கலைக்களஞ்சியம்/ஆல்ப்ஸ்
ஆல்ப்ஸ் நடு ஐரோப்பாவிலுள்ள பெரிய மலைத் தொடர். பனி மூடிய அதன் சிகரங்கள், ஐரோப்பாவில் வேறு எங்கும் காணமுடியாத அற்புதக் காட்சிகளாம். அது 650 மைல் நீளமும் 75 முதல் 160 மைல் வரை
அகலமும் உடையது; அரை வட்டவடிவமானது. ஒரு கோடி பிரான்ஸிலுள்ள நீஸ் அருகிலும், ஒருகோடி. ஆட்ரியாடிக் கடற் கரையிலுள்ள டிரீஸ்ட் அருகிலும் உள. இம்மலைத்தொடர் சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி நாடுகளில் 90 ஆயிரம் சதுரமைல் பரவியுள்ளது. முக்கியமான பகுதி சுவிட்ஸர்லாந்திலுள்ளது. அதன் சிகரங்களுள் மிக உயர்ந்தது மான்ட் பிளாங்க் (15,781 அடி). அடுத்தபடியாக உள்ளவை மான்டிரோயா (15.217 அடி), மாட்டர் ஹார்ன் (14.780 அடி). இம்மலையிலுள்ள மிகப் பெரிய பனிக்கட்டி ஆறு மெர்டிகினேஸ் எனப்பெறும். இம் மலைப்பகுதியில் பல பெரிய ஏரிகளும் ஆறுகளும் அருவிகளும் உள. இம்மலைத்தொடரில் முக்கால் பாகம் விளைநிலமாகவும் காடாகவும் இருக்கிறது. மலை உச்சிகளில் காணப்படும் செடிகளும் விலங்குகளும் ஐரோப்பாவில் வேறு எங்கும் காணப்படுவதில்லை. விலங்குகளுள் ஷாமாய் ஆடும் ஐபெக்ஸ் ஆடும் முக்கியமானவை. ஆல்ப்ஸ் மலையில் உலோகங்கள் மிகுதி. உலகில் வேறு எந்த மலையிலும் காணப்படாத போக்குவரத்து வசதிகள் ஆல்ப்ஸ் மலையில் உள்ளன. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் ஆல்ப்ஸ் காட்சிகளைக் காண வருகிறார்கள். ஆல்ப்ஸ் என்பது வெண்மை என்று பொருள்படும் ஆல்ப் என்னும் கெல்டிக் சொல்லிலிருந்து பிறந்ததாம்.