கலைக்களஞ்சியம்/ஆரிகன்
ஆரிகன் (Oregan): இப்போது கொலம்பியா என்று வழங்கும் ஆற்றின் பழைய பெயர் ஆரிகன். இந்த ஆறு பாயுமிடமாதலால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றாகிய இது இப்பெயர் பெறலாயிற்று. பரப்பு: 96,981 ச.மைல். மக்: 15.21.341 (1950). உயர்ந்த சிகரம் ஹுட் (11,253 அடி). இம்மாகாணம் பசிபிக் கடற்கரையிலுள்ளது. கொலம்பியா ஆற்றுப் பாசனத்தினால் இந்த இராச்சியம் பெரும் பயன் அடைகிறது. இதன் நீரைக் கட்டுப்படுத்தப் பெரிய ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டமொன்று நிறுவப்பட்டுள்ளது. கிரேட்டர் ஏரி மிகவும் அழகான இடம். உலகத்தின் மரவேலைக்கு உகந்த மரம் மிகுதியாகக் கிடைக்குமிடங்களில் இது ஒன்று. இங்குக் கிடைக்கும் மீன்களுள் முக்கியமானது சாமன். மொத்தப் பரப்பில் சுமார் 40% மேய்ச்சல் நிலம். ஆகையால் கால்நடை வளர்ப்பு முக்கியமாக உள்ளது. இங்கு விளையும் ஆப்பிள் உலகப் புகழ்பெற்றது. வேறு பலவகைப் பழங்களும் பயிராகின்றன. சாராயம் இறக்குவதற்குப் பயன்படும் ஹாப் பயிர் மேற்குப் பகுதியில் 22,000 ஏக்கரில் பயிரிடப்படுகிறது. மெல்லிய மயிர்களுள்ள விலங்குகளை வளர்க்கும் தொழில் அதிகமாக நடைபெறுகிறது. நாட்டில் கிடைக்கும் ரசத்தில் பெரும்பகுதி இந்த இராச்சியத்திலிருந்து பெறப்படுகிறது. தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவை மற்ற முக்கியமான கனியங்கள்.