கலைக்களஞ்சியம்/ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ் என்பது காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு போவதற்கு ஏற்றதாக அமைக்கப்படும் வண்டி போன்ற ஊர்தியாகும். ஆம்புலன்ஸ் என்னும் ஆங்கிலச் சொல் போதல் என்னும் பொருளுடைய ஒரு சொல்லினின்றும் பிறந்ததாம். ஆம்புலன்ஸ் வண்டி போர்க் காலங்களிலும் போரில்லாக் காலங்களிலும் உதவுகின்றது.
போர்க் காலத்தில் இந்த வண்டியில் போர்க்களம் சென்று காயமடைந்தவர்க்கு முதல் உதவி செய்து, ‘காயசிகிச்சை வைத்தியசாலை’க்குக் கொண்டு வருவர். காயம் பெரிதாக இருந்தால் அத்தகையோரைப் போர்க்கள வைத்தியசாலைக்குக் கொண்டு வருவர். அவசியமானால் அவர்களைப் பின்னர் ஊருக்கு அனுப்புவர். போரில்லாத காலங்களிலும் காயம் பட்டவர்களை இந்த வண்டியில் வைத்து வைத்தியசாலைகளுக்குக் கொண்டு போவர். இந்த வண்டியிலேயே முதல் உதவி சிகிச்சை செய்வதுமுண்டு.
பிரெஞ்சு சேனையைச் சேர்ந்த பாரன் ஜீன் லாரி என்பவரே இந்த வண்டியைப் போரில் முதன் முதலாக 1792-ல் பயன்படுத்தினார். பின்னர் எல்லா நாடுகளும் இதைப் பயன்படுத்தலாயின. 1864-ல் வகுக்கப்பட்ட ஜெனிவா உடன்படிக்கையானது ஆம்புலன்ஸ் வண்டியை ஓட்டுபவரும் அதில் வேலை செய்பவரும் நடுநிலைமையினராகக் கருதப்பட வேண்டும் என்று கூறுகின்றது.