கலைக்களஞ்சியம்/ஆங்கிலம்

ஆங்கிலம்: மொழி: இது இங்கிலாந்தில் தோன்றி வளர்ந்து தற்போது அந்நாட்டிலும், கானடா, அமெரிக்க ஐக்கியநாடுகள், ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து போன்ற பல பகுதிகளிலும் உள்ள 27 கோடி மக்களது தாய்மொழியாக இருப்பது. இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் பல கோடி மக்கள் இம் மொழியைப் பயின்றிருக்கிறார்கள். சீனமொழிக்கு அடுத்தபடியாக மிக அதிகமான மக்கள் பேசும் மொழி இதுவே. பல மொழிகளிலிருந்து வந்த சொற்களைக் கொண்ட ஆங்கிலம் சர்வதேச மொழியாவதற்கு மற்றெல்லா மொழிகளையும் விடத் தகுதி வாய்ந்தது. பிறமொழிக் கலப்பினால் இதில் எக்கருத்தையும் எளிதிலும், நேரடியாகவும், சுருக்கமாகவும், அழகாகவும் வெளியிடமுடிகிறது.

சிறந்த நெகிழ்வும் இசையும் ஆங்கிலத்தின் சிறப்பியல்புகளாகும். இதன் சொற்றொகையும், சொற்றொடர் இலக்கணமும் (Syntax) சிறப்பான வகையில் அமைந்திருப்பதால் இது இத்திறமையைப் பெற்றுள்ளது. வேற்று மொழிச் சொற்களையும் சொற்றொடர்களையும், வழக்குக்களையும் ஏற்கவோ, தனது மரபிற்கேற்றவாறு அவற்றை மாற்றியமைத்துக் கொள்ளவோ இது எப்பொழுதும் தயங்கியதில்லை. பிறமொழிக் கருத்துக்களையும். இது ஏற்று வளர்ந்துள்ளது. விஞ்ஞான வளர்ச்சியும் நாட்டின் வரலாறும் இதன் வளர்ச்சிக்குத் துணையாயிருந்துள்ளன. இங்கிலாந்தின் சமூக வரலாற்றின் சாயலை ஆங்கில மொழியின் வரலாற்றிலும் காணலாம். ஆதியில் ஆல்பிரிக் (Alpric) என்ற கவிஞரும், இடைக்காலத்தில் சாசரும் (Chaucer), பின்னர் வந்த ஷேக்ஸ்பியரும், மொழி வளர்ச்சியின் போக்கையே மாற்றினார்கள். மில்ட்டன், போப் போன்ற கவிவாணரும், பர்க், சர்ச்சில் போன்ற பேச்சாளரும் மொழிக்குப் புதுச்சொற்களையும், சொற்றொடர்களையும் தந்துதவியுள்ளனர். இத்தகையோரது பணியினால் தற்கால ஆங்கில மொழியில் சுமார் 4,00,000 லிருந்து 6,00,000 சொற்கள் வரை உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் சில ஆயிரம் சொற்களே சாதாரணமாக நடைமுறையில் பயன்படுகின்றன. ஆங்கில மொழியின் வளர்ச்சி இன்னும் முடிவடையவில்லை. இன்னும் அதில் புதுச் சொற்களும் புது வழக்குக்களும் வந்து புகுந்த வண்ணம் உள்ளன. தேவைக்கேற்றவாறு அதில் புதுச்சொற்களைத் தோற்றுவிக்க முடிகிறது.

வரலாறு: இதைப் பழங்காலம், இடைக்காலம், தற்காலம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆராய்வது நலம். இந்த மூன்று காலங்களிலும் முக்கியமாக மூன்று வகைகளில் முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. 1. பிற மொழிக் கலப்பற்ற பழங்காலமொழி, வேற்றுமொழிச் சொற்கள் ஏராளமாகக் கலந்த கலப்பு மொழியாகியது. 2. ஆதியில் ஏராளமாக இருந்த உருமாற்றங்கள். (Inflexions) காலப்போக்கில் மெல்ல மறைந்தன. 3. ஆதியில் எதேச்சையான வகையில் அமைந்திருந்த சொல் வரிசை நிலைப்பட்டது.

பழைய ஆங்கிலம் (கி.பி.500-1100): பிரிட்டனில் 5ஆம் நூற்றாண்டுவரை கெல்ட்டுக்கள் என்ற ஆதிக்குடிகள் வாழ்ந்தனர். இவர்கள் கெல்ட்டிக் மொழி பேசினர். இப்போது ஆங்கில மொழியில் காணப்படும் தொட்டி (Bin), பாறை (Crag) போன்ற சில சாதாரணச் சொற்கள் அம்மொழியிலிருந்துவந்தவை. பல ஊர்களின் பெயர்கள் கெல்ட்டிக் மொழியிலிருந்து வந்தவை.

இவ் வாதிக்குடிகளை வென்று அரசாண்ட ரோமானியர் பிரிட்டனை விட்டுச்சென்றபின் ஆங்கில்கள், சாக்சன்கள், ஜூட்டுகள் ஆகிய ஜெர்மானியக் குடிகள் குடியேறினார்கள். இவர்கள் தாம் குடியேறிய பகுதியை இங்கிலாந்து என்றும், தாம் பேசிய மொழியை இங்கிலிஸ்க் (Englisc) என்றும் அழைத்தார்கள். இவர்கள் பேசிய மொழியை ஆங்கிலோ - சாக்சன் என்றும் கூறுவதுண்டு. இவர்கள் பிரிட்டனுக்கு வருமுன் வெவ்வேறு திசை மொழிகளைப் (Dialects) பேசிவந்தனர். இங்கிலாந்தை அடைந்தபின் இம்மொழிகளுக்கிடையே இருந்த வேறுபாடுகள் அதிகமாயின. அக்காலத்திய திசைமொழிகளில் நான்கு முக்கியமானவை. இவை நார்த்தம்பிரியன், மெர்சியன், கென்ட்டு, சாக்சன் எனப்படும்.

இவர்கள் தாம் ஜெர்மனியிலேயே பயன்படுத்திய ரூனிய நெடுங்கணக்கைப் பயன்படுத்தினார்கள். இங்கிலாந்தில் கிறிஸ்தவ மதம் பரவியபின் ரோமானிய லீபி வழக்கத்திற்கு வந்தது. அக்காலத்தில் சொற்களின் ஓசைக்கேற்றவாறு அதை எழுத்துக்கூட்டி எழுதினார்கள். உயிரெழுத்துக்களை இரட்டித்து நெடில்களைக் குறித்தார்கள். இரு மெய்யெழுத்துக்களை ஒன்று சேர்த்துக் கூட்டு மெய்யெழுத்து ஓசைகளைக் குறித்தார்கள். ஜெர்மானிய மொழியிலிருந்த உருமாற்றங்கள் அனைத்தும் பழைய ஆங்கிலத்தில் கையாளப்பட்டன. வேற்றுமை, பால், காலம் முதலியவற்றைக் குறிப்பதற்குச் சொல்லில் மாற்றங்கள் செய்யப்பட்டன. சொல்லின் பொருளிலிருந்து பாலைக் குறிக்காமல் ஓர் இலக்கண விதியிலிருந்து அதை முடிவு செய்தார்கள். அக்கால இலக்கணத்தில் பெண், கன்னி ஆகிய சொற்களைப் பொதுப்பாலாகவும், கை என்ற சொல்லைப் பெண்பாலாகவும், கால் என்ற சொல்லை ஆண் பாலாகவும் குறித்தார்கள். சொல்லின் முதல் அசையை அழுத்தி உச்சரித்தார்கள். உருமாற்றங்கள் நிறைந்த மொழியில் இறுதி அசைகளை அழுத்தமாக உச்சரிக்காதது பெரிய தடுமாற்றங்களை விளைவித்தது. பழைய ஆங்கில வினைச்சொற்கள் நிகழ்காலத்தையும் இறந்த காலத்தையும் மட்டுமே குறிப்பிட்டன. தற்காலத்திலுள்ளவை போன்ற துணைவினைச்சொற்கள் இக்காலத்தின் இறுதியில் தோன்றின. வாக்கியங்களில் சொல் வரிசையானது மாறாக இலக்கண விதியினால் கட்டுப்படுத்தப்படவில்லை.

அக்காலத்து மொழி பிற மொழிக்கலப்பு அதிகமாக இல்லாமல் தூயதாகவே இருந்தது. கிறிஸ்தவ மதம் பரவிய பின், மதச் சார்புள்ள லத்தீன் சொற்கள் பல இடம்பெற்றன. ஜெர்மானியக் குடிகள் ஐரோப்பாவில் இருந்தபோதே ரோமானிய சாம்ராச்சியத்தினிடமிருந்து கற்ற சில சொற்களும் பழைய ஆங்கிலத்தில் வழங்கின. ஆனால் இக்காலத்தில் வந்து சேர்ந்த வேற்றுமொழிச் சொற்கள் மிகக் குறைவு. எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலே ஆங்கிலக் கடற்கரைகளை ஸ்காந்தினேவியர் அடிக்கடி தாக்கி வந்தார்கள்: அடுத்த நூற்றாண்டில் அவர்கள் அங்குக் குடியேறவும் தொடங்கினார்கள். ஆகையால் பழைய ஆங்கிலக் காலத்தின்போதே ஸ்காந்தினேவிய மொழிக்கலப்புத் தொடங்கிவிட்டது. வானம், ரொட்டி போன்ற சாதாரணப் பொருள்கள் பலவற்றைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்கள் இவ்வாறு வந்தவை. இப்போது படர்க்கைப் பன்மையும் அதன் உருபுகளும் ஆங்கிலத்தில் முதன்முதலாக வழக்கத்திற்கு வந்தன.

ஆல்பிரடு அரசரது காலத்திற்குப் பின் கவிதையிலும் வசனத்திலும் பல நூல்கள் எழுதப்பட்டன. அக்காலத்தில் கவிதை நடை என்று ஒரு தனிப்பட்ட நடையைக் கையாண்டு வந்தார்கள். கவிதையில் மட்டும் பயன்படுத்துவதற்காகப் பல சொற்கள் இருந்தன. சாதாரணப் பொருள்களுக்கும் விரிவான உருவகங்கள் இருந்தன. அவற்றை எல்லாக் கவிஞர்களும் மாறுதல்களின்றிக் கையாண்டார்கள்.

இடை ஆங்கிலம் (1100-1500): 1066-ல் பிரான்சு நாட்டைச் சேர்ந்த வில்லியம் என்ற நார்மண்டிக் கோமகன் இங்கிலாந்தைக் கைப்பற்றினார். இது முதல் பிரெஞ்சு மொழி அரசாங்க மொழியாகவும், அரச குடும்பத்தினரும் மற்றப் பிரபுக்களும் பேசும் மொழியாகவும் சுமார் 300 ஆண்டுகள்வரை இருந்தது. ஆனால் பொதுமக்கள் ஆங்கிலோ-சாக்சன் மொழியையே அன்றாட வாழ்க்கையில் வழங்கி வந்தார்கள்; இக்காலத்தில் இது வெறும் பேச்சு மொழியாகவே இருந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மூன்று மொழிகள் வழங்கின. மக்களிடையே ஆங்கிலோ-சாக்சனும், பிரபுக்களிடையே பிரெஞ்சும், கற்றோரிடையே லத்தீனும் வழங்கின.

இக் காலத்தில் ஆங்கிலம் பல மாறுதல்களை அடைந்தது. ஆயினும் சாதாரணப் பொருள்களின் பெயர்களும், கருத்துக்களைக் குறிக்கும் சொற்களும் ஆங்கிலச் சொற்களாகவே இருந்தன. அன்பு, வெறுப்பு, சுவர், நாய், மீன், மண், நீர் முதலியவற்றைக் குறிக்கும் தற்காலச் சொற்கள் அனைத்தும் பழைய ஆங்கிலத்திலிருந்துவரும் சொற்களேயாம். பிரெஞ்சு ஆதிக்கத்தினால் பழைய மொழியின் இலக்கிய வளர்ச்சி தடைப்படவே, அதன் பொது இலக்கணமும் தொடரிலக்கணமும் மறைந்தன. நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்பான திசை மொழிகள் தோன்றின. பிரெஞ்சு மொழியின் ஆளுகை குறைவான வடபகுதிகளில் மொழியானது தற்கால வடிவை அடையத் தொடங்கியது. மத்தியப் பகுதியில் அக்காலத்தில் வழங்கிய திசைமொழியே தற்கால ஆங்கிலத்தைத் தோற்றுவித்தது. ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்கள் இப்பகுதியில் இருந்ததாலும், அரசின் கேந்திர நகரமான லண்டன் இப்பகுதியிலிருந்து மற்றப் பகுதிகளிலுள்ள மக்களையெல்லாம் இங்கு ஒன்று சேர்த்ததாலும் இப்பகுதியின் திசைமொழியே முதன்மை பெற்றது. பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சாசர் என்ற புகழ்பெற்ற கவிஞர் மத்தியப்பகுதியின் திசைமொழியில் தம் கவிதைகளை இயற்றினார். இவரது மேதையினால் இம்மொழி சிறப்புற்றுப் பிற்காலத்திய மொழிவளர்ச்சிக்குத் தோற்றுவாயாக அமைந்தது.

உருமாற்றங்களின் மறைவே இக்காலத்தில் ஆங்கில மொழியில் நிகழ்ந்த முக்கியமான மாறுதலாகும். சுட்டுச் சொல்லின் வேற்றுமை, பால், எண் முதலிய மாற்றங்கள் மறைந்தன. பெயர்ச்சொற்களுக்கு இரண்டாம் வேற்றுமை உருபைத் தவிர மற்றவை ஒழிந்தன. பெயர்ச்சுட்டுக்கள் தற்கால வடிவங்களைப் பெறத் தொடங்கின. படர்க்கை ஒருமை வினையின் தனி வடிவம் மெல்ல மறையத் தொடங்கியது. பழைய ஆங்கிலத்தில் வழங்கிய இணையுயிரெழுத்துக்கள் மறைந்து, உயிரெழுத்துக்களின் தற்கால உச்சரிப்புத் தோன்றியது. வினைச்சொற்கள் எளிய வடிவங்களைப் பெற்றன. இம்மாறுதல்களால் இலக்கணம் எளிதாயிற்று.

புதிய ஆங்கிலம் : லண்டனில் வழங்கிய திசை மொழியைச் சாசர் இலக்கியத்தில் பயன்படுத்தி, அதை ஆங்கிலத்தின் திட்டவடிவாக்க முயன்ற ஒரு நூற்றாண்டிற்குப் பின் வில்லியம் காக்ஸ்டன் இங்கிலாந்தில் அச்சுக் கலையைத் தொடங்கி வைத்தார். பின் பல வேறு இடங்களில் வழங்கிய திசைமொழிகள் விரைவில் மறைந்தன. சொற்களின் எழுத்துக்கூட்டுப் பலமாறுதல்களுக்குப்பின் உச்சரிப்புக்கேற்ற தற்கால வடிவத்தைப் பெற்றது. நெடிலைக் குறிக்க அதையடுத்து வரும் மெய்யெழுத்துக்குப்பின் e என்ற எழுத்து சேர்க்கப்பட்டது. (உ-ம். Stone). மெய்யெழுத்தை இரட்டித்துக் குறிலைக் குறிக்கும் முறை தோன்றியது. (உ-ம். Penny). 1623-ல் வெளியான ஷேக்ஸ்பியர் நாடகங்களை அக்காலத்தில் வாழ்ந்த ஒருவர் படிக்கக் கேட்டால் நாம் அதைப் புரிந்துகொள்வது கடினம். ஏனெனில் உச்சரிப்பு இப்போது அவ்வளவு தூரம் மாறிவிட்டது. இம்மாறுதல் ஒரேயடியாக நிகழாது சிறுகச் சிறுக நிகழ்ந்தது. தற்கால எழுத்துக்கூட்டுக்கள் 17ஆம் நூற்றாண்டில் நிலைப்பட்டன. உச்சரிப்புக்கேற்றவாறு சொற்களை எழுத்துக் கூட்டும் முறை தோன்றவேண்டும் ஓர் இயக்கம் உள்ளது. ஆனால் பல காரணங்களால் இது வலுவடையவில்லை.

இம்மாறுதலைவிடப் பெரிய புரட்சி சொற்றொகையில் நிகழ்ந்துள்ளது. இடைக்கால ஆங்கிலமுங்கூடத் தற்கால ஆங்கிலத்தைப்போல் அவ்வளவு தூரம் கலப்படையவில்லை. அச்சுக்கலையின் தோற்றத்தின் பின் உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் சொற்கள் வந்து புகுந்தன. பிரெஞ்சு ஆதிக்கத்தின்போது இடைக்கால ஆங்கிலத்தில் பிரெஞ்சுமொழிச் சொற்கள் கலந்தன. மறுமலர்ச்சியின் விளைவாக ஏராளமான லத்தீன் சொற்களும் கிரேக்கச் சொற்களும் வந்தன. எலிசபெத் காலத்தில் ஆங்கிலத்தை லத்தீன் மயமாக்கும் இயக்கம் ஒன்றும், இதற்கு எதிராக ஆங்கிலத்தைப் பிறமொழிக் கலப்பின்றித் தூய்மையாக்கும் இயக்கம் ஒன்றும் நடைபெற்றன. இவ்விரண்டும் நிறைவேறவில்லை. ஆனால் இவற்றால் மொழி வளம்பெற்றது. மற்ற ஐரோப்பிய மொழிச்சொற்களும் ஆங்கிலத்திற் சேர்ந்தன. வாணிப முன்னேற்றத்தால் நாட்டினர் உலகின் பல பகுதிகளை அடைந்து, அங்கு வழங்கும் சொற்களைக் கொண்டுவந்து தமது மொழியில் சேர்த்தனர். பழங்கால மொழிகளிலிருந்து வந்து புகுந்த சொற்கள் சிறிதே வேறுபட்டபொருளுள்ள ஒரு பொருட் பல சொற்களை மொழிக்குத் தந்துதவி அதை வளமாக்கியுள்ளன. இதனால் ஆங்கிலச் சொற்களின் பலவேறு பொருட்சாயல்களை வேறெம் மொழியிலும் பெயர்க்க முடிவதில்லை. ஆங்கில மொழியின் தனிச்சிறப்பிற்கே இது காரணமாக உள்ளது.

ஆதார ஆங்கிலம் : சாதாரணத் தேவைகளுக்குப் போதுமான 850 அடிப்படையான சொற்களைமட்டும் கொண்ட ஆங்கில மொழியைச் சர்வதேச மொழியாக்குவது எளிதாகும் என்ற கருத்தைக் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆக்டன் (Ogden) என்ப வர் 1925-ல் வெளியிட்டார். ஆங்கிலம் எளிதில் கற்க ஏற்ற இத்தொகுதி, 'ஆதார ஆங்கிலம்' (Basic English) எனப்படும். இதில் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

அமெரிக்கர் ஆங்கிலம்: அமெரிக்காவில் குடியேறிய ஆங்கில மக்கள் ஆங்கில மொழியையே அங்கும் பரப்பினார்கள். இங்கிலாந்தில் வழக்கொழிந்துவிட்ட சில பழைய சொற்களும், வரலாற்றுச் சொற்களும் அமெரிக்காவில் இன்னும் வழக்கத்திலுள்ளன. பல புதுச் சொற்கள் தோன்றியுள்ளன. வியப்பையும் மற்ற உணர்ச்சிகளையும் காட்டும் சொற்கள் அமெரிக்கர் மொழியில் அதிகம். உவமைகளும், உருவகங்களும், புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் குறிக்கும் சொற்களும் இதில் மலிந்துள்ளன. எழுத்துக்கூட்டிலும் அமெரிக்கர் மொழியில் உச்சரிப்புக்கேற்ற சில மாறுதல்கள் உள்ளன. அமெரிக்கச் செவ்விந்தியரின் திசைமொழிகளிலிருந்து வந்த சில சொற்களும் இதில் வழக்கத்தில் உள்ளன. அமெரிக்க நீக்ரோ மக்களும், செவ்விந்தியரும் பேசும் ஆங்கிலத் திசைமொழிகள் தனிப்பட்ட வகையானவை.

இலக்கியம் : தற்கால ஐரோப்பியப் பண்பாட்டிற்கு மூன்று பரம்பரைகள் மூலங்களாக இருந்து வந்துள்ளன. இவை பழங்காலத்தில் மத்தியதரைக் கடற் பகுதிகளில் தோன்றி வளர்ந்த கிரேக்க-லத்தீன் பண்பாடும், பாலஸ்தீனத்தில் தோன்றிய கிறிஸ்தவப் பண்பாடும், வட ஐரோப்பாவில் தோன்றிய ஜெர்மானியப் பண்பாடும் ஆகும். வேறான தன்மையுள்ள இவை தனித்தனியே இங்கிலாந்தை அடைந்து, பல நூற்றாண்டுகளுக்குப்பின் ஒன்றாக இணைந்தன. ஆங்கிலப் பண்பாட்டின் வரலாற்றை அதன் இலக்கிய வரலாற்றில் தெளிவாகக் காண்கிறோம். இங்கிலாந்தின் வரலாற்றின் ஒவ்வொரு காலமும் தனக்கேற்ற கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் தோற்றுவித்தது. ஆங்கிலப் பண்பாடு கடல் கடந்து வேறு நாடுகளை அடைந்தபின், ஆங்கிலமொழியின் இலக்கியச் செல்வம் அந்த நாடுகளை வளமுறச்செய்தது. அந்நாடுகளும் ஆங்கில இலக்கிய வளர்ச்சிக்கு உதவின.

ஆங்கில இலக்கிய வளர்ச்சியின் கட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் சில சிறப்பியல்கள் காணப்படும். அவையாவன :

ஆதியிலிருந்து சாசர் காலம்வரை: 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் சாசருக்கு 7 நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலோ-சாக்சன் மொழியில் கவிதையும் உரை நடையும் சிறப்புற வளர்ந்திருந்தன. பிற்கால ஆங்கிலத்தின் வளர்ச்சிக்கு இவை அடிப்படையாக அமைந்தன.

அக்கால இலக்கியத்தில் ஆதியில் இங்கிலாந்தில் வந்து குடியேறிய மக்களின் வாழ்க்கைமுறை காணக் கிடக்கிறது. இந்த இலக்கியத்தில் காவியக் கவிதையே சிறப்பானது 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பேயவுல்ப் (Beowulf) என்ற காவியம் இக்கவிதைகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது. பல அரக்கர்களைக் கொன்று புகழடைந்த வீரன் ஒருவனது வாழ்க்கைக் கதையான இக்காவியத்தில் வீரமும் சோகமும் இணைந்து தனிப்பட்ட பெருந்தன்மையுள்ள நடைக்குக் காரணமாகின்றன. இக்காலக் கவிதைகளைப்போல இதில் எதுகை நயம் மலிந்து காணப்படுகிறது. இதன் சந்தம் விரை வாகவும் நெகிழ்வுடனும் உள்ளது. காவியப் பரம்பரை அக்காலத்திலேயே முதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்றாக விளங்குகிறது. இதை யொத்த வேறு சில காவியங்களின் பகுதிகளும் கிடைத்துள்ளன. நூற்றுக்கணக்கான சிறு பாடல்களுள் சிலுவைக் கனவு (Dream of the Rood), புதிர்கள் (Riddles), மால்டன் போர் (Battle of Maldon) ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

ஆங்கிலோ-சாக்சன் கவிதை தோன்றி வளர்ந்த நெடுங்காலத்திற்குப் பின்னரே உரைநடை இலக்கியம் தோன்றியது. உரை (Gloss), சாசனம் (Charters), சட்டங்கள் (Laws) ஆகியவற்றிலேதான் முதலில் உரைநடை தோன்றியது. பிறகு உரைநடை இலக்கியத்திற்கு ஆல்பிரடு அரசர் (849-899) அடி கோலினார். இவர் இலக்கிய நயம் மிக்க நூல்களை எழுதியதோடு அறநெறி, வரலாறு, பூகோளம், தத்துவம் போன்ற துறைகளில் லத்தீன் மொழியிலிருந்து நூல்களை மொழிபெயர்க்க உதவினார். இவரது ஆதரவின்கீழ் வெளியானதாகக் கருதப்படும் ஆங்கிலோ -சாக்சன் சரித்திரக் குறிப்பு (Anglo-Saxon Chronicle) அக்கால உரைநடைக்குச் சிறந்த சான்றாக விளங்குகிறது. இதன் நடையில் விறுவிறுப்பையும், சொல்லவேண்டியதைச் சுற்றிவளைக்காமல் நேரடியாகக் கூறும் திறனையும் காண்கிறோம். அடுத்த நூற்றாண்டில் வாழ்ந்த ஆல்பிரிக் (Aelfric) எளிமையும் தெளிவும் நிறைந்த நடையில் தம் நூல்களை எழுதினார். வுல்ப்ஸ்டன் நூல்கள் பேச்சாளரது நடையில் அமைந்தன. இவ்விருவர் உரைநடையிலும் ஆங்காங்கு மோனை, எதுகை முதலியவற்றைக் காணலாம்.

1066-ல் இங்கிலாந்து நார்மன் அரசருக்கு அடிமையானது ஆங்கிலோ-சாக்சன் பண்பாட்டின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாயிற்று. நாட்டில் ஐரோப்பியக் கண்டத்து மொழிகளின் ஆட்சி அதிகமாகியது. அரசர் மொழியான பிரெஞ்சுக்குக் கிடைத்த பேராதரவினால் நாட்டு மொழி குன்றியது. இலக்கியம் பெரும்பாலும் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது. மதப் பாட்டுக்களும், மத சம்பந்தமான சில உரைநடை நூல்களுமே ஆங்கிலத்தில் எழுதப்பட்டன. அவற்றுள் சிறந்தவை லத்தீனிலும் பிரெஞ்சிலும் நல்ல தேர்ச்சியுள்ளவர்களால் எழுதப்பட்ட இந்நூல்களின் நடை எளிதாகவும் ஓசை நயம் மிகுந்ததாகவும் இருந்தது. மேன்மையின் அளவு (Scale of Perfection), அறியாமை மேகம் (Cloud of Unknowing). முதது (Pearl), தூய்மை (Purity), பொறுமை (Patience) போன்ற சிறந்த பாட்டுக்களை இயற்றிய கவிஞர் எதுகையைத் தாராளமாகக் கையாளுகிறார். இவரது சொல் நயமும் சந்தத் திறமையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. முத்து என்ற கவிதையில் கவிஞர் தம் மகளின் மறைவினால் விளைந்த சோகத்தை அழகுபடச் சித்திரித்திருக்கிறார். சோகத்தைப் பொருளாகக்கொண்ட ஆங்கிலக் கவிதைகளுள் இதற்கு ஒரு சிறப்பிடம் உண்டு. பழங்காலத்தைச் சாசரது காலத்துடன் இணைக்கும் ஆசிரியருள் வில்லியம் லாங்லாண்டு (William Lang- Land) முக்கியமானவர். இவர் எழுதிய உழவன் பியர்ஸ் (Piers Ploughman) என்ற காவியம் 14ஆம் நூற்றாண்டின் வாழ்க்கையைத் தெளிவாக விவரிக்கிறது. செல்வர்களின் செருக்கு, கொடுமை போன்ற தீமைகளையும், ஏழைகளின் துயரத்தையும், அவர்களது சோம்பேறித்தனம், பொய் பேசுதல் போன்ற குற்றங்குறைகளையும் பற்றி இவர் ஒளிவுமறைவின்றியும், நகைச்சுவையுடனும் எழுதுகிறார். சமூகத்தில் இருந்த குறைகளை நீக்க விக்லிப் (Wycliffe) என்ற சீர்திருத்தவாதி முயன்றார். இவர் நூல்களில் இவருடைய அப்பழுக்கற்ற நேர்மையைக் காண்கிறோம். விவிலிய நூல் மக்களுக்குப் பயன்படுமாறு செய்ய அதை ஆங்கிலத்தில் முதன்முதல் மொழிபெயர்க்க முயன்றவர் இவரே ஆவர்.

சாசர் காலத்திலிருந்து மறுமலர்ச்சி வரை : ஆங்கில இலக்கியத்தில் புதிய சகாப்தத்தைத் தொடங்கிய சாசர் அம்மொழியின் தற்கால வடிவத்திற்குக் காரணராவார். கவிதையின் வாயிலாகக் கதை சொல்லும் இவருடைய கலையை இக்காலத்தவரும் சிறப்பாகப் போற்றுகிறார்கள். இவருடைய நகைச்சுவையும் தனிச் சிறப்புடையது. ஆங்கிலோ-சாக்சன் கவிதையின் அடிப்படையான மோனையை இவர் உணர்ச்சிவேகத்தைக் காட்டும் அணியாக மட்டும் கையாண்டு, எதுகை, சந்தம் ஆகியவற்றை ஆங்கில யாப்பிலக்கணத்தின் அடிப்படையாக ஆக்கிவிட்டார். இவர் நூல்கள் பிற ஐரோப்பிய மொழி நூல்கள் பலவற்றை மூலமாகக்கொண்டிருந்தாலும், அவை ஒவ்வொன்றையும் இவர் தக்கபடி மாற்றியமைத்துச் சிறப்புறச் செய்கிறார். இவருடைய டிராய் லசும் கிரெசிடாவும் என்ற காவியம் காதல், பிரிவு ஆகிய ரசங்களை நன்கு எடுத்துக்காட்டுகிறது. இவர் எழுதிய கான்டர்பரிக் கதைகள் இவருடைய அழியாத புகழுக்குக் காரணமாக விளங்குகின்றன. இவற்றில் இவர் பலவேறு கவிதை முறைகளையும் நடைகளையும் திறமையுடன் கையாள்கிறார். 'ஹிரோயிக் ஈரடிச் செய்யுள்' (Heroic couplet) என்னும் யாப்பு வடிவத்தை இவர் திறமையுடன் கையாண்டார். இதை இவரைவிடத் திறமையுடன் கையாண்டவர்களே இல்லை எனலாம். மிகைப்படுத்திக் கூறுவதையும், கூறாமல் கூறுவதையும் அடிப்படையாகக்கொண்ட இவரது நகைச்சுவை அக்காலத்தில் போலவே தற்காலத்திலும் இன்பம் தருகிறது.

சாசர் காட்டிய வழியில் சென்ற வேறு பல கவிஞர்களுள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த சில கவிஞர்களே வெற்றி கண்டார்கள். இவர்களுள் முதலாம் ஜேம்ஸ் அரசர் குறிப்பிடத்தக்கவர். சாசர் எழுதிய டிராய்லசும் கிரெசிடாவும் என்ற கவிதையின் தொடர்ச்சியாகக் கிரெசிடாவின் உயில் (Testament of Criesyde) என்ற பாட்டை ராபர்ட் ஹென்ரிசன் எழுதினார். சோகரசம் மலிந்த இப்பாட்டு ஸ்காட்லாந்து மொழியிலுள்ள கவிதைகளில் தலைசிறந்தது என்று கூறலாம். இதே காலத்தில் இங்கிலாந்தில் இருந்த சர் தாமஸ் மாலரி என்பவர் ஆர்தர் என்ற பழங்காலக் கற்பனைப் பாத்திரத்தைக் கதாநாயகனாகக் கொண்ட சிறந்த வசன காவியத்தை இயற்றினார். மத சம்பந்தமான உணர்ச்சிப் பாடல்களும், மகிழ்ச்சிப் பாடல்களும் (Carols), கதைப் பாட்டுக்களும் (Ballads) இக்காலத்தில் ஏராளமாகத் தோன்றின. ஆகவே பதினைந்தாம் நூற்றாண்டு, கதைப் பாட்டு இயற்றும் கலை உச்ச நிலையை அடைந்த காலமாகும்.

விவிலியக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, நகைச்சுவை ததும்பப் பாமரரது வாழ்க்கைச் சம்பவங்களை இடையில் கொண்ட நாடகங்கள் இக் காலத்தில் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன. ஒட்டுவமையினால் (Allegory) அறநெறியை அறிவுறுத்தும் நாடகங்களும் இக்காலத்தில் தோன்றின.

இக்காலத்திய உரைநடை நூல்களில் குறிப்பிடத்தக்கவை மிகக் குறைவானவை. சாசரின் முன்னுரைகளிலும், வேறு சில நூல்களிலும் இவரது உரைநடையின் நயத்தைப் பார்க்கிறோம். பேகாக் (Peacock), பார்ட்டெஸ்க்யூ (Fortescue) தெளிவான நடையில் எழுதினர். இவர்கள் மனித உள்ளத்தின் சிக்கல்களைப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய முயன்றார்கள். அச்சடிப்பு முறையை வழக்கத்திற்குக் கொண்டுவந்த வில்லியம் காக்ஸ்டன் பல நூல்களைச் சிறந்த வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மொழிப்பணி செய்தார்.

எலிசபெத் காலம் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் எதிரொலியாக இங்கிலாந்தில் தோன்றிய இலக்கிய வளர்ச்சியின் காலமாகும். இது எலிசபெத் அரசிக்கு முன்னரே தொடங்கி அவருடைய சந்ததியார்களுடைய காலத்தில் முடிவடைகிறது. இது இதற்குமுன் இருந்த இலக்கியப் பரம்பரையினின்றும், இதையடுத்துத் தோன்றிய பரம்பரையினின்றும் பல வகைகளில் வேறானது. அக்காலத்தில் இங்கிலாந்தில் அரசியலிலும், சமூகத்திலும், மதத்திலும் நிகழ்ந்த பெரு மாறுதல்கள் இலக்கியத்திற்கும் அடிப்படையாக விளங்கின. புது இலக்கிய வடிவங்களும், புதுக் கற்பனைகளும், புதுப் பரம்பரைகளும் தோன்றின.

அச்சடிக்கும் முறை தோன்றுமுன் இலக்கிய இன்பத்தைப் பிரபுக் குலத்தைச் சேர்ந்த சிலரே துய்க்க முடிந்தது; அச்சு முறை வந்தபின் வாணிபத்தால் வளம்பெற்ற நடுத்தர வகுப்பு மக்களும் இவ்வின்பத்தைத் துய்க்க முடிந்தது. மதப் புரட்சியின் விளைவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட விவிலிய நூல் இந்த மாறுதலுக்குத் துணையாக அமைந்தது. மானிட வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்ட இலக்கிய மரபு தோன்ற இவை காரணமாயின. இந்த இயக்கம் மக்கள் நலக்கொள்கை (Humanism) என்று அழைக்கப்படுகிறது.

மக்கள் நலக்கொள்கை இயக்கத்தின் தொடக்கத்தில் எட்டாம் ஹென்ரி அரசரின் மந்திரியான சர் தாமஸ் மோர் என்பவர் புகழ் மிக்கு விளங்குகிறார். பழங்கால இலக்கியத்தில் இவருக்கிருந்த பரந்த புலமையையும், சாவை இன்முகத்துடன் வரவேற்ற இவரது நெறி தவறாத நேர்மையையும், மானிட வர்க்கத்தின்மேல் இவர் கொண்ட அளவற்ற அன்பையும், அதன் எதிர்காலத்தில் இவர் வைத்திருந்த திடமான நம்பிக்கையையும் இவர் நூல்களில் காண்கிறோம். இவரது சிறப்புக்குக் காரணமான கற்பனை உலகு (Utopia) என்ற நூல் லத்தீனில் எழுதப்பெற்றது. இக் காலத்தில் டிண்டேல் (Tyndale) விவிலிய நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இது பல முறை திருத்தப்பட்டு, 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதிகாரபூர்வமான வடிவத்தைப் பெற்றது. இதன் எளிய நடை பிற்கால உரை நடைக்கே ஒரு வழிகாட்டியாக விளங்கியது. மூலத்தின் பெருமையையும் அழகையும் இது பூரணமாகக் கொண்டுள்ளது. பூகோளம், இயற்கை இயல், பௌதிகம், ரசாயனம் போன்ற பல துறைகளில் நடைபெற்ற அறிவு வளர்ச்சியைப் பிரான்சிஸ் பேக்கன் சொற் சிக்கனம் மிக்க நடையில் அழகுபட விவரித்தார்.

எலிசபெத் அரசியின் அவைப் புலவரான எட்மண்டு ஸ்பென்சரைச் சாசரின் நேர்வாரிசு எனலாம். கவிதையில் இவர் செலுத்திய ஆட்சியின் அறிகுறிகள் இந்நாளிலும் காணலாம். இவரது இடையனின் பஞ்சாங்கம் (Shepherd's Calendar) என்ற நூல் பொருளிலும் நடையிலும் புது சகாப்தத்தைத் துவக்கி வைத்தது. இவர் பழங் கதைக்குப் புது மெருகு கொடுத்து, எதுகையின் உதவியால் இசை நயம் மிக்க பாக்களை அமைத்துப் புதிய கவிதை வடிவைத் தோற்றுவித்தார். அரசியைப் புகழ்ந்து பாடப்பெற்ற மாப்பெருங் காவியமான தேவ அரசி (Faerie Queene) என்ற நூல் இவருடைய புகழுக்குக் காரணமாக விளங்குகிறது. இதில் காணப்படும் பாக்கள் கற்பனைத் திறனும், சொல் நயமும், வடிவழகும் நிறைந்துள்ளன. இக் காவியத்தின் கதைச்செறிவும், உள்ளுறை பொருளும் போற்றற்குரியன. இலக்கியப் புலமை மிக்க சர் பிலிப் சிட்னியும் புகழ் பெற்ற கவிவாணரில் ஒருவர். உலக வரலாற்றை எழுதப் புகுந்த சர் வால்டர் ராலே என்ற வீரரும் அக்காலத்திய இலக்கியக் கர்த்தாக்களில் ஒருவர். கவிதையின் வாயிலாகக் கதை சொல்லும் வழக்கம் அக்காலத்தில் பரவிவந்தது. கிரிஸ்டபர் மார்லோ என்ற நாடகாசிரியரும் ஷேக்ஸ்பியரும் இத்துறையில் நல்ல கவிதைக் கதைகளை இயற்றினார்கள். ஷேக்ஸ்பியரது பாக்களில் மலிந்திருக்கும் கற்பனைத்திறன் நம்மைத் திகைக்கவைக்கிறது. இவரது சானட்டுக்கள் (Sonnets) அழகும், தெளிவும், வேகமும் பொருந்தின.

ஆனால் ஆங்கில இலக்கிய வரலாற்றில் எலிசபெத் காலம் நாடக நூல்களுக்கே புகழ் பெற்று விளங்குகிறது. தங்குதடையின்றிப் பாயும் கவிதை நடையிலும், நகைச்சுவை ததும்பும் உரைநடையிலும் நாடகங்களை இயற்றும் ஆசிரியர் பலர் எலிசபெத் காலத்தில் தோன்றினர். ஆங்கில நாடகப் பரம்பரையைத் தோற்றுவித்த கிரிஸ்டபர் மார்லோ தமது இருபத்து எட்டாம் வயதில் இறப்பதற்கு முன்னரே இத்துறையில் பெரும் புரட்சி விளைவித்தார். டாம்பர்லேயின் (Tamburlaine), டாக்டர் பாஸ்டஸ் (Doctor Faustus), மால்ட்டா யூதன் (Jew of ·Malta), எட்வர்டு II போன்ற இவரது சிறந்த நாடகங்கள் இடியோசை போன்ற வலிமையும், முழுமதியைப் போன்ற அழகும் ஒருங்கே இணைந்த சிறப்பான நடையை உடையன. துன்பியல் நாடகங்களை எழுத இவர் பிற்காலத்தவருக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

இவரது வழியில் வந்த ஷேக்ஸ்பியர் உலகப் புகழ் பெற்று விளங்குகிறார். அக்காலத்திய நாடகக் கலை உச்சநிலையை அடைய இவர் காரணரானார். பிற நூல்களிலிருந்து கதைகளையும் கற்பனையையும் தயங்காது எடுத்தாண்டு, தமக்கே உரிய பாணியை இவர் அமைத்துக்கொண்டார். கருத்தை வெளியிடுவதில் இவருக்கிருந்த திறமையும், பாட்டியற்றுவதில் இவர் பெற்றிருந்த வன்மையும், மானிட உள்ளத்தையும், மானிடனது செயலையும் எல்லா நிலைகளிலும் ஆராய்ந்து வெளிப்படுத்துவதில் இவர் காட்டிய திறனும், இவரது கலைப்பண்பும் இவர் இன்றும் செலுத்தும் அரசிற்குக் காரணமாக விளங்குகின்றன.

ஷேக்ஸ்பியரின் நண்பரும், அவரைவிடக் கல்வியிற் சிறந்தவருமான பென் ஜான்சன் (Ben Jonson) 17ஆம் நூற்றாண்டில் பல நாடகங்களை எழுதினார். இவருக்குப்பின் நாடகக் கலை தனது சிறப்பை இழந்து பண்பாடற்ற இலக்கிய வடிவத்தை அடைந்து மெல்ல மறைந்துவிட்டது.

எலிசபெத் காலத்தின் இறுதியில் ஜான் மில்ட்டன் தோன்றினார். ஸ்பென்சரின் மாணவர் என இவர் தம்மைக் கருதினார். ஸ்பென்சரது கவிதையின் பெருந் தன்மையையும், பழங்கதையைப் பின்னணியாகக் கொண்டு கவிதை இயற்றும் திறமையையும் பெற்றிருந்தார். இளமையில் இவர் இயற்றிய நூல்களில் ல' அல்லிக்ரோ (L' Allegro). இல் பென்சிராசோ (II Penseroso) ஆகியவை புகழ் பெற்றவை. லிசிடாஸ் (Lycidas) என்ற இரங்கற் பாடலில் இவரது கவிதைத்திறன் நன்கு புலனாகிறது. இவரது புகழுக்கு இவர் முதுமையில் எழுதிய துறக்க நீக்கம் (Para- dise Lost), துறக்க மீட்சி (Paradise Regained) ஆகிய இருபெருங் காவியங்களும் காரணமாக உள்ளன. வாழ்க்கையில் இவர் பட்ட இன்னல்களும், மதக்கோட்பாடுகளைப்பற்றி அந்நாளில் இருந்த விவாதங்களும் இவரது பல உரைநடை நூல்களுக்குக் காரணமாயின.

அக்காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த பியூரிட்டன் (Puritan) இனத்தவரின் சிறந்த பிரதிநிதியாக ஜான்பன்யன் விளங்கினார். உண்மையும் கற்பனையும் பிரிக்கமுடியாத வகையில் இவரது இரட்சணிய யாத்திரிகம் (Pilgrim's Progress) என்ற ஒட்டுவமைக் கதையில் காணப்படுகின்றன. ஆங்கிலக் குழந்தைகளுக்கு அற நூலாகவும், முதியோருக்கு வசன காவியமாகவும் அது விளங்குகிறது. விவிலிய நூலைப் பின்பற்றும் இவர் நடை சக்தி வாய்ந்தது.

மில்ட்டன், பன்யன் ஆகியவர்களைத் தவிர தாமஸ் பிரவுன், ஐசாக் வால்ட்டன் ஆகிய உரைநடை ஆசிரியர்களும் அக்காலத்தி லிருந்தார்கள். அரசியல் துறையில் அதிகாரச் செறிவு முறையை ஆதரித்த தாமஸ் ஹாப்ஸ் (Thomas Hobbes) என்ற தத்துவ ஞானி லெவையதன் (Leviathan) என்ற நூலை எழுதினார். உள் நாட்டுக் கலகத்தின் வரலாற்றை எழுதிய கிளாரண்டன் பிரபுவும் இங்குக் குறிப்பிடத் தக்கவர்.

பொற்காலம் (Augustan Age) : மில்ட்டனுக்குப்பின் சுமார் 100 ஆண்டுகள் பகுத்தறிவு மனப்பான்மை உச்சநிலையை அடைந்தது. ஜான் டிரைடன் (John Dryden) இக்காலத்தின் முதல்வர். ஹிரோயிக் ஈரடிச் செய்யுள், எளிய உரைநடை, வீராவேச நாடகம், இலக்கிய விமர்சனம், எள்ளித்திருத்தும் உரை, சிந்தனையைத் தூண்டும் கவிதை முதலிய பல துறைகளில் இவர் செய்த பணி நிலையானது. இவருடைய உரைநடை தெளிவும் திருத்தமும் உடையது. தற்கால உரைநடைக்கே இது வழிகாட்டியாக அமைந்தது.

அலெக்சாந்தர் போப் கவிதைத் துறையில் ஒரு தனி இயக்கத்தையே தொடங்கி வைத்தார் எனலாம். கணக்கியலில் கையாளும் திருத்தத்தை இவர் கவிதைகளில் காணலாம். தெளிவும் உறுதியும் நிறைந்த இவர் நடை தனிச் சிறப்புள்ளது. இவர் நூல்களிலுள்ள நூற்றுக்கணக்கான வரிகளும் வாக்கியங்களும் பாமரர் நாவிலும் பழமொழிகளாக இன்றும் உலவி வருகின்றன. இவர் முறையில் பாடும் கவிஞர்கள் ஏராளமாகத் தோன்றியது இவர் கவிதையை யந்திரத் தொழிலாக்கிவிட்டார் என்று குறை கூறுதலுக்குச் சான்றாகும். இயற்கையைப் பாடும் மரபைப் போக்கி, நாகரிக வாழ்வைப் பற்றிப் பாடும் வழக்கத்தைத் தோற்றுவித்தார். இவருக்குப்பின் வந்த ஜேம்ஸ் தாம்சன், காலின்ஸ், கிரே முதலியோர் இயற்கையழகையும், கவிதை யுணர்ச்சியையும் மீண்டும் ஆங்கிலக் கவிதையுள் சேர்க்க முயன்றனர்.

போப்பைப் பின்பற்றாத புலவருள் ஸ்விப்ட் (Swift), ஜான்சன், கோல்டுஸ்மித் முதலியோர் குறிப்பிடத் தகுந்தவர். பிரயரும் (Prior), கேயும் (Gay) சிறந்த உணர்ச்சிப் பாடல்களை இயற்றினர். ஜான்சன் தமது கம்பீரமான நடையில் லண்டன், மனித விருப்பங்களின் நிலையாமை (Vanity of Human Wishes) போன்ற கவிதைகளை இயற்றினார். கனிவும், இரக்கமும், உணர்ச்சியும் அற்புதமாகக் கலந்த பாழான கிராமம் (Deserted Village) என்ற பாட்டு, கோல்டுஸ்மித்திற்கு அழியாப் புகழைத் தேடித் தந்துள்ளது. ஸ்காட்லாந்தின் தேசியக் கவிஞரெனப் புகழப்படும் ராபர்ட்பர்ன்ஸ் (Robert Burns) இசை நயமும்,சொற்சிக்கனமும், உணர்ச்சி வேகமும் மலிந்த பாடல்கள் பல இயற்றினார். சித்திரக் கலைஞரான வில்லியம் பிளேக் (William Blake), களங்கமற்ற நடையில் தமது சொற்சித்திரங்களைச் செதுக்கினார். இவரது புனிதப் பாடல்கள் (Songs of Innocence), அனுபவப் பாடல்கள் (Songs of Experience) போன்ற சிறந்த உணர்ச்சிப் பாடல்கள் கற்றறிந்தோரைத் தவிரச் சிறுவர்கட்கும் இன்பம் பயக்கின்றன.

நாடகத் துறையிலும் கோல்டுஸ்மித் சிறப்புற விளங்கினார். இவரது நாடகங்களில் நல்ல நகைச்சுவையும், திறமையான குண அமைப்பும் காணப்படுகின் றன. ஆபாசமும், ஒழுங்கீனமும் அற்ற நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாக ஷெரிடன் விளங்குகிறார். இவருடைய போட்டியாளர் (Rivals), அவதூறுப் பள்ளி (School for Scandal) போன்ற நாடகங்கள் இன்றும் இங்கிலாந்தில் நடிக்கப்படுகின்றன.

எலிசபெத் காலம் நாடகத் துறையில்போல் உரைநடையிலும் புகழ்பெற்று விளங்குகிறது. ஜான் லாக் தமது தத்துவ நூற் கருத்துக்களைச் சரளமானதும், திருத்தமானதுமான நடையில் வெளியிட்டார். லண்டனைச் சூறையாடிய பிளேக் நோயின் கொடுமையை டானியல் டீபோ (Daniel Defoe) நேரில் கண்டாலொப்ப வருணித்தார். இவர் எழுதிய கற்பனை வரலாறான ராபின்சன் குரூசோ என்ற நூலைப் படியாத ஆங்கிலச் சிறுவரே இருக்க முடியாது. ஸ்விப்ட்டின் தொட்டியின் கதை (Tale of a Tub). கலிவரது பிரயாணங்கள் (Gulliver's Travels) போன்ற நூல்கள் கற்பனைக் கதை இலக்கியத்திற்குச் சிகரமாக விளங்குகின்றன.

கட்டுரையும் இக்காலத்தில் உருப்பெற்றது. ஸ்டீல், அடிசன் ஆகியோர் ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவான நடையில் விளக்கும் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றார்கள். செஸ்டர்பீல்டு பிரபு தம் மகனுக்கு எழுதிய கடிதங்களையும் கட்டுரைகளாகவே கொள்ளவேண்டும். நகைச்சுவையும் இரக்கமும் இணைபிரியாது இருந்த தனிநடையில் கோல்டுஸ்மித் தம் உரைநடை நூல்களை எழுதினார். 'இலக்கிய சர்வாதிகாரி' என்ற புகழ்மாலையுடன் விளங்கிய சாமுவெல் ஜான்சனுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய பாஸ்வெல் (Boswell) ஆங்கில இலக்கியத்துக்கு அமர நூல் ஒன்றை ஆக்கித் தந்தார்.

எட்வர்டு கிப்பன் (Edward Gibbon) போன்ற வரலாற்று நூலோரும், எட்மண்டு பர்க் (Edmund Burke) போன்ற நாவலரும் வாழ்ந்த காலமிது. அமெரிக்கச் சுதந்திரப் போரின் முன்னணியில் நின்ற தாமஸ் பெயின் புரட்சிக் கருத்துக்கள் நிறைந்த மனித உரிமைகள் (Rights of Man), பகுத்தறிவு யுகம் (Age of Reason) போன்ற நூல்களை எழுதிப் பாமர மக்களது சிந்தனையைத் தூண்டினார். அரசியலைப் போலவே பொருளாதாரத் துறையிலும் தேசங்களின் செல்வம் (Wealth of Nations) போன்ற அடிப்படையான நூல்கள் தோன்றின.

பாவனை நவிற்சி இயக்கம் (Romanticism) 18ஆம் நூ. இறுதியிலிருந்து அரை நூற்றாண்டுவரை நீடித்த இலக்கிய இயக்கமாகும். இது இயற்கையையும், தனி மனிதனது மாண்பையும், வரம்பற்ற கற்பனையையும், தீவிர உணர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டது.

வர்ட்ஸ்வர்த்தும் (Wordsworth) கோல்ரிஜும் (Coleridge) சாதாரணமான சம்பவங்களும் வியப்புணர்ச்சி எழுப்புமாறு கவிகள் புனைந்தார்கள். பைரன் (Byron) உணர்ச்சி மிக்க கவிதா சக்தியைப் பயன்படுத்திக் கொடுங்கோன்மையுடன் போரிட்டார். அழகுணர்ச்சி மிக்க பாடல்களை ஜான் கீட்ஸ் உருவாக்கினார். ஷெல்லி கற்பனையும் கவிநயமும் மிக்க அழகிய பாக்களை இயற்றினார். புதுமைக் கருத்துக்களைப் பாடிய இவரைப் புரட்சிக் கவிஞர் என்று கூறுவோர் உண்டு.

படிப்பினையைவிட உணர்ச்சி வேகத்தையும், இலக்கியப் பண்பையும் முக்கிய நோக்கமாகக் கொண்ட கட்டுரைகள் இக்காலத்தில் தோன்றின. ஹாஸ்லிட், லாம் (Lamb) போன்ற சிறந்த கட்டுரை ஆசிரியர்கள் இக்காலத்தவர். தாமஸ் டி குவின்சி (Thomas De Quincey) அபூர்வமான கற்பனை மலிந்த நூல்களை எழுதினார். பாமர மக்களின் பிரதிநிதியாக வில்லியம் காபெட் (William Cobbett) தம் கிராமியச் சவாரிகள் (Rural Rides) என்ற குறிப்புக்களை எழுதினார்.

வாழ்க்கைச் சம்பவங்களையும் உணர்ச்சிகளையும் எழுப்பும் நீண்ட கதைகளைப் புனையும் வழக்கம் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது. இதிலிருந்து 'நாவல்' என்ற புது இலக்கிய வடிவம் பிறந்தது. ஆங்கில நாவல் ரிச்சர்ட்ஸன் (Richardson), ஹென்ரி பீல்டிங் (Henry Fielding) என்ற நூலாசிரியர்களால் முதலில் உருப்பெற்றது. வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பாத்திரங்களைக் கொண்ட நாவல்களை இவ்விருவரும் எழுதினர். பாவனை நவிற்சி இயக்கம் உச்சநிலையை அடைந்திருந்த காலத்தில் வாழ்ந்த ஜேன் ஆஸ்டென் என்ற பெண்மணி இந்த மரபிற்கு நேர் எதிராகத் தமது நாவல்களை எழுதினார். வரலாற்று நாவல்களை சர் வால்ட்டர் ஸ்காட் எழுதினார்.

விக்டோரியாக் காலம்: விக்டோரியா அரசியின் காலத்தில் அமைதியும், மன் நிறைவும், மாறுதல் வேண்டா மனப்பான்மையும் தோன்றின. விக்டோரியாவின் அரசவைப் புலவராக இருந்த டெனிசன் இக்கால மக்களின் உண்மையான பிரதிநிதியாகத் தமது கவிதையை இயற்றினார். சந்தமும் மெருகும்மிக்க இவருடைய கவிதைகளைச் சொற் சித்திரங்கள் எனவேண்டும். ராபர்ட் பிரௌனிங் என்பவருடைய நீண்ட கவிதைகளைவிட உணர்ச்சிப் பாடல்களும், சிறு காதற் பாக்களும் சிறப்பு வாய்ந்தவை. இயற்கை அழகு மிளிரும் கவிதைகளையும், சிந்தனை நிறைந்த உணர்ச்சிப் பாடல்களையும் மாத்தியு ஆர்னால்டு பாடினார். ஸ்வின்பர்ன் (Swinburne) பொருளைவிடச் சந்தத்தையே கவனித்தார்; புரட்சிக்கீதம் பாடினார், பிரான்சிஸ் தாம்ப்சன் ஆத்மிகத் துறைப்பாடல்கள் பாடினார். ஆழ்ந்த அனுபவத்தையுடைய ஹாப்கின்ஸ் புதிய பாவங்களையும், புதிய நடையையும் கையாண்டு, பிற்காலக் கவிகளுக்குப் புதுவழி காட்டினார்.

விக்டோரியாக் காலம் ஆங்கில நாவலின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. தாக்கரே 'நல்லது வெல்லும்; தீயது அழியும்' என்ற நீதியை வற்புறுத்தும் கதைகள் பல புனைந்தார். சோகத்தைச் சித்திரிப்பதில் இவர் இணையற்று விளங்கினார். ஆன்டனி டிராலப் கதை சொல்லும் திறமை சிறந்து விளங்கினார்.

பல வகைகளில் தாக்கரேக்கு நேர் எதிரான இலக்கியப் பண்புகள் கொண்ட சார்லஸ் டிக்கன்ஸ் அமரத்துவம்பெற்று விளங்கும் பல கதாபாத்திரங்களை உருவாக்கினார். தாக்கரேயின் நுண்ணிய நகைச்சுவையைப் போலன்றி, இவரது நகைச்சுவை தீமையைச் சாட்டை கொண்டு அடிப்பதுபோல் சீறி எழுந்து சமூகத்தைத் திருத்த உதவியது. தாமஸ் ஹார்டி ஒற்றுமையில்லா இல்வாழ்க்கையையும், இயற்கையோடு முரண்பட்ட சமூகத்தையும், சாவிலும் நாசத்திலும் நாட்டமுள்ள மனித உள்ளத்தையும் கண்டு, அவற்றைத் தம் கதைகளில் மனக்கசிவுடன் சித்திரித்தார். அகந்தையை நாணச் செய்யப் புகழ் பெற்ற பல நாவல்களை மெரிடித் கடினமான நடையில் இயற்றினார்.

பிரான்டி (Bronte) சகோதரிகள் மனித உள்ளத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகளை அமைப்பதில் பிறருக்கு வழிகாட்டிகளாக அமைந்தார்கள். ஷார்லட்பிரான்டி எழுதிய ஜேன் அயர் (Jane Eyre) என்ற நாவலும், எமிலி பிரான்டி எழுதிய வுதரிங் ஹைட்ஸ் (Wuthering Heights) என்ற நாவலும் உலக இலக்கியத்தில் இடம் பெறத் தக்கவை. ஸ்ரீமதி காஸ்கெல் (Mrs. Gaskell) தொழிற் புரட்சியால் தோன்றிய பிரச்சினைகளைத் தம் நாவல்களில் திறமையுடன் ஆராய்கிறார். படிப்போர்க்குச் சலிப்பு ஏற்படாமலும், தேவையற்றவைகளைப் புகுத்தாமலும், நீண்ட கதைகளைப் புனையும் வித்தையில் ஜார்ஜ் எலியட் கைதேர்ந்து விளங்கினார்.


இக்காலத்திய உரைநடை ஆசிரியர் பலர் புகழ்பெற்று விளங்குகிறார்கள். கடினமானதும், படிப்போரை விளித்துரைப்பதுமான புதிய நடையில் தாமஸ் கார்லைல் அக்கால அரசியல், பொருளாதார, விஞ்ஞானக் கருத்துக்களைக் கண்டித்தார். மெக்காலேயின் ஆங்கில வரலாறு குறிப்பிடத்தக்கது. இவருடைய கருத்துக்களை ஏற்காதவரும் இவருடைய சரளமான நடையையும், சம்பவங்களை விவரிக்கும் தெளிவான முறையையும் புகழாமல் இருக்க முடியாது. மாத்தியு ஆர்னல்டு பண்பாட்டுக்காகப் போராடுவதையே நோக்கமாகக்கொண்டு ஆத்திரம் ததும்பும் நடையில் தம் உரைநடை நூல்களை எழுதினார். கலையுணர்ச்சியற்ற அக்காலத்தை இடித்துரைக்கும் பணியை ஜான் ரஸ்கின் மேற்கொண்டார்.

தற்காலம்: 20ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானவளர்ச்சியினால் சமூக, பொருளாதார அரசியல் அமைப்புக்களில் தோன்றிய பெரு மாறுதல்களாலும், இரு உலகப் போர்களினாலும் சிந்தனையின் போக்கே மாறிவிட்டது.

விஞ்ஞான உண்மைகளையும், உளவியல் உண்மைகளையும், புது அரசியற் கருத்துக்களையும் அடிப்படையாகக்கொண்டு எழுந்த ஏராளமான நாவல் இலக்கியம் இக்காலத்திற்கே சிறப்பானது. இத்தகைய தன்மை நவிற்சி (Realistic) இலக்கியத்திற்கு ஜார்ஜ் மூர் அடிகோலினார். ஹென்ரி ஜேம்ஸ் என்ற நாவலாசிரியர் மானிட உணர்ச்சியின் சிறு வேறுபாடுகளையும் திறமையுடன் விவரித்தார்.

எந்திர நாகரிகத்தின் விளைவுகள் அனைத்தையும் விஞ்ஞானக் கண் கொண்டு ஆராய்ந்த நாவலாசிரியருள் எச். ஜி. வெல்ஸ் முக்கியமானவர். தொழில் நாகரிகத்தினால் விளைந்துள்ள பிரச்சினைகளையும் தம் நாவல்களில் ஆராய்ந்தார். நடுத்தர வகுப்பினரை வெல்ஸ் சித்திரித்ததுபோல் உயர்தர வகுப்பினரை கால்ஸ்வொர்த்தி (Galsworthy ) தம் நாவல்களில் நேர்மையான இரக்கத்துடன் உருவாக்கினார். இவர் நாவல்கள் நாடகப் பண்பு நிறைந்தவை.

தமது 21ஆம் வயதில் தம் தாயகமான போலந்திலிருந்து வந்து இங்கிலாந்தை அடைந்த ஜோசப் கான்ராடு (Joseph Conrad) ஆங்கில மொழியைக் கற்றுக் கவிதைப் பண்பு நிறைந்த சிறு கதைகளையும் நாவல்களையும் எழுதினார். அதுபோலவே தொழில் வளர்ச்சி மிக்க தமது பிரதேசத்தின் சமூக அமைப்பு ஆர்னல்டு பென்னட் என்ற ஆசிரியரின் கதைகளுக்கு அடிப்படையாகியது.

சர் ஹியூ வால்போல் (Sir Hugh Walpole) ஆன்தனி ட்ராலப்பின் முறையைப் பின்பற்றி நல்ல கதையமைப்புக்கொண்ட நாவல்களை எழுதினார். வால்போலைப் போலவே புகழ் பெற்ற இன்னொரு நாவலாசிரியர் டீ. எச். லாரன்ஸ். இவர் தமது விவரணைத் திறனின் உதவியால் தம் கருத்துக்களை அனைவரும் ஏற்குமாறு செய்ய முடிந்தது.

தற்காலத்தில் விரும்பிப் படிக்கப்பெறும் நாவல்களில் சமர்செட் மாம் (Somerset Maugham) எழுதியவை முக்கியமானவை. இவர் கதை சொல்வதிலும் சம்பாஷணையிலும் திறமை பெற்றவர்; சிறு கதைகளையும், நாடகங்களையும், பிரயாணப் புத்தகங்களையும் எழுதி உள்ளார்.

தற்கால மக்களது கருத்தைக் கவர்ந்துள்ள நாவலாசிரியர்களுள் பார்ஸ்டர் (Foster) குண அமைப்பில் வல்லவர். இலக்கண விதிகளுக்கும், மொழி வழக்குக்களுக்கும் புறம்பான புது நடையில் ஜாய்ஸ் (Joyce) தமது யுலிசீஸ் என்ற நூலை எழுதினார். வர்ஜினியா வுல்ப் அம்மை (Virginia Woolf) அழகிய நடையில் அகக்கண் முன் தோன்றும் தோற்றங்களைச் சித்திரித்தார்.

வேறு பல பெண் நாவலாசிரியர்களுள் ரோஸ் மெக்காலே கிளெமென்ஸ் டேன் (Clemence Dane), வினிபிரடு ஆஷ்டன் (Winifred Ashton), மார்கரெட் கென்னடி (Margaret Kennedy), எலிசபெத் பவன் (Elizabeth Bowen) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அமெரிக்க ஆசிரியருள் சின்க்லேர் லூயிஸ் (Sinclair Lewis), பாபிட் (Babbitt) என்ற நாவலில் அமெரிக்க வியாபாரி யொருவனை மறக்க முடியாதவகையில் சித்திரிக்கிறார். போர்க்கள விவரணையில் ஹெமிங்வே சிறப்புடன் விளங்குகிறார். பிரடரிக் புரோகாஷ் கற்பனை மிகுந்த தம் கதைகளில் ஆசிய நாடுகளைச் சித்திரிக்கிறார். சோஷலிசக் கருத்துக்களின் அமெரிக்கப் பிரதிநிதியாக அப்டன் சிங்க்ளேர் விளங்குகிறார். அண்மையில் அவர் எழுதிய தொடர் நாவல்களில் தற்காலத்தின் சர்வதேச வரவாறு கவர்ச்சிகரமான வகையில் சித்திரிக்கப்படுகிறது. சீன வாழ்க்கையைக் கனிவும் இரக்கமும் மிகச் சித்திரிப்பதில் பொல் பக் இணையற்று விளங்குகிறார்.

நகைச்சுவை எழுத்தாளரில் ஜேகப்ஸ் மாலுமிகளின் வாழ்க்கையை உள்ளவாறே சித்திரித்தார்; எச். எச். மன்ரோ நகைச்சுவையுடன் படிப்பினையையும் கலந்து தந்தார். பி. ஜீ. வோட்ஹவுஸ் கற்பனைப் பாத்திரங்களை நகைச் சித்திரப் பாணியில் உருவாக்கி யுள்ளார். (தற்கால ஆங்கிலக் கவிதைபற்றித் தனிக்கட்டுரை பார்க்க).

19ஆம் நூற்றாண்டு நாடக இலக்கியம் தேக்கமுற்றிருந்த காலம். அந்நூற்றாண்டின் இறுதியில் தோன்றி அக்காலத்தவரது நயவஞ்சகமான போலிக் கௌரவங்களையும் அறநெறிகளையும், தகர்த்தெறிய ஆஸ்கர் வைல்டு என்ற ஆசிரியர் முற்பட்டார். இவர் எழுதிய விண்டர்மியர் சீமாட்டியின் விசிறி (Lady Winder- mere's Fan) என்ற நாடகம் இலக்கிய உலகத்தில், பெருங் கலக்கம் விளைவித்தது. வைல்டின் டாரியன் கிரேயின் ஓவியம் (Picture of Darian Grey) என்ற நாவலில் மறக்க முடியாத குண அமைப்பைக் காண்கிறோம்.

ஆனால் நாடகக் கலைக்குப் புத்துயிரளித்து, நாடக அரங்கின் அமைப்பிலும், நாடக இலக்கியத்தின் நோக்கத்திலும் புரட்சிகரமான மாறுதலை விளைவித்த பெருமை பெர்னார்டுஷாவைச் சாரும். இவருடைய மேதாவிலாசமான அறிவுத்திறனும், திகைப்பையூட்டும் வகையில் இவர் வெளியிட்ட புதுமைக் கருத்துக்களும் இவரை நாடகத்துறையின் ஈடு இணையற்ற அரசராக்கின. பொருளாதாரப் பிரச்சினைகளையும், வரலாற்றுச் சம்பவங்களையும், அரசியல் கருத்துக்களையும் சமூக ஊழல்களையும் இவர் தம் நாடகங்களின் வாயிலாகத் தமக்கே உரிய நடையில் ஆராய்ந்தார். இவருடைய நாடகங்களைவிட அவற்றின் முன்னுரைகளே மிக விரிவாக விளங்குகின்றன. இதனால் இவர் நாடகங்கள் நடிப்பதைவிடப் படிப்பதற்கே ஏற்றவை எனக் கூறுவார் உண்டு.

ஜான் மில்லிங்க்டன் சிஞ்சு (John Millington Synge) கவிதையும், சோகமும், நகைக்சுவையும் இணைந்த நாடகங்களை எழுதினார். எட்வர்டு மார்ட்டினும், கிரெகரிசீமாட்டியும் (Lady Gregory) நகைச்சுவை நாடகங்கள் எழுதுவதிற் பேர்போனவர்கள். சீன் ஓ'கேசி (Sean O'Casey) புது முறையில் நாடகங்களை எழுத முயன்றார்.

கால்ஸ் வொர்தி சமூகப் பிரச்சினைகளை ஆராயப் புகுந்த நாடகாசிரியருள் ஒருவர். சர் ஜேம்ஸ் பாரி (Sir James Barrie) புராணக் கதைப் பாத்திரம் ஒன்றைப் புதிதாகப் படைத்த பெருமையை உடையவர். லாரன்ஸ் ஹவுஸ்மன் விக்டோரியாவின் வாழ்க்கை வரலாற்றைச் சிறந்த சிறு நாடகத் தொடராக்கினார். கவிஞரான ஜான் ட்ரின்க்வாட்டர் ஆபிரகாம் லின்கனின் தீர வாழ்க்கையை நாடகமாகப் புனைந்தார். நோயல் கோவர்டு (Noel Coward) புது முறைகளைத் தம் நாடகங்களில் வெற்றியுடன் கையாண்டிருக்கிறார்.

சார்லஸ் லாம், ஹாஸ்லிட் முதலிய ஆசிரியர்கள் தோற்றுவித்த கட்டுரை இலக்கியப் பரம்பரை இன்றும் மங்காது போற்றப்பட்டு வருகிறது. இந்த இலக்கியத்தில் மக்களது நாட்டம் செல்லக் காரணமாக இருந்தவர் ராபர்ட் லூயி ஸ்டீவன்சன். இவர் சாதுரியமும் நகைச்சுவையும் நிறைந்த கட்டுரைகளை எழுதினார். சர் மாக்ஸ் பீர்பாம் (Sir Max Beerbohm) வாழ்க்கையின் விந்தைகளை நேர்த்தியான முறையில் எழுதினார். எட்வர்டு வெரால் லூகாஸ் (Edward Verral Lucas) இலக்கியப்பண்பு நிறைந்த கட்டுரைகளைப் பத்திரிகைகளுக்கு எழுதிவந்தார். ராபர்ட் லிண்ட் என்பவருடைய சாதுரியமும், அழகும், நேர்மையும் நிறைந்த கட்டுரைகளை எத்தனை முறை படித்தாலும் மகிழ்ச்சி விளைகிறது. ஜே.பீ. பிரீஸ்ட்லி, சார்லஸ் மார்கன் (Charles Morgan), சர் ஆஸ்பர்ட் சிட்வெல் (Sir Osbert Sitwell) ஆகியோர் சிறந்த கட்டுரையாளராவர்.

லிட்டன் ஸ்ட்ரேச்சி (Lyton Strachey) போன்ற சிறந்த வாழ்க்கை வரலாற்று ஆசிரியரும், டபிள்யூ.எச். டேவிஸ் (W. H. Davies) போன்ற சுய சரிதை ஆசிரியரும் ,எச். ஏ. எல். பிஷர் (H. A. L. Fisher) போன்ற வரலாற்று ஆசிரியரும், சீ. எம். டவுட்டி (C.M. Doughty) போன்ற பிரயாண நூல் ஆசிரியரும், சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற விஞ்ஞான நூலாசிரியரும் இந்நாளைய இலக்கியத்திற்கு அணி செய்கின்றனர்.

உரைநடை : உலகத்தின் உதயகாலத்தில் பாட்டும் கூத்தும் தோன்றின. பல நூற்றாண்டுகள் சென்ற பிறகே உரைநடை நூல்கள் இலக்கிய உலகத்தில் எழுந்தன என்று கூறினால் மிகையாகாது. இப்பேருண்மை ஆங்கில இலக்கியத்திற்கும் பொருந்தும்.

பண்டைய ஆங்கில உரைநடையில் அப்பொழுது சொல்வளமில்லை. அது இயன்ற மொழி வடமொழியைப்போல ஓர் இணைப்பு மொழியாக (Synthetic language) இருந்தது. சிலப்பதிகாரத்தில் காணப்படும் உரைநடைபோலவே உரைநடைக்கும் செய்யுள் நடைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது; உரைநடை மோனை நிரம்பிய நடையாய்த் திகழ்ந்தது.

ஆங்கில உரைநடையை வளர்த்த பெருமை ஆல்பிரடைச் சேர்ந்தது (Alfred the Great, 849-901). லத்தீன் மொழியில் பீடு (Bede) எழுதிய சமய வரலாறு (Ecclesiastical History) என்பதையும், போத்தியஸ் எழுதிய ஆறுதல் (Consolation of Boethius) என்பதையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கிலோ- சாக்சன் சரித்திரக் குறிப்பும் உரைநடை வளர்ச்சியில் நோக்கத் தகுந்தது.

மத்திய காலத்தில் (1350-1400) உரைநடை விரிவடைந்தது. மத சம்பந்தமான பொருள்களை மட்டும் அது சுட்டாமல் உலக சம்பந்தப் பொருள்களையும் சித்திரிக்கிறது. உதாரணமாகச் சாசரின் வான நூலான ஆஸ்டரலோப் (Astrolobe) என்பதைக் குறிக்கலாம். ஆங்கில மொழி ஒரு பகுப்பு மொழியாய் மாறிக்கொண்டு வந்தது. மாண்டிவில் (Mandeville), விக்லிப் முதலியோர் பாமர மக்களுக்குப் புரியும் எளிய நடையில் எழுதத் தொடங்கினார்கள். விக்லிப் கிறிஸ்தவ வேத புத்தகத்தை எளிய நடையில் மொழிபெயர்த்தார். 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய மாலரியின் உரைநடை வியக்கத் தகுந்தது. கவிதை நயம் ததும்ப எழுதப்பட்ட அவருடைய ஆர்தரின் மரணம்(Morte d'Arthur) நம் உள்ளத்தைக் கவர்கிறது. சொல் நயத்தில் திளைக்கும் டெனிசன்கூட மாலரியின் வரிகளை அப்படியே தம்முடைய நூலில் இழைக்கிறார்.

மறுமலர்ச்சிக் காலத்தில் (1516-78) கிரேக்க மொழி, லத்தீன் மொழி இவைகளை மக்கள் மிக்க ஆர்வத்துடன் படிக்கலாயினர். அம் மொழிகளின் மீது வைத்த பேரன்பினால் தங்கள் தாய் மொழியைப் புறக்கணித்தனர். தாய் மொழியில் எழுதுவதுகூட ஓர் இழிவென்று கருதினர். ஆனால் லிலி (Lyly 1554-1606) ஆங்கில மொழியை வளமாக்க முயற்சி செய்தார். எதுகை மோனையெல்லாம் உரைநடையில் தோன்றின.

ஆஸ்கம் (Ascham 1515-68) லத்தீன் மொழியில் திளைத்தவர். ஆயினும் சாதாரண மக்களின் பொருட்டு ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அவர் எழுதியவற்றில் எதுகையும் மோனையும் மிளிர்கின்றன. ஹுக்கரின் (1554-1600) கிறிஸ்தவச் சமயச் சட்ட திட்டங்கள் (The Laws of Ecclesiastical Polity) மிகச் சிறந்த புத்தகமாகும். அதன் உரைநடையில் ஒரு காம்பீரியமிருக்கிறது.

அங்கீகரிக்கப்பெற்ற விவிலிய நூல் மொழிபெயர்ப்பு (1611) என்பதன் உரைநடை நயம் மிகச் சிறந்தது

பேக்கனின் (1561-1626) உரை நடை திருக்குறளின் கதியில் செல்லுகின்றது. செஞ்சொற்களை ஆள்கின்ற திறமை அவரிடத்தில் நன்கு அமைந்து கிடக்கின்றது. சொற்சிக்கனத்திற்கு இலக்கியமாக அவர் திகழ்கின்றார். 17ஆம் நூற்றாண்டில் ராபர்ட் பர்ட்டன் (1577-1640) போன்ற உரைநடை ஆசிரியர்கள் விரிந்த படிப்பைப் பெற்றவர். ஜெரிமி டெயிலர் (1613-67), மில்ட்டன் (1608-74), சர் தாமஸ் பிரவுன் (1605-52) ஆகியவர்களுடைய உரைநடையில் ஏட்டின் மணந்தான் வீசுகின்றது. உலக இயற்கை மணத்தைக் காணோம். பாட்டன், பிரவுன் இவர்களுடைய உரைநடையில் லாம் திளைத்தார். அதன் சாயலை அவர் நூலில் நாம் பார்க்கின்றோம்.

இப்படி ஒலியழகே முக்கியமாக இருந்த காலத்திலும் பன்யன் (1628-88), ஐசக் வால்ட்டன் (Izaak Walton 1593-1683), டிரைடன் (1631- 1700) ஆகிய இவர்களின் நூல்களில் எளிமை, இன்பம், இயற்கையின் போக்கு ஆகியவற்றைப் பார்க்கின்றோம்.

18ஆம் நூற்றாண்டு உரைநடைக்கே தோன்றியது என்று சொல்லிவிடலாம். டானியல் டீபோ (1659- 1731) கையாளுகிற உரைநடையில் ஓர் எளிமை, தெளிவு, வேகம் உண்டு. நாகரிகமும் பழுத்த மனப் பண்பும் அடிசனுடைய (1672-1719) நகைச்சுவை இலக்கியத்தில் மிளிர்ந்தன. ஸ்டீலின் (1672-1720) நடையில் உணர்ச்சி மிகுதி.

ஸ்விப்ட் (1667-1745) என்பவரைப் போல யாரும் உரைநடையைக் கையாளுவது அரிது. ஒருவித அணியும் இல்லாமல் இவர் உரைநடை விளங்குகின்றது; நீறுபூத்த நெருப்புப்போல் வெளியிலே தோன்றும். ஆனால், அதன் அடியில் அனல்போலக் கணகணவெனச் சுடர் விட்டெரியும். ஜான்சன் (1709-1784) சிறிய பொருள்களைக் கூறுமிடத்தும் நீண்ட சொற்றொடர்களை வழங்குவார். கோல்டுஸ்மித்தின் (1730-74) உரைநடையில் சோகம் ததும்பும். துக்கந்தோய்ந்த அவர் நகைச்சுவை மனத்தைக் கவரும். பர்க்கிடம் (1729-97) சொற்கள் நயாகரா நீர்வீழ்ச்சியைப்போல உருண்டு ஓடிவரும். கூப்பரின் (1731-1800) உரைநடை தெளிந்த அருவியேபோல இசைந்தோடும். கிப்பனிடம் (1737-94) காம்பீரியம் உண்டு. ஒரே சுருதியில் அவர் உரைநடை செல்லுவதால் அது தெவிட்டாத இன்பந்தராது.

மெக்காலேயின் (1800-59) உரைநடை நோக்கத் தகுந்தது. ஆழ்ந்த கருத்துக்களை அவரிடம் எதிர் பார்க்க முடியாது. விரைவாய் ஓடுகிறவர்க்கும் அவர் உரைநடை விளங்கும். லாண்டர் (1775-1864) உரைநடையில் ஒரு சிலரே திளைக்க முடியும். உயர்ந்த பொருளுக்கேற்ற சொல்லும் உயர்ந்த நடையிற் செல்லுகின்றது. மலைச் சிகரத்தில் உலாவும் உணர்ச்சி வரும். கோல்ரிட்ஜின் (1772- 1834) உரைநடை தருக்க முறையில் செல்லுகிறது. பொருள்தான் அவர் நோக்கம்; அலங்காரமான நடை அவருடைய கருத்தன்று. சதேயிடம் (Southey 1774-1843) எளிமையும் தெளிவுமுண்டு. ஹாஸ்லிட்டின் (1778-1830) உரைநடை போற்றத் தகுந்தது. உற்சாகம், ஒளி, ஒரு தனித்த பாணி, இசைநயம் ஆகிய யாவும் அதில் தோன்றுகின்றன.

லாம் (1775-1834) எழுதிய உரைநடை ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. சோகமும், சிரிப்பும் கலந்து ஓடுகின்றன. டி. குவின்சி (1758-1859) யினுடைய நூல்கள், உரைநடையிலும் கவிதைநயம் தோன்றக்கூடும் என்பதற்குத் தக்க சான்றுகளாகும்.

கார்லைல் (1795-1881) கவிதைநயம் மிளிரும் சொற்றொடர்களைப் படைப்பதில் ஆற்றலுள்ளவர். சொல்லோவியங்கள் தீட்டுவதில் சமர்த்தர். ஆந்தனி புரூடு (Anthony Froude 1818-1896) நடையில் ஒரு விருவிருப்புண்டு. பல சுருதிகளில் அது பேசும் ; சொற்சித்திரங்களை எழுப்பும். நியூமன் (1801-1890) உரை நடையை வியக்காதவரில்லை. அதில் தெளிவுண்டு நுணுக்கமுண்டு, வேகமுண்டு; எப்பொருளுக்கும் வளைந்து கொடுக்கும் ஆற்றலுண்டு.

19ஆம் நூற்றாண்டிலிருந்த நாவலாசிரியர்களின் உரைநடையும் நோக்கத் தகுந்தது. ஸ்காட் (1771-1832) தமது உரைநடையைப் பற்றிக் கவலைகொள்ளவில்லை. ஜேன் ஆஸ்டின் (1775-1817) எழுதிய நூல்களில் தெளிவும், மனப்பண்பாடும், ஒழுங்கும், நகைச் சுவையும் தோன்றுகின்றன. தாக்கரேயின் (1811-63) நடை ஒரு படித்த கனவானின் பேச்சை ஒக்கும்; பண்பாடுள்ளது ; தெளிவுள்ளது. இவர் கிண்டலாகப் பேசும் ஆற்றலுள்ளவர். டிக்கென்ஸின் (1812-70) உள்ளம் தங்கமான உள்ளம். அவருக்குப் படிப்பு அதிகமில்லை. மிகுதியான வருணனை, மிகுதியான நகைச்சுவை இவைகள் மிகுதி. மெரிடித்தின் (1828-1909) உரை நடை சற்றுக் கடினம். பிரௌனிங் எழுதிய கவிதை எப்படியோ அப்படியே இவர் உரைநடை என்று சொன்னால் மிகையாகாது. நாவலாசிரியர்களிடையே நடைக்காகப் போற்றத் தகுந்தவர் ஹார்டி (1840-98) என்பவரே. தெளிவும் இனிமையும் கவிதை நயமும் இவரிடத்தில் பார்க்கின்றோம். வாழ்க்கைப் போராட்டத்தையும் மனிதனின் ஆதரவு அற்ற நிலையையும் செஞ்சொற்கள் கொண்டு சோகம் ததும்பச் சித்திரிப்பார்.

ஸ்டீவன்சன் (1850-94) உரைநடைக்கே பிறந்தவர்; கலைப்பண்புள்ளவர்; பொருளிலும் சொல்லிலும் மாசுமறுவற்ற இயல்புள்ளவர். ரஸ்கின். (1819-1900) வனப்பிலே திளைக்கின்றவர். வாழ்க்கையையும் கலைக் கண்ணோடு பார்க்கவேண்டும் என்று அரும்பாடுபட்டார். இவருடைய உரைநடையில் அழகும் கவிதைநயமும் குழைந்து பெருகுகின்றன.

மாத்தியு ஆர்னல்டின் (1822-88) உரைநடையில் தெளிவும், அறிவின் முதிர்ச்சியும், பழுத்த சொல்லாட்சியும் நாகரிக முறையில் அமைந்து கிடக்கின்றன. கிண்டல் பேச்சும் இடையிடையே தோன்றும். கூறியது கூறல் குற்றமாயின் அக்குற்றத்தை இவரிடம் பார்க்கலாம். தம்முடைய கருத்துக்களைப் பரப்புவதற்கு இவர் கையாண்ட முறை இதுவாகும். மேலும் எதிரிகளைக் கேலி செய்வதற்காகவும் திரும்பத் திரும்பக் கூறுவார். பேட்டர் (Pater 1838-94) பொருளுக்கேற்ற சொல்லைத் தேடிப் பயன்படுத்தும் பிரெஞ்சு ஆசிரியர் பிளாபெர் (Flaubert) அடிச்சுவட்டைப் பின்பற்றுகிறவர். இவர் நடை செதுக்கிய சிற்பத்தின் அழகையுடையது.

ஆஸ்கார் வைல்டு ஒரு சொல்லின் செல்வர். முரணாகப் பேசும் ஆற்றலுடையவர். பேட்டரைப் பின்பற்றுகிறார். செஸ்ட்டர்ட்டன் முரண் அணியை மிகுதியாய்க் கையாள்கின்றார். லூகஸ், லிண்ட் என்னும் இவர்கள் லாம்பை நினைவூட்டுகின்றனர். ஷாவிடம் ஸ்விப்டின் அமிசத்தை ஓரளவில் காண்கின்றோம். கான்ராடிடம் கடற்சித்திரக் கவிதை நயம் உடையது. மாக்ஸ் பீர்பாம் உரைநடைச் செல்வர். லிட்டன் ஸ்டிரேச்சியின் உரைநடையும் போற்றத்தகுந்தது. வர்ஜீனியா உல்ப் கவிதைச் சித்திரங்களைத் தருகின்றார். சார்லஸ் மார்கனிடம் பேட்டரின் உரைநடையைப் பார்க்கின்றோம். ரஸ்ஸல் நடை தெளிந்த நீரோட்டத்தை ஒத்தது. ஆங்கில உரைநடை பல்லாயிரக்கணக்கான நரம்புகளையுடைய யாழாகக் காட்சி அளிக்கின்றது. எக்கருமத்தையும், எவ்வுணர்ச்சியையும் வெளியிடும் ஆற்றலுடையது. பார்க்க: நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை, கதைப்பாட்டு, காப்பியம், வசையிலக்கியம் ரா. ஸ்ரீ. தே.

வாழ்க்கை வாலாறு: ஆங்கில இலக்கியத்தில் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு ஒரு தனி இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதம்னான் (Adamnan 624-704) எழுதிய செயின்ட் கொலம்பாவின் வரலாறும், அஸ்ஸர் (Asser ? - 910) எழுதிய ஆல்பிரட் அரசனின் வரலாறும் ஆதி காவியங்களாகக் கருதப்படுகின்றன. பின்னர் ஆப்ரே (Aubry 1626-1697), ஐசக் வால்ட்டன் இவர்கள் எழுதிய சிறு வாழ்க்கை வரலாறுகள் பெயர் பெற்று விளங்கின. 18ஆம் நூற்றாண்டில் ஆங்கில இலக்கியப் பீடத்தில் அரியென அமர்ந்து ஆட்சிபுரிந்த டாக்டர் ஜான்சன் கவிகளின் வாழ்க்கைகள் என 52 வரலாறுகளைச் சுவைபட எழுதி வெளியிட்டார். அவருடைய நண்பர் ஜேம்ஸ் பாஸ் வெல், டாக்டர் ஜான்சனையும் அவருடைய நண்பர்களையும் பற்றிப் பல சுவையான வாழ்க்கைத் துணுக்குக்களை அமைத்து எழுதிய வரலாறு, வாழ்க்கை வரலாறுகளில் புகழ்பெற்று மிளிர்ந்து நிற்கிறது. வாழ்க்கை வரலாறென்பது 'நிழலும் ஒளியும்' சேர்ந்து இலங்க வேண்டுமென்பதும், வெறும் புகழ் மாலையாக இருக்கக்கூடாது என்பதும் பாஸ்வெலின் நோக்கமாயினும், ஜான்சனைப் பற்றி அவர் எழுதிய வரலாற்றில் அந்த நோக்கம் கைகூடவில்லை என்பது ஒரு சாராரின் துணிபு. பாஸ்வெலைப் பின்பற்றி லாக்கார்ட் (Lockhart) என்பவர் சர் வால்ட்டர் ஸ்காட் என்னும் கவியைப்பற்றியும், மூர் என்பவர் லார்டு பைரன் என்னும் கவியைப்பற்றியும் வரலாறுகள் எழுதினர். அதன்பின் இலக்கியம், வரலாறு இரண்டிலும் புகழ்பெற்று விளங்கிய கார்லைல், கிராம்வெல், பிரடரிக் {Frederick) முதலியோர்களைப்பற்றிய வரலாறுகளை எழுதினார். கார்லைல் எழுதின வாழ்க்கை வரலாறுகளில் சில சித்திரங்கள் நம் கண்முன் தோன்றுவனபோல அவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளன. புரூடு கார்லைலைப் பற்றி எழுதிய வரலாறும், லார்டு மார்லி, கிளாட்ஸ்டனைப் (Gladstone) பற்றி எழுதிய வரலாறும், டிரவல்யன் (Trevelyan) மெக்காலேயைப் பற்றி எழுதிய வரலாறும் புகழ்பெற்றவை. 20ஆம் நூற்றாண்டில் வாழ்க்கை வரலாறு எழுதும் விதத்தில் லிட்டன் ஸ்டிரேச்சி ஒரு புது முறையைக் கையாண்டார். எழுதப்படுபவரைப் போற்றி வணங்கும் நோக்கத்துடன் இருக்காமல் உள்ளதை உள்ளதுபோல் வெளிப்படையாகக் காட்டுவதாக இருக்கவேண்டுமென்னும் கொள்கையை இவர் பின்பற்றினார். இவர் விக்டோரியாவைப் பற்றி எழுதிய வரலாறு புகழ் பெற்றது. மனத்தில் எழும் எண்ணங்களை வேகமாகவும் அழகாகவும் அப்படியே எடுத்துக்காட்டும் நடை, சரித்திர ஆராய்ச்சியில் மிக்க கவனம், அவரவருக்குள்ள சிறப்பான இயல்புகளை நுட்பமாகக் கண்டு, அவற்றைக் காட்டுவதில் விருப்பம் ஆகியவை இவருடைய சிறப்பாகும். ஸ்டிரேச்சியைப் பின்பற்றிய சில எழுத்தாளர்களுள் முக்கியமாக ஆந்திரே மார்வாவையும் (Andre Maurois), பிலிப் கெடல்லாவையும் (Philip Guedella) சொல்லலாம்.

18ஆம் நூற்றாண்டில் எட்வர்டு கிப்பன் என்னும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் தம்முடைய சுயசரிதையை எழுதினார். மகாத்மா காந்தியினுடைய சுயசரிதையும், பண்டித ஜவஹர்லால் நேருவுடைய சுயசரிதையும் ஆங்கில உலகில் புகழ்பெற்றவை. எச். ஜி. வெல்ஸ், வின்ஸ்டன் சர்ச்சில், ஜான் கௌப்பர் பாயிஸ் (John Cowper Pows), லாயிடு ஜார்ஜ் முதலானவர்கள் தம் சுயசரிதைகளை எழுதி வெளியீட்டிருக்கின்றனர். சுயசரிதைகள் அந்தரங்க விஷயங்களை அழகாகத் தாங்கித் தற்புகழ்ச்சி யில்லாமல் வாழ்க்கை அனுபவங்களைப் புகைப்படம் பிடித்துக் காட்டுவதுபோல் இருத்தல் நலம். கோ. ரா. ஸ்ரீ.

போலிநகை இலக்கியம் (Parody) ஆங்கிலத்தில் ஓர் இலக்கிய வகை. இஃது ஓர் இலக்கியப் புல்லும்ருவி ; முதனூல் ஒன்றைப் பின்பற்றியே இயங்குவது. ஒரு நூலின் கட்டமைப்பு, யாப்பு, நடை, அணிகள் ஆகியவற்றை இழிந்த பொருளுடன் புணர்த்தி,அந்நூலை எள்ளி நகையாடுவதே இதன் நோக்கம். இவ் இலக்கியம் முதற்கண் செய்யுட்களையே குறித்தாலும், நாளடைவில் ஆங்கில இலக்கிய வழக்கால் உரைநடை நூல், நாடகம், கதை முதலியவற்றையும் உணர்த்தலாயிற்று.

இப்பாவினை இயற்றுவதற்கு நுண்ணிய யாப்பறிவு, ஆக்கத்திறன், புலமை, திறனாயும் தன்மை, நன்மதிப்பு, நகைச்சுவை என்னும் பண்புகள் இன்றியமையாதவை. முதனூலின் மோனை, எதுகை நயத்தையொட்டிப் பாடவேண்டுவதால் யாப்புத் திறமையின் தேவை நன்கு விளங்கும். நடையும் அணிகளும் ஒரு நூலின் வெளித் தோற்றங்களே யாகும். நூலின் உயர்நிலை உட்கருத்தும், ஆக்கநோக்கமுமேயாம். ஆதலின், போலிநகை இலக்கியம் இயற்றுவோன் இக்கருத்தையும் நோக்கத்தையும் ஒட்டிப் பாடும் திறமையுடையனாதல் வேண்டும். இதனின்றும், இப்பாவின் நோக்கம் வெறும் இகழ்ச்சியன்று என்பது புலனாகும். தோற்றத்தையும் கருத்தையும் மிகைப்படுத்திக் காட்டுவது இதன் குறிக்கோள். திறனாயுந் தன்மை இப்பாவலனுக்கு ஒரு சிறந்த பண்பு. முதனூலை இகழ்வதால் இப்பாவலனுக்கு அந்நூலினிடம் மதிப்பில்லை என்று கருதுவது தவறு.

போலிநகை இலக்கியத்தின் வரலாறு இலக்கியச் சுவையின் வரலாற்றின் நிழல் ஆகும். ஒரு முதனூலை அந்நாளைய மக்கள் எப்படி மதித்தனர் என்பதை இப்பாவினின்றும் அறியலாம். இலக்கியத்திலும் அரசியலிலும் அளவுக்கு மீறிய மாறுதல்களையோ புரட்சியையோ சமூகம் விரும்பாது. அத்தகைய மாறுதல்கள் தோன்றும் பொழுது எதிரியக்கமாகப் போலிநகை இலக்கியம் எழும். போலியையும் இழிந்ததையும் இகழ்வதே பெரும்பாலும் இந்த இலக்கியவகையின் தொழில். ஆயினும், ஒரோவழிப் புதுமைப் பண்புள்ள சிறந்த நூல்களையும் இது தாக்கிக் கொன்றுவிடுகிறது. 18ஆம் நூற்றாண்டுப் புலவர் கிரே இத்தகைய இலக்கியத்திற்கு அஞ்சியே இசைப்பாக்கள் (Odes) இயற்றுவதை விட்டொழித்தார்.

14ஆம் நூற்றாண்டுக் கவிஞராகிய சாசரின் “சர் தோபஸீ" என்னுஞ் செய்யுள் இவ் இலக்கியத்தின் தோற்றுவாய் என்று கருதப்படுகிறது. சாசருக்குச் சிறந்த நகைத்திறன் உண்டு. இடைக்காலத்துப் பாலனைக் கவிதைகளின் (Mediaeval Romances) நடையையும் கருத்துக்களையும் இவர் ஏளனஞ் செய்கிறார். உயர்ந்த நடையின் நடுவே கொச்சையான தொடர்களும் எளிய பேச்சும் பரவி வந்துள்ளன.

17ஆம் நூற்றாண்டில் பட்லர் இயற்றிய ஹியூடிப் பாஸ் (Hudibras) பாவனைக் கதைகளின் உயர்வு நவிற்சியையும், காப்பியங்களையும், தொடர்நிலைகளையும் ஒருங்கே தாக்குகிறது. அடுத்த நூற்றாண்டில் பிலிப்ஸ் இயற்றிய நேர்த்தியான ஷில்லிங் நாணயம் (Splendid shilling), மில்ட்டனின் காப்பிய நடையையும் இயக்கத்தையும் எளிய பொருள்களுடன் சேர்த்து, எதுகை இல்லாத ஐந்து சீர்கள் கொண்ட அடிகளால் ஆக்கப்பட்டது. மில்ட்டனின் துறக்க நீக்கத்தின் சிறப்புக்களாகிய லத்தீன் சொற்றொடர்கள், ஒலிநயமுள்ள பெயர் வரிசைகள், வரிசை மாற்றம் ஆகியவை ஈண்டு அழகாக எடுத்தாளப்பட்டுள்ளன. இப்பாவகைக்கே இந்நூல் ஓர் அச்சு என்னலாம். அதே நூற்றாண்டில் போப்பும் காப்பிய நடையையும் அமைப்பையும் பின்பற்றிக் கூந்தற் சுருள் கவர்தல் (Rape of the Lock) என்னும் போலி நகைக் காப்பியம் இயற்றினார்.

1736-ல் ஐ. எச். பிரௌன் என்பவர் புகையிலைக் குழாய் (Pipe of Tobacco) என்ற நூலில் சிபர் (Cibber), யங், தாம்சன் என்னும் அந்நாளைய புலவர்களின் கருத்துக்களையும் பொருள்களையும் பழித்துப் பாடியுள்ளார். அந்நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய கானிங் (Canning) போலிநகை இலக்கியத்தில் வல்லவர். முதனூலின் வெளித்தோற்றத்தை மட்டுமன்றி, உட்கருத்தையும் நோக்கத்தையும் முதலில் எடுத்துக் காட்டியவர் இவரே. இவருடைய அம்புகளுக்கு இரையாகியோர் செருக்குற்ற ஆசிரியர்கள், பகுத்தறிவற்ற விஞ்ஞானிகள், தம் நாட்டை மதியாது பிற நாட்டைப் போற்றும் புரட்சிக்காரர்கள் முதலியோர் ஆவர். இவர் இயற்றிய நூல் ஆன்டி-ஜாக்கோபின் (Anti-Jacobin) என்பது.

போலிநகை இலக்கியத்தைக் கையாண்ட அடுத்த பெரும்புலவர் பைரன். இவர் சதேயின் தீர்ப்பின் காட்சி (Vision of J udgment) என்னும் செய்யுளைப் பின்பற்றி அதே தலைப்புக் கொண்ட பாவினை இயற்றினார். சதேயின் செய்யுளில் அறிவுச்சுமை புலமைத்திறனை அழுத்திவிட்டதாகையால் இஃது எளிதில் இகழ்ச்சிக்கு இலக்காயிற்று. பைரனின் செய்யுளில் நகைச்சுவை பொங்கித் ததும்பினாலும், முதனூலின் கருத்து, நடை முதலியவற்றின் நிழல் இல்லை.

புறக்கணிக்கப்பட்ட புகழ்மாலை (Rejected Add- resses) என்பது ஸ்மித் என்னும் பெயர் தாங்கிய உடன்பிறந்தோர் இருவர் ஒருங்கியற்றிய ஒரு கூட்டு நூல். கற்பனை நவிற்சிக் கவிஞர்கள் (Romantic poets) என்று அழைக்கப்பட்ட வர்ட்ஸ்வர்த், கோல்ரிஜ், சதே, ஸ்காட் முதலியவர்களின் நயமும் உணர்ச்சியும் இல்லா நடை, உரைநடை விரவி வந்த செய்யுள், மிகைப்படுத்திக் கூறல் போன்ற குறைகளை இஃது இகழ்கிறது.

1816-ல் ஜேம்ஸ் ஹாக் (James Hogg) எழுதிய கவிதைக் கண்ணாடி (Poetic Mirror) வெளிவந்தது. தம் காலத்தியவராகிய கோல்ரிஜ், ஸ்காட் என்பவர்கள் இயற்றியவை போன்ற பாக்களைத் தாமே எழுதி, இந்நூலுட் கோத்து இவர் வெளியிட்டார். செய்யுட்கள் மிக நீண்டவை; புலமைத்திறனும் இலக்கியச்சுவையும் நிரம்பியவை.

1843-ல் அரசவைப் புலவராக இருந்த சதே இறக்கவே, அப்பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற சிலர் எழுதிய செய்யுட்கள் போன்ற பல பாக்கள் அடங்கிய போன் கால்ட்டியர் கதைப்பாட்டு (Bon Gaultier Ballads) என்னும் நூல் வெளிவந்தது. இதனை இயற்றியவர்கள் ஐட்டன், மார்ட்டின் என்னும் இருவர். மூர், வர்ட்ஸ்வர்த், திருமதி பிரௌனிங். லீஹன்ட், டெனிசன், லிட்டன் போன்றவர்களின் தெவிட்டும் இன்னிசையை உடைய நடை, பொருளற்ற கற்பனை முதலான வழுக்களையும் அந்நாளைய தாழ்ந்த இலக்கியச் சுவையையும் திருத்த இந்நூல் முன்வந்தது.

விக்டோரியா நாளில் வாழ்ந்த நகைச் சுவைப் புலவர்களுள் கால்வர்லி சிறந்தவர். இவர் அந்நாளைய இரண்டாந்தரப் புலவர்களை எள்ளிப் பாடினார். ஸ்வின் பர்ன் எழுகிய ஹெப்டலோஜியா (Heptalogia) ஈண்டுக் குறிப்பிடத் தக்கது. இவரது யாப்புத் திறன் இணையற்றது. ஆனால் இவருடைய பாக்களில் சீற்றமும் கடுமையும் அதிகம். உணர்ச்சியினின்றன்றி, அறிவினின்றும் எழுவது இவரது நகைச்சுவை. ஒவ்வோர் அடியும் தேள் கொட்டுவதுபோன்று நஞ்சைக் கக்குகின்றது. போலக் என்னும் வழக்கறிஞர், 1876-ல் வழிகாட்டும் வழக்குகள் (Leading Cases) என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய செய்யுட்கள் வழக்குகள் போன்று அமைந்துள்ளன. 1891-ல் ஜே. கே. ஸ்டீபன் எழுதிய எழுதுகோல் வழக்கு (Lapsus Calami) என்னும் நூலில் மென்மையான நகைச்சுவையும், உயர் தனிப் பண்பும் காணப்படுகின்றன. வால்ட் விட்மன் என்பவரின் எதுகை இல்லாததும், யாப்பமைப்பு அற்றதுமான செய்யுள் நடை இதன் கண் வன்மையுடன் தாக்கப்படுகிறது.

20ஆம் நூற்றாண்டுப் புலவர்களுள் இப்பா இயற்றுவதில் சிறந்தவர் ஜே. சி. ஸ்கொயர். இவர் கையாண்ட, முறை புதியது. ஒரு கவிஞன் தன் முறையையும் நடையையுங்கொண்டு மற்றொரு கவிஞனின் கருத்தைப் பின்பற்றிச் செய்யுள் எழுதினால் எப்படியிருக்கும் என்னும் ஆராய்ச்சி போன்றுள்ளன இவர் பாக்கள். இந்நூற்றாண்டில் இயற்றப்பட்ட பாக்கள் கணக்கிறந்தவை. முன்பு ஓர் அருங்கலையான இப்பா இப்பொழுது பொதுக் கலையாக மாறியுள்ளது. ஆதலின், இதனின்று இப்போதைய சமூகத்தின் இலக்கியச்சுவை இத்தன்மைத்து என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

இசைப்பா (Ode) ஆங்கில இலக்கியத்தில் ஒரு பாவினத்தின் பெயர். இப்பாவினத்திற்குத் தற்பொழுதுள்ள பண்புகள் புலவர்கள் கையாண்ட முறையினாலும் மரபினாலும் வந்தவை. வீறுடைய நடை, உணர்ச்சி விரைவு, படிப்படியாகத் தொடர்ந்து விளக்கப்படும் கருத்து முதலியனவே அப்பண்புகள். ஆயினும் கிரேக்க இலக்கியத்தில் தோன்றி வளர்ந்த இந்த யாப்பு வகையில் முதற்கண் இக்கூறுகள் காணப்படவில்லை. பெரும்பாலும் சிறு சிறு செய்யுட்களையே இசைப்பா என்னும் பெயர் குறிப்பிட்டது. இது உணர்ச்சிப் பாடல் (Lyric) என்னும் செய்யுள் வகையில் முதலில் அடங்கியிருந்து, பின்பு தனியாகப் பிரிந்து, நாளடைவில் உயர்ந்த கருத்து, சொல்வளம், பொதுநோக்கம், பரந்த கட்டமைப்பு, பொருளை விளித்துப் பாடுதல் என்னும் சிறப்புத் தன்மைகளை ஏற்றது.

பல நூற்றாண்டுகளுக்குமுன் கிரீசில் சில பாக்கள் பின்னணி இசையுடனும் நடனத்துடனும் பாடப்பட்டன. இவற்றை ஆல்க்மன் என்பவர் தனிச் செய்யுள் வகையாக உருவாக்கினார். அவர்பின் வந்த ஸ்டெசிக்கோரஸ் என்பவர் இப்பாவினத்தை விரித்து முப்பகுதிகளாகப் பிரித்தார். கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய பிண்டர் என்பவரால் இஃது அழகும் தோற்றமும் பெற்றது. அவரது இசைப்பாவில் முற்சுற்று (Strophe), எதிர்ச்சுற்று (Anti Strophe), நிலைப்பா (Epode) என்னும் முப்பகுதிகள் காணப்பட்டன. கோஷ்டி நடனத்துடனும் இசைக்கருவிகளுடனும் இவை பாடப்பெற்றன. முற்சுற்று என்னும் பகுதியில் நடனமாடுவோர் வலமிருந்து இடஞ்சென்றனர். எதிர்ச்சுற்றில் இடமிருந்து வலஞ் சென்றனர். இத்தொடர்பினால் இவ்விரு பகுதிகளும் ஒரே யாப்பமைப்பைக் கொண்டன. இறுதிப் பிரிவாகிய நிலைப்பா நின்று பாடப்பட்டது. இசையினாலும் நடனத்தினாலும் அந்நாளில் இப்பிரிவுகள் நன்கு புலனாயின. பின்னாளில் இசையும் நடனமும் வழக்கொழியவே, இப்பிரிவுகளின் நுணுக்கம் பிற்காலப் புலவர்கட்கு விளங்கவில்லை.

பிண்டர் இவ்வகையில் இயற்றிய பாக்கள் பல இறந்துபட்டன. ஒலிம்பிக் விளையாட்டுக்களில் வெற்றிபெற்றவர்களின் புகழைப் பாடிய சில பாக்களே இப்பொழுது கிடைத்துள்ளன. பிண்டரின் செய்யுட்கள் இப்பாவினத்திற்கே எடுத்துக்காட்டுக்களாக விளங்கின. இவருடைய யாப்பு நுட்பமும், உள்ளுக்கமும் (Inspiration), கற்பனைத்திறனும் செய்யுளுக்குத் தகுதியற்ற பொருளையும் அழகுசெய்யும் வன்மை வாய்ந்தவை.

ஆங்கில இலக்கியத்தில் இசைப்பா மூவகையாக வளர்ந்தது. அவை பிண்டர் இசைப்பா, போலி இசைப்பா, எளிமையான உருவமும் கட்டமைப்புங்கொண்ட இசைப்பா என்பன. ஆங்கிலத்தில் முதன் முதல் பிண்டர் இசைப்பாவை இயற்றியவர் பென் ஜான்சன். காங்க்ரீவ் தமது 35ஆம் ஆண்டில் பிழையற்ற அமைப்புடன் இசைப்பாவை இயற்றத் தொடங்கினார். 1749-ல் வெஸ்ட் என்பவர் பிண்டரின் செய்யுட்களை மொழி பெயர்த்து, இப்பாவினத்திற்குப் புத்துயிர் அளித்தார். இசைப்பா அமைப்பில் மிகவும் புகழ்பெற்ற செய்யுட்கள் கிரே இயற்றியவை. 1754-ல் இவர் கவிதையின் முன்னேற்றம் (Progress of Poesy) என்ற பாவையும், 1756-ல் பாணன் (The Bard) என்ற பாவையும் பாடினார். 1747-ல் காலின்ஸ் என்பவர் விடுதலை (Liberty) என்னும் பாவை வெளியிட்டார். இதுகாறும் கூறப்பட்ட புலவர்கள் தோன்றியிராவிடில், ஆங்கில இலக்கியத்தில் இசைப்பா இடம் பெற்றிராது. இது 18ஆம் நூற்றாண்டுவரை நிலவியது. 19ஆம் நூற்றாண்டில் இஃது அருகியே காணப்படுகிறது. கவிஞர்கள் கிரேக்கச் செய்யுள் விதிகளையும் உருவையும் அறவே மறந்தனர். உட்பிரிவுகளின் பெயர்கள் மட்டுமே நின்றன. அவற்றின் பொருள் மறைந்துவிட்டது.

இசைப்பாவின் யாப்பு நுட்பம் பலருக்கு எளிதில் விளங்காததனால் ஒரு போலிப்பா எழுந்து நிலவியது. 17ஆம் நூற்றாண்டில் கௌலி (Cowley), பிண்டரின் யாப்பமைப்பை அறியாமல் இப்பாவைக் கையாண்டார். இவர் செய்யுட்கள் பல அளவுள்ள அடிகளையும், பல அடிகளுள்ள பாக்களையும் கொண்டவை. விரிந்த கட்டமைப்பும், பிண்டர் இசைப்பாவின் வெளித்தோற்றமும் இவற்றுள் இருந்தன. யாப்பமைப்புத்தான் இல்லை.

இவ்விரண்டு வகைகளுடன் மூன்றாவது வகையாக எளிய அமைப்புடன் ஒரு பாவினம் கையாளப்பட்டு வந்தது. இதன் முதல் எடுத்துக்காட்டுக்கள் ஸ்பென்சர் என்பவர் இயற்றிய இரண்டு திருமணப்பாக்கள். அவை பெருமித நடையையும் மடக்கிப் பாடவேண்டிய எடுப்பு அடிகளையும் கொண்டவை. இவற்றின் இசை தாலாட்டுப் பாட்டின் இயல்பை உடையது.

19ஆம் நூற்றாண்டில் இசைப்பாவின் எளிய உருவம் ஆக்கச் சிறப்பை அடைந்தது. வர்ட்ஸ்வர்த் எழுதிய கடமை (Duty) என்னும் பாடலில் உணர்ச்சி ஆழத்தையும் கம்பீர நடையையும் காணலாம். அமரத்துவம் (Immortality) என்ற இவரது செய்யுள் ஆங்கில இலக்கியத்திலேயே தலைசிறந்ததாகப் பலரால் கருதப்படுவது. குழவிப் பருவத்திலும் இளமையிலும் இயற்கை அழகை வியந்து நோக்கிய புலவர், ஆண்டுகள் முதிரவும், வாழ்க்கை நுகர்ச்சி அதிகரிக்கவும், அவ்வுணர்ச்சியை இழந்துவிட்டமைபற்றி ஏங்குகிறார் ; தனிப்பட்ட நுகர்ச்சியைப் பொது நுகர்ச்சியாகக் கற்பித்துப் பாடுகிறார். கீட்ஸ் இயற்றிய இசைப்பாக்களில் கருத்தும், கற்பனைத் திறனும், உணர்ச்சியும் ஒருங்கே கலந்து திகழ்கின்றன. ஷெல்லியின் வானம்பாடி (Skylark) ஆங்கிலச் செய்யுட்களிலேயே அழகு வாய்ந்தது. ஓசை நயம், பலதிறப்பட்ட இயக்கம், நெஞ்சத்தை அள்ளும் இசை, எழில் வாய்ந்த அணிகள் ஆகியவை அப்பாவிற்குச் சிறப்பை அளிக்கின்றன. வெலிங்ட்டன் பிரபுவின் மறைவுபற்றி டெனிசன் இயற்றிய பா கையறுநிலைத் துறையில் உள்ளது. போர் முரசு உள்ளத்தை ஊக்குவது போன்று, இப்பா ஆங்கிலரின் உணர்ச்சியைத் துள்ள வைக்கின்றது; நாட்டுப்பற்றும் கற்பனைத்திறனும் நிறைந்தது. இருபதாம் நூற்றாண்டில் இசைப்பா இதுவரை கையாளப்படவில்லை. பொது நோக்காகப் பார்க்குமிடத்து, ஆங்கில இலக்கியத்திலேயே இசைப்பா ஒரு தனிச் சிறப்புப் பெற்றுள்ளது. சு.ப.

இரங்கற்பா (Elegy) : அறுசீர் அடியும் ஐஞ்சீர் அடியும் கொண்டுவரும் ஈரடிச் செய்யுளைக் கிரேக்கர்கள் எலிஜி என்று அழைத்தனர். எலிகாஸ் என்னும் கிரேக்கச் சொல் சோகம் என்று பொருள்படும். ஆயினும் பொருள் சோகமாக இருப்பினும் இல்லாதிருப்பினும் இப் பாடல்கள் அனைத்தும் எலிஜி என்றே அழைக்கப்பெற்றன. இரங்கற்பாக்கள் வேறு உருக்கொண்டிருந்தால் கிரேக்க மொழியில் எலிஜி என்ற பெயர் பெறவில்லை. ஆகவே எலிஜிக்குரிய வடிவம் பெற்ற பாடல்கள் இறந்தவரை நினைந்து இரங்குவதாயிருந்தால் சாவை ஒட்டிய எலிஜிகள் என்றும், வேறு பொருள் உடையவனவாக இருந்தால் சாதாரண எலிஜிகள் என்றும் கூறப்பட்டன. கிரேக்க, லத்தீன் பாஷைக் கவிதைகளிலும் அவைகளை இம்மாதிரியாகக் கொண்ட ஐரோப்பியக் கவிதைகளிலும் எலிஜி என்பது தனி இலக்கணம்பெற்ற சிறந்த இலக்கிய வகையாக ஆயிற்று.

எலிஜியின் இலக்கணம், நாளடைவில் வடிவைப் பற்றியதாகவின்றிப் பொருளைப் பொறுத்ததாய் மாறிற்று. இறந்தவரை நினைத்து இரங்குவதே எலிஜிக்குரிய பொருள். அது உணர்ச்சிக்கேற்ற விதத்தில், இன்னிசைப் பாக்களுக்குரிய எவ்வித வடிவிலும் அமைந்திருக்கலாம். எனினும் அந்தப் பாடல் நீண்ட கவிதையாய் வளராமல், குறுகியதாயிருப்பதும் எலிஜிக்கு இன்றியமையாத இலக்கணம் என்று கூறுவதுண்டு.

எலிஜியில் ஒரு தனி வகை ஆயர்பாட்டு (Pastoral elegy) என்பது. இறந்தவனையும், சாவைக்குறித்து இரங்குபவனையும் ஆட்டிடையர்களாகப் பாவித்துக் கவிதையில் வரும் குறிப்புக்களையும், வருணனைகளையும் இடையர் வாழ்க்கைக்குப் பொருந்துவனவாக அமைத்து, ஆயர் மரபை ஒட்டிப் பாடுவதே ஆயர் பாட்டு. ஆங்கில எலிஜிகளில் பேர்போன சில பாடல்கள் இம் மரபைத் தழுவி எழுதப்பட்டவை. மில்ட்டன் எழுதிய லிசிடஸ், ஷெல்லி எழுதிய அடனேய்ஸ் (Adonais), ஆர்னல்டு எழுதிய தர்சஸ் (Thyrsis) இவ்வகைப் பாடல்களே. முதலில் ஆற்றாமையும், நடுவில் வருணனையும் இரங்குதலும், கடையில் ஆறுதலும் தோன்றும்படி எலிஜி அமைந்திருக்க வேண்டுமென்று சொல்வதுண்டு. இந்த இலக்கணப்படி எலிஜியின் உள்ளுறை தீராத் துயரமன்று. எனினும் தற்கால எலிஜிகளில் இரங்கும் நினைவுகளே பெரும்பாலும் பாராட்டப்படுகின்றன.

ஆங்கிலக் கவிதையில் பேர்பெற்ற சில எலிஜிகளாவன:

1. லிசிடஸ் மில்ட்டன் ஆயர் பாட்டு மரபைத் தழுவி எழுதியது; சொல் நயத்தாலும், ஓசை நயத்தாலும் ஒப்பற்ற அழகு வாய்ந்தது; கிங் என்றவரின் சாவுக்கு வருந்தும் தருணத்தில் கவி, தம்மைப்பற்றிய சிந்தனைகளையும் வெளியிடும் பாடல். இதில் தாபம் குறைவே ; மில்ட்டன் கிங்குடன் தோழமை பாராட்டவில்லை; நற்குணம் வாய்ந்த இளைஞன் ஒருவன் இறந்ததற்கே கவி வருந்துகிறார்.

2. அடனேய்ஸ் கீட்ஸின் சாவைக் குறித்து ஷெல்லி எழுதியது ; அழகும் வன்மையும் வாய்ந்த கவிதை. ஷெல்லியும் கீட்ஸும் ஒருவரையொருவர் நன்கு அறியார். சிறந்த இளங்கவி ஒருவனைப் பாராட்டாத உலகத்தைப் பழித்தும், சாவு, அழிவு என்பதைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனைகளை வெளியிட்டும் எழுதிய பாடல்.

3. கல்லறைத் தோட்ட இரங்கற்பா (Elegy in a Country Churchyard) கிரே எழுதியது. எளியவரின் வாழ்வையும் சாவையும் பற்றித் தோன்றிய சிந்தனைகளை வெளியிடுவது.

4. நினைவின் பொருட்டு (In Memoriam) டெனிசன் தம் நண்பன் இறந்ததைப்பற்றி இரங்கும் சோக உணர்ச்சி ததும்பும் பகுதிகளையும், தத்துவ ஆராய்ச்சி செய்யும் பகுதிகளையும் தன்னுட்கொண்ட நீண்ட கவிதை. அளவினால் எலிஜீ இனத்தைச் சார்ந்ததன்று என்று கூறக்கூடியவாறு நீண்டது. எனினும் உள்ளுறையின் சில பாகங்களில் தோன்றும் இரங்கலின் வன்மையால் இரங்கற்பா வகையையே சேர்ந்தது.

இவை போன்ற அரிய பேர்பெற்ற எலிஜிகள் ஆங்கிலத்தில் இன்னும் பல உள்ளன. ஆங்கிலக் கவிதையில் எலிஜி சிறப்பிடம் பெற்றுள்ளது. நாடகங்களிலும், கவிதை வடிவில் அமைந்த கதைகளிலும், சாவு சந்தர்ப்பங்களில் இரங்கற்பா பிறர் கூற்றாகவும் அமைவதுண்டு. இதுவன்றி உண்மையில் வாழ்ந்து இறந்தவரைக் குறித்த எலிஜிகள், கவிவன்மை பெற்ற பலராலும் எழுதப்பட்டன பல உள்ளன. பொதுவில் இரங்கலின் சாயை படர்ந்த சிந்தனைகளை வெளியிடும் பாடற் பகுதிகளிலிருந்து, உற்றவரை இழந்து சோகத்தின் உண்மை தெளிந்த இரங்கற் பாக்கள்வரை, பலவகையான எலிஜிகள் உள்ளன. தற்காலத்தில் எலிஜியின் சிறப்பிலக்கணம் அதன் பொருளைச் சார்ந்ததே.

லிரிக் (Lyric) என்பது லைர் (Lyre) என்ற இசைக் கருவியுடன் கூடிப் பாடத்தக்க கவிதை. ஆதி காலத்தில், எவ்வகையான கவிதையும் இசையுடன் சேர்ந்து பாடப்பட்டது எனினும், கிரேக்க மொழியில் வீரச் செய்கைகளைக் கூறும் ஹிரோயிக் கவிதை காவியங்களுக்கேற்றதாயும், லிரிக் உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடுவதற்கேற்றதாயும் கருதப்பட்டன. உரைநடையிலிருந்து கவிதை வேறுபடும் இயல்புகளில் உணர்ச்சிகளை வெளியிடும் திறம் முக்கியமானது. எனவே, கவிதைச் சிறப்பு வாய்ந்த பாடற்பகுதிகள் எல்லாம் லிரிக் இனத்தைச் சார்ந்தவையே. எனினும், நாடகம், காவியங்களின் இடையில் நேரும் பாடற்பகுதிகள் மட்டுமின்றி, ஏதோ ஓர் உணர்ச்சியை அதற்கேற்ற குறுகிய வடிவில் வெளியிடும் பாடல்கள் லிரிக் பாடல்கள் என்று குறிப்பிடத்தக்கவை. இவை ஒரே வகையான சீர்,தளைக் கட்டுப்பாடுகள் உள்ளனவாயின்றிக் குறுகியவும், நீண்டனவாயுமுள்ள அடிகள் மாறி விரவப் பெற்றிருப்பதுண்டு. லிரிக் பாடலின் ஓசை இனியதாயிருக்கும். ஆனால் இப் பாடல்கள் கானத்துடன் இசைந்திருக்க வேண்டியதில்லை. காதல், அழகு, பக்தி, துன்பம் முதலான பல உணர்ச்சிகளும் லிரிக் பாடல்களின் உள்ளுறையாவன. நீண்ட சிந்தனைகளும், வருணனைகளும், கதைப்போக்கும் இதற்கு ஏலாதன.

ஆயர்பாட்டு (Pastoral) என்பது மேனாட்டு இலக்கியத் துறைகளில் ஒன்று. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தியோகிரிட்டஸ் (Theocritus) கிரேக்க மொழியில் எழுதிய இடில்ஸ் (Idylls) என்ற பாடல்களிலேயே இந்தத் துறை முதலில் சிறப்படைந்தது. பையான் (Bion), மாஸ்கஸ் (Moschus) போன்ற கிரேக்கக் கவிகளும், ஆட்டிடையர் வாழ்க்கை எழிலிலும் எளிமையிலும் சிறந்ததாகக் பாவித்துப் பாடல்கள் எழுதினார்கள். இந்த முறையைப் பின்பற்றி, உலகக்கவிகளுள் ஹோமருக்கு அடுத்தவராகக் கருதப்படும் வர்ஜில் என்ற லத்தீன் கவியும், "இடையர் வாழ்க்கைச் சித்திரங்கள்" (Eclogues) என்ற பாடல்கள் எழுதினார்.

15ஆம் நூற்றாண்டில், இத்தாலியன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஆங்கிலம் முதலிய மொழிகளில் தோன்றிய புதிய மறுமலர்ச்சி இலக்கியத்தில் இத்துறையும் இடம்பெற்றது. தாசோ (Tasso), சனாசேரோ (Sannaz- zaro) ஆகிய இத்தாலிய ஆசிரியர்களே, முதலில் இந்தத் துறையை மறுபடியும் இலக்கிய வழக்கில் சிறந்து தோன்றும்படி எழுதினார்கள். பிறகு பல மொழி எழுத்தாளரும் ஆயர்பாட்டு முறையைக் கையாளுவது வழக்கமாய்விட்டது. 16ஆம் நூற்றாண்டில் இது ஐரோப்பிய இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றது.

இத் துறையின் இலக்கணம், அதன் உள்ளுறையைப் பற்றியதே. இந்த உள்ளுறை, இடையர் வாழ்க்கையை உள்ளபடி சித்திரிப்பதன்று : நாகரிக வாழ்க்கையைவிட ஆடு மேய்ப்பவர் வாழ்க்கை இனியதென்ற பாவனையைக் கற்பனையால் பலவாறு விவரிப்பதே. தமிழில் முல்லை, மருதம் முதலிய நிலத்துக்குரிய நிகழ்ச்சிகளுக்கும், வருணனைகளுக்கும் இலக்கணம் உள்ளதுபோல ஆயர்பாடலுக்கு ஓரிலக்கணம் உண்டு. இந்த வகையில் மேனாட்டு இலக்கியப் பகுதிகளில் இது ஒன்றே பலவகைக் கட்டுப்பாடுகளுக்குட்பட்ட உள்ளுறையைக்கொண்டு, தமிழில் உள்ள இலக்கியத் துறைகளை ஒத்துத் தோன்றுவது.

இது பாடலாகவும், கதையாகவும், நாடகமாகவும் இருக்கலாம். அதில் சித்திரிக்கப்படுவது ஒரு கற்பனை உலகம். அதில் தோன்றுவோரெல்லாரும் ஆடு மேய்ப்பவர். அந்த இடையர் ஆடுகளை மேயவிட்டு விட்டுக் கவலையின்றிக் குழல் ஊதுவாரென்பதும், குழல் ஊதுவதில் போட்டிகள் நிகழ்த்துவாரென்பதும், காதல் வயப்பட்டும், காதலியைப் பிரிந்தும் தோன்றும் உள்ளக் கிளர்ச்சிகளைப் பாடவல்லாரென்பதும், இறந்த ஓர் இளைஞனைப்பற்றி அவன் தோழர் அவனுடைய நற்குணங்களையும் இசை வன்மையையும் போற்றி யிரங்குவார் என்பதும், இன்னும் இவைபோன்ற பலவும், ஆயர் பாட்டிற்குரிய உள்ளுறை யாகும். ஆங்கிலத்தில் 16ஆம் நூற்றாண்டில் பல அழகிய ஆயர்பாட்டுக்கள் வெளிவந்தன. இவற்றுள் முக்கியமானவை சிட்னி எழுதிய ஆர்க்கேடியா என்ற நீண்ட உரைநடைப் பாவனைக் கதை.இது சனாசேரோவின் இத்தாலியக் கதையை முன் மாதிரியாகக் கொண்டதெனினும், தனி அழகு வாய்ந்தது. எளிமை, இனிமையாகத் தோற்றும் பாவனையுள்ளது என்ற பொருளுடைய ஆர்க்கேடியம் என்னும் சொல் இதிலிருந்தே வழக்கில் வந்தது.

பீல் (Peele) எழுதிய பாரிஸ் குற்றச்சாட்டும் (The Arraignment of Paris), லிலி எழுதிய காலதியாவும் (Galathea) நாடகங்கள். லாட்ஜ் எழுதிய ரோசலிண்ட் என்ற கதையே ஷேக்ஸ்பியரின் நீ விரும்பிய வண்ணம் (As You Like it) என்ற நாடகத்துக்கு முதல் நூலாகும். ஸ்பென்சர் எழுதிய ஆயர் பஞ்சாங்கம் (The Shepherd's Calendar) இனிய பாடல்களை உடையது. பென்ஜான்சன், பிளெச்சர், டிரைடன், ஹெரிக் முதலியோரும் இந்தத் துறையில் பாடியுள்ளனர். மில்ட்டன் எழுதிய லிசிடஸ் என்ற பாடல், இத்துறையில் உள்ள இரங்கற்பாவே. சிறந்த கவிஞர் தமது கவி வன்மையால், பழைய பாவிலும் புதிய கருத்துக்களைத் தோற்றுவிக்கலாம் என்பதற்கு அது ஒரு சான்றாக விளங்குவதாகப் பின்வந்த கவிகள் பாராட்டினர்.

எனினும் 16ஆம் நூற்றாண்டுக்குப்பின் இத்துறை பெரும்பாலும் சிறப்பற்றிருந்தது. 18ஆம் நூற்றாண்டில், டாக்டர் ஜான்சன் இந்தத் துறை ஒழியவேண்டுமென்றும், ஆயர்பாட்டுக்கள் நகலுக்கு நகலாய் அமைவனவென்றும், இயற்கைக்கும் உண்மைக்கும் ஒவ்வாதனவென்றும் கூறினார். நாளடைவில், இரங்கற்பா என்ற ஒரு துறையில் தவிர, மற்ற உருக்களில் இது வழக்கற்று அழிந்து போவதாயிற்று. இத்துறை இரங்கற்பாவுக்கு ஏற்றதெனக்கொண்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டில், ஷெல்லியும் ஆர்னல்டும் முறையே அடனேய்ஸ், தர்சஸ் என்ற அரிய இரங்கற்பாக்களை இயற்றினர். உண்மையைச் சித்திரிக்க முயலும் தற்கால எழுத்தாளருக்கு ஆயர்பாட்டு மரபு (The Pastoral Convention) ஏற்காதது. எனினும் கதைகளிலும் கவிதையிலும், எளியவர் வாழ்க்கையும், இயற்கைக் காட்சிகளும், இனியவாகச் சித்திரிக்கப்படும்பொழுது, சில விடங்களில், இப்பாடலின் சாயல் தென்படுவதுண்டு. இதுவன்றி இம்மரபு அழிந்துபோனதேயாகும்.

தற்காலக் கவிதை : 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், 1892ஆம் ஆண்டில் டெனிசன் இறந்தார். எனவே தற்காலக் கவிதை, டெனிசனுக்குப் பிற்பட்ட கவிதை அல்லது 20ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று கூறிக் காலவரையறையைக் குறிப்பது பொருந்தும். எனினும் தற்காலக் கவிதைகள் பல 19ஆம் நூற்றாண்டுக் கவிதை இனத்தைச் சார்ந்தவை. டெனிசன் கவிதைப் போக்கினின்றும் மாறுபட்டு விளங்குவது தற்காலக் கவிதையின் லட்சணங்களில் ஒன்று.

மெருகிட்டது. போன்ற சொல்நயத்தையும் இனிமையையும் டெனிசன் கவிதையிற் காணலாம். சொல்லை அளும் திறத்தாலும், கவிதைப்போக்கின் இனிமையாலும் அவர் ஆங்கிலக்கவிகளின் முன்னணியை அடைந்தார். எனினும் அவரிடம் புதிய ஆக்கவன்மை இல்லை. அவர் கவிதையின் உள்ளுறை அந்தக் காலத்தவர் ஏற்ற கொள்கைகளை வெளியிடுவதாயிருந்தது. சில பாடல்கள் வேறுவிதமாய் அமைந்திருந்தன. ஆனால், டெனிசன் புகழுக்குக் காரணமான நினைவின் பொருட்டு என்ற சரம கவியும், ஆர்தர் அரசனின் கதையைத் தழுவிய கவிதைகளும், விக்டோரியா காலத்து மக்களின் எண்ணங்களையும் கொள்கைகளையும் பிரதிபலித்தன. வாழ்க்கையின் முரண்பாடுகளை உள்ளபடி உணராமல் நீதிகளையும் உண்மைகளையும் பொதுப்படக் கூறும் மனப்பான்மையும், இதனால் நிலவும் மன அமைதியும், விக்டோரியா காலத்துச் சின்னங்களாக விளங்கின. டெனிசன் கவிதை இவற்றை ஓரளவு பிரதிபலிப்பது எனினும், வேறு விதங்களில் சிறந்து விளங்கியது. அந்தக் காலத்துக் கவிதைகள் சிலவற்றில் ஆழமற்ற தெளிவும் வேகமற்ற உணர்ச்சியும் தோன்றின. இவையும் அக்காலத்தவருக்கு ஏற்றனவாக இருந்தன. இந்தக் கவிதைப் போக்குக்கு மாறாக எழுதப்பட்ட பாடல்களிலேயே தற்காலக் கவிதையின் தோற்றத்தைக் காணலாம்.

டெனிசன் காலத்தின் பிற்பகுதியில், அவர் புகழுக்கு எதிரிடையாகப் புகழ்பெற்றவர் பிரௌனிங். முதலில் இவர் பாடல் மக்களின் மதிப்பைப் பெறவில்லை. அதற்கு ஒரு காரணம் அது படிப்பவருக்கு எளிதில் விளங்காததே. சரித்திரத்தின் இருண்ட மூலை முடுக்குகளில் கிடந்த விஷயங்கள் பலவற்றைப் பிரௌனிங் படித்திருந்தார். உள்ளும் புறமும் நிகழும் பல போராட்டங்களில் ஈடுபட்டு, ஒவ்வொருவனுடைய அந்தராத்மாவும் தனிப் பண்பாடு பெற்று விளங்குகிறது என்பதை வெளியிடுவது பிரௌனிங் எழுதிய கவிதையின் தனிச் சிறப்புக்களில் ஒன்று. மடாதிபதி, மாந்திரிகன், கொலையாளி, நீதிபதி போன்ற நூற்றுக்கணக்கானவர் தம் வாழ்க்கையின் நிகழ்ச்சிகளில் வளர்ச்சி பெற்றுத் தேறிய பிறவிக்குணங்களின் பண்பாட்டால் ஓர் அரிய சோதனையான சமயத்தில் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள், அவர்களது வாழ்க்கையும் செயல்களும் அவரவர் உள்ளத்தில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்று காட்டும் பாடல்கள் பல பிரௌனிங் கவிதையில் முதன்மை வாய்ந்தன. இயற்கையையும் காதலையும் பற்றிய இனிய பாடல்களையும் அவர் எழுதினார். எனினும் அவர் கவிதையிற் பெரும்பான்மை, முற்கூறிய இனத்தைச் சேர்ந்தவை. இந்தப்பாடல்கள் சிக்கலான பொருளையும், கரடுமுரடான நடையையும் கொண்டவை. ஒருவனைப் பற்றி அவனுடைய பகைவன் மனத்தில் எழும் வெறுப்பையும் இகழ்ச்சியையும் வெளியிடும் பாடல் ஒன்றில் வசைமொழிகள் மட்டுமன்றிப் பொருளற்ற முரட்டு ஒலியும் அமைந்துள்ளன. சொல் நயத்தைக்காட்டிலும் சொல்லுக்கும் பொருளுக்கும் உடன்பாட்டைத் தேடுவது, படிப்போருக்கு விளங்க வைப்பதைவிடக் கவிஞன் தன் உணர்ச்சிகளை உள்ளபடி வெளியிடுவது ஆகிய இவ்விரண்டு சிறப்பியல்புகளையும் பிரௌனிங்கின் கவிதையில் காணலாம். இவை தற்காலக் கவிதையின் இலக்கணத்தில் சேர்ந்தனவே.

விக்டோரியா காலக் கவிகளுள், டெனிசனுக்கும் பிரௌனிங்கிற்கும் அடுத்த இடம் வகிப்பவர் மாத்தியு ஆர்னல்டு. அவர் கவிதையில் புதுமையில்லை. ஆனால் பல நயங்களுண்டு. முக்கியமாகக் கிரேக்கக் கவிதையின் பெருமையை ஓரளவேனும் பிரதிபலிக்கச் செய்ய வேண்டுமென்ற அவரது ஆர்வம் சில வேளை நிறைவேறுவதுண்டு. தம் இலட்சியம் நிறைவேறாத சலிப்பே அவர் பாடல்களில் அடிக்கடி தொனிக்கும். “கவிதையே மொழியின் கலை உருக்களிற் சிறந்தது. கலையழகிற் சிறந்த கவிதை, ஆழ்ந்த கருத்தையும் உள்ளுறையாகக் கொண்டு திகழ்வதைச் சில பாடல்களிற் காணலாம். இவை கவிதையிலக்கணத்துக்கு மேற்கோள்களாக விளங்குவன” என்று ஆர்னல்டு தம் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதினார். சமூக இலட்சியங்களும் மொழி வளர்ச்சியும் கவிஞனுக்கு இடையூறாக வின்றித் துணையாக வாய்க்கும் நற்காலத்தில் ஆக்கத் திறமையுள்ள கவி, அழியாச்சுடர்களாய் விளங்கும் கவிதை எழுதும் வாக்கு வன்மை பெறுகின்றான். ஹோமர், டான்டே, ஷேக்ஸ்பியர் என்னும் இவர்களது கவிதையின் ஒப்பற்ற பெருமைக்கு இவற்றையே காரணமாகக் கூறலாம். ”கவிதைக்கு மாறுபாடான சூழ்நிலையில் உற்பவிக்கும் பாடல்கள், சூழ்நிலையின் காரணமாகவோ, அதை மீறி எழுதும் வன்மையற்ற ஆசிரியனின் திறமைக் குறைவாலோ சிறுமையடைகின்றன” என்று ஆர்னல்டு கூறினார். தம் சூழ்நிலையின் குறைகளை அவர் விளக்கினார். அதற்கு முன்பே தாம் கவிதை எழுதுவதை யும் நிறுத்திவிட்டார்.

விஞ்ஞான அபிவிருத்தி, செல்வப் பெருக்கம், எந்திர

உற்பத்திப் பெருக்கம் இவற்றைச் சமூக இலட்சியங்களாகக்கொண்ட 19-ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் கலைஞன் வெறுக்கத்தக்கது என்று வேறு சிலரும் நினைத்தார்கள்.

சமூகச் சூழ்நிலையில் உள்ள கொடுமையையும் கெடுதல்களையும், கார்லைல், ரஸ்கின், டிக்கன்ஸ் முதலியோர் தம் கட்டுரைகளிலும் கதைகளிலும் எடுத்துக் காட்டினர். கவிதையிற் சிலர் முற்காலத்து முறைகளைப் புதுப்பித்துக் கையாளத் தொடங்கினர். இந்த முறை முதலில் ஓவியக்கலையில் கையாளப்பட்டது. இந்தக் குழுவைச் சேர்ந்த ரொசெட்டி (Rossetti) ஓவியம் எழுதியும், கவி எழுதியும் தம் கலைத்திறனை வெளியிட்டார். கவிஞர் சிலரும் இந்தக் குழுவைச் சேர்ந்தனர். இவர்களுள் முக்கியமானவர் ரொசெட்டியும் மாரிசும். தம் கால வாழ்க்கையையும் கலைக் கொள்கைகளையும் தவிர்த்து, முற்காலப் பண்புகளைக் கலைவாயிலாக வெளியிடுவதே இவர்களுடைய நோக்கம். 19ஆம் நூற்றாண்டில் இயற்கையைச் சித்திரிக்கும் முறை, காட்சியைப் படம் பிடிப்பது போன்ற போலி முறை. இது கலைக்கு ஒவ்வாதது என்று இவர்கள் நினைத்தார்கள். நேர்காட்சியும் விவரச்செறிவும் உள்ளதாய் ஓவியம் தீட்ட முயன்றார்கள். கவிதையிலும் இந்த இலட்சியங்கள் தென்பட்டன. ரொசெட்டி முதலில் எழுதிய பேறுபெற்ற மங்கை (The Blessed Damozel) என்ற பாடலின் கதை, காதற்பாடல், வருணனை ஆகிய அனைத்திலும் இந்த நேர்காட்சியையும் விவரச் செறிவையும் காணலாம். சிலவிடங்களில் பொதுப்படவும், சிலவிடங்களில் நுட்பமான விவரங்களுடனும் சித்திரிக்கும் பாவனை ஒருவகைப் புதுமையுள்ளதாயிருந்தது. பல சானட்டுக்களையும் மத்திய கால (13வது முதல் 16ஆம் நூற்றாண்டுவரை உள்ள கால) இலக்கிய வடிவுகளை ஒத்த கதைப் பாட்டுக்களையும் அவர் எழுதினார்.

மாரிஸும்,தம் காலப்போக்கை எதிர்க்கும் கொள்கைகளைத் தழுவியிருந்தார். ஒரு வினைஞன் கையால் ஒரு பொருளை அழகுபெறச் செய்து முடிக்கும் முறையே எந்திரப்பொருள் உற்பத்தியைவிட மேலானது என்ற கொள்கையுடன் கைவேலைத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தினார். தம் கால வாழ்க்கை கவிதைக்கு ஏற்றதன்று என்று நினைத்து, மத்திய காலத்தையும் புராதன காலத்தையும் சார்ந்த கதைகளைப் பாடலாக அமைத்தார். அவர் முதலில் எழுதிய பாடல் ஒன்று டெனிசன் எழுதிய ஆர் தர் கதையையே தழுவியதெனினும், கருத்தில் டெனிசனுக்கு மாறாகத் தோற்றுவது. ஆர்தரின் மனைவி குவினவிர் (Guinevere), தன் கணவனது வலக்கை போன்ற லான்சிலாட் என்னும் வீரன் மீது காதல்கொண்டு, நெறிதவறி நடந்ததே ஆர் தருடைய வீரர்கள் சிதறிப்போய் நாடு பாழானதற்குக் காரணம் என்று டெனிசன் நீதி ஒதுவதை மாரிஸ் மறுத்தார். காதல் வயப்பட்ட குவினவிரின் உள்ளப் போராட்டமும் சோகமுமே கவிதைக்குரிய விஷயம் ; சமூக நீதியை விளக்குவதன்று என்ற கருத்து அவர் கவிதையில் தொனித்தது. எனினும், மாரிஸ் பிறவியில் பெருங்கவி அல்லர். அவர் எழுதிய சிகர்டு (Sigurd) என்ற காவியத்தின் சில பகுதிகளும், சில எளிய பாடல்களும் இன்றும் பாட்டுத் தொகுதிகளில் இடம் பெறுகின்றன. ஆனால் அவர் கவிதையிற் பெரும்பகுதி படிப்போர் மனத்தைக் கவரவில்லை. பாடலிலும், உரைநடையிலும், கைத்தொழிலிலும், சமூக இலட்சியங்களிலும் புதிய எழிலை அமைக்க விரும்பி, வாழ்நாள் முழுவதும் பல துறைகளில் ஈடுபட்ட மாரிஸ் தம் கவிதையைப்பற்றி அடக்கமாகவே எழுதியுள்ளார்.

ஸ்வின்பர்ன், பிரான்சிஸ் தாம்சன் முதலியோரும், கவிதையில் தம் காலப்போக்கை எதிர்த்தவரே. விக்டோரியா காலச் சமூக நீதிகளை எதிர்ப்பதே தம் இலட்சியம் என்று ஸ்வின்பர்ன் இளமையில் நினைத்தார். பழைய

கிரேக்க இலக்கியமும், புதிய பிரெஞ்சுக் கவிதையும் அவர் உள்ளத்தைப் பண்படுத்தின. தாபமும் உணர்ச்சி வேகமும் சமூகம் கண்டிக்கும் தீய ஒழுக்கத்திலிருந்து கிளர்ந்தனவா யிருந்தாலும் கவிதையில் சிறப்பிக்கத்தக்கன என்ற கொள்கையை விளக்க அவர் பல பாடல்கள் எழுதினார். இவை புரட்சிகரமானவை என்று பிறர் கூறியது அவருக்கு மகிழ்ச்சியே தந்தது. இன்று அவர் பாடல்களின் சிறப்பு அவற்றின் கருத்தைப் பொறுத்ததாயில்லை. தீயவற்றைப் போற்றும் பண்பு இளமைச் செருக்கின் அறிகுறியாகத் தோன்றுகிறதேயொழிய, சில பிரெஞ்சுக் கவிதைகளைப் போல, மனத்தின் மறைவிடங்களை விளக்கும் ஒளிவாய்ந்ததா யிருக்கவில்லை. ஸ்வின்பர்ன் தம் பாடலில் சொல் ஆட்சியையும் ஓசை நலனையும் விளக்கினார். உணர்ச்சி மேலிடும் வேகமும் அதன் ஓய்வும் அலையோசையைப்போல அவர் எழுதிய அடிகளில் தொனிப்பதுண்டு. சில பாடல்களில் பொருள் மயக்கம் நேரும்படி ஓசை மேலோங்கியிருக்கும். பிற்காலத்தில் அவர் நாடகங்களும் நீண்ட காவியப்பகுதிகளும் எழுதினார். இன்று அப்பாடல் தொகுதி முழுவதையும் படிப்பவர் சிலரே. பிரான்சிஸ் தாம்சன் தம் கவிதையின் உள்ளுறையிலும் நடையிலும் 17ஆம் நூற்றாண்டுக் கவிகளுடன் தொடர்புடையவராயிருந்தார். தம் காலத்துக் கவிதை பொலிவற்றுத் தோன்றியதை மாற்ற, அவர் புதிய சொற்றொடர்களையும் உவமையணிகளையும் கையாண்டார். அவர் பாடலும் கருத்தும் 17ஆம் நூற்றாண்டின் அனுபூதிக் கவிதைகளை ஒத்திருந்தன.

தாம்சனை நட்புடன் ஆதரித்த ஆலிஸ் மேனல், ரொசெட்டியின் சகோதரி கிரிஸ்டினா முதலியோர் அனுபூதிப் பாடல் வகையிலும், ப்ரான்டே சகோதரிகளுள் எமிலி வேறு வகையிலும், சிறந்த் பாடல்கள் எழுதிய பெண்மணிகள். இவர்களுடன், பிரௌனிங்கின் மனைவியான எலிசபெத் பாரெட் பிரௌனிங்கையும் சேர்த்து, இக்காலத்தில் பெண் கவிகள் தோன்றிச் சிறப்புற்றனர் என்று சொல்வதுண்டு. இம்மாதர்கள் கவிவன்மை வாய்ந்தவரே. ஆனால் புதிய கருத்துக்களையோ, அமைப்பையோ கவிதையில் தோற்றுவித்தவரல்லர்.

செல்வம் தேங்கிச் செருக்குற்ற விக்டோரியா காலத்தின் மகிழ்ச்சி 19ஆம் நூற்றாண்டு முடியுமுன்னமே சிதைந்துவிட்டது. எழுத்தாளரும் கலைஞரும் சலிப்பையே வெளியிடலாயினர்.“வாழ்க்கையை ஒட்டியதாகக் கலை இருக்கவேண்டியதில்லை. அழகுணர்ச்சிக்கும் தீரத்துக்கும் இடமளித்த முற்காலத்திலேயே இப்பொருத்தம் சாத்தியமானது. எந்திர ஆட்சி மேலோங்கி, இலட்சியங்கள் சிதைந்த தற்காலத்தின் கலை, வாழ்க்கையை ஒட்டாமலிருப்பதே தகும். தன் சூழ்நிலையினின்றும் ஒதுங்கித் தான் காணாத அழகைக் கற்பனையால் சிருஷ்டிக்க வல்லவனே கவி” என்றெல்லாம் ஒரு சாரார் கூறினர். அமெரிக்காவில் போ (Poe)வும், இங்கிலாந்தில் பேட்டர், வைல்டு முதலிய எழுத்தாளரும் இவ்விதப் பிரசாரம் செய்தனர். இதற்கு மாறாகவும் ஒரு கொள்கை தோன்றியது. ”வாழ்க்கைக்கு வரை காண முடியாதென்பதைத் தற்காலக் கவி உணர்ந்தவன். இயற்கையின் விந்தையும், எந்திரங்களின் பயனும், ஜனநாயகக்கொள்கைகளும், உள்ளத்தின் மறைந்த பண்புகளும், உலகத்தில் உள்ளவை அனைத்துமே கவிதையின் உள்ளுறையாகத் தக்கவை. வரம்பின்றிப் பரந்து தோன்றும் வாழ்க்கையின் பண்புகளை, வரம்பு கடந்த கட்டுப்பாடற்ற கவிதையிலே தோற்றுவித்தல் கூடும்” என்ற ஒரு கோட்பாடும் வழங்கியது. இதற்கு உதாரணமாக அமெரிக்காவில் விட்மன் பாடல்களையும், இங்கிலாந்தில் அந்தப் போக்கில் எழுதப்பட்ட பாடல்களையும் குறிக்கலாம்.

டெனிசன் காலத்திலிருந்து தற்காலம்வரை உள்ள கவிதையின் பண்புகளைத் தொகுத்துக் கூறுவது சாத்தியமன்று. இதற்கு ஒரு காரணம் இது தற்காலத்தைச் சார்ந்திருப்பதே. அண்மையில் தென்படும் நுட்பமான விவரங்களும் வேறுபாடுகளும் மறைந்த பின்பு தொலைவிலேயே பொது லட்சணங்களின் சாயல் விளங்கும். வாழ்க்கையிலும் கலையிலும் இதுவரையில்லாத மாறுதல்களும் புதுமைகளும் தோன்றிய இக் காலத்தில், ஒவ்வொரு கவியும், எம்மட்டும் இப் புதுமையைத் தன் கற்பனையில் பிரதிபலிக்கச் செய்து, கவிதையில் உருவாக்கினான் என்று கூறுவது. பல கவிகளின் இலக்கிய வரலாற்றைத் தனியாகக் கூறும் நீண்ட ஆராய்ச்சியாய் முடியும். இது இயலாதாகையால், இக் கவிதைத் தொகுதியைப் பொதுப்பட மூன்று இனங்களாகப் பிரிக்கலாம்: புதிய கருத்துக்களைத் தோற்றுவித்து, அமைப்பில் மரபுடன் தொடர்பு கொண்டு விளங்கும் கவிதை ; புதுமைக்குரிய சின்னங்களைக் கொண்டு தனி உருப்பெறாத கவிதை ; புது முறையின் இலக்கணங்களை விளக்கிக் காட்டும் கவிதை. மரபை ஒட்டியும் வெட்டியும் உள்ள பாடல்களில் கவிதைச்சிறப்பு வாய்ந்தன. வாயாதன என்ற வேற்றுமையும் முக்கியமானது. கடைசி இனத்தைச் சார்ந்த கவிதைகள் நாளடைவில் அழிந்து போவன ; தோன்றி நாளாகாததால் இன்னும் நிலைத்திருக்கின்றன. அவற்றைச் சுட்டுவது ஆராய்ச்சியாளர் தம் சொந்தக் கருத்தை வெளியிடுவதேயாகும்.

தற்காலக் கவிதையை ஆராய்வதற்குச் சாதகமாக அதைக் கால அளவுகோலாலும் இரு கூறாக்கலாம். புது முறைக்குச் சான்றாக விளங்கும் டி. எஸ். எலியட் எழுதிய பாழ் நிலம் (The Waste Land) என்னும் புகழ் பெற்ற பாடல் 1922-ல் வெளியிடப்பட்டது. இது வெளிவந்ததையே ஓர் எல்லையாகக் கொள்ளலாம். டெனிசன் காலத்துக் கவிதைப் போக்கிலிருந்து மாறுதலை விரும்பியவர் பலவிதங்களில் புதுமையை நாடிய காலம் அதற்கு முற்பட்டதென்றும், தற்காலக் கவிதை தனி வடிவம் பெற்றுப் பல கிளைப்பட்டு வளரும் காலம் அதற்குப் பிற்பட்டதென்றும் கூறலாம். கவிகளின் பெயரால், முற்பகுதியை ராபர்ட் பிரிட்ஜிஸ் (Robert Bridges) முதல் எலியட்வரை உள்ள காலமென்றும், பிற்பகுதியை எலிய முதல் டிலன் தாமஸ் (Dylan Thomas) வரை உள்ள காலம் என்றும் குறிப்பிடலாம்; இவ்விதப் பிரிவினைகள் பொது ஆராய்ச்சிக்குத் துணைபுரிவன். பல பாடல்கள் இந்தப் பிரிவுகளுக்குள் அடங்காமல் தனிப் பண்புகள் கொண்டு விளங்குவதே கவிதையின் இயல்பு.

தற்காலத்தின் முற்பகுதியில் கவிதை எழுதியவரில் சிலர் பிரிட்ஜிஸ், ஹாப்கின்ஸ், ஏட்ஸ் (W. B. Yeats) ஆகியோர். பிரிட்ஜிஸ் பெரும்பாலும் மரபைத் தழுவிப் பாடல்கள் எழுதினார். அவர் எழுதிய இன்னிசைப் பாடல்கள் கருத்தும் ஒலியும் ஒத்து மிக்க அழகு வாய்ந்தவை.

“அழகின் தன்மையை விளக்குவதே தம்முடைய இலட்சியம். புலனுக்குத் தென்படுவதும், உணர்ச்சி வேகத்தில் ஒளிர்வதும் ஆகிய அழகுமட்டுமன்றி மனிதனது முயற்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் இலக்காவதும் அழகுதான். விஞ்ஞான அபிவிருத்தியும், போரும். அழகுக்கு முரண்பாடாகத் தோன்றும் வேறு நிகழ்ச்சிகளும்கூட, அழகின் இயல்பைத் தம்மில் கொள்வதாலேயே பெருமிதமடைகின்றன” என்று அவர் நினைத்தார். இந்தத் தத்துவத்தை விளக்கத் தம் வாழ்நாளின் கடைசியில் அழகின் சாசனம் (The Testament of Beauty) என்ற ஒரு நீண்ட கவிதை இயற்றினார் இந்தப் பாடலின் அமைப்பில், தற்காலக் கவிதையின், சின்னங்கள் சில தோன்றுகின்றன; முன்னாள் எழுதிய பாடல்களின் இனிமை பெரும்பாலும் காணவில்லை. கவி விரும்புவது எளிய கவர்ச்சி மட்டுமன்று ; தன் கருத்துக்கேற்ற வடிவம் அமைக்க முயல்வதும் ஆகும். எனினும் சில வேளைகளில் மட்டுமே அவன் இலட்சியம் நிறைவேறும் என்பதை இதற்கும் இவர் எழுதிய மற்றப்பாடல்களுக்கும் உள்ள வேற்றுமை ஒருவாறு விளக்குகிறது.

ஹாப்கின்ஸ் பிரிட்ஜிஸின் நண்பர். இவர் தற்காலக் கவிதையை முதலில் தோற்றுவித்தவர். இவர் ஒருகத்தோலிக்க மடத்தில், அதன் கட்டுப்பாடுகளுக்கடங்கி வாழ்ந்தார். சிந்தையை அடக்கும் பண்பாடும், வாழ்க்கையின் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து உணரும் உள்ளத்துடிப்பும் இவர் உள்ளத்தில் முரண்பட்டுத் தோன்றின. இந்த முரண்பாட்டை வெளியிட இவர் கவிதையில் புதுமுறைகளைக் கையாண்டார். வழக்கில் மெருகேறிய சொற்கோவையும் ஓசையும் இவர் கருத்துக்கு இசைந்தவையாகத் தோன்றவில்லை. அடியில் அசைகளின் மாத்திரையை எண்ணுவதில் ஒரு புதிய முறையைத் தழுவி, ஒரேயளவு கொண்ட ஈரடிகளுக்குள், கானத்தில் வேற்றுமைதோன்றும்படி செய்தது ஹாப்கின்ஸ் கையாண்ட புது முறைகளில் ஒன்று. உரைநடையின் இலக்கணக் கோவையைத் தவிர்த்துக் கவிதையில் சில சொற்களும் சொற்றொடர்களும் தனித்துத் தோன்றும்படி இவர் எழுதினார். இவ்வாறாகக். கவிதையின் ஓசையையும் வடிவத்தையும் மாற்றித் தாம் எழுதிய கவிதைகளையும், தாம் கையாண்ட முறைகளின் நோக்கத்தையும் பிரிட்ஜிஸுக்கு மாத்திரம் தெரிவித்தார். ஹாப்கின்ஸின் துணிவை ஓரளவே மெச்சின பிரிட்ஜிஸ் அந்தப் புதுமை மக்களுக்கு ஏற்காதென்றெண்ணித் தம் கைவசம் இருந்த ஹாப்கின்ஸின் பாடல்களையும் கடிதங்களையும் வெளியிடவில்லை. ஹாப்கின்ஸ் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின், பல கவிகள் புதுமையை நாடிக் கட்டுப்பாடற்ற கவிதை எழுதும் நாளில் இவர் அவற்றைப் பிரசுரித்தார். அதுவரை அவற்றை வெளியிடாததற்காகப் பிரிட்ஜிஸைக் குறை கூறிப் புது எழுத்தாளரும் ஆராய்ச்சியாளரும் ஹாப்கின்ஸைப் பாராட்டினர். இவர் பாடலும் கொள்கைகளும், கவி புதுமையை நாடும் உரிமையை நிலைப்படுத்தின.

ஏட்ஸ் பிறவிக்கவி ; வாக்கு வன்மையும் கற்பனைத் திறனும் மிக்கவர் ; இளமையில் பழைய முறைகளிலும், தம் வாழ்நாளின் பிற்பகுதியில் புது முறையிலும் எழுதியவர். புதிய வடிவிலும் கவிதை சிறப்புற்று விளங்கக் கூடும் என்பதை அவர் ஏற்று, இளங்கவிகளைப் பாராட்டித் தாமும் அக்கொள்கைகளைத் தழுவிக் கவிதை எழுதத் துணிந்து, புத்தெழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்தார். முதுமையில் அவர் எழுதிய பாடல்கள், அவருடைய ஆக்கவன்மை மூப்பறியாதது என்பதை விளக்கின. ஏட்ஸ் அயர்லாந்தில் பிறந்தவர்; அந்நாட்டில் நிகழ்ந்த சுதந்திரப்போராட்டத்துடனும், இலக்கிய மறுமலர்ச்சியுடனும் நெருங்கிய தொடர்புடையவர். ஆக்ஸ்பர்டு - தற்காலக் கவிதைத் தொகுதி (OxfordBook of Modern Verse) என்னும் நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையிலிருந்து தற்காலக் கவிகளைப்பற்றிய அவர் கருத்து ஓரளவு விளங்கும். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலக் கவிதை வறட்சியையும் சலிப்பையுமே வெளியிட்டதென்றும், இதற்குக் காரணம் அது வாழ்க்கையுடன் தொடர்பற்றுப் போனதேயென்றும் அவர் கூறினார். சுதந்திரப் போராட்டத்திலும், இலக்கிய மறுமலர்ச்சியிலும் ஈடுபட்டுப் புராதன வீரர்களின் வாழ்க்கையையொத்த சம்பவங்களில் தேறின அயர்லாந்துக் கவிகள் இந்தச் சோர்வை உணரவில்லை. அவர்கள் பாடலில் துணிவும் மகிழ்ச்சியும் துலங்கின. ஏட்ஸ் பிறப்பில் அயர்லாந்துக்காரராயிருந்தும் கவிதைப் பரம்பரையில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அவர் கவிதையில் இரு நாட்டுப் பண்புகளும் கலந்திருந்தன. அவர் முதலில் எழுதிய பாடல்களிற் சில, வாழ்க்கையை வெறுத்து, அயர்லாந்தின் புராதனக்கதைகளின் அழகில் தஞ்சமடையும் கருத்தை வெளியிட்டன. இதைச் செஸ்ட்டர்ட்டன் விகடமாய் ஏளனம் செய்தார். ஏட்ஸின் கவிதை, காலம் செல்லச் செல்லக் கவர்ச்சியும் வன்மையும் சிறந்து விளங்கியது. கவிதையில் எலியட் காலம் தோன்றியபின், அவர் புது நடையில் தம் கருத்தையும் கற்பனையையும் எளிமையும் உறுதியும் கொண்ட பாடல்களில் அமைத்தார்; தற்காலக் கவிகளிற் சிறந்தவராய் விளங்கினார்.

ஏட்ஸ் நீடித்து வாழ்ந்து இரண்டு தலைமுறைகளைக் கண்டார். இக்காலத்தின் முற்பகுதியில் கவி எழுதிய மெரிடித், ஹார்டி, கிப்ளிங், மேஸ்பீல்டு, லாரன்ஸ், ஹவுஸ்மன், டெலமேர் ஆகியோரில் லாரன்ஸைத் தவிர மற்றவர்கள் புதிய வடிவில் கவிதை இயற்றவில்லை. எனினும், 19ஆம் நூற்றாண்டுக் கவிதைக்கு மாறான பண்புகள் அவர்களின் கவிதையில் தோன்றுகின்றன. மெரிடித் நாவலாசிரியர், தம் பாடலில் பிரௌனிங்கைப் பின்பற்றி உளவியல் ஆராய்ச்சியை வெளியிடப் பார்த்தார். அவருடைய இன்னிசைப் பாடல்கள் சில அழகும் இனிமையும் வாய்ந்தவை. ஹார்டி நாவல்கள் எழுதிப் பெயர்பெற்றபின் முதுமையில் கவிதை எழுதினார். வாழ்க்கையில் எதிர்பாராத விபரீத நிகழ்ச்சிகளால் தீராக்கொடுமை நேர்வதுண்டு என்பதை இரக்கமும், ஏளனமும், சோகத்துணிவும் கலந்த பாவனையில் அவர் சித்திரித்தார். அவருடைய கடைசிக் கதையின் சோக முடிவு பலருக்கு ஏற்காமல் போகவே, அவர் கதை எழுதுவதை விட்டுக் கவிதைத் துறையில் இறங்கினார். ஹார்டி இயற்கைக் காட்சிகளை நுட்பத்துடனும் ஆர் வத்துடனும் கவனிப்பவர். ஆனால் வர்ட்ஸ்வர்த்தின் தத்துவத்துக்கு மாறாக, “இயற்கை மனிதனை அணைத்து அறிவூட்டும் செவிலித்தாயன்று; மனிதனுக்கு நேரும் தீராத இன்னல்களை இயற்கை உணராது, தெய்வம் பாராட்டாது“ என்ற சோக உறுதி கொண்டவர்; தம் கருத்தை விளக்குவது ஒன்றையே முக்கியமாகக் கொண்டு, இலக்கிய மொழிகளையும் நாடோடிச் சொற்களையும் கலந்து கையாண்டார்; சொல் ஆட்சியிலும் கருத்திலும் தற்காலத்தவருக்கேற்ற புதுமையைச் சில வேளைகளில் அவர் பாடலிற் காணலாம்.

கிப்ளிங்கும் கதை ஆசிரியரே, பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் பெருமையைப் பாடியவர், சித்திரித்தவர் என்று அவரைப்பற்றிச் சொல்வதுண்டு. கதைப் பாட்டைப் போன்ற நாடோடிப் பாடல் வகைகளை அவர் திறமையுடன் கையாண்டார்; பொதுமக்களது பேச்சின் ஒலி தொனிக்கும்படி சில பாடல்களை இயற்றினார்.

மேஸ்பீல்டு கவிதையும் நாவல்களும் எழுதியவர். மக்களின் சாதாரணப் பேச்சில் உள்ள முரட்டு வசனங்களை அவர் கவிதையிற் காணலாம். வாழ்க்கையின் இன்னல்களையும் அபாயங்களையும் சொல்லால் மெருகிடாமல் அவர் சித்திரிக்க முயன்றார். இந்த இயற்கைப்போக்கு அவர் கவிதைக்குச் சிறப்பளிப்பது.

லாரன்ஸ் தம் வாழ்க்கையிலும், தாம் இயற்றிய கதை, கவிதையிலும், தனிப்போக்கை வெளியீடுபவர்; ஒரு குழுவிற் சேர்ந்தவரல்லர். மக்கள், விலங்குகள், பறவைகளின் உடலிலும் உள்ளத்திலும் மறைந்துகிடக்கும் உணர்ச்சிகளைப்பற்றித் தாம் அவற்றை நேரிற் கண்டவர் போன்ற துணிவுடனும் விவரத்துடனும் கதை எழுதினார்; கவிதை எழுதினார். பழைய முறையிலும், கட்டுப்பாடற்ற கவிதை என்ற முறையிலும் அவர் எழுதிய பாடல்கள் முக்கியமாய் உள்ளுறையாலேயே, புரட்சியையும் புதுமையையும் தோற்றுவிப்பன.

டெலமேர் (De La Mare) விந்தையுணர்ச்சியைக் குழந்தையுள்ளத்திலும், அறியாப் பிரதேசங்களிலும் தேடித் தம் கவிதையில் உருவகப்படுத்தினார். ஹவுஸ்மன்,இன்னிசைப்பாடல்களில் சோகத்துணிவை வெளியிட்டார். பாடலின் இனிமைக்கு மாறாகக் கருத்தின் ஏக்கமும் வறட்சியும் அவர் பாடலுக்கு வன்மை அளித்துத் தற்காலத்தவருக்கு உகந்ததாய் அமைந்தன.

இவ்வாறாகப் பல கவிகள், வர்ட்ஸ்வர்த் காலக் கவிதையின் பெருமிதமும் டெனிசன் காலக் கவிதையின் அமைதியும் கானல் நீரைப் போலப் பொய்த் தோற்றமளிப்பன என்று கொண்டவராய், வாழ்க்கையின் அவகேடுகளை இயற்கைப்போக்கில் சித்திரித்தும், அழகையும் மகிழ்ச்சியையும் கற்பனை உலகில் தேடியும், தம் மன நிலையை வெளியிட்டனர். இந்த மனப்பான்மை கவிதையில் மட்டுமன்று; 20ஆம் நூற்றாண்டின் இலக்கியத்தில் எங்கும் தோன்றியது. மனத்தின் இயல்பைப் பற்றியும், அதன் மறைவிடங்களிற் பொதிந்த உணர்ச்சிகளும் பிம்பங்களும் எவ்வித மாறுவேடம் கொண்டு வெளித்தோற்ற மளிக்கின்றன என்ற ஆராய்ச்சிகளைப் பற்றியும் உளவியலார் புதிதாகக் கண்ட விஷயங்கள் இலக்கியத்தில் இடம்பெற்று அதன் போக்கை மாற்றின.

இக்காலத்துக் கவிகளுள் பிளெக்கர்: (Flecker), ஆபர்க்ரோம்பி (Abercrombie), பின்யன் (Binycn), டிரிங்க்வாட்டர் (Drinkwater), டேவிட்ஸன் (Davidson) முதலியோர் பெரும்பாலும் கவர்ச்சியையும் தீரத்தையும், தம் சூழ்நிலையிலின்றி வேறு காலங்களிலும் நாடுகளிலும் உள்ளனவாய்ப் பாவித்தனர். டேவிஸ், ஸ்டிபன்ஸ் முதலிய வேறு சிலர் இயற்கைக் காட்சிகளைச் சித்திரித்தனர். கிரென்பெல் (Grenfell), சசூன் (Sassoon ) முதலியோர் முதல் உலக யுத்தத்தின் அதிர்ச்சிகளைப் பற்றி எழுதினர் ; போரிலும் போருக்குப்பின்னும் உலகமே சீர்குலைந்ததென்ற கருத்தை அதற்கேற்ற சிதைவுண்ட வடிவங்களில் பிரதிபலிக்க முயன்றனர்.

இவ்வாறாகப் பெருகிய தற்காலக்கவிதை, தொடக்கத்தில் சிறப்படையவில்லை. எலியட் காலத்திலேயே தனி அமைப்புப் பெற்றது. பழைய இலக்கணத்துக்கு இந்த அமைப்புப் புறம்பானது எனினும், இதற்குந் தனி இலக்கணங்கள் உண்டு. தற்காலக் கவிதையின் சிறப்பிலக்கணம் கட்டில்லாத சொற் பெருக்கமன்று. கவிதையினின்றும் பொருளை வேறாகப் பிரித்தெடுக்க முடியாதென்பதே. கவிதையின் பொழிப்புரை என்றுமே கவிதையாகாது என்பது ஆர்னல்டு உதாரணம் காட்டி விளக்கிய உண்மை. இதனாலேயே விஞ்ஞானக் கட்டுரை ஒன்றை வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பதுபோலக் கவிதையை மொழிபெயர்க்க இயலாது. எனவே, தற்காலக் கவிதை பொழிப்புரையைத் தவிர்த்துத் தன் அமைப்பாலேயே கருத்தைப் பிரதிபலிப்பது. இதை உதாரணங்களாலன்றி, வருணனையால் எடுத்துரைக்க முடியாது. இந்த அமைப்புத் தோன்றிய காரணங்கள் சிலவற்றைப் பிரெஞ்சுக் கவிதையின் மாறுதலில் காணலாம்.

ஆங்கிலக்கவிதை என்றும் தனித்து வளர்ந்தகில்லை. முக்கியமாகக் கிரேக்க லத்தீன் இலக்கியத்துக்கும், பிரெஞ்சு இலக்கியத்துக்கும் அது கடன்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் கடைசியில், பிரான்சிலும் புதுமையை விரும்பும் கவிகள் தோன்றினார்கள். அவர்கள் பிரெஞ்சுக் கவிதையின் போக்கை மாற்றிப் புத்துருவம் அமைக்கும் திறமை வாய்ந்தவர்களாயிருந்தார்கள். இவர்களுள் பாடிலே (Baudelaire) என்பவரே தற்காலப் பிரெஞ்சுக் கவிதையைத் தொடங்கியவர் எனலாம். அவர் பழைய வடிவங்களிலேயே, புதிய சொற்களையும் கருத்தையும் அமைத்துப் பிரெஞ்சுக் கவிதையில் ஒரு புரட்சிகரமான மாறுதலை உண்டு பண்ணினார். அவருக்குப் பின் தோன்றிய ராம்பா (Rimbaud), மலார்மி (Mallareme), வலேரி (Valery) முதலியோர் புதுக்கவிதைகளால் கவிதையின் இலக்கணத்தையும் இலட்சியத்தையும் மாற்றிவிட்டனர். “கவிதையில் வரும் சொல் பேச்சில் வழங்கும் சொல்லாயிருந்தாலும், அதன் குறிப்பே வேறு. சாதாரண மொழிகளால் வெளியிடும் கருத்து, கவிதையின் கருத்தன்று. எனவே செய்தி சொல்லவும், உள்ளதை வருணிக்கவும் வேண்டிய சொற்கோவை இலக்கணம் கவிதைக்குரியதன்று. வசனத்தவிைட ஆர்வமும் வேகமும் உள்ளதாய் எழுதப்பட்டாலும் அவையாவும் கவிதையாகா. இதுவரை எழுதப்பட்ட பெருங் கவிதைத் தொகுதிகளின் சிறு பாகமே உண்மைக்கவிதை” என்று இவர்கள் சார்பாக மலார்மி, புதுக்கொள்கைகளை விளக்கினார். மேலும், ”கவிதையில் வரும் மொழிகள் சங்கேத மொழிகள் ; அவை கவிஞனது உள் மனத்தில் தோன்றும் சொல்லற்ற உணர்ச்சிகளை உருவகப்படுத்திப் படிப்போர் மனத்தில் அவ்வுணர்ச்சிகளைப் பிரதிபலிக்கச் செய்யும் கருவிகளே யன்றி வேறில்லை. இதற்கேற்ற சொற்கோவை முழுவதும் பொருள் விளங்குவதாயிராது. கவிதை, தன் ஓசையாலும் அமைப்பாலும் தன்னிடம் பொதிந்து கிடக்கும் உணர்ச்சியைப் பிறர் உணருமாறு சில சின்னங்களே கொண்டிருக்கும். உண்மைக் கவிதையின் உட்பொருளை ஒருவாறாக உணரலாமன்றிப் பொழிப்புரை பெறக்கூடிய கவிதை, கவிதையன்று. அது கவிதை வேடம் புனைந்த உரைநடையே” என்று மலார்மி விளக்கினார். இந்தப் புதுக் கவிதை உருவகக் கவிதை, மனத்தோற்றக்கவிதை என்றெல்லாம்பெயர் பெற்றது. ஒப்பற்ற திறமையுடனும் சிருஷ்டி வன்மையுடனும். பிரெஞ்சுக் கவிஞர் சிலர் இம்முறையில் கவிதை எழுதினார்கள்; இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் வகுக்கவும் முடிந்தது.

கவிதையின் சிறப்பைச் சீர் தூக்கும் பழைய ஆராய்ச்சி இலக்கண முறைகள், புதிய கவிதைக்கு ஏலாதன ஆகிவிடவே, பொருளும் வடிவமும் அற்ற போலிக் கவிதைகள் எங்கும் மலிந்தன. முக்கியமாய் ஆங்கிலத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் கவிதைகள் பல வினோத வகைகளில் எழுதப்பட்டன. ”கனவிற் குழறிய சொற்களால் அமைந்ததுபோன்ற கவிதையை எழுதியவனும் இன்னதென்று விளக்கமாட்டான்; அதைச் சீர்தூக்கும் உரிமை உடையவர் எவருமில்லை” என்ற நிலைமை ஏற்பட்டவுடன் இக்கவிதைக்கு எதிர்ப்பு வலுத்தது ”கவிதையின் முக்கிய நோக்கம் பிறர் உள்ளத்தில் நிறைவு தோன்றச் செய்வது. இந்த இலட்சியத்தைச் சிறிதேனும் பாராட்டாத கவிதையைப் பிரசுரிக்க வேண்டியதே யில்லை” என்று பலர் ஆட்சேபித்தனர். பொருள் விளங்காமலிருப்பதே கவிதையின் சிறப்பு என்ற கோட்பாடு மாறிற்று. எனினும், குறிப்புணர்த்துவதும், எளிதில் கூறமுடியாத பல உணர்ச்சிகளைப் படிப்போர் மனத்தில் தோற்றுவித்துச் சொல்லோடு கருத்து முடிவதாயின்றிக் கவிதை எழுதுவதும் இந்த இலட்சியங்கள் நிறைவேறும்பொருட்டுப் புதிய அமைப்பை உண்டாக்குவதும், தற்காலக் கவியின் உரிமைகளெனக் கருதப்பட்டன. எஸ்ரா பவுண்ட் (Ezra Pound), எலியட், ஈடித் சிட்வெல், ஏட்ஸ், டர்னர், டாரதி வெல்லஸ்லி முதலியோரின் கவிதையில் புதுமுறை சிறந்து விளங்கியது. காம்பெல், டெசிமாண்டு (Tessimond), எம்சல், பாட்ரல் (Bottral), ஹிகின்ஸ் (Higgins), ஆடென் (Auden), டே லூயி (Day Leuis), மக்நீஸ், ஸ்பெண்டர், டைமன்ட், (Dyment) டிலன் தாமஸ் ஆகியவர் தற்காலக் கவிதையைத் திறமையுடன் ஆளுபவரின் எண்ணிக்கையில் சேருவர். மரபைத் தழுவிய கவிதையின் அமைப்பையும் ஓசையையும், சீர், தளைக் கட்டுப்பாடுகளையும் வேண்டிய பொழுது ஆளும் திறமை வாய்த்தும், இவர்கள் அவை தம் கருத்துக்கு ஒவ்வாதன எனப் பெரும்பாலும் அவற்றைத் தவிர்த்தவர்; கவிதை கலை உருக்களில் ஒன்றாதலால் அதன் ஒவ்வொரு பகுதியும் இன்றியமையாத இலக்கணத்தை விளக்குவது எனக் கொண்டு, தம் கருத்துக்கேற்ற மொழிகளையும் அமைப்பையும் அரிதில் தேடிப்பெறுபவர். புது முறையைப் பலருக்கும் விளக்கும் பொருட்டுத் தற்காலக் கவிதைத் தொகுதிகளும், கவிதைப் பத்திரிகைகளும், விமரிசனங்களும் பலவாகப் பெருகி வெளிவந்தன; கவிகள் சிலரும் கவிதையைப் பற்றிய தம் கோட்பாடுகளைப் பற்றிக் கட்டுரைகள் எழுதினார்கள்.

ஆராய்ச்சியாளர் எழுதும் கட்டுரைகளைவிடக் கவிகள் தம் கலையைப் பற்றி எழுதும் கட்டுரைகள் எழுதியவரின் மனப்பான்மையையும், கவிதையின் நுட்பங்களையும் விளக்கிப் பயன் தருவன. எலியட் எழுதிய கட்டுரைகளிலிருந்து புதுமைப் புரட்சிக் கவியாக எண்ணப்படும் அவருடைய சிந்தனையில் பழமையின் ஆர்வம் வேரூன்றியிருந்தமை வெளியாகிறது. எலியட்டின் கொள்கைகளை ஆடென் முதலியோர் முழுவதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவர்களுடைய கட்டுரைகளில் விளங்குகிறது. இதுமட்டுமன்றித் தாம் மேற்கொண்ட குறைகளைப்பற்றி அவர்கள் எழுதியதும் கவிதையின் நுட்பங்களை அறியத் துணைபுரிகிறது. வழக்கில் ஒப்பிய முறைகளைத் தவிர்த்துப் புதுவழியிற் செல்லும் கவி தன் இலட்சியத்தைப் பிறருக்கு விளக்கக் கட்டுரைகளும் எழுதத் துணிகிறான். சாமானியச் சொற்களும் வசன நடையுமே கவிதைக்கேற்றன என்று வர்ட்ஸ்வர்த் தம் முதற் பாடல்களின் முகவுரைக் கட்டுரையில் எழுதினார். அதில் வற்புறுத்திய விதிகளை மீறியே, வர்ட்ஸ்வர்த் கவிதையின் சில பாகங்கள் சிறப்புற்று விளங்குகின்றன. இது போலவே, தற்காலக் கவிகளின் பாடல்கள், அவர்களுடைய கொள்கைகளுக்கு ஏற்றனவாயும், அவைகளுக்குப் புறம்பாயும் தோன்றுகின்றன. இந்தக் கொள்கைகளிற் சிலவற்றைப் பின்வருமாறு கூறலாம்:

(1) கவிதைக்கு ஏற்காத சொல் மொழியில் கிடையாது; அதனால்பேச்சில் வழங்கும் சொற்கள் கவிதையில் வழங்கச் சிறப்புரிமை பெற்றன ; இந்தச் சொற்கள் பேச்சு வழக்கிற்போல எண்ணத்தை ஏகதேசமாய்க் குறிக்காமல், கருத்தின் அளவும் நுட்பமும் தெரியும்படி எள்ளளவேனும் இலக்குப் பிசகாமல் குறிப்பது கவிதையின் சொல்லாட்சி இலக்கணம்.

(2) கவிதைக்குரிய உருவகங்கள் அதன் அமைப்பின் வெளித்தோற்றங்களாக இருத்தல் தகும்; அணியாகத் தோன்றுவன கவிதைக்கு ஒவ்வாதன.

(3) ஓசையும் அமைப்புமே கவிதையாகும் ; இவைகளைப் பற்றிய தனிக்கட்டுப்பாடுகள் எவற்றையும் கவி

ஏற்கவேண்டிய அவசியமில்லை.

(4) உரைநடையைப் போல ஒன்றைக் கூறிக் கவிதை முடிவு பெறுவதில்லை. கவிதையில் தோன்றும் மனத்தோற்றங்களும் சிந்தனைகளும் உயிர் பெற்றுத் தோன்றுவன.

இவை போன்ற கோட்பாடுகளைத் தழுவியே ஏட்ஸ் தாம் தொகுத்த தற்காலக் கவிதைத்திரட்டில் முதற்பாடலாக, பேட்டர் எழுதிய கட்டுரையிலிருந்து சில வசனங்களைத் தேர்ந்தெடுத்தார்.

தற்காலக் கவிகளுள் தலைமை வகிப்பவர் எலியட். அவர் எழுதிய பாடல்களை முதற்பாடல்கள், பாழ் நிலம் முதலிய பாடல்கள், அவர் கத்தோலிக்க மதக்கொள்கைகளை ஏற்றபின் இன்று வரை எழுதிய பாடல்கள் எனப் பிரிக்கலாம். அவர் முதலில் எழுதிய பாடல்கள் சிலவற்றில் பிரெஞ்சுக் கவிதையின் சாயலைக் காணலாம். பாழ் நிலம் என்ற கவிதையை எழுதிய பின், எலியட் ஐரோப்பியக் கவிகளின் முன்னணியில் சேர்ந்தவராய்ப் புகழ் பெற்றார். பல மொழி இலக்கியப் பகுதிகளும், விஞ்ஞானிகள் கண்ட உண்மைகளும், புராதனக் கற்பனைகளும், தற்கால நம்பிக்கைகளும், பயங்களும், கல்வி கேள்வியால் தாம் அறிந்த பண்புகள் பலவும் இந்தக் கவிதையின் வடிவில் தெரியும்படியாக எலியட் அமைத்தார். பலர் கேட்டறியாத குறிப்புக்கள் எங்கிருந்து ஆளப்பட்டன என்பதைக் கவிதைக்கேற்ற விளக்கமாய் உரைநடையில் குறித்தார். இவ்வாறு பல இடங்களில் பொறுக்கி எடுத்த கருத்துக்களின் சாயலைத் தன்னுட்கொண்ட இப்பாடல், இதுவரை வாழ்ந்த பல மாந்தரின் எண்ணங்களை அறியப்பெற்றும், தன்னுள் தடுமாற்றமும் ஏக்கமும் நிலவத்தோன்றும் தற்கால நாகரிகத்தை உருவகப்படுத்துகிறது. கல்வித் தேர்ச்சியுள்ளவரே இதன் நுட்பங்களை அறியக்கூடியவர். எனினும், இதன் அமைப்பும் கற்பனைத் திறனும், எவர் மனத்திலும் தம் சாயலைப் பிரதிபலிக்கச் செய்வன. செதுக்கிய வைரத்தின் ஒரு கோணத்திலிருந்து மற்றொரு கோணத்துக்கு ஒளி பாய்வதுபோல் இந்தப் பாடலை ஊடுருவி நிற்கும் கருத்துப் பாழ்பட்டு உருச்சிதைந்து போவதே இக்காலத்தின் பிம்பங்கள் என்பன. பாடலில் அழகும் பெருமிதமும் மேலிடும் அடிகள் திடீரென்று சிதைந்து போவதாலும் வேறு வகைகளாலும் பாட்டின் அமைப்பிலேயே இக்கருத்துத் தோன்றுகிறது. இந்தப் பொருத்தத்தை எடுத்துக் கூறி விளக்க முடியாது. மனிதரின் ஏக்கத்துக்கும் ஒரு பெருமிதமுண்டு. அதையும் இழந்து, ஏக்கம் சிதைவுண்டு சிறுமைப்படுவதை எலியட்டின் பாடல்கள் தொனிக்கச் செய்கின்றன. இந்த வழியில் மேற்செல்ல வகையின்றி எலியட் கத்தோலிக்க மதக் கொள்கைகளில் திட நம்பிக்கையை நாடினார். அதன்பின் அவர் எழுதிய பாடல்களும் புது அமைப்புப் பெற்றன. ஆனால் குறிப்புணர்த்தும் உவமைகளும் அணிகளும் முன்னளவு கவிதையில் வரவில்லை. சொல்லாட்சியில் தெளிவும் எவ்விதப் படாடோபத்தையும் துறக்கும் பண்பும் தோன்றுகின்றன. எலியட்டின் கவிதை ஓசை கருத்துக்கேற்றபடி மாறிப் பாடலில் அவருடைய முத்திரை போன்று அமைந் துள்ளது.

கவிதை முறையில், எஸ்ரா பவுண்டு தமது குரு என்று எலியட் கூறினார். ஆனால் பவுண்டு எழுதிய பாடல்கள், எலியட் கவிதையைப் போலப் பலர் மனத்தையும் கவரவில்லை. அவர் சீனக்கவிதை, லத்தீன் கவிதை முதலிய பலமொழிப் பாடல்களிலும் திண்ணிய கருத்தும் குறிப்புணர்த்தும் பாவனையுள்ள அமைப்பும் பொருந்திய பகுதிகளைப் பாராட்டினார்; சிலவற்றை மொழிபெயர்த்தார். 'செறிவே கவிதையின் அவற்றில் அழகு. விவரித்து விளங்கவைத்தல் கவிதைக்குரிய பாவனையைப் பங்கப்படுத்துவது' என்று கொண்டு இவர் எழுதிய பாடல்கள் அரிதிற்பொருள் விளங்குவதாய் அமைந்துள்ளன. இவர் ஒருவர் மட்டுமன்றி, எம்சனும் இன்னும் சிலரும் சிலவிடங்களில் அரிதில் பொருள் தோன்றும் கவிதை எழுதினார்கள். பொருள் விளங்காதிருக்க ஏழு காரணங்கள் உண்டு என்று எம்சன் எழுதினார். எலியட்டைத் தலைவராகப் பாராட்டிய பல கவிகளும் தம் பாடல்களில் தனிப்பண்புகளைத் தோற்றுவிக்க முயன்றார்கள். இவர்களுள் ஈடித் சிட்வெலும் ஆடெனும் கவிதையில் புதிய பிரிவினைகளை உண்டாக்கினார்கள் என்று சொல்லலாம்.

ஈடித் சிட்வெல் செல்வமும் கல்வியும் வாய்ந்த குடும்பத்தில் பிறந்த அம்மையார். அவருடைய சகோதரர் இருவரும் எழுத்தாளர்; கவிகள். ஆனால் ஈடித் சிட்வெல் தான் அவர்களுள் கவிவன்மையில் சிறந்தவர். உருவற்ற முறையில் எழுதப்பட்ட சில தற்காலப் பாடல்களைப் பழித்தும், போப் காலக் கவிதையைப் பாராட்டியும் அவர் எழுதினார். “மனத்தில் தோன்றியபடி யெல்லாம் எழுதப்படுவது கவிதையன்று ; ஒரு முறையுடனும் அளவுடனும் ஆக்கப்படுவதே கவிதை. இந்த விதியைப் போப்பும் அவர் காலத்தவரும் பாராட்டினர். 19ஆம் நூற்றாண்டில் கவிகள் பாராட்டிய உணர்ச்சி வேகத்தில் இந்த விதி அழிந்துபோயிற்று. அது கவிதைக்குப் பெருங் கேடாக முடிந்தது” என்று அவர் விமரிசனம் செய்தார். ஈடித் சிட்வெலின் கவிதை தேர்ந்து ஆக்கப்பட்டதே. ஆனால் சிலவிடங்களில் அதன் பொருள் பிம்பம் போல் தோன்றுவதன்றி, ஒரு கோவையாக விளங்குவதில்லை. இவர் ஹாப்கின்ஸைப்போல மொழிகளைப் புதுமுறையில் கையாண்டார். ஒரு மொழியின் ஒலியைப் பின்பற்றிப் பிறமொழிகளை வருவிக்கும் முறையை இவர் பாடலில் காணலாம். ஒலி, எதிரொலி, பிம்பம், பிரதிபிம்பம் என்ற பல புதிய தொடர்புகளை அமைத்து இவர் கவிதை எழுதினார். இவர் தோற்றுவித்த பண்புகளை வேறு சிலரும் கையாளத் தலைப்பட்டனர்.

எலியட்டுக்கு அடுத்தவராக, இளங் கவிகளுக்குத் தலைவர் என்று ஆடென் பெயர்பெற்றார். மக்நீஸ், டே லூயி, ஸ்பெண்டர் முதலியோர் ஆடென் குழுவைச் சேர்ந்தவர். இவர்கள் எலியட்டின் கவிதைப் பெருமையைப் பாராட்டுபவரே ; எனினும் இவர்களின் மனப்பான்மை எலியட்டுக்கு மாறானதாயிருந்தது. பல ஆண்டுகளாக எழுத்தாளர் மனத்தில் இருண்டு திரண்ட சலிப்பை எலியட் உருவகப்படுத்தினார். அதன்பின் அந்தச் சலிப்பின் வன்மை குறைந்தது. ஆடென் முதலியோர் தற்கால நாகரிகத்தை முற்றிலும் வெறுக்கவில்லை. பழையன கழிந்து புதியன தோன்றும் இடைக்காலம் அது என்று கொண்டனர். பல மக்களும் ஏற்கக்கூடியதாயும், சமூக இலட்சியங்களின் போக்கை எடுத்துக் காட்டுவதாயும் கவிதை இருக்கவேண்டுமென்று நினைத்தனர். இளமையில் இக்கவிகள், ஸ்பெயினில் பொதுஉடைமைக் கட்சியாரின் வெற்றியை விரும்பியவர்; அரசாங்க சமூகப் பிரச்சினைகளில் ஒரு கட்சியில் சேர்ந்து வாதித்தவர். எனவே கவிஞன் உள்ளத்தைப் பிரதிபலித்து, அவனுக்கே தன் முழுக்கருத்தையும் தெரிவிக்கும் கவிதையை இவர்கள் விரும்பவில்லை. போரையும், ஆகாயவிமானங்களையும், விமானியின் தீரத்தையும், தம் சூழ்நிலையின் வெளித் தோற்றங்கள் பலவற்றையும் கவிதைக்கு உள்ளுறையாகக் கொண்டனர். அரிய சாதனைக்கேற்ற விஞ்ஞான அறிவு பெருகியும், பொதுமக்களின் வாழ்க்கையில் இடையூறுகளும், அச்சமும், அற்ப சந்தோஷமுமே தோன்றுகின்றன என்பதை உணர்ந்து, ஆடென் அவ்வாழ்க்கையை ஏளனமாய்ச் சித்திரித்தார். பலருக்கும் தம் கருத்து விளங்க, நாடக வியலைப் பின்பற்றினார். ஆடென் பாடல்கள் அமைப்பில் புதுமை வாய்ந்தனவே. எனினும், சமூகத்தைச் சித்திரிக்கும் முறையிலும், எளிதில் வன்மைபெற்றுத் தோன்றுவதிலும், போப்பும் பைரனும் எழுதிய கவிதையினத்தையும் ஒருவாறு சார்ந்தவை. இந்தக் குழுவில், ஸ்பெண்டர், டே லூயி முதலியோர் ஆடெனுடைய அளவு நடையை மாற்றும் திறமையும் வன்மையும் வாய்ந்தவரல்லர். ஆனால் அவர்கள் பாடல்கள் ஆடென் பாடலைவிடக் கற்பனையில் சிறந்து தோன்றின.

வேறு பலரின் பாடல்கள் இன்னும் புதிய கருத்துக்களையும், அவைகளுக்கேற்ற அமைப்பையும் கவிகள் நாடுவதைத் தெரிவிப்பன. இவைகளில் கருத்துத் தெளிவாகத் தென்படுவது முன்னிலும் அதிகமாகப் பாராட்டப்படுகிறது.

பொதுவாகத் தற்காலத்தின் பிற்பகுதியில் உணர்ச்சிப் பாடல்கள் சிறந்து தோன்றவில்லை. காதல், அழகுணர்ச்சி, தேசாபிமானம், பக்தி ஆகிய பல உணர்ச்சிகளின் பெருந்தன்மையை ஒப்பாது, அவ்வுணர்ச்சிகளின் அடிவேர்களாய்க் கிளைத்த இயல்பூக்கங்களின் தன்மையை நினைவிற்கொண்டு, “காதல் காமத்தின் தோற்றம்”, பயம் தேடும் கொள்கொம்பு பக்தி”, ”தேசாபிமானம் தற்பெருமையின் விரிவு” என்று கூறிக் கவிகளும் உளவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டதே இதற்கு ஒரு காரணம். பிரூபராக்கின் காதற்பாட்டு (The love song of Alfred Prufruck) என்று எலியட் முதலில் எழுதிய பாடல், தற்கால மனத்தின் ஐயப்பாட்டையும், தன்னையும் தன் காதலையும் பற்றியே ஒருவன் எண்ணக்கூடிய பல்வேறான ஏளனம் கலந்த சிந்தனைகளையும் காட்டுவது. ஆடென் இயற்றிய பாடல்கள் சிலவும், ஓர் உள்ளுறையைச் சிறப்பிக்கும்போதே அச்சிறப்பு வெளித்தோற்றமே என்ற இகழ்ச்சியும் தோன்றும் பண்பு வாய்ந்தன. இம்முறை புதுமையாயிருக்கும்போது பலர் விரும்புவதாயிருந்தது. பின், இது ஜாலவித்தை போன்ற வெறும் சாமர்த்தியமே என்று இகழவும்பட்டது. கவிதையின் கருத்துக் கேள்வியாகவும், ஐயம் தொனிக்கும் விடையாகவும் தோன்றவேண்டியதில்லை. இதுவே மெய் என்ற உறுதி தோன்றக் கவி வன்மையுடன் எழுதுவதே உண்மை என்ற கோட்பாடு எழுந்தது. டைலன் தாமஸின் பாடலில் இவ்வித உறுதியைக் காணலாம். அவர் கவிதையின் அமைப்பும் எழிலும் 17ஆம் நூற்றாண்டு அனுபூதிக் கவிதைகளை நினைப்பூட்டுவன. தற்காலக் கருத்துக்களையும் புதிய அமைப்பின் முறைகளையும் தன்னில் ஏற்று, உறுதியும் மெய்ம்மைப் பண்பும் தோன்ற எழுதப்படும் பாடல் வகை (Apocalyptic verse) ஒரு புதுப் பிரிவினையாகத் தோற்றுவது. இம்முறையை விளக்குபவரில் டைலன் தாமஸ் சிறந்தவர்.

ஒரு காலத்தில் சிறந்து தோன்றிய கவிதை வரம்புகளுக்குள்ளேயே அடுத்தடுத்துக் கவிதை தோன்றுவது இயலாதென்றும், இதனாலேயே போப் கவிதையை வர்ட்ஸ்வர்த்தும், 19ஆம் நூற்றாண்டுக் கவிதையைத் தற்காலத்தவரும் குறைத்து மதிப்பிட நேர்ந்ததென்றும், இனித்தோன்றும் கவிதை எலியட் காலக் கவிதையினின்றும் வேறுபட்டு, அதனினும் தெளிவு வாய்ந்து, புதுமுறைகளை விளக்குவதாயிருக்குமென்றும், மரபில் வந்த வடிவங்களைப் புதுமுறையில் அது ஏற்கக் கூடுமென்றும், சில ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். “சூழ்நிலையாலும் கோட்பாடுகளாலும் மாறுதலடையும் கவிதை முதலில் கவி வரம் பெற்றவனின் உள்ளத்தில் தோன்றுவது; அதன் பண்புகளை ஊகித்துக் கூறமுடியாது“ என்பாரும் உளர். மா. ல.

இந்தியர்கள் எழுதிய ஆங்கில இலக்கியம் : 1835-ல் ஆங்கில மொழிக்கு இந்தியாவில் அதிகார தோரணை ஏற்பட்டதென்று கூறலாம். அப்பொழுது வங்காளத்தில் பிரபலராகவிருந்த ராஜா ராம்மோஹன் ராய், கேசவசந்திரசேன் ஆகியவர்களாலும். கிறிஸ்தவப் பாதிரிமார்களாலும் ஆங்கிலக் கல்வி வளர்ந்து வந்தது. அதன் பயனாக இந்திய மக்களில் சிலர் ஆங்கில இலக்கியச் சுவையை நுகர்ந்து அம் மொழியை எளிதாகக் கையாளத் தொடங்கினர். ஹென்ரி லூயிஸ் விவியன் டெரோசியோ (1809-31) என்பவரை இந்தோ-ஆங்கில இலக்கியத்தின் ஆதி கவியாகச் சொல்லுவது மிகையாகாது. இவர் உணர்ச்சிகளை உள்ளத்தில் தோன்றியவாறு அழகாக வரைந்திருக்கிறார். ஜங்கீராப் பக்கிரி (The Fakir of Jangira) என்பதில் ஒரு பிராமண விதவையின் பரிதாப நிலைமையை இவர் அழகாகச் சித்திரித்துக் காட்டியிருக்கிறார்.

மதுசூதன தத்தர் வங்காளத்தில் ஒரு பெருங்கவியாக விளங்கினார். சிறையிடப்பட்ட சீமாட்டி (The Captive Lady) என்பதில் இராஜபுத்திர வீரர் தலைவனாகிய பிருதிவிராஜனையும் அவன் காதற் கதையையும் ஆங்கிலக் கவிகளில் தெளிவாக எடுத்துக் காட்டினார். கழிந்த காலக் காட்சிகள் (Visions of the east) என்னும் நூலையும் வெளியிட்டார்.

பின்னர் தோரு தத், ஆரு தத் என்ற இரு சகோதரிகள் மிக்க இளமைப் பருவத்திலேயே ஆங்கிலக் கவி பாடுவதில் திறமை வாய்ந்தவர்களெனப் பேர்பெற்றனர். இவர்களில் முக்கியமாகத் தோரு தத்தே சிறந்த கவிஞர். பிரெஞ்சு வயல்களிலிருந்து பொறுக்கி எடுத்த ஒரு கதிர்க்கற்றை (A Sheaf gleaned in French Fields) என்னும் நூலில் இவ்விரு சகோதரி களும் சேர்ந்து சில பிரெஞ்சுப் பாடல்களை ஆங்கிலத்தில் ஆக்கி இருக்கிறார்கள். மேலும் தோரு தத் 'பியான்கா' என்று ஒரு நாலும் பல கவிகளும் புனைந்துள்ளார். ஆனால் இவ்விரு சகோதரிகளும் இளமையிலேயே இறந்துவிட்டார்கள். ஆதிகாலத்து இந்தியக் கதைப் பாடல்களும் கதைகளும் (Ancient Ballads and Legends of Hindustan) என்னும் தோரு தத்தின் நூல் அவர் இறந்தபின் வெளியிடப்பட்டது.

தத் குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ் சந்திர தத்தர் அதிகார வர்க்கத்தில் பெரும் பதவி வகித்து வந்தது மன்றி, இந்திய சரித்திர ஆராய்ச்சியிலும், இந்தியக் கதைக் கருவூலத்திலிருந்து சிற்சிலவற்றை ஆங்கிலக் கவிகளாக மாற்றி அமைப்பதிலும் ஈடுபட்டுப் பேரும் புகழு மடைந்தார். இராமாயணத்தையும் மகாபார்தத்தையும் இவர் ஆங்கிலக் கவிகளில் இயற்றியது போற்றற்பாலது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மான்மோகன் கோஷ், அரவிந்தகோஷ் என்ற சகோதரர்கள் ஆங்கில மொழியில் கவிகள் வரையும் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் முக்கியமானவர் அரவிந்தகோஷ். அரவிந்தர் எழுதிய கவிகளில் சாவித்திரி, ஊர்வசி, காதலும் சாதலும் (Love and Death), பாஜிப் பிரபு, விமோசனம் கொடுத்த பெர்சியன் (Persian the Deliverer) ஆகியவை முக்கியமானவை. மான்மோகன் கோஷ் எழுதியவற்றுள் அமர ஏவாள் (Immortal Eve), ஆர்பிக் மர்மம்(Orphic Mystery) என்பவற்றைக் குறிப்பிடலாம்.

வங்காளத்தில் பிறந்து ஆங்கிலக் கவிகள் புனைந்து இந்தியாவுக்குப் புகழ்மாலை சூட்டியவர் ரவீந்திரநாத தாகூர். பிறவிக் கவியாகிய இவர் தம்முடைய தாய் மொழியாகிய வங்காளத்தில் எழுதியும், பின் ஆங்கிலத்தில் தாமே மொழிபெயர்த்தும் வெளியிட்டு இருபதாவது நூற்றாண்டு இலக்கிய உலகின்கண் இலங்கிய கவியரசுகளிடையே தனிப்பெருமை அடைந்து தோன்றினார். கீதாஞ்சலி, தோட்டக்காரன் (Gardener), பிறை மதி (Crescent Moon) முதலான பாடல்கள் தாகூருக்கு நோபெல் இலக்கியப்பரிசை வாங்கிக்கொடுத்தன. மேலும் இவர் உள்ளம் கவரும் சில அரிய நூல்களை உரைநடையில் எழுதி வெளியிட்டார். சாதனா, தேசியம் (Nationalism), ஆளுமை (Personality), மனிதன் மதம் (Religion of Man) இந்நூல்கள் முக்கியமானவை.

சரோஜினிதேவியும் அவருடைய சகோதரர் ஹரீந்திரநாத சட்டோபாத்யாயாவும் இந்தோ-ஆங்கிலக் கவியுலகில் உன்னத பதவி அடைந்தனர். சரோஜினி தேவி தங்க வாசல் (Golden Threshold), காலப் பறவை (The Bird of Time), ஒடிந்த சிறகு (The Broken Wing) முதலிய அரிய நூல்களை இளமையிலேயே வெளியிட்டுப் பெயர் பெற்ற ஆங்கிலக் கவிஞர்களால் புகழப்பெற்றார். இவர் நளினமான சொற்களால் காதுக்கினிமையான வழியில் கவிகள் அமைத்து, உள்ளங்கவரும்படி பாக்கள் பாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர். ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா இளமையின் விருந்து (Feast of Youth), மண்ணின் மணம் (The Perfume of Earth) முதலான பல நூல்கள் வெளியிட்டிருக்கிறார்.

பல ஆண்டுகள் மங்களூர்க் கல்லூரித் தலைவராக இருந்த ஜீ. கே. செட்டூரின் காதலின் வெற்றி (Triumph of Love), கோவிற் குளம் (The Temple Tank). கடவுளின் நிழல் (The Shadow of God) முதலியன ; பிரின்சிபால் சேஷாத்திரியின் பில்ஹணா, சண்பக இலைகள் (Champak Leaves), வீணான காலம் (Vanishing Hours) ; ஹுமாயூன் கபீரின் பத்மா, ஜஹாநரா முதலிய கவிகள்; அர்மாண்டோ மெனிசீஸின் நிதி (The Fund), குடியேறியோன் (Emigrant), கல்லூரித் தலைவர் ததானியின் கண்ணன் குழல் (Krishna's Flute), டெல்லியின் வெற்றி (Triumph of Delhi); கல்லூரித் தலைவர் சாரநாதய்யங்காரின் முதல்கற்றை (First Sheaves), பேராசிரியர் டி. பி. கிருஷ்ணசுவாமி முதலியார், பேராசிரியர் உமாமகேஷ்வர், பேராசிரியர் பூஷன், பேராசிரியர் டி. சி. தத்தா, இவர்களுடைய கவிதைகளும் கவனிக்கற்பாலன. பேராசிரியர்கள் தவிர ஆங்கிலக் கவி வரைவதில் புகழ்பெற்றவர்களுள் முக்கியமானவர் மஞ்சேரி ஈசுவரன், கே. டி. செத்னா, திலீப்குமார் ராய், நீலிமாதேவி,பாரதிசாராபாய், எஸ். ஆர். டோங்கர்கரி ஆவர்.

இந்தியர்கள் ஆங்கிலத்தில் இயற்றிய நாடக இலக்கியம் சிறிதளவே ஆகும். தாகூர், அரவிந்தர், ஹரீந்திரநாத் முதலானோர் இயற்றிய நாடகங்கள் அரங்கமேடையில் அதிகமாக நடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. சென்னை உயர்தர நீதிமன்ற நீதிபதியாக இருந்த வீ. வீ. ஸ்ரீநிவாசய்யங்கார் எழுதிய நாடகப் பொழுது போக்கு (Dramatic Divertisement) நகைச்சுவை, இலக்கியச்சுவை இரண்டும் ததும்பும் வண்ணம் சில சிறு நாடகங்களைக் கொண்டது. இந்தோ-ஆங்கில நாவல்களுள் கார்னீலியா சொராப்ஜியின் படுதாவுக்குப் பின் நிகழும் காதலும் வாழ்க்கையும் (Love and Life behind the Purdha), எஸ்.எம். மித்ராவின் ஹிந்துப்பூர் : அமைதியற்ற இந்திய வாழ்க்கையில் ஒரு பார்வை (Hind- pur: A Peep behind the Indian Unrest); ஜோகேந்திர சிங்கின் நூர்ஜஹான் ; எஸ். எம். பானர்ஜியின் வங்காளம் கதைகள் : ஏ. மாதவய்யாவின் தில்லை கோவிந்தன் என்னும் சிலவற்றைக் குறிப்பிடலாம். இரண்டு உலக யுத்தங்களுக்கிடையே பல நாவல்கள் வெளிவந்தன. வேங்கடரமணியின் முருகன் ஆகிய ஓர் உழவன் (Murugan the Tiller), தேசபக்தன் கந்தன் (Kandan the Patriot) இரு நாவல்கள்; சங்கரராமின் மண்ணாசை (Love of Dust); ஆர். கே. நாராயணனின் சுவாமியும் அவன் சிநேகிதர்களும் (Swamy and His Friends), பட்டதாரி (Bachelor of Arts), இருட்டறை (The Dark Room); குமரகுருவின் வாழ்க்கை நிழல்கள் (Life Shadows) ; தனகோபால் முக்கர்ஜியின் காரி என்னும் யானை (Cary the Elephant), என் சகோதரரின் முகம் (My Brother's Face); அஹம்மது அப்பாஸின் நாளை நம்முடையதே (Tomorrow is Ours); அஹம்மது அலியின் டெல்லியின் சந்தியா காலம் (Twilight in Delhi); நீதிபதி ஏ. எஸ். பி. ஐயரின் பாலாதித்யா, விதியின் மூவர் (Three Men of Destiny); சாந்தா சாடர்ஜியின் பொன் கூடு (The Cage of Gold); எஸ். கே. செட்டூரின் பம்பாய்க் கொலை (Bombay Murder) ; வீ.வீ. சிந்தாமணியின் வேதாந்தம்; எஸ். நாகராஜனின் அதாவர் ஹவுஸ்; ராஜாராவின் காந்தபுரம்; திவான் ஷாவின் காங்க் ஆப் சிவா என்பவை முக்கியமானவை.

நூற்றுக்கணக்கான ஆங்கிலச் சிறு கதைகள் பத்திரிகை வாயிலாக வெளிவந்திருக்கின்றன. இந்தியர்களால் எழுதப்பட்ட இச்சிறு கதைகளில் சில மேனாட்டுப் பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன. ரவீந்திரநாத் தாகூர், கே. எஸ். வேங்கட ரமணி, சங்கரராம், மஞ்சேரி ஈசுவரன், ஆர். கே. நாராயணன், முல்க்ராஜ் ஆனந்த் முதலானோர் பெயர்கள் சிறுகதை உலகில் விளங்குகின்றன. இந்தியர்கள் ஆங்கிலத்தில் எழுதிய வாழ்க்கை வரலாறுகள் சிலவே. பி. சீ. ரே. எழுதிய சீ. ஆர். தாஸின் வரலாறும், கர் தார் சிங்கின் குருகோவிந்த சிம்ஹனின் வாலாறும், சர்தார் பணிக்கரின் குலாப் சிங்கின் வரலாறும், யதுநாத் சர்க்காரின் இந்திய வரலாறு சம்பந்தமான சில வாழ்க்கை வரலாறுகளும். வீ. எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரியின் கோபாலகிருஷ்ண கோகலே சரிதமும், கே. ஆர். ஸ்ரீநிவாசய்யங்காரின் அரவிந்த சரிதமும் நன்மதிப்புப் பெற்றன. ஆங்கில சுயசரிதைகளும் வெளிவந்திருக்கின்றன. பார்க்க : வாழ்க்கை வரலாற்று இலக்கியம்.

பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்களுள் முக்கியமானவர்கள் மகாத்மா காந்தி, லோகமான்ய பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், விபினசந்திர பாலர், சீ. ஒய். சிந்தாமணி, என். சீ. கேல்கர், கஸ்தூரி ரங்கய்யங்கார், அரங்கசாமி அய்யங்கார். தற்காலத்தில் போத்தன் ஜோசப், சலபதி ராவ், ஈச்வர் தத், நா. ரகுநாதன், டி. எப். காரகா முதலானோர் ஆங்கில மொழியை அழகாகக் கையாண்டு வருகின்றனர்.

இலக்கியத் திறனாய்வுத்துறையில் (Criticism) முன்னேற்றம் அதிகம் இல்லையென்றாலும் கீழே கண்ட இலக்கியங்கள் முன்னணி அடையும் விதமாக அமைந்திருக்கின்றன எனக்கொள்ளலாம். சித்தாந்தாவின் இந்தியாவின் வீரக் காலம் (Heroic Age of India), பண்டிட் அமரநாத் ஜாவின் ஷேக்ஸ்பியரின் இன்பவியல் நாடகம் (Shakespearian Comedy); டாக்டர் ஒய். கே. யாஜ்னிக்கின் இந்திய நாடக அரங்கு (Indian Theatre); சென் குப்தாவின் பெர்னார்டு ஷாவின் கலை (Art of Bernad Shaw); கே. ஆர். ஸ்ரீநிவாசய்யங்காரின் லிட்டன் ஸ்டிராச்சி; ரஞ்சி சஹானியின் இந்திய நோக்கில் ஷேக்ஸ்பியர் (Shakespeare Through Indian Eyes) ; ஹுமாயூன் கபீரின் பொயட்ரி, மோனட்ஸ் அண்டு சொசைட்டி (Poetry, Monads and Society). வேதாந்த விஷயங்களைப் பொருத்தமாகவும் இலக்கியச் சுவை திகழும்படியும் டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதுகிறார்.

நகைச்சுவைத் துறையில் இரண்டொரு பத்திரிகைகள் தொண்டு செய்து வருகின்றன. எஸ். வீ. வி. (எஸ். வீ. விஜயராகவாச்சாரி)யின் நகைச்சுவைக் கட்டுரைகள் படிப்போருக்கு உவகை அளிக்கக்கூடியவை. ஆர். பங்காரு ஸ்வாமியின் மைலாடு குக்குடூன்குன் என்ற நூலும் குறிப்பிடுவதற்கு உரியது. கோ. ரா. ஸ்ரீ.