கலைக்களஞ்சியம்/ஆல்பகோடா
ஆல்பகோடா (ஆலுபுக்காரா) சற்றுப் புளிப்பான சிறு பழம். வெளியே சதையும், உள்ளே பாதுமை போன்ற சிறிய கொட்டையும் அதற்குள்ளே பருப்பும் இருக்கும்.
இது வாதுமை, பீச்சு, ஏப்ரிக்காட், புரூன் அல்லது பிளம், ஆப்பிள் முதலிய வகைகளைச் சேர்ந்தது. இவையெல்லாம் ரோசேசீ என்னும் ரோஜாக் குடும்பத்தின.
ஆலு என்னும் வடசொல் உண்ணத்தக்க வேர்களையும் கிழங்குகளையும் பழங்களையும் குறிக்கும். புக்காராவில் விளைவதும், அப் பிரதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வரவழைப்பதுமான பழம் ஆலுபுக்காரா என்று பெயர் பெற்றுள்ளது. இந்தப் பெயர் தமிழில் ஆல்பகோடா என்று வழங்குகிறது.
ஆல்பகோடா மரம் சிறியது. இது ஐரோப்பாவின் தென்பகுதி, சைலீசியா, ஆர்மீனியா, காக்கசஸ் மலையின் தென்பாகம் முதலிய இடங்களில் நெடுகக் காட்டுச் செடியாக இருக்கிறது. மேற்கு இமயமலைப் பகுதிகளில் காச்மீரம் முதல் கார்வால் வரையில் 4000-7000 அடி வரையிலும் மிகச் சாதாரணமாக வளர்ந்திருக்கிறது. நீலகிரியிலும் இது பயிராகிறது.
ஆல்பகோடாப் பழம் நல்ல மருந்து. பாரசீக மருத்துவர் இதை மிகக் கொண்டாடியிருக்கின்றனர். யூனானி முறையில் இதற்குப் பெருமை மிகுதி. இது மலத்தை இளக்கும். சூட்டைத் தணிக்கும். வெறும் வயிற்றில் உட்கொண்டால் பித்தத்தைப் போக்கும்; அழலையை அகற்றும். இதை வாயில் அடக்கி வைத்திருந்தால் காய்ச்சல்களில் உண்டாகும் நீர் வேட்கையையும் நாக்கு வறண்டு போவதையும் நீக்கும். சுரக் கஷாயங்களிலும் இது சேரும். பருப்பிலிருந்து எண்ணெயெடுத்து விளக்கெரிக்கிறார்கள்.
இது ப்ரூனஸ் கம்யூனிஸ் இனத்தைச் சேர்ந்த இன்ஸ்டிட்டிஷியா வகை என்பர். ப்ரூனஸ் இன்ஸ்டிட்டிஷியா என்றும் சொல்வதும் உண்டு.