கலைக்களஞ்சியம்/ஆக்டீனியம்

ஆக்டீனியம் (Actinium) குறியீடு Aci; அணுவெண் 89; அணுநிறை 226 (?) கதிரியக்கப் பண்புள்ள தனிமங்களில் ஒன்று. 1899-ல் தெபயர்ன் (Debierne) என்னும் அறிஞர் பிட்ச்பிளென்டு என்ற கனியத்திலிருந்து ரேடியத்தைப் பிரித்தபின் எஞ்சும் பொருளிலிருந்து இரும்புத் தொகுதியைச் சேர்ந்ததொரு தனிமத்தைப் பிரித்தெடுத்து, அதற்கு ஆக்டீனியம் எனப் பெயரிட்டார். இது வெள்ளீயத்தையொத்த நிறமுள்ள உலோகம். உரேனியம் கதிரியக்க மாறுதல்களை யடைந்து, படிப்படியாகப் பல பொருள்களைத் தருகிறது. இதில் U11 என்பதும் ஒன்று. இது Uy என்ற தனிமமாக மாறிப் புரோடோ ஆக்டீனியம் என்ற பொருளாகிறது. இது ஒரு பீட்டாதுகளை வெளியிட்டு ஆக்டீனியமாகிறது. இதுவும் படிப்படியாகப் பல மாறுதல்களை அடைந்து, கடைசியாக வெள்ளீயத்தின் ஐசோடோப்பாகிறது. இந்த மாறுதல்கள் ஆக்டீனியத்தொடர் எனப்படும். பார்க்க : கதிரியக்கம்.