கலைக்களஞ்சியம்/ஆல்ட்டாசிமத்து

ஆல்ட்டாசிமத்து (Altazimuth) வானியங்கு பொருள்களின் குத்துயரத்தையும் (Altitude), தென் திசை விலக்கத்தையும் (Azimuth) அளவிட உதவும் வானவியற் கருவி. அதில் ஒரு டெலிஸ்கோப்பு, கிடை அச்சிலும் நிலை அச்சிலும் சுழலுமாறு பொருத்தப்பட்டிருக்கும். சர்வே அளவுகளில் பயன்படும் தியோடலைட்டு (Theodolite) என்ற கருவி எளிய வடிவுள்ள ஆல்ட்டாசிமத்து. டெலிஸ்கோப்பு, கிடைத்தளத்திலும் நிலைத் தளத்திலும் சுழல்வதை வட்ட அளவைகளிலிருந்து மைக்ராஸ்கோப்புக்களின் உதவியால் அளவிடலாம். இக் கருவியை ரோமர் என்ற டேனிஷ் வானவியலறிஞர் 1690-ல் முதன் முதல் அமைத்தார்.

இது தென் திசை விலக்க வரைகளைத் தீர்மானிக்கவும், வானியங்கு பொருள்களின் குத்துயரங்களை அளவிட்டு அட்ச, தீர்க்க அளவுகளை நிருணயம் செய்யவும் பயன்படுகிறது. நட்சத்திரங்களின் பக்க விலக்கங்களைத் திருத்தமாக அளவிடவும் இதைப் பயன்படுத்துவதுண்டு.