கலைக்களஞ்சியம்/ஆசுன்சியோன்
ஆசுன்சியோன் தென் அமெரிக்காவிலுள்ள பராகுவே குடியரசின் தலைநகரம். 1537-ல் நிறுவப்பெற்ற இந்நகரம் பராகுவே ஆற்றின் கரையில் உள்ளது. மக் : 2,05,6051950). சிறிய நகரமாயினும், இவ்வூர் அழகாக அமைந்திருக்கிறது. ஆற்றின் கரையோரமுள்ள இறக்குமதி ஏற்றுமதித் துறைமுகம் ஜன நெருக்கமுள்ள இடம். இங்கு ஒரு தேசிய நூல் நிலையமும் கல்லூரியும் இருக்கின்றன. இவ்வூர் ஆட்சி ஆறு அங்கத்தினர்கள் கொண்ட ஒரு நகராட்சிக்கழகத்தால் நடத்தப்படுகிறது. மேயர் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார். அங்கத்தினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
16ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்காவிற்கு வந்த செபஸ்தியன் காபட் என்பவர் தென் அமெரிக்காவுக்கு வந்து, 1526-ல் ஆசுன்சியோனுக்கும் வந்தார். பராகுவே 1811-ல் ஸ்பானியர் ஆட்சியிலிருந்து விடுவித்துக் கொண்ட பிறகு ஆசுன்சியோன் அக்குடியரசின் தலை நகராயிற்று. தென் அமெரிக்கச் சுதேசிகளுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையே நடந்த பல பூசல்களின் அடையாளங்கள் இன்னும் இந்நகரின் பல பாகங்களில் காணப்படுகின்றன.