 4,500 முறை சுழன்று, ச. அங்குலத்திற்கு 6 ராத்தல் அழுத்தமுள்ள காற்றை வெளியே அனுப்பும். பல படிகள் கொண்ட ஊதிகளில் வாயுவானது நீரினால் குளிர்விக்கப்பட்டு, ச. அங்குலத்திற்கு 175 ராத்தல் வரை உள்ள அழுத்தங்கொண்ட வாயுவை வெளியே அனுப்பும். இவற்றில் பல நன்மைகள் உண்டு. இவற்றைச் சிறிய வடிவாக அமைக்கலாம். இவற்றில் அதிர்ச்சி இல்லை. இவற்றை நீராவி டர்பைனுடன் நேரே இணைக்கலாம். இவற்றிலிருந்து வாயு ஒரே சீராக வெளிவருவதோடு உயவிடும் எண்ணெய்க் கலப்பும் இல்லாமல் இருக்கும். தாழ்ந்த அழுத்தத்தில் அதிகமான காற்றை ஊத இவை மிக ஏற்றவை. அழுத்தப்பட்ட வாயுவின் தேவையில் மிக அதிகமான ஏற்றத் தாழ்வுகள் இருந்தால் இந்த எந்திரங்கள் ஏற்றவை அல்ல.
விசிறிகள் : ச. அங்குலத்திற்கு ஒரு ராத்தலுக்கும் குறைவான வாயுக்களை இயக்கப்பயன்படும் எந்திரங்கள் விசிறிகள் எனப்படும். இவற்றுள் மையவிலக்க விசிறியில் மூடியிலுள்ள ஒரு தொளையின் வழியே காற்றானது உள்ளிழுக்கப்பட்டு, விசிறியின் சிறகுகளால் உந்தப்பட்டு, அவற்றின் விளிம்புகளிலிருந்து வெளியேறுகிறது. காற்றின்மேல் தொழிற்படும் மையவிலக்க விசையால் மையத்திலுள்ள காற்று விளிம்பிற்குக் கொண்டுசெல்லப்படுகிறது. இதனால் விசிறி வேலை செய்யும்போது மையத்தை நோக்கிக் காற்றானது பாய்ந்தவண்ணம் இருக்கும். இரு சோட்ட விசிறிகளில் பல வகைகள் உண்டு. இவை சாய்வான சிறகுகளைக்கொண்டு சாய்வுமட்டத்தின் தத்துவத்தில் இயங்குகின்றன. வீடுகளில் பயனாகும் மின்சார விசிறி இவ்வகையினதே.
நேர்சுழற்சி எந்திரங்கள் : இந்தவகை அழுத்திகளில், ஊதப்படும் காற்றின் அளவு சுழற்சி வேகத்தை மட்டும் பொறுத்திருக்கும். இதிலும் பல வகைகள் உண்டு. நழுவு சிறகு எந்திரத்தில் (Sliding vane type) மையவிலக்காக அமைக்கப்படும் மோட்டாரில் தட்டையான சிறகுகள் ஆரங்களின் வழியே நழுவும். ச. அங்குலத்திற்கு 125 ராத்தல் அழுத்தங்கொண்ட காற்றை நிமிஷத்திற்கு 3,000 கன அடி ஊதும் திறனுள்ள இவ்வகை எந்திரங்கள் அமைக்கப்படுகின்றன. வேறொரு வகை ஊதியில் இணையாக உள்ள இரு தண்டுகள் ஓர் உருளைக்குள் அமைக்கப்படும். இவை இரண்டு சிறகுகளைச் சுழற்றுமாறு செய்யப்படும். இவற்றைத் தக்கபடி அமைப்பதால் எந்திரம் இயங்கும்போது தொடர்ச்சியான காற்றோட்டம் நிகழும். இவற்றின் உள்ளே உயவிடவேண்டிய அவசியமில்லை. திரவப் பிஸ்டன் வகை எந்திரத்தில் ஒரு முட்டை வடிவமான கலத்திற்குள் நீர் நிறைந்திருக்கும். இதற்குள் வாளிகளைப் போன்ற வடிவுள்ள சிறகுகளைக்கொண்ட சுழலி ஒன்று இருக்கும். கலத்தின் முட்டை வடிவினால் வாயுவானது கலத்திற்குள் உறிஞ்சப்பட்டு, அழுத்தப்பட்டு வெளி யேறுகிறது. இது ச. அங்குலத்திற்கு 75 ராத்தல் அழுத்தமுள்ள காற்றை நிமிஷத்திற்கு 3,500 கன அடி ஊதும் திறன் கொண்டது.
நூல்கள் : A. H. Church, Centrifugal Pumps and Blowers; Compressed Air Handboole published by Compressed Air and Gas Institute. பீ. எம். செ.