கலைக்களஞ்சியம்/ஆயினி
ஆயினி 150 அடி உயரமும் 15 அடி சுற்றளவும் உள்ள இலையுதிரா மரம். இந்தியாவில் மேற்குக் கடற்கரையில் நாலாயிரம் அடி உயரமுள்ள காடுகளில் உண்டாகின்றது. விலைமதிப்பிலும் பயன்படுவதிலும் தேக்குக்கு அடுத்தபடியாக உள்ளதாகும். இதன் வைரப்பகுதி மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாயும், கன அடிக்கு 30-40 ராத்தல் நிறையுடையதாயுமிருக்கும். நடுத்தரமான கடின முடையது. நன்றாக ஆறக்கூடியது. நீண்ட நாள் உழைக்கும். வேலைக்கு மிகவும் ஏற்றது. வீடு கட்டவும் நாற்காலி முதலியன செய்யவும் பயன்படினும், தோணிகள் செய்வதற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேலைக்கு இது தேக்கைவிடச் சிறந்ததாம். இந்த மரத்தால் செய்த தோணி இருநூறு ஆண்டுகளுக்கு மேல் உழைக்குமாம். குடும்பம் : மோரேசீ (Moraceae); இனம்: ஆர்ட்டோகார்ப்பஸ் ஹர்சூட்டா (Artocarpus hirsuta). கே. என். ரா.