கலைக்களஞ்சியம்/ஆதிக் குடிகள்

ஆதிக் குடிகள் (Tribes) : பண்டை நாட்களில் வாழ்ந்த ஆதிக் குடிகள் முதலில் ஓர் இடத்திலும் நிலைத்து வசிக்காமல் அலைந்து திரியும் வழக்கத்தையே மேற்கொண்டிருந்தனர். உணவுக்கென்று மிருகங்களை வேட்டையாடுவதற்கும், அவர்கள் வளர்த்து வந்த ஆடுமாடுகளுக்குப் பசும் புல்லைத் தேடிக் கொடுப்பதற்கும் அவர்கள் இடம் விட்டு இடம் செல்ல வேண்டியதாயிற்று. இந்த நிலைக்குப்பின் ஓரிடத்திலேயே தங்கி நிலச் சாகுபடி செய்யும் கலையைக் கற்றார்கள்; நாகரிகமும் தொடங்கியது.

ஆதிக்குடிகள் எனப்படும் மக்கள் தொகுதி அதை விட மிகச்சிறிய

ஆஸ்ரேலிய ஆதிக்குடி
உதவி : ஆஸ்திரேலிய ஹை கமிஷனர், புதுடெல்லி.

இனங்கள் ஒன்று சேர்ந்ததால் உருவெடுத்தது. பண்டைக்காலக் கிரேக்க, ரோமானிய வரலாற்றுத் தொடக்கத்தில் மக்கள் பல குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர். பல குடும்பங்களின் இனம் (Clan) தோன்றியது. இதைப்போன்ற பல இனங்கள் ஒன்று சேர்க்கையால் சேர்ந்ததால் ஆதிக் குடிகள் என்ற பெரியதொரு மக்கள் தொகுதி உண்டாயிற்று. நாளடைவில் இவ்வாறு பல தொகுதிகள் இணைக்கப்பட்டதிலிருந்து அரசாங்கம் நிறுவப் பெற்றது.

இன்னும் உலகின் பல பகுதிகளில் நாகரிகத்தில் முன்னேறாத மக்கள் ஆதிக்குடிகள் நிலையிலேயே இருந்து வருகிறார்கள். ஆப்பிரிக்காக் கண்டத்திலும், பசிபிக் தீவுகளிலும், ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலிய இடங்களிலும், இந்தியாவின் சில பாகங்களிலும் இவர்களைக் காணலாம். நாகளிக வழிகளே தெரியாத இவர்களிடையும் ஒழுங்கு முறைகள் உள. தங்கள் பொது வாழ்வைச் சீராக நடத்தத் தேவையான விதிகளை இவர்கள் தவறாது பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தலைவனிருப்பான். பொதுக் காரியங்களைக் கவனிப்பதும், முறை வழங்குவதும், மக்களைக் காப்பதும் அவனுடைய பொறுப்புகள். அவனுக்கு

தொதவர்கள் நீலகிரி மலைவாசிகளான
உதவி: என். எம். சுவாமிநாதன், சென்னை.

ஆலோசனை கூறத் தொகுதிப் பெரியார்கள் (Elders) ஒரு சிறு நிருவாக சபைபோல் கூடுவார்கள். தொகுதியின் உறுப்பினர்களுக்குள்ளும் வேலைப்பாகுபாடு உண்டு. பெண்கள் குழந்தைகளைப் பராமரிக்கவும், வேறு முக்கிய வேலைகளைச் செய்யவும், ஆண்கள் வேட்டையாடவும் சண்டையிடவும் தயாராயிருக்க வேண்டும். தொகுதி வாழ்க்கையில் பல முக்கியச் சடங்குகளுமுண்டு.

உலக மக்கள் எல்லோரும் ஏதாவதொரு காலத்தில் இது போன்ற தொகுதி வாழ்க்கையின் கீழ் வசித்துத்தானிருந்தார்கள்.

ஆதிக்குடிகள் ஆட்சிமுறை வரலாறு: முதன்முதலாக ஆட்சிமுறை எப்படித் தோன்றியது என்பது பற்றிப் பலவிதக் கொள்கைகள் உள்ளன. அவைகளில் இரண்டை இங்குக் கவனிப்பது அவசியமாகிறது. குடும்பத் தலைவன் அதிகாரமே இராச்சிய அதிகாரத்துக்கு

காசிகள்
(அஸ்ஸாம் இராச்சிய வாசிகள்)

வழி காட்டியாயிருந்தது என்பது ஒரு கொள்கை (The Patriarchal Theory). அதாவது, பண்டைக்காலத்தில் மக்கள் தனிக்குடும்பங்களில் வாழ்க்கை நடத்தினார்கள். குடும்பத்தில் மூத்த ஆண்மகனே தலைவன். குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ஆண்கள், பெண்கள், வேலையாட்கள், அடிமைகள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிதல் வேண்டும். அவனுடைய கட்டளையை மீறி அவர்கள் நடக்க முடியாது. ஆண்வழி வந்தவர்களெல்லாரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனும் முறைப்படி குடும்பம் வளர்ச்சியடையும். அப்படி விரிவடைந்த பெரிய குடும்பத்துக்கும் வயது வந்த ஒரு தலைவன் (The Patriarch) இருப்பான். அவன் தலைமையும் குடும்பத் தலைவன் தலைமையைப் போலவே வெளிப்படும். நாளடைவில் இனங்கள், தொகுதிகள் ஒன்றாகி அரசாங்கமென ஏற்பட்டால், அதன் தலைவனாகிய அரசனது அதிகாரமும் பழைய குடும்பத் தலைவனது போலவே விளங்கும். எனவே அரசியல் அதிகாரத் துக்கு முதலில் வழிகாட்டியது குடும்பத்தலைவன் செலுத்தி வந்த அதிகாரமாகும். ரோமானியர், ஆரியர், எல்லோரிடையும் இத்தகைய சமுதாய வாழ்க்கை அமிசங்கள் பரவியிருந்தன.

பல இடங்களில் குடும்பத் தலைவன் அதிகாரமுறை அமலிலிருந்தாலும் எல்லா ஆதிக்குடிகள் தொகுதிகளிலும் காணப்படவில்லை. ஆஸ்திரேலியா, மலேயா போன்ற நாடுகளில் பண்டைய மக்கள் வாழ்க்கை ஆராய்ச்சியாளர்கள் அங்கெல்லாம் ஆதியிற் குடும்பமென்ற பிரிவே இல்லாது மக்கள் அநேகர் கூட்டங்கூட்டமாக (Horde or pack) வசித்தார்களென்றும், அவர்களுக்குள் உறவும் தொடர்பும் ஆண்கள் மூலம் நிருணயிக்கப்படாமல் பெண்கள் வழியே வந்தன என்றும் எடுத்துக்காட்டி யிருக்கிறார்கள். இவ்விதக் கூட்டமே ஆதிகால மக்கள் வாழ்க்கை நிலையாம். பின்னர் இது இனங்களாகப் பிரிந்து, இனங்கள் தனிக்குடும்பங்களாகப் பிரிவுற்றன. இதைப் 'பெண்வழித் தாயக் கொள்கை' (The Matriarchal Theory) என்னலாம்.

மேலே கவனித்த இரு கொள்கைகளிலும் ஓரளவு உண்மை இருக்கிறது. பண்டைத் தொகுதிகளெல்லாம் ஒரேவகையில்தான் அமைய வேண்டு மென்பதில்லை. பல பகுதிகளில் குடும்பத்திலிருந்து தொடங்கி, இனங்களும் தொகுதிகளும் வளர்ந்தன. சில இடங்களில் கூட்டம் முதலில் தோன்றிப் பிறகு இனங்களும் குடும்பங்களுமாகப் பிரிவுற்றன.

பண்டைய மக்கள் தொகுதிகளில் மக்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல்கள் சில இருந்தன. மக்கள் தொகுதியி லுள்ளவர்களெல்லோரும் உறவினர் என்ற நம்பிக்கை அவர்கள் ஒற்றுமை உணர்ச்சியை வலுப்படுத்தியது. உண்மையில் உறவிலோ, உறவு என்ற ஐதிகத்திலோ (The band of kinship, real or assumed) நம்பிக்கையே முக்கியமானது. பல இடங்கள் தங்களுக்கிருக்கும் உறவைப் புது வழிகளில் வெளியிட்டன. ஓர் இனம் ஏதாவதொரு மிருகத்தையோ, செடியையோ அதன் அடையாளமாக (Totem) வைத்துக் கொள்ளும். இனத்தினர் அம்மிருகத்தைக் கொன்று தின்பதில்லை. ஒரே சின்னத்தை உடையவர்கள் உறவினராகக் கருதப்பட்டபடியால் அவர்கள் ஒருவரை ஒருவர் கொல்வதில்லை. இனப் பெண்ணை மணம் செய்துகொள்வதில்லை. (இந்திய நாட்டிலும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மணத்தொடர்பு வைத்துக்கொள்வதில்லை). மேலும், பல இனத்தவர் தங்களுக்கென்று கட்டுப்பாடுகளையும்

அமெரிக்க இந்தியப் பெண்
உதவி : நெதர்லாந்து தூதுவர் நிலையம், புதுடெல்லி

(Taboos) வகுத்துக் கொண்டனர். “இதைச் செய்யக்கூடாது, இதைத் தொடலாகாது, இதனருகில் செல்லலாகாது” என்பனபோன்ற தடைகளிருந்தன. தலைவனும் இனப்பெரியவர்களும் இத்தகைய தடைகளைப் புகுத்தவும் விலக்கவும் அதிகாரம் பெற்றவர்கள். இவைகளை மீறுபவர்கள் கடவுளால் ஒறுக்கப்படுவார்களென்ற மனப்போக்குமிருந்தது. மதம் மற்றொரு வலிமை. அரசன் அல்லது தலைவன் கடவுளின் பிரதிநிதியாகக் கருதப்பட்டான். சட்டதிட்டங்கள் கடவுளிடமிருந்து பிறந்தவை என்ற எண்ணமுமிருந்தது. இஸ்ரவேல் மக்கள் தொகுதியினர் தாங்கள் கடவுளின் தனிப்பட்ட அன்புக்குத் தகுதியானவர்கள் என்ற கருத்துடனிருந்தனர். அராபியர்களுக்குள்ளிருந்த கிலாபத்துப் (Khilafat) பற்று அவர்கள் தொகுதிகளை நெருக்கமாக இணைத்தது. நாட்கள் செல்லச்செல்ல அரசியலுணர்ச்சியும் மக்களிடைத் தோன்றி, அவர்களை நாகரிகப் பாதையில் முன்னேறச் செய்தது. மக்கள் தொகுதிகளுக்குள் சச்சரவு ஏற்பட்டு, வலுவுள்ள தொகுதி வலுக்குறைந்தவைகளைத் தன்னுள்ளடக்கியதாலும் சமூகங்கள் விரிவடைந்தன. இவ்வகையில் சொத்துள்ளவர் இல்லாதவர், பிரபுக்கள் பாமர மக்கள் என்ற ஏற்றத் தாழ்வுகளும் வேறுபாடுகளும் உண்டாயின.

ஐரோப்பிய வரலாற்றுத் தொடக்கத்து ஆட்சித்திட்டங்களிற் சில பொதுவான அமிசங்களைக் காணலாம். இவை பண்டைக்காலக் கிரேக்கர், ரோமானியர், பின்னர் ரோமானிய சாம்ராச்சியத்தைத் தகர்த்த ஜெர்மானியக் குடிமக்கள் ஆகிய இவர்களால் கைக்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் தலைமையில் அரசன் அல்லது தலைவன் இருப்பான். அவனுக்கு ஆலோசனை கூறக் குடியின் பெரியோர்கள் கொண்ட ஒரு சபை இருக்கும். மேலும், மிகவும் முக்கியமான செய்திகளைக் கேட்டு இசைவதற்காக ஆண் மக்கள் அடங்கிய பொதுக்கூட்டமும் உண்டு. இத்தகைய நிலையங்கள் அநேகமாக எங்கும் அமைந்திருந்தன.

மேலே குறிப்பிட்ட மூன்று பண்டைக்காலக் குடிமக்களில் கிறிஸ்தவ சகாப்தம் தொடங்கும் காலத்திலிருந்த ஜெர்மானியரை ஆதிமக்களாக நாம் கருதலாம். எனினும், காலக்கிரமத்தில் ஆதியில் வந்தவர்களெனச் சொல்ல முடியாது. ஏனெனில் இவர்களின் ஆட்சி முறையைப் போலவே சுமார் கி. மு. 10ஆம் நூற்றாண்டில் ஹோமர் காலத்துக் கிரேக்கர்களும், கி. மு. 7ஆம் நூற்றாண்டில் ரோமானியர்களும் திட்டங்கள் வகுத்திருந்தனர். அதனால் கிரேக்க, ரோமானியத் திட்டங்கள் வளர்ச்சியில் ஜெர்மானியர் திட்டங்களைவிடச் சற்று மேலேறினவை எனக்கூற இடமிருக்கிறது.

தொடக்ககால ஜெர்மானியக் குடிகளின் ஆட்சி முறையைக் கி.மு.முதல் நூற்றாண்டில் வசித்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீசரும், கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த டாசிட்டஸ் (Tacitus) என்பவரும் தங்கள் நூல்களில் வருணித்திருக்கிறார்கள். சீசர் முதலில் எழுதியவர். அவர் நாட்களில் அரசியலதிகாரத்தில் தலைவன், பிரமுகர் சபை, பொதுமக்கள் கூட்டம் என்ற மூவகைப் பாகுபாடு அவ்வளவு தெளிவாக இல்லை. சண்டைக் காலங்களில் மக்கள் ஒரு தலைவனைத் தேடிக் கொண்டார்கள் என்றும், மற்றக் காலங்களில் பொதுக்கூட்டத்தின் அங்கத்தினர்களாகிய போர்வீரர்களே முழு அதிகாரம் பெற்றவர்களாயிருந்தார்கள் என்றும் சீசர் கருதுகிறார்.

டாசிட்டஸ் எழுதியதில் பாகுபாடு தெளிவாகிவிடுகிறது. சில தொகுதிகளுக்குத் தலைவனுமிருந்தான். எல்லாவற்றிற்குமே பொதுக்கூட்டமும் மேன்மக்கள் சபையுமாக இரண்டு குழுக்களுமிருந்தன.

இதற்கு 10 நூற்றாண்டுகளுக்கு முன் ஹோமர் காலத்திலிருந்த கிரேக்கச் சமுதாயங்களில் ஒவ்வொன்றுக்கும் தலைவனுண்டு. பதவி தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தினரிடமிருந்தது. இன்றியமையாத சில சமயங்களில் இதை மாற்றியும் விடலாம். மக்கள் கூட்டங்களுக்கும் அதிகாரமிருந்தது. ஆயினும் ஆட்சித் திட்டத்தில் ஜெர்மானியத் தொகுதிகளைக் காட்டிலும் தலைவனுக்குச் சிறப்பும், பொதுமக்களுக்குச் சற்றுத் தாழ்வும் தோன்றுகின்றன. உதாரணமாக, முறை வழங்குவது ஜெர்மானியர் பொதுக்கூட்டத்தின் உரிமை. ஆதிக் கிரேக்கர்களிடை இந்த உரிமை பொது மக்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

பண்டைய ரோமானியச் சமுதாயத்திலும் தலைவன், பிரமுகர் குழு, மக்கள் கூட்டம் மூன்றையும் பார்க்கிறோம். ஜெர்மானிய, கிரேக்கப் பொதுக்கூட்டங்களைப் போலவே இங்கும் மிகவும் முக்கியமான பொது விஷயங்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. அவர்கள் கூட்டம் பெரியோர் முடிவுகளை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது தள்ளிவிடலாம். ஆனால் அவைகளை விவாதிப்பது கூடாது.

முடியரசு (Monarchy), பிரபுக்கள் ஆட்சி (Aristocracy), குடியாட்சி (Democracy) என்னும் பிற்காலத்தில் உருவெடுத்த ஆட்சித் திட்டங்களின் இயல்புகளையும் சாயலையும் இச் சமூகங்களில் பார்க்கிறோம்.

பண்டைக் குடிகளின் வாழ்க்கை முறைகள் இந்தியாவில் முற்காலச் சரித்திரத்திலும் வேரூன்றியிருந்தன. 'கிராம சமுதாயங்கள்' (Village Communities) பலதிறப்பட்டவை. அவைகளில் நிலவுரிமைகள் கிராம மக்கள் எல்லோருக்கும் பொதுவானவை. கிராம ஆட்சியைக் கண்காணிக்க ஒரு சிறு சபை (Council) இருந்தது. சபைக்கு யாரை எப்படித் தேர்ந்தெடுக்கலாம் என்பது பற்றித் திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஒவ்வொரு கிராமத்திலும் பொது வேலைகளைக் கவனிக்கத் தலைவர்களிருந்தார்கள். இத்தகைய மக்களாட்சி கிறிஸ்தவ சகாப்தத்துக்குப் பல நூற்றாண்டுகள் முன்னிருந்தே இந்தியாவில் நீடித்து வந்தது. 'கிராமணி' (கிராமத் தலைவன்) என்ற பதம் ரிக்வேதத்திலேயே காணப்படுகிறது.

புத்தர் காலத்துக்கு முன்னிருந்தே பலவிடங்களில் மக்கள் தொகுதிக் குடியரசுகள் (Tribal Republics) வட இந்தியாவின் கீழ்ப்பாகத்தில் செழித்திருந்தன. புத்தர் பெருமானை உலகுக்கு ஈந்த கபிலவாஸ்துவிலிருந்த சாக்கிய இனம் ஒன்று; வைசாலியிலிருந்த லிச்சவி இனம் மற்றொன்று. இவைகளின் பொது விஷயங்கள் சீராகக் கவனிக்கப்பட்டு வந்தன. எல்லா மக்களும் கொண்ட கூட்டம் திறந்த வெளியிலோ, ஒரு மண்டபத்திலோ கூடும். இதன் முடிவுகள் எல்லோராலும் ஆதரிக்கப்பட்டவைகளாயிருக்க வேண்டும். கூட்டத்துக்கு மக்களைக்கொணர்ந்து சேர்க்கக் 'கணபூரகர்கள்' இருந்தார்கள்; வோட்டுக்களைத் திரட்டச் 'சலாகாக்ராஹகர்' களுமுண்டு. அரசியல் நிருவாகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசன் பொறுப்பிலிருந்தது. பயிரிடுதலும், ஆடு மாடு வளர்த்தலுமே முக்கியத் தொழில்கள். சில கிராமங்கள் முழுவதிலும் ஒரு தொழிலைப் பயில்பவர்களே இருப்பார்கள். இத்தகைய குடியரசின் இனம் ஒவ்வொன்றிலும் எத்தனையோ ஆயிரம் குடும்பங்கள் பல கிராமங்களில் வசித்து வந்தன.

மக்கள் வரலாற்றிலேயே மிகப் பழமையான ஆட்சி முறை முடியரசுதான். பண்டைக் குடிமக்கள் ஒருவரோடொருவர் போரிடும்போதும், பின்னர்ப் பெரிய தொகுதிகளில் அரசியல் வாழ்க்கை தொடங்கிய போதும் தங்களில் ஒருவரைத் தலைவராக்கிக் கொண்டு அவரிடம் நிருவாகம், நீதி வழங்குதல், கடவுளை வழிபடுதல் போன்ற பல ஆட்சியுரிமைகளை ஒப்படைத்தனர். போருக்குத் திறன் வாய்ந்த தலைவர் அவசியம். அமைதிக் காலங்களில் ஒருவரிடம் நிருவாகப் பொறுப்பை வைப்பது மக்களின் ஒற்றுமைக்குத் துணையாகவும், அதை அறிவுறுத்தும் அடையாளமாகவும் விளங்கியது. இதைத் தவிர, ஒரு சிலர் ஆட்சி, மக்களின் ஆட்சி முதலான திட்டங்களின் முளைகளும் பண்டைக் குடிமக்களிடையே இருந்து நாளடைவில் வெளிக்கிளம்பி வளரத் தொடங்கின. ஸ்ரீ. தோ.

ஆதிக்குடிகள் ஆட்சி முறை : சமூக அமைப்பும் பொருளாதார அமைப்பும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைவது போலவே அரசியல் அமைப்பும் ஓரளவு சூழ்நிலைக்கு ஏற்றவாறே அமைகின்றது. ஆதியில் மக்கள் ஆடையின்றி உணவு தேடும் நிலையில் இருந்தபொழுது, போர்புரிய நேரும் போதுமட்டுமே அவர்களுக்குத் தலைவன் தேவையாயிருந்தான். பின்னர் நாளடைவில் நாகரிகக் கூறுகள் தோன்றின. மக்கள் தொகை பெருகிற்று. பல குடும்பங்கள் சேர்ந்து கூட்டமாக வசித்தனர். கூட்டங்கள் நில ஆக்கிரமிப்புக்காகச் சண்டையிட்டன. வயதானவர்களையும் பலவீனர்களையும் பாதுகாக்க வேண்டிய நிலைமை உண்டாயிற்று. அத்தகைய காரணங்களால் காவலன் ஒருவன் வேண்டியதாயிற்று.

இந்தக் காவலன் 'பெரியவன்' என்று அழைக்கப்பட்டான். அவன் மக்களைக் காப்பாற்றும் பொருட்டுச் சண்டையிடும்போது மக்களும் அவனுக்குத் துணை புரிந்தனர். நாளடைவில் அவன் இவர்களைத் தனக்குத் துணை புரியுமாறு கேட்கும் உரிமையைப் பெற்றான். வேளாண்மை முதலிய நிலையான தொழில்கள் ஏற்பட்டபோது மக்கள் துணைபுரிவதற்குப் பதிலாகத் தலைவனுக்குக் காணிக்கை செலுத்தலாயினர். தலைவனே சமூகத்தைக் காப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். இதனுடன் சமூகக் கட்டுப்பாடுகளை நிறைவேற்றவும், சட்டத்திட்டங்களை வகுக்கவும், சன்மார்க்க விரோதமான செயல்களைத் தடுக்கவும் வேண்டிய நிலைமை உண்டாயிற்று. இவை யெல்லாம் சேர்ந்து அரசாங்கம் என்ற அமைப்பை உண்டாக்கின.

ஆதிக்குடிகள் சுதந்திரப் பிரியர்களாகவும் ஜனநாயகவாதிகளாகவு மிருந்தார்கள். எல்லோரையும் ஒன்று போல் மதித்து வந்தார்கள். எதையும் சமூக நன்மையை எண்ணியே செய்தார்கள். அதனால் தலைவன் என்பவன் பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சமூகத்துக்குக் கேடுவராமல் பாதுகாக்கவும். நல்வாழ்வு பெறுதவற்கு வேண்டிய காரியங்களைக் காட்டவும் கூடியவனாயிருந்தால் போதும். அப்படிப்பட்டவனையே ஆதிக்குடிகள் தங்கள் தலைவனாகத் தெரிந்தெடுத்துக் கொண்டார்கள். இதுதான். அவர்களுடைய சூழ்நிலைக்கு உகந்த முறையாயிருந்தது.

இந்தியாவிலுள்ள ஆதிக்குடி சமூகங்களில் அரசியல் தலைவன், சமயத் தலைவன் என்று இருவகைத் தலைவர்கள் காணப்படுகிறார்கள். இவர்கள் பரம்பரைத் தலைவர்களாகவுமிருப்பார்கள்; தேர்ந்தெடுக்கப்பெற்ற தலைவர்களாகவு மிருப்பார்கள். பரம்பரைத் தலைவன் தேர்ந்தெடுக்கப்பெற்ற தலைவனைவிட மிகுந்த அதிகாரம் உடையவனாயிருப்பான். ஒரிஸ்ஸாவிலுள்ள கடபர்கள் போன்ற சில சமூகங்களில் தலைவனே புரோகிதனாகவும் இருப்பதுண்டு.

தலைவனே தலைமை அதிகாரியும் நியாயாதிபதியுமாவான். சகல சமூக காரியங்களிலும் அவனே தலைமை வகிப்பான். மதத் தலைவனுடைய காரியங்களை மேற்பார்க்கும் அதிகாரமும் அவனுக்கு உண்டு. அவனுடைய இசைவின்றிச் சமூக பலியும், சமூக தேவதைகள் வழிபாடும், சமூக விழாக்களும் நடைபெறலாகாது. அவன் நடுநிலையில் நின்று சமூகத்தார் அனைவருடைய நலத்தையும் தேடுபவனாகக் கருதப்படுவான். அதற்காக அவனுக்குச் சில அதிகாரங்கள் அளிக்கப்படுகின்றன. அவன் குற்றவாளிகளைத் தண்டிக்கலாம்; சமூகவிரோதிகளைச் சமூகத்தினின்றும் நீக்கலாம். பொதுப்பந்தியில் அவனே தலைமைத்தானம் வகிப்பான். திருமணங்களில் அவனே முதல் தாம்பூலம் பெறுவான்; சமூக விளையாட்டுக்களில் தலைமை வகிப்பான்.

செஞ்சு,கடபர் போன்ற குடிகளின் தலைவன் ஊதியம் எதுவும் பெறுவதில்லை. முண்டா, ஹோ போன்ற குடிகளின் தலைவன் ஊதியம் பணமாகவோ பொருளாகவோ பெறுவான். கோயா போன்ற குடிகளின் தலைவன் விழாக்காலங்களில் மட்டுமே மதுவும் ஆடையும் பெறுவான். சமூக வழிபாட்டுக் காலங்களில் அவனுக்கு ஒரு சோடி வேட்டியும் ஒரு சேவலும் தருவர். வேட்டையில் கிடைப்பவற்றில்குறிப்பிட்ட ஒருபகுதியும் அவனுக்கு உண்டு. மற்றும், அவன் யாரையும் தனக்கு ஊழியம் செய்யுமாறு கூறலாம். அபராதத் தொகையில் ஒரு பகுதியை உபயோகித்துக் கொள்ளலாம்; விழாக்காலங்களில் சிறு தொகைகள் வசூலித்துக் கொள்ளலாம்.

ஆதிக்குடிகள் பெரும்பாலும் ஜனநாயக நம்பிக்கை யுடையவர்களாதலால் தலைவன் இத்துணை அதிகாரங்கள் பெற்றிருப்பினும், மனம் போனவாறு நடந்து கொள்ள முடியாது. சமூகச் சம்மதம் பெறாத காரியங்களைச் செய்ய இயலாது.

வழக்குக்களைத் தலைவன் பஞ்சாயத்து என்னும் மூத்தோர் அவையின் துணைகொண்டு விசாரித்து முடிவு செய்வான். மக்களே அம் மூத்தோரை நல்லொழுக்கமுடையவர்களாகவும், நடுநிலைமையில் நிற்பவர்களாகவும் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்கள். கிராமப் புரோகிதரும் பஞ்சாயத்தில் ஓர் உறுப்பினராக இருப்பார். அவர் தேவதைகளுக்கு வழிபாடு செய்யவும், தேவதைகளால் ஏற்படும் கோளாறுகளுக்குப் பரிகாரம் செய்யவும் கடமைப்பட்டவர். பஞ்சாயத்தார் சொத்து, வழக்கம், ஒழுக்கம், மணிமந்திரம் முதலியவை பற்றிய சிக்கல்களை விசாரித்து நியாயம் வழங்குவர். மக்கள் சம்மதமே அவர்களுடைய ஆற்றலாகும்.

ஆதிக்குடிகள் வீரத்தைப் பெரிதும் பாராட்டுபவர்கள். நாகர் போன்ற தலைவெட்டும் குடிகள் ஒருவன் வெட்டிவரும் தலையின் எண்ணிக்கையை வைத்தே அவனுடைய வீரத்தைப் பாராட்டுவார்கள். மாயோரிகள் போன்ற குடிகளிடையே நடனத் திறமையே பாராட்டப்பெறும். போன்டோ மக்கள் நிறைய மது தருபவனைப் புகழ்வர். சிவப்பு இந்தியர்கள் வீரத்தை மெச்சுவர். சவரர்கள் கொடையைப் பாராட்டுவர். பாவினீசியர் உயர்குலத்தையும், சில குடிகள் செல்வாளியையும் மதிப்பர். இவ்விதமாகச் சமூகத்தின் மதிப்பைப் பெறுபவர்கள் தலைவர்களாக நியமிக்கப் பெறுவர்.

ஆதிக்குடிகளிடையே தலைவனும் பஞ்சாயத்தாருமே அரசாங்க அமைப்பாவர். ஆதிக்குடிகளிடையே சட்டம் வழக்கத்துடனும், அரசியல் மதத்துடனும் தொடர்புடையன. பலியிடுதல், பொருள்களை வணங்குதல், தேவதை நம்பிக்கை, இயற்கையைக்கடந்த சக்திகளை மதித்தல் ஆகியவையே பெரும்பாலும் சமூக, பொருளாதார அமைப் உருவாக்குகின்றன. அந்தக் காரணத்தால் பழக்கவழக்கங்களே மக்களுடைய வாழ்க்கையை நடத்துபவைகளாக இருக்கின்றன. வழக்கம், நம்பிக்கை, மூடப்பழக்கம் ஆகியவையே ஒழுக்கத்தின் அடிநிலை. தேவதைகளுக்குக் கோபம் வரும்படி நடந்தால் நோய் முதலியன வரும் என்று நம்புகிறார்கள். இதைத் தடுப்பதற்காக மந்திரவாதிகளும் புரோகிதர்களும் உண்டு. ஆதலால் சமூக மக்களைப் போலவே சமூகத் தலைவனும் மந்திரவாதியையும் புரோகிதனையும் அதிக மரியாதையுடன் நடத்துகிறான். ஆகவே ஆதிக் குடிகளின் அரசியல் அமைப்பு அவர்களுடைய சமூக, மதப் பழக்க வழக்கங்களையும் பொருளாதாரச் சூழ்நிலையையும் அடிநிலையாக உடையதாகும். ஏ. எம். சோ.