கலைக்களஞ்சியம்/ஆம்பிளிஸ்டோமா

ஆம்பிளிஸ்டோமா (Amblystoma) நீர் நில வாழ்வன (Amphibia) வற்று சலமாண்டர் வகையைச் சார்ந்த ஒரு சாதி. வட அமெரிக்காவில் மெக்சிகோ முதலிய பகுதிகளில் வாழ்வது. பெரிய பல்லி போல இருக்கும். இதில் பதினோரினங்கள் உண்டு. அவற்றில் ஓரினம் ஆம்பிளிஸ்டோமா டைக்ரினா என்பது. இது மற்ற இனங்களைப் போலத் தனது லார்வா நிலையில் நீரிற் கரைந்திருக்கும் ஆக்சிஜனைச் செவுள்களால் உயிர்ப்பதாக இருந்து, பிறகு நேரே காற்றைச் சுவாசிப்பதாக முதிர்கிறது. ஆனால் மெக்சிகோவில் சில இடங்களில் இதன் லார்வா எப்போதும் அந்த இளம்பருவ நிலையிலேயே இருந்துவிடுகின்றது. இதில் மற்றோர் அதிசய நிகழ்ச்சி உண்டு. இந்த இளம் பருவ நிலையிலேயே லார்வாக்களின் இனப்பெருக்கவுறுப்புக்கள் வளர்ச்சியடைகின்றன. இவை முட்டையிட்டு இனம் பெருக்குகின்றன. பிள்ளைப் பருவத்திலேயே வமிசவிருத்தி செய்யும் இந்தச் செயலுக்குப் பிள்ளைநிலையினப்பெருக்கம் (Paedogenesis) அல்லது இளமை நீடித்தல் (Neoteny) என்பது பெயர்.

ஆக்சொலாட்டில்

இந்த இளம் பருவ நிலையிலேயேயுள்ள ஆம்பிளிஸ்டோமாவுக்கு ஆக்சொலாட்டில் (Axolotl) என்று பெயர். இந்த ஆக்சொலாட்டில்தான் ஆம்பிளிஸ்டோமாவாக முதிர்வது என்பது தெரியாமலிருந்தகாலத்தில் ஆக்சொலாட்டிலுக்குச் சைரிடான் எனப் பெயர் கொடுத்திருந்தனர். பாரிசு நகரிலுள்ள பூங்காவில் ஒரு தொட்டியில் விட்டிருந்த ஆக்சொலாட்டில்களுக்கு ஒரு நாள் திடீரென மாறுதலுண்டாயிற்று. அவற்றின் செவுள்கள் மறைந்து, அவை காற்றைச் சுவாசிக்கத் தொடங்கின. அன்றுமுதல் அவற்றைப் பற்றிய ஆராய்ச்சி தொடங்கிற்று. இன்னும் இந்த இரகசியத்தை முழுவதும் அறிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. ஆக்சொலாட்டில்கள் வாழும் நீரில் ஆக்சிஜன் குறைவுபட்டால் அவை ஆம்பிளிஸ்டோமாவாக முதிர்கின்றன. அவற்றிற்குத் தைராயிடு சுரப்பிச் சத்தை ஊட்டினாலும் இந்த மாறுதல் உண்டாகின்றது எனக் கண்டிருக்கிறார்கள். சிலவிடங்களில் மட்டும் ஆக்சொலாட்டில் ஆக்சொலாட்டிலாகவே இருந்து தம் இனத்தைப் பெருக்குவதற்குக் காரணமென்ன என்பது சரிவரத் தெரியவில்லை. அவை வாழும் இடத்தில் அவற்றின் வாழ்க்கைக்கேற்ற உணவு, ஆக்சிஜன் முதலிய வசதிகளெல்லாம் பூரணமாக அமைந்திருப்பதே அவை லார்வா நிலையிலேயே இருந்துவிடுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். ஆம்பிளிஸ்டோமாவுக்குச் சொந்தமான ட்ரைட்டான் என்னும் சாதியிலும் பிள்ளை நிலை இனப் பெருக்கம் நிகழ்கிறது. எல். எஸ். ரா.