கலைக்களஞ்சியம்/ஆக்டினோமைகோசிஸ்
ஆக்டினோமைகோசிஸ் (Actinomycosis). மழைக்காலங்களில் சுவரில் படரும் பாசியைப் போன்ற ஆக்டினோமைசிஸ் என்னும் ஒருவிதத் தாவர இனத்தினால் உண்டாகும் நோய். சாதாரணமாகக் கால்நடை முதலிய விலங்குகளின் மோவாயில் சிவப்புக் கட்டியைப்போல் இது காணும். இதே வகைப் பூஞ்சணத்தினாலே (Fungus) இவ்வித நோய் மனிதருக்கும் உண்டாகின்றது. இந்த நோயில் சீழ் பிடிப்பதும் உண்டு. சீழில் வெளிர் மஞ்சள் நிறமுள்ள நுண்மையான பொடிகள் காணப்படும். அவற்றை மைக்ராஸ்கோப்பில் பார்த்தால் ஒரு வலையிலிருந்து கதிர்கள் வெளியில் வருவதுபோல் இந்தப் பூஞ்சணம் வருவதைக் காணலாம். அப்படி வரும் பூஞ்சணம் முனையில் பருத்திருக்கும். இந்தப் பூஞ்சணங்கள் சாதாரணமாகச் சொத்தைப் பல்லின் இடுக்குகளிலே காணப்படலாம்.
நோய்க் குறிகள்: இந்தப் பூஞ்சணங்கள் உடம்பின் எந்தப் பாகத்திலே சென்று தங்குகின்றனவோ, அதற்குத் தகுந்தாற்போல் நோய்க் குறிகளும் மாறிக் காணப்படுகின்றன. மோவாயில் காதுக்குக் கீழ்ப் பாகத்தில் காணும்போது அந்த இடத்தில் வீக்கமும் சிவந்த நிறமும் தோன்றும். அங்குள்ள நெறிக் கட்டிகள் மிகவும் பருத்தும் காணப்படலாம். சிறிது வலியும் இருக்கலாம். பெரும்பாலும் வீக்கம் கெட்டியாக இருந்தாலும் சிற்சில இடங்களில் சிறிது மெதுவாகவும் இருக்கலாம். நோய் குடலில் உண்டாவதானால், பெருங்குடல் தொடங்கும் இடத்திலும், குடல்வாலிலும் (Vermiform appendix) உண்டாகும். நோயுண்டாயிருப்பதைப் பெரும்பாலும் வயிற்றைத் திறந்து பார்த்தே நிச்சயிக்க முடியும். இங்கிருந்து இது பக்கத்திலிருக்கும் பாகங்களுக்குப் பரவலாம். வயிற்றின் உள்ளிருக்கும் வபை (Peritoneum) என்னும் சவ்வையும், மண்ணீரலையும் இந்த நோய் தாக்கலாம். சில சமயங்களில் மண்ணீரலை மட்டுமே இது பற்றலாம். மண்ணீரலில் உண்டாயிருப்பது இந்நோய்தானா அல்லது வேறுவிதக் கட்டியா என்று கண்டுபிடிப்பதற்கு அதிலிருக்கும் சீழைப் பரிசோதித்தே தீர்மானிக்க வேண்டும்.
ஆக்டினோமைசிஸ் பூஞ்சணம் நுரையீரலையும் அதைச் சுற்றியிருக்கும் உறையாகிய புளூரா (Pleura) வையும் பற்றலாம். நுரையீரலில் நோய் ஏதாவது உண்டாகி, அது இன்னதென்று எளிதில் புலப்படாவிட்டால், அது இந்த நோயாக இருக்கலாமா என்று ஆலோசிக்க வேண்டும். இந்நோயால் சுரம் ஏற்படும். இருமல் உண்டாகும். கோழையில் இரத்தமும் காணப்படலாம். சில சமயங்களில் ப்ளூரா இடைவெளியில் நீரும் சேரலாம். அந்த நீரைப் பரிசோதித்தால் அதிலே இந்தப் பூஞ்சணம் காணப்படலாம். நாளடைவில் பலக் குறைவு ஏற்பட்டு மரணமும் உண்டாகலாம். நோய் முற்ற முற்ற மார்பின் சுவரிலும் கட்டி கிளம்பலாம். முதலில் இவை சிவந்த கட்டிகளாக இருக்கும். சில நாள் சென்ற பிறகு அவற்றில் பல கண்கள் ஏற்பட்டு, அவற்றின் வழியாகச் சீழ் வடியும்.
சிலருக்கு இந்த நோய் தோலிலே காணலாம். அப்படிக் காணும்பொழுது அவை தோலில் மட்டுமே ஏற்பட்டிருக்கலாம்; அல்லது உள்ளிருக்கும் உறுப்புக்களில் முதலில் உண்டாகி, அங்கிருந்து வெளிப்படும்பொழுது தோலில் காணப்படலாம். பெரும்பான்மையாகக் கழுத்திலும் இடுப்புப் பாகங்களிலும் இவ்வாறு தோன்றும். ஆரம்பத்தில் கட்டியைப்போல் இருந்தாலும் சிறிது நாட்களில் சீழ் வெளிப்படும்பொழுது அந்தச் சீழில் கந்தகத்தூள்போன்ற பொடிகள் காணப்படும். அவற்றை மைக்ராஸ்கோப்பில் பார்த்தால் இந்தப் அம்மாதிரியாகப் பல பூஞ்சணத்தைக் காணலாம். துவாரங்கள் வழியாகச் சீழ் வரும்பொழுது இது ராஜ பிளவைபோல் தோன்றலாம்.
மற்றும் சிலருக்கு ஆக்டினோமைகோசிஸ் மூளையிலே உண்டாகலாம். இங்கேயும் மூளையில் மட்டிலுமே இது இருக்கலாம். அல்லது உடலில் வேறு எங்கேயாவது உண்டாகி, அங்கிருந்து மூளைக்கு இரத்தத்தின் வழியாகப் பரவி இருக்கலாம். சில சமயங்களில் காதிலேயிருந்து மூளைக்குப் பரவும்.
நோய்க்கூறு : இந்த நோய் பெரும்பான்மையாகக் காணப்படாததினால் இப்படி ஒன்று இருக்கிறது என்பதே மருத்துவர் நினைவில் இருப்பதில்லை. அப்படி நினையாத காரணத்தால் ஏதோ ஒரு சமயத்தில் இந்த நோய் கண்டாலும் அப்பொழுது அதைக் கண்டுபிடிப்பதற்கில்லாமல் போய்விடுகிறது. இதைக் கண்டுபிடிப்பதற்குச் சீழைப் பரீட்சை செய்யலாம். அல்லது மண்ணீரலில் ஊசியைச் செலுத்தி, அதிலிருந்து எடுக்கப்படும் பொருளைப் பரிசோதிக்கலாம். அல்லது உடம்பின் எந்தப் பாகத்திலாவது நெறிக்கட்டிகள் இருந்தால் அவைகளையும் பரிசோதிக்கலாம்.
சிகிச்சை: நோயானது ஆக்டினோமைகோசிஸ்தான் என்று உறுதியானவுடன் பெனிசிலின் என்ற மருந்தைத் தாராளமாக உபயோகிக்கவேண்டும். அதோடு எந்தெந்தப் பாகத்தில் கட்டிபோல் காணப்படு கிறதோ, அதைத் தக்க ரண வைத்தியரைக் கொண்டு களைந்துவிட வேண்டும். எக்ஸ்-கதிர் வைத்தியமும் செய்யலாம். அயோடின் சம்பந்தப்பட்ட மருந்துகளையும் கொடுக்கலாம். இவைகள் எல்லாவற்றையும் ஒரே சமயத்திலும் கையாளலாம். அப்படிச் செய்தாலுமே எல்லாச் சமயங்களிலும் இந்த நோய் குணமாகிவிடுமென்று உறுதியாகச் சொல்லமுடியாது. ரெ. சு.