கலைக்களஞ்சியம்/ஆதாம், ஏவாள்
ஆதாம், ஏவாள் : இவர்கள் கிறிஸ்தவ வேதத் ஆதியாகமத்தில் சொல்லியிருக்கிறபடி மனித சாதியின் பெற்றோர். ஆதாம் என்றால் மனிதன் என்று பொருள். பராபரன் தமது சொந்த வடிவிலே ஆதாமைப் படைத்தார். அவனுடைய பழுவெலும்பினின்று ஏவாளை யுண்டாக்கினார் இவர்கள் இருவரும் அழகிய ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்து வந்தனர். கர்த்தர், “அந்தத் தோட்டத்திலுள்ள எல்லாக் கனிகளையும் உண்ணலாம்; நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை மட்டும் உண்ணக்கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். ஆனால், சாத்தான் ஒரு பாம்பு வடிவத்தில் வந்து, அந்த மரத்தின் கனியைத் தின்னும்படி ஏவாளை மயக்கினான். அவள் அக்கனியைத் தின்றாள். ஆதாமுக்கும் கொடுத்தாள். அதையுண்ட பிறகு கர்த்தர் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே ஓட்டிவிட்டார். அதிலிருந்து மனிதச் சாதிக்குத் துன்பம் பரம்பரையாக வந்துகொண்டிருக்கிறது. ஆதாம் ஏவாளுக்குக் காயீன், ஆபேல், சேத் என்னும் மூன்று ஆண் மக்கள் இருந்தனர். ஆதாம் 930 ஆண்டு உயிரோடிருந்தான்.