கலைக்களஞ்சியம்/ஆடி
ஆடி (Mirror): ஒளிப் பிரதிபலிப்பினால் பிம்பங்களைத் தோற்றுவிக்கும் அமைப்பு ஆடி எனப்படும். தொன்றுதொட்டே ஆடிகள் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பயனாகி வந்துள்ளன. சமதளமாகவோ, வளை அடிவாகவோ உள்ள ஓர் உலோகத் தட்டின் ஒரு புறத்தில் ஒளியைப் பிரதிபலிக்குமாறு நன்றாக மெருகேற்றி, அதைப் பழங்காலத்தில் ஆடியாகப் பயன்படுத்தி வந்தனர். கண்ணாடி ஆடிகள் பின்னரே வழக்கத்திற்கு வந்தன. முதலிற் பயனாகிய கண்ணாடி ஆடிகளில் ஒரு புறத்தில் வெள்ளியப் பூச்சுப் பூசி ஒளியைப் பிரதிபலிக்கச் செய்தனர். வெள்ளிப்பூச்சுக் கொண்ட ஆடிகள் பின்னர் வழக்கத்திற்கு வந்தன. ஒரு கண்ணாடித் தட்டின்மேல் இரசத்தைப் பரப்பி, அதை ஒரு தகரத் தட்டினால் அழுத்தி, இரசத்திலிருந்து ஒளியைப் பிரதிபலிக்கச் செய்து சிறந்த ஆடிகள் தயாரிக்கப்பட்டன. வெள்ளீயம் இரசத்துடன் கலவையாக இறுகிப் பளபளப்பான பரப்பைத் தருகிறது. ஆடிகளைச் செய்ய இம்முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது. சமதள ஆடிகளுக்கு இம்முறை ஏற்றது. ஆனால் வளைந்த ஆடிகளை இம்முறையில் தயாரிக்க முடிவதில்லை.
கண்ணாடியாலான ஆடிகள் காற்றுப்பட வைக்கப்பட்டால் காலப்போக்கில் கறுத்துவிடுகின்றன. இக்குறை உலோக ஆடிகளில் இல்லை. ஆகையால் உலோக ஆடிகளே பழங்காலத்தில் அதிகமாக வழங்கி வந்தன. நன்றாக மெருகேற்றப்பட்ட வெள்ளிப் பரப்பு ஒன்று அதன்மேல் விழும் ஒளியில் சுமார் 60 சதவிகிதத்தைப் பிரதிபலிக்கவல்லது. வெள்ளியைத் தவிர எஃகு பரப்புக்களும் ஆடிகளாகப் பயனாகின்றன.
கண்ணாடிப் பரப்பின்மேல் இரசாயன முறையால் வெள்ளியைப் படிவிக்கும் முறை லீபிக் என்ற ஜெர்மானிய இரசாயன அறிஞரால் 1835ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. அம்மோனியா கலந்த வெள்ளி நைட்ரேட்டுக் கரைவை ஓர் ஆல்டிஹைடினால் (த.க.) குறைத்து அவர் வெள்ளியைப் படிவித்தார். இன்றும் இதே தத்துவம் கையாளப்படுகிறது. வெள்ளியைக் கொண்ட கட்டிலிருந்து அதைப் படிவிக்க ராஷல் உப்பு, சர்க்கரை முதலிய குறைக்கும் பொருள்களும் பயனாகின்றன. இரசாயனக் கரைவில் கண்ணாடித்தட்டை முழுக்கி எடுத்தோ, கரைவை அதன்மேல் தெளித்தோ வெள்ளியைப் படிவிக்கலாம்.
கண்ணாடியின் பின்புறத்தில் வெள்ளிப் பூச்சுப் பூசப் பெற்ற ஆடிகளில் இப்பூச்சின்மேல் அரக்கு எண்ணெயும் அயச்செந்தூரமும் பூசப்பட்டு, வெள்ளிப் பூச்சுக் கெடாமற் பாதுகாக்கப்படுகிறது. வேறு முறைகளால் வெள்ளிப் பூச்சுப் பூசுவதும் உண்டு. துருவு விளக்குக்களில் உள்ள குழி ஆடிகள் கண்ணாடியால் ஆனவை. கண்ணாடிப் பரப்பின் மேல் வெள்ளியை மின் பகுப்பினால் படியச்செய்து, அதைப் பாதுகாக்க அதன்மேல் செம்பு படிவிக்கப்படுகிறது. எதிர்முனைக் கதிர்களைக் கொண்டும், உலோகத்தை ஒரு மின்னுலையில் சூடேற்றியும் வெள்ளிப்பூச்சைப் பெறுவதுண்டு.
பிரதிபலிப்பு என்னும் ஒளியியல் விளைவு இரு விதிகளையொட்டி நிகழ்கிறது: 1. ஆடியின்மேல் படும் கதிரும், பிரதிபலிக்கப்படும் கதிரும், இவ்விரண்டும் ஆடியைச் சந்திக்குமிடத்தில் வரையறுக்கப்படும் செங்குத்துக்கோடும் ஒரே தளத்தில் இருக்கும். 2. படுகோணமும், பிரதிபலிப்புக் கோணமும் சமமாகவிருக்கும். இவ்விதிகளையொட்டி வெவ்வேறு வகையான ஆடிகளில் பலவேறு ஒளியியல் விளைவுகளைக் காண்கிறோம்.
சமதள ஆடி : விகாரமோ, பிறழ்ச்சியோ இல்லாத பிம்பத்தைச் சமதள ஆடிகளில் பெறலாம். பிம்பத்தின் அளவு பொருளின் அளவிற்குச் சமமாகவும், ஆடியிலிருந்து பொருளின் தொலைவிற்குச் சமதூரத்தில் ஆடியின் பின்புறமும் இருக்கும். பிம்பத்தில் இட வல மாற்றம் இருக்கும். இதைத் திரையில் பெற இயலாது. ஆகையால் இது ஒரு பிம்பம். யொன்று சுழன்றால் அது சுழலும் கோணத்தைப் போல் பிரதிபலிப்புக் கதிரானது இருமடங்கு சுழலுகிறது. இத்தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு கோணமானி (Sextant) என்ற கருவி அமைக்கப்படுகிறது. சிறு கோணங்களை அளவிட ஓர் ஆடியையும் அளவையையும் பயனாக்குவதிலும் இத் தத்துவம் பயனாகிறது.
கோள ஆடிகளில் தோன்றும் பிம்பங்களில் சில குறைகள் இருக்கலாம். அவற்றுள் முக்கியமானது கோளப்பிறழ்ச்சி என்பது. ஆடியின் அச்சிலிருந்து மிகுதொலைவில் விழும் ஒளிக்கதிர்கள் குவியத்தில் குவியாததால் இக்குறை தோன்றுகிறது. இதை நீக்க ஆடியின் முன்னால் தொளைகளுள்ள இடைத்திரைகளை இட்டு, ஆடியின் மையத்தின் அருகில் மட்டும் ஒளிக் கதிர்கள் விழுமாறு செய்யவேண்டும்.
பரவளைய ஆடி ஒரு பரவளையத்தை அதன் அச்சை யொட்டிச் சுழற்றுவதால் கனபரவளையம் (Para Boloid) என்ற கன உருவத்தைப் பெறலாம். இவ்வடிவுள்ள ஆடிகளில் கோளப் பிறழ்ச்சி தோன்றுவதில்லை.ஆகையால் பரவளைய ஆடி அளவிற் பெரிதாக இருந்தாலும் தெளிவான பிம்பங்களை அளிக்கும். இதன் குவியத்தில் ஒரு விளக்கை வைத்துவிட்டால் சீரான இணை ஒளிக்கற்றையொன்றைப் பெறலாம். ஆகையால் துருவு விளக்குக்களிலும், வான நிலைய டெலிஸ்கோப்புக்களிலும் பரவளைய ஆடியே பயனாகிறது.