கலைக்களஞ்சியம்/ஆன்
ஆன் (Anne, 1665-1714) இங்கிலாந்து அரசி. II - ம் ஜேம்ஸின் மகள். இவள் டென்மார்க்கைச் சேர்ந்த ஜார்ஜ் இளவரசனை மணந்து, பதினேழு மக்களைப் பெற்று, அத்தனை மக்களையும் இழந்து விட்டதால், 1702-ல் III - ம் வில்லியத்துக்குப் பின் தானே இங்கிலாந்து அரசியானாள். 1710 வரையில் மார்ல்பரோ பிரபுவின் மனைவியான சாரா என்பவளுடைய முழு ஆதிக்கத்தின் கீழிருந்தாள். இவள் காலத்தில் ஸ்பானிஷ் வார்சுரிமைப் போரில் மார்ல்பரோ பிரபு பல வெற்றிகளைக் கண்டான். உட்ரெக்ட் உடன்படிக்கை (1713) யின்படி அப்போரும் முடிவடைந்தது. இவள் இங்கிலீஷ் கிறிஸ்தவத் திருச்சபையை ஆதரித்தாள். இங்கிலாந்து ஸ்காட்லாந்து ஐக்கியமும் (1707), பிரிட்டிஷ் பார்லிமென்ட் அரசியல் முன்னேற்றமும் இவள் ஆட்சிக் காலத்து முக்கியமான நிகழ்ச்சிகள். அடிசன், டீபோ (Detoe), போப், சுவிப்ட் (Swift) முதலிய ஆங்கிலப் பெரும் புலவர்கள் வாழ்ந்ததும் இவள் ஆட்சிக் காலத்தில்தான்.