கலைக்களஞ்சியம்/ஆல்சேஸ் - லோரேன்

ஆல்சேஸ் - லோரேன் (Alsace-Lorraine) வடகிழக்குப் பிரான்ஸில் உள்ள ஒரு மாகாணம். பரப்பு: 5,605 ச.மைல். இடையிடையே (1871-1919லும், 1940-1944லும்) இப்பிரதேசம் ஜெர்மானியர் வசம் இருந்துவந்தது. இங்குப் பெரும்பாலும் ஜெர்மன்
ஆல்சேஸ்-லோரேன்
மொழியும் சிறுபான்மை பிரெஞ்சும் பேசப்படுகின்றன. பிரான்ஸிற்கும் ஜெர்மனிக்கும் இடைப்பட்டுக் கிடக்கும் பிரதேசமாகையால் இரு நாடுகளுக்கும் இடையில் இது பலமுறை கைமாறியிருக்கிறது. லோரேனிலுள்ள இரும்புக் கனிகள் உலகத்தில் மிகப் பெரியவை. முக்கியக் கைத்தொழில் துணி நெசவு. மக் : 19,15,600 (1936). முக்கிய நகரங்கள்: மெட்ஸ், மக் : 70,100; ஸ்டிராஸ்பர்கு, மக்: 1,75,000-(1946).

வரலாறு: நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளில் கெல்டிக் மக்கள் இங்கு வாழ்ந்து வந்தனர். பின் டியூட்டானிக் கூட்டத்தார் இவர்களை ஓட்டிவிட்டனர். ஷார்லமேன் சாம்ராச்சியத்தின்கீழ் இது அமைந்திருந்தது. ஷார்லமேனின் பேரன்மார் தோன்றிப் பாட்டனது நாட்டைப் பங்கிட்டு ஆளத் தொடங்கியபோது இந்நாடு ஜெர்மானியரின் ஆட்சிக்கு வந்தது. இது 16ஆம் நூற்றாண்டுவரை ஜெர்மானியரின் ஆட்சியில் அடங்கியிருந்தது. பின் சிறிது சிறிதாக இதைப் பிரெஞ்சுக்காரர் கைப்பற்றிக்கொள்ளத் தொடங்கினர். II-ம் ஹென்ரி 1552-ல் மெட்ஸ், டூல், வெர்டன் ஆகியவற்றைப் பிடித்துக்கொண்டார். 1648-ல் நடந்த வெஸ்ட் பாலியா சமாதான உடன்படிக்கையின்படி பிரெஞ்சுக்காரர் ஆல்சேஷியாவில் மற்றும் சில பகுதிகளைப் பெற்றனர். XIV-ம் லூயி மன்னர் 1680-81 ஆம் ஆண்டுகளில் ஸ்ட்ராஸ்பர்க், கோல்மெர் ஆகியவற்றைக் கைப்பற்றினார். மக்களிற் பெரும்பாலோர் ஜெர்மானியராக இருந்த படியால் அவர்கள் தம் பண்பாட்டையும் நடைகளையும் மாற்ற விரும்பாமல் நாட்டைப் பிரெஞ்சுமயமாக ஆக்க முயன்ற பிரெஞ்சு அரசாங்கத்தாருக்கு மாறாகப் பெருங்கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். எனினும் 1789-ல் நடந்த பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் ஆல்சேஸ் மக்களிடைப் பிரெஞ்சு மக்களின் பண்பாடு முற்றும் கலந்துவிட்டது. 1871-ல் இதை ஜெர்மனி வென்று கைக்கொண்டபோது 50,000 மக்களுக்குமேல் பிரான்ஸுக்கு மீண்டும் சென்று குடிபுகுந்தனர். முதல் உலகப் போருக்குப் பின் இந்நாடு பிரான்ஸின் ஆட்சிக்கு உட்பட்டது. 1940-ல் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர் இந்நாட்டைக் கைப்பற்றினர். மக்களிடம் ஜெர்மானியரின் நடையுடைகளையும் மனப்பான்மையையும் புகுத்தப் பெரிதும் முயன்றனர். தம்முடைய படைகளில் சேர்ந்து பணியாற்றவும், தம் நாட்டுக் கைத்தொழிற்சாலைகளில் சென்று வேலை செய்யவும் பல நூற்றுக்கணக்கில் ஆல்சேஸ்- லோரேன் நாட்டு மக்களை ஜெர்மனிக்குக் கொண்டு சென்றனர். நான்காண்டுகட்குப் பின் அமெரிக்கப் படைகள் ஆல் சேஸ்-லோரேனில் சென்று ஜெர்மானியரோடு பொருது, அந்நாட்டைவிட்டு அவர்களை வெளியே துரத்திவிட்டன.