கலைக்களஞ்சியம்/ஆல்பட்ராஸ்

ஆல்பட்ராஸ் (Albatross) மிகப்பெரிய கடற்பறவை. இதில் சில இனங்களுண்டு. வட அட்லான்டிக் தவிர மற்ற எல்லாச் சமுத்திரங்களிலும் இவை

ஆல்பட்ராஸ்

வாழ்கின்றன. அலையும் ஆல்பட்ராஸ் (Wandering A.) என்ற பெயருடன் தென் கடல்களிலுள்ளது மிகவும் பெயர் போனது. இது மிகவும் அழகான பறவை. இதன் உடல் வெண்ணிறம். சிறகுகளும் வாலும் கருநிறம். இரு சிறகுகளையும் நீட்டினால் முனையிலிருந்து முனைக்கு 9-12 அடி நீளமிருக்கும். ஆகாயத்தில் பறக்கும் பறவைகளிலெல்லாம் இந்த அளவே மிகப் பெரியது. அலகு கனமும், பலமும், ஆறங்குலத்துக்குமேல் நீளமும் உள்ளது; முனையில் வளைந்திருக்கும். அலகுக்கு இரு புறமும் குழாய்போன்ற மூக்குத் தொளையுண்டு. கால் விரல்கள் நீந்துவதற்கு ஏற்றவாறு சவ்வினால் சேர்க்கப்பட்டுள்ளன. ஆல்பட்ராஸ் பறப்பதில் பேராற்றல் உடையது. சிறகுகளையடிக்காமலே காற்று வீசும் திசைக்கு ஏற்ற கோணத்திலே அவற்றை விரித்து வைத்துக்கொண்டு நெடுநேரம் பறப்பது இதன் இயற்கை. சில சமயங்களில் பல நாட்களுக்குக் கப்பலைப் பின்தொடர்ந்து பறந்துகொண்டே வரும். எங்கும் இறங்குவதுமில்லை; இளைப்பாறுவதுமில்லை. இது மீனையும் கணவாயையும் பிடித்துத் தின்னும். கப்பலிலிருந்து எறியும் உணவுத் துணுக்குக்களையும் பொறுக்கும்.

ஆல்பட்ராஸ் முட்டையிடமட்டும் கடலைவிட்டுக் கரையை நாடும். ஒரு தனித்த தீவுக்கு அல்லது சஞ்சாரமில்லாத கடற்கரைக்கு வரும். இது கூடு கட்டுவதில்லை. வெறுந்தரையில் எங்காவது நினைத்தவிடத்தில் முட்டையிட்டுவிடும். வெண்மையான ஐந்தங்குல நீளமுள்ள ஒரே முட்டைதான் இடும். ஆணும் பெண்ணும் மாறிமாறி அவயங்காக்கும். நாற்பது நாள் சென்று முட்டை பொரிக்கும். குஞ்சின் உடம்பைக் கருமையான சிலும்பலான மெல்லிறகு மூடியிருக்கும். இதற்குச் சாதாரண இறகு முளைப்பதற்குப் பல மாதகாலம் செல்லும். அதுவரையில் தாயுந்தந்தையும் குஞ்சைப் பேணிவரும்.

கப்பலோட்டிகள் ஆல்பட்ராஸைப் பற்றிப் பலவித நம்பிக்கைகள் உள்ளவர்கள். அதற்குத் தீங்கு செய்யக்கூடாது, செய்தால் தமக்குத் துன்பம் நேரும் என்ற எண்ணம் அவர்களுக்குண்டு. சாதி: டயோமீடியா. பா. பா.