கலைக்களஞ்சியம்/ஆக்ரா

ஆக்ரா உத்தரப் பிரதேசத்து மூன்றாவது பெரிய நகரம். இந்தியாவின் பண்டைய நகரங்களுள் ஒன்று. யமுனையாற்றங் கரையில் உள்ளது சிக்கந்தர் லோடி 1500-ல் இந்நகரைத் தனது தலைநகராக்கிக் கொண்டான். 1526-ல் பாபர் இந்நகரைக் கைப்பற்றினான். இவ்வூரருகேயுள்ள அக்பராபாத் என்னும் கோட்டை அக்பரால் கட்டப்பட்டது. ஒளரங்கசீப் காலத்தில் தலை நகரம் மறுபடியும் டெல்லிக்கு மாற்றப்பட்டுவிட்டதால் ஆக்ராவின் தலைமை சிறிது குறைந்தது. ஷாஜகான் கட்டிய தாஜ்மகால் (த.க.) என்னும் உலகப் புகழ் பெற்ற சலவைக்கல் கட்டடம் இங்கே இருக் கிறது. இங்குள்ள முத்து மசூதியும் ஜம்மா மசூதியும் புகழ் வாய்ந்தவை. கோட்டையின் சுற்றளவு ஒரு மைல். மதில் சுவர் உயரம் 70 அடி. தங்கம், வெள்ளி. சித்திரத் தையல் வேலைகள் நடைபெறுகின்றன; சிறந்த கம்பளங்களும் செய்யப்படுகின்றன. சர்க்கரை, தானியம் ஆகியவை முக்கிய வியாபாரம். இருப்புப் பாதை நடு நிலையம் உள்ளது. இங்கு ஒரு பல்கலைக் கழகம் உண்டு. மக்: 3,75,665 (1951).

தொல் பொருளியல் : முகலாயர்கள் காலத்திய (1550-1660) அழகிய கட்டடங்கள் பல இங்கு உண்டு. இவற்றில் அக்பர் காலத்துக் கட்டடங்களில் கோட்டை மதிலும், ஜகாங்கீர் மகாலும் எஞ்சியுள்ளன. இவ்வூரின்

தாஜ்மகால்

அருகிலுள்ள சிக்கந்திராவில் ஜகாங்கீர் காலத்தில் கட்டப்பட்ட ஐந்தடுக்குக் கொண்ட புதிய முறையிலான அக்பரின் சமாதிக் கட்டடமும், ஆக்ராவில் ஜகாங்கீரின் மாமனார் இதிமத் உத்தௌலாவின் சமாதிக் கட்டடமும் இருக்கின்றன. இச்சமாதிக் கட்டடங்கள் சலவைக் கல்லாலும் இரத்தினத்தாலும் இழைக்கப்பட்டுள்ளது. இவற்றைவிடப் பன்மடங்கு அழகு மிகுந்ததும், ஷாஜகானால் கட்டப்பட்டதுமான முத்து மசூதியும், உலகமே வியக்கும் வனப்புமிக்க தாஜ்மகா லும் இங்கு இருக்கின்றன. தாஜ்மகால் சலவைக்கற்களாலும் இரத்தினங்கள் இழைத்தும் கட்டப்பட்டுள்ளது. இதைக்கட்டி முடிக்க நாள்தோறும் 20,000 ஆட்கள் வேலை செய்து, 20 ஆண்டுகளுக்கு மேலாயிற்று என்றும், சுமார் 4 கோடி ரூபாய்க்குமேல் செலவாயிற்று என்றும், இதன் அமைப்பை வகுத்தவர் ஒரு ஐரோப்பியச் சிற்பி என்றும், கட்டி முடித்தவர் துருக்கி தேசத்திய உஸ்தாத் ஈசா என்ற சிற்பி என்றும்சொல்லுகிறார்கள். பி. ஆர். ஸ்ரீ.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆக்ரா&oldid=1456316" இலிருந்து மீள்விக்கப்பட்டது