கலைக்களஞ்சியம்/அவுரி

அவுரி (Indigo) பழங்காலத்திலிருந்து இந்தியாவில் வழக்கத்திலுள்ள முக்கியச் சாயமான நீலி உண்டாகும் செடி. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இது வங்காளத்திலும் பீகாரிலும் மிக அதிகமாகப் பயிராகி வந்தது. செயற்கை அவுரியைத் தயாரிக்கும் முறைகள் வழக்கத்திற்கு வந்தபின் அவுரிச் சாயத் தொழில் அநேகமாக அழிந்துவிட்டது.

அவுரிச்செடி லெகுமினோசீ குடும்பத்தைச் சேர்ந்தது. வங்காளத்தில் பயிராகி வந்த அவுரிவகை இண்டி கோபெரா சுமத்ரானா (Indigofera sumatrana)

அவுரி
1. பூ
2. கனி

என்றும், சென்னையில் பயிராகிய வகை இண்டிகோ பெரா அனில் (Indigofera anil) என்றும் அழைக்கப்படும். இச்செடி சுண்ணாம்பு மிகுதியாக உள்ள மண்ணில் நன்றாக வளரும். உயர்ந்த ரக அவுரிப் பயிருக்கு நீர்ப்பாசனமும் ஓயாத கண்காணிப்பும் தேவை. இது வேனிற் காலத்தில் விதைக்கப்பட்டு, ஆவணி, புரட்டாசி மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. மேட்டு நிலங்களில் இதை ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் விதைப்பதுண்டு. செடிகள் பூக்கும் தருணமே அறுவடைக்குத் தயாரான பருவமாகும்.

செடிகளை அறுவடை செய்து, கால தாமதமின்றி அவற்றைப் பெரிய தொட்டிகளிலுள்ள நீரில் ஓர் இரவு முழுதும் ஊற வைப்பார்கள். அவுரிச் செடியில், முக்கியமாக இலையில், இண்டிகான் என்ற பொருள் உள்ளது. இது ஒரு குளுகோசைடு. செடியில் ஓர் என்சைமும் உள்ளது. செடியை நீரில் ஊறவைக்கும்போது இந்த என்சைம் இண்டிகானை இண்டாக்சில் (Indoxyl) என்னும் பொருளாக மாற்றுகிறது. இதனால் தொட்டிகளிலுள்ள நீர் மஞ்சள் நிறம் பெறும். இதை வேறு தொட்டிகளுக்குள் வடித்துக் கலக்குவார்கள். இப்போது திரவத்திலுள்ள இண்டாக்சில் காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் வினைப்பட்டு நீலியாக (குறியீடு C16H10N202) மாறுகிறது. இது நீரிற் கரையாத பொருளாகையால் கீழே படியும். இதைப் பிரித்தெடுத் துப் பிழிந்து உலர்த்திக் கட்டிகளாகப் பெறுகிறார்கள்.

விரிவான ஆராய்ச்சிகளின் விளைவாய் வான் பேயர் என்ற ஜெர்மானிய ரசாயன அறிஞர் அவுரியின் ரசாயன அமைப்பைக் கண்டறிந்தார். இதன் பின்னர் அந்நாட்டில் மலிவான வகையில் இதைத் தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. நாப்தலீன் (த. க.) என்ற கரிமக் கூட்டிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. பார்க்க : சாயங்களும், சாய இடைப்பொருள்களும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அவுரி&oldid=1455062" இலிருந்து மீள்விக்கப்பட்டது