கலைக்களஞ்சியம்/ஆல்பகர்க்

ஆல்பகர்க் (Albuquerque.1453-1515)போர்ச்சுக்கல் நாட்டில் அலெக்சாந்திரியா என்னும் ஊரில் பிறந்தவன். 1503-ல் முதன் முறையாகக் கீழ்நாடுகளுக்குக் கப்பற் பிரயாணம் செய்தான். நன்னம்பிக்கை முனையைச்சுற்றி இந்தியாவின் மேலைக் கரையிலுள்ள கொச்சியையடைந்தான். அங்குப் போர்ச்சுக்கேசியர்களுக்குக் கோட்டை ஒன்றைக் கட்டிக்கொள்ளும் உரிமையைப் பெற்றான். 1506-ல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் என்னும் ஊரைக் கைப்பற்றினான். 1508-ல் மறுபடியும் மலையாளக் கரையையடைந்து, அங்குக் கவர்னராயிருந்த அல்மேடா என்பவனிடம் அவனுக்குப் பதிலாகத் தன்னைப் போர்ச்சுக்கேசிய இந்தியக் கவர்னராக நியமித்திருந்த உத்தரவுகளைக் காட்டினான். அல்மேடா இவனைச் சிறைப்படுத்திவிட்டான். ஆயினும் விரைவிலேயே விடுதலையடைந்து கவர்னர் பதவியை அடைந்தான். 1510-ல் கோவாவைக் கைப்பற்றினான். 1512-ல் அவன் கீழ்நாடுகளில் திரட்டிய செல்வத்தையெல்லாம் ஒரு கப்பலில் ஏற்றிக்கொண்டு, மலையாளக் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தான். கப்பல் கவிழ்ந்து செல்வம் எல்லாம் அழிந்தன; அவனும் சிரமப்பட்டு உயிர் தப்பினான். அவன் ஏடனைக் கைப்பற்ற முயன்றது பலிக்கவில்லை. 1515 டிசம்பர் 16-ல் அவன் கப்பற்பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதே இறந்தான்; கோவாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் கோவா ஆட்சியை நல்ல முறையில் நடத்தினான் என்றும், உடன்கட்டை ஏறுதலை அங்கே நீக்கினான் என்றும் புகழப்பெற்றவன். தே. வெ. ம.