கலைக்களஞ்சியம்/ஆம்பியாக்சஸ்

ஆம்பியாக்சஸ் (Amphioxus) ஏறக்குறைய இரண்டு அங்குல நீளமும் ஒளி புகும் நிறமற்ற உடலுமுடைய சிறு கடற்பிராணி. இதைப் பிராங்கியோஸ்டோமா (Branchiostoma) என்றும் சொல்வதுண்டு. வடிவத்தில் சிறகற்ற மீன் போன்றது. முனையும் கூராக முடிவது. ஆழமில்லாத கடலில், மணலில் புதைந்து வாழ்வது. கார்டேட்டா பிராணிகளின் தொகுதியைச் சேர்ந்தது.

ஆம்பியாக்சஸ்
1. வாய், 2. முன் தொண்டை 3. செவுள் பிளவுகள் 4. ஏட்சியம் 5. ஏட்ரிரியொபோர் 6. உணவுப்பாதை 7. ஈரல் பை 8. மலவாய் 9. நோட்டொகார்டு 10. தண்டுவடம் 11. தசைக் கண்டங்கள் 13. வால் துடுப்பு 14. முதுகுத் துடுப்பு 15. துடுப்புக் கதிர்கள்

இதற்குக் கை, கால் இல்லை. இதன் வாயைச் சுற்றிலும் உணர் கருவிகள் (Tentacles) உண்டு. வாயினுள்ளே அநேக துவாரங்களுடைய சல்லடை போன்ற முன்தொண்டையிருக்கிறது. இதில் மிகநுண்ணிய மயிர் போன்ற சிலியா (Cilia) இருக்கின்றன. முன்தொண்டையைச் சுற்றிலும் ஏட்ரியம் (Atrium) என்னும் இடைவெளி காணப்படுகிறது. அது ஏட்ரியொபோர் (Atriopore) என்னும் தொளை வழியாக வெளியே திறக்கிறது. சிலியா அசைவால் வாய் வழியாய் உள்ளே போகும் கடல்நீர் முன் தொண்டைக்குள் போய், முன் தொண்டையின் துவாரங்களின் வழியாக ஏட்ரியத்தையடைந்து, ஏட்ரியொபோர் வழியாக வெளியே கடலில் செல்கிறது. இவ்வண்ணமாக நீரோட்டம் ஒன்று ஓடிக்கொண்டேயிருக்கும். இந்தக் கருவி ஏறக்குறைய மீன் செவுள்கள் போன்றது. ஆனால் இந்த ஏற்பாடு மீன்களுக்கு உதவுகின்றது போலச் சுவாசத்துக்கு மட்டுமன்றி, உணவுப்பொருள்களைப் பற்றவும் உதவுகின்றது. இந்தச் சல்லடை வழியாக நீர் பாயும்போது அதில் இருக்கும் சிற்றுயிரிகள் வடிகட்டப்பட்டுப் புரிபுரியாக உண்டாகும் கோழையில் ஒட்டிக்கொண்டு தொண்டை வழியாக உணவுப் பாதைக்குள் செல்லுகின்றன. ஆம்பியாக்சஸ் இவ்விதமாகத் தன் உணவைப் பெறுகிறது.

ஆம்பியாக்சஸைப் பல முக்கியமான விஷயங்களில் முதுகெலும்புள்ள பிராணிகளோடு ஒப்பிடலாம். முதலாவதாக இதற்கு ஒரு வாலுண்டு. முதுகெலும்பில்லாத பிராணிகளின் மலவாயில் சாதாரணமாக உடம்பின் பின்கோடியில் திறக்கிறது. மலவாயிலுக்குப் பின்னாகத் தண்டுவடம் அடங்கிய வால் என்று சொல்லப்படும் உடம்பின் பாகம் நீண்டு காணப்படமாட்டாது. இவ்வகையான வால் முதுகெலும்புள்ள எல்லாப் பிராணிகளின் கருப்பருவத்திலும் உண்டு. பலவற்றிலே பெரிதான பருவத்திலும் இது காணப்படும். இரண்டாவதாக, இதன் முதுகில் முதுகெலும்புப் பிராணிகளுக்கிருப்பது போலவே தண்டு வடம் (Spinal cord) என்று சொல்லப்படும் நரம்புக் குழல் ஒன்று நீளமாகச் செல்லுகின்றது. மூன்றாவதாக இதன் உணவுப்பாதை வாய் முதல் மலவாய் வரை நேராக ஓடினாலும் நம்முடைய ஈரலுக்கொப்பான ஒரு பை இதற்குள் திறக்கிறது. குடலுக்குப்போகிற இரத்தம் தந்துகிகளால் சேர்க்கப்பட்டுப் போர்ட்டல் சிரை (Portal vein) வழியாக ஓடிப் பின்னும் தந்துகிகளில் பிரிந்து இந்தப் பைக்குப் போகிறது. இத்தகைய போர்ட்டல் இரத்தவோட்டம் எல்லா முதுகெலும்புள்ள பிராணிகளுக்குமுள்ள சிறப்பியல்பு. முதிர்ச்சியடைந்த முதுகெலும்புப் பிராணிகளின் ஈரல் வெறும் பையாயிராவிட்டாலும் கருப்பருவத்தில் இவ்வகைப் பையாகவே குடலிலிருந்து தோன்றுகிறது. நான்காவதாக, இதை முதுகெலும்புள்ள பிராணிகளோடு இனப்படுத்தும் மிகவும் முக்கியமான குணம் இதன் நோட்டொகார்டு (Notochord). ஆம்பியாக்சஸுக்கு முதுகெலும்பு கிடையாது. ஆனால் விறைப்பானதும் மீள்சக்தியுள்ளதுமான கோல்போன்ற நோட்டொகார்டு உடம்பின் ஒரு முனை முதல் மறு முனைவரை இப்பிராணியின் உணவுப் பாதைக்கும் தண்டுவடத்துக்கும் நடுவில் காணப்படுகிறது. நோட்டொகார்டு தலையின் முனைவரை காணப்படுவதால் இது தலைத்தண்டுள்ள செபலொகார்டேட்டா (Cephalochordata) பிரிவைச் சேர்ந்தது. நோட்டொகார்டு என்னும் உறுப்பு முதுகெலும்புத் தொகுதிப் பிராணிகளிலுள்ள மிக முக்கியமான வேற்றுமையறிவுக்கும் பண்பு. இக்காரணத்தால் இத்தொகுதி கார்டேட்டா என்று சொல்லப்படுகிறது. இத்தொகுதியைச் சார்ந்த மிகவும் தாழ்ந்த பிராணியாகிய ஆம்பியாக்சஸில் நோட்டொகார்டு அதன் வாழ்நாள் முழுவதும் மாறுதலடையாமல் அவ்வாறே காணப்படுகிறது. திட்டமான முதுகெலும்புள்ள உயர்ந்த பிராணிகளில் (Vertebrata) நோட்டொகார்டு கருப்பருவத்தில் காணப்பட்டுப் பிறகு ஏறக்குறைய முற்றிலும், அதிலும் நன்றாக உதவும் முதுகுத் தண்டாக மாறுகிறது. ஜே. பி. பா.