கலைக்களஞ்சியம்/ஆக்டினோமைசீட்ஸ்

ஆக்டினோமைசீட்ஸ் (Actinomycetes) பச்சை நிறமில்லாத நுண்மையான தாவர வகை. இவற்றின் உடல் ஹைபா (Hypha) என்று அழைக்கப்படும் நுண்ணிழைகளாலானது. இந்த இழைகள் எண் மில்லிமீட்டர் தடிப்புள்ளவை. இந்தக் கூட்டத்தில் கலவி இனப்பெருக்கம் (Sexual reproduction) நடப்பதில்லை. ஹைபாக்கள் சில பாக்டீரியாவைப் போலத் துண்டு துண்டாக ஒடிந்து பல்குகின்றன. சிலர் இவற்றைப் பாக்டீரியாவுக்குச் சம்பந்தமுடையவை என்பர்; மற்றுஞ்சிலர் பூஞ்சணத்தைச் சேர்ந்தவையென்பர். இந்த வகைகள் மண்ணில் மிகுதியாக இருக்கின்றன. இவை அங்குக் கிடைக்கும் தாவர, விலங்குப் பொருள்களைச் சிதைவித்து, உயிரல் பொருளாக்கப் (Non - living) பெரிதும் உதவுகின்றன. இவற்றிற் சில, தாவரங்களில் நோயை உண்டாக்குகின்றன. உதாரணமாக, உருளைக்கிழங்கில் சொறி (Scab) என்னும் நோய் இவற்றால் உண்டாகின்றது. மற்றுஞ்சில மனிதனுக்கும் விலங்குகளுக்கும் நோய் விளைவிக்கின்றன. இன்னும் சில, ஆன்டி பயாடிக்குகள் (Anti-biotics) என்னும் எதிர் உயிர்ப்பொருள் மருந்துகளைத் தயாரிக்க உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆக்டினோமைசிஸ் கிரிசியஸ் (Actinomyces griseus) என்னும் இனத்திலிருந்து ஸ்ட்ரெப்டோமைசின் செய்கின்றனர்.