ஆபு அர்-புத்த என்பதன் சிதைவாகும். அதன் பொருள் அறிவுக்குன்று என்பது. மான்ஸ் காப்பிடாலியா என்று பிளினி கூறுவது இதுவே என்று கருதுகிறார்கள். இது பம்பாய் இராச்சியத்திலுள்ள ஆரவல்லி மலையில் தனித்து நிற்கும் ஒரு சிகரம். இதன்
தேஜ பாலர் கட்டிய கோவிலின் மேற்றளத்தின் அடிப்பகுதியில் சித்திர வேலைப்பாடு, ஆபு மலை.

முக்கியச் சிகரமான ‘குரு சிகரம்’ என்பது கடல் மட்டத்துக்கு மேல் 5,650 அடி உயரம் உள்ளது. உச்சியிலுள்ள சமநிலத்தில் கரும்பாறையில் காணப்படும் அடிச்சுவடு விஷ்ணுவினது என்பர். அதிக மழையும், அதனால் உண்டாகும் செழிப்பான காடுகளும், இங்குப் போல வேறெங்கும் இராசபுதனத்தில் இல்லை. மலையில் வசந்த காலத்தில் பூக்கும் களாப்பூ பல மைல் தூரம் நறுமணம் வீசும். ஆறுஆண்டுகட்கு ஒரு முறை பூக்கும் ‘காரா’ மலரின் நீல நிறம் மிகவும் அழகாயிருக்கும். இங்குள்ள நகிதலம் என்னும் ஏரிபோல் அழகானது இந்தியாவில் கிடையாது என்று பெர்குசன் கூறுகிறார்.

வில்லர் (Bhils) என்னும் சாதியார் இங்கு வசிக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் பெறு முன்னர் இம் மலை ஐரோப்பியருடைய வசந்தகால வாசத்தலமாக இருந்தது. இங்கு ஆண்டுமழை 68 அங். 15 மைல் தூரத்தில் ‘ஆபுரோடு’ என்னும் ரெயில்வே நிலையம் உள்ளது.

இங்கு நான்கு ஜைனக் கோயில்கள் உள. அவை தில்வாரா என்னும் கிராமத்தின் பெயரால் தில்வாரா கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கோவில்கள் 10-14 நூற்றாண்டுக் காலத்தில் ஜைன சோளங்கிகளின் ஆட்சியில் உண்டான கோவில்களின் வகையைச் சேர்ந்தவை. இவற்றுள் பீமதேவருடைய மந்திரியாயிருந்த விமலஷா 1031-ல் கட்டிய கோவிலும், தேஜ பாலர் 1230-ல் கட்டிய கோவிலும் தலையானவை. முதற்கோவில் முதல் ஜைன தீர்த்தங்கரராகிய ஆதிநாதருடையது. இரண்டாவது கோவில் 22ஆம் தீர்த்தங்கரராகிய நேமிநாதருடையது. இரண்டு கோவில்களும் இம் மலையின் அடிவாரத்தில் கிடைத்த வெண்சலவைக் கல்லால் கட்டப்பட்டன. கோவில்களின் உச்சியில் கோபுரங்களும், உள்ளே அழகான சிற்பங்களும் காணப்படுகின்றன. கோயில்களின் கூரை கும்மட்ட வடிவமானது. நடுவில் செதுக்குச் சிற்பமான தொங்கட்டம் தொங்குகிறது. கோபுரத்தின் புறத்தில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களுடைய உருவங்கள் செதுக்கப்பட்டுள. டி. என். ரா.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆபு&oldid=1456767" இலிருந்து மீள்விக்கப்பட்டது