கலைக்களஞ்சியம்/ஆபிரகாம் பண்டிதர், ராவ் சாகிப், மு.

ஆபிரகாம் பண்டிதர், ராவ் சாகிப், மு.: (1859-1919) திருக்குற்றாலத்தின் மருங்கே சாம்பூர் வடகரை என்ற சிற்றூரில், முத்துசாமி என்னும் இந்தியக் கிறிஸ்தவர் ஒருவர் இருந்தார். அவருடைய மக்கள் ஒன்பது பேர். அவர்களுள் மூத்தவர் ஆபிரகாம் என்ற சீலர். இவர் 1859 ஆகஸ்டு இரண்டாம் நாளிற் பிறந்தார். இவர் 8ஆம் வகுப்புவரை படித்துத் தேறிப் பின் தம் 4ஆம் ஆண்டில் திண்டுக்கல்லிலிருந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிற் சேர்ந்து படித்து, 1876-ல் அதே பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தார். இவர் இயல்பாகவே மிக்க சுறுசுறுப்பும் நுண்ணறிவுமுடையோராகலின் ஒழிவு நேரங்களில் ஆரூடம், கோள் நூல், மனைநூல் முதலியன கற்றும், இசை பயின்றும், பிடில் இசைக்கப் பழகியும், பச்சிலை முதலியவற்றைச் சேர்த்து மருந்துகள் செய்து மருத்துவம் செய்தும், இசை கற்பித்தும் வருவார்.
ஆபிரகாம் பண்டிதர்
1877ஆம் ஆண்டில் சுருளிமலை சென்று, அதுபோது அங்குத்தவம் புரிந்து வந்த கருணாநந்த சித்தரைக் கண்டு, அவரது அருளும் நட்பும் பெற்றார். 27-12-1882-ல் இவர் நெல்லை சென்று, தம் பெற்றோர் விருப்பப்படி, ஞானவடிவு பொன்னம்மாள் என்ற குணவதியை மணந்து, அவருடன் திண்டுக்கல்லிற்கு வந்து, ஓராண்டளவு ஆசிரியர் தொண்டாற்றிப் பின், 1883-ல் தஞ்சைக்கு வந்து, அங்குள்ள லேடி நேப்பியர் பெண் பள்ளியில் ஆசிரியர் பணி ஈராண்டளவு ஆற்றியும், மருத்துவம் செய்தும் வந்தார். மருத்துவத் துறையில் இவருக்கு வருவாய் மிகுந்தமையின் ஆசிரியர் பணியினை நீத்துக் ‘கருணாநிதி வைத்தியசாலை’ என்றொரு மருத்துவச் சாலையினை அமைத்து, மிக்க புகழையும் பொருளையுமடைந்தார். கிறிஸ்தவச் சமய மறையினை விளக்க நன்மறை காட்டும் நன்னெறி என்ற அரிய நூலை இயற்றினார். பண்ணமைப்புக்கள் தாய்மொழியில் பாடப்பெற்றால் மாத்திரமே மக்கட்கு உள்ளத்தமைதியும் களிப்பும் ஏற்படும் எனக் கூறிப் பல தமிழ்ப் பண்கள் நிறைந்த கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற இசைநூலை 1907-ல் இயற்றினார். 1911-ல் இவருடைய மனைவி இறக்கவே 5-2-1912-ல் இசை இலக்கணத்திலும், யாழ் இசைப்பதிலும் புலமை வாய்ந்த பாக்கியம் அம்மையாரை மணந்தார். ஆபிரகாம் பண்டிதர் இசையில் மிகச் சிறந்த அறிவாளி. ஒரு தான நிலையில் (ஸ்தாயியில்) உள்ள சுருதிகள் 24 என்றும், புது இராகங்களையும், புது வர்ண மெட்டுக்களையும் உண்டாக்கிக்கொள்ளும் முறைகள் இவை என்றும் இவர் எடுத்துக்காட்டினார். இவற்றை விளக்கும் கருணாமிர்த சாகரம் என்ற அரும்பெருநூலினை இயற்றி, இரு தொகுதிகளாக 1917-ல் வெளியிட்டார். 1912-லேயே இசைக்கென மாநாடுகளைத் தம் சொந்தச் செலவில் கூட்டி நடத்தினார். இவர் நடத்திய இசை மாநாடுகள் எட்டு. 1916-ல் பரோடாவில் நடந்த முதல் அகில இந்திய இசை மாநாட்டிற்கு இவரும் இவர் மனைவியும் அழைக்கப்படவே, இவர்கள் அங்குச் சென்று, முத்தமிழ் நாடே இசை பிறந்தவிடமென்றும், தமிழனின் இசை இலக்கணமே மிக்க மேன்மை பெற்றதென்றும் கூறி உண்மையை நிலைநாட்டினார். இசைக்கென இவராற்றிய பிற பணிகளும் பலவுள, இவர் 31-8-1919-ல் இறையடி சேர்ந்தார்.

ஆ. அ. வ.