கலைக்களஞ்சியம்/ஆரணியகம்

ஆரணியகம் என்னும் சொல்லின் பொருள் அரணியத்தைச் சார்ந்தது என்பதாகும். வேதம், மூலசுலோகங்கள் அடங்கிய சங்கிதைகளாகவும், அவற்றின் விரிவுரைகள் அடங்கிய பிராமணங்களாகவும் பிரிக்கப்படும். சில வேதங்களிலுள்ள பிராமணங்களின் இறுதிப் பாகங்களே ஆரணியகங்கள் எனப்படும். உபநிடதங்களில் பல இந்த ஆரணியகங்களின் பகுதிகளே யாகும். பிராமணங்கள் மூல சுலோகங்களுக்கு வேள்வி முறையை அனுசரித்து விரிவுரை செய்கின்றன. பிராமணங்களின் பின்னுள்ள ஆரணியகங்களில் தத்துவ ஆராய்ச்சி மிகச் சிறிய அளவே காணப்படுகின்றது. ரிக்வேதத்தில் ஐதரேய, கௌஷீதகி என இரண்டு பிராமணங்கள் உண்டு. ஐதரேய பிராமணத்திலுள்ள ஐதரேய ஆரணியகத்தில் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன. அவை ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்படும். முதல் சருக்கத்தில் சோம் யாகமும், இரண்டாவது சருக்கத்தின் முற்பகுதியில் பிராணன், ஆன்மா இரண்டையும் பற்றிய தத்துவ விசாரணையும் காணப்படுகின்றன. இந்தத் தத்துவ விசாரணை உபநிடதங்களில் காணப்படும் முறையையே அனுசரித்ததாக இருக்கிறது. இதில் காணும் பல கருத்துக்கள் பின்னர் உபநிடதத்திலும் காணப்பெறுகின்றன. இரண்டாவது சருக்கத்தின் பிற்பகுதியே ஐதரேய உபநிடதமாகும். மூன்றாவது சருக்கம் ரிக்வேதத்தைப் பலவிதமாகப் பாராயணம் செய்வதின் உட்பொருள்களைக் கூறுகிறது. மற்ற இரண்டு சருக்கங்களும் சடங்குகளைப்பற்றிக் கூறும் சூத்திரங்கள்போல் இருக்கின்றன.

கௌஷீதகி ஆரணியகத்தில் கௌஷீதகி உபநிடதம் காணப்படுவதைத் தவிர இந்த ஆரணியகத்துக்கும் ஐதரேய ஆரணியகத்துக்கும் அதிக வேறுபாடு இல்லை.

கிருஷ்ண யஜுர் வேதக்திலுள்ள தைத்திரீய சாகையில் தைத்திரீய பிராமணமும் தைத்திரீய ஆரணியகமும் இருக்கின்றன. இந்த ஆரணியசுத்தின் இறுதிப் பாகமே தைத்திரீய உபநிடதமும் மகாநாராயண உபநிடதமும் ஆகும். பிருகதாரணியக உபநிடதம் சுக்கில யஜுர் வேதத்திலுள்ளது. பிருகதாரணியகம் என்ற சொல்லானது ஆரணியகமும் உபநிடதமும் சேர்ந்தது என்பதைக் குறிப்பிடுகிறது. ஆரணியகம்போலவே வேள்வி முறைகளைச் சுவானுபூதி நோக்கத்துடன் விரிவுரை செய்வதாயிருக்கின்றது.

பிராமணங்கள் கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள வீடுகளில் நடத்தும் சோமயாகம் போன்ற வேள்விகளைக் குறித்து விரிவுரை செய்கின்றன. உலகத்தைத் துறக்காமலும், வேள்விகள் செய்வதை விட்டு விடாமலும், காட்டுக்குச் சென்று பரம்பொருளைத் தியானிப்போர்க்காகச் செய்யப்பட்டவை ஆரணியகங்கள். ஆகவே அவை பிராமணங்கட்கும் உபநிடதங்கட்கும் இடையிலுள்ள நிலையைக் குறிப்பனவாகும். சீ. கு.