கலைக்களஞ்சியம்/ஆல்வா பிரபு

ஆல்வா பிரபு (Alva, Duke of, 1508–83) கொடுமைக்குப் பேர் போன தளகர்த்தர். ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற குடும்பம் ஒன்றில் பிறந்த இவர் ஐந்தாம் சார்லஸ் அரசரிடம் தளபதியாகிப் பிரான்ஸுடன் நடந்த போரில் பல இடங்களில் வெற்றிபெற்றார். சார்லஸ் முடி துறந்தபின் இரண்டாம் பிலிப் அரசரிடம் தேஜ் சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாகவும், பின்பு இவர் தளபதியாக இருந்தார். அப்போது ஸ்பெயினுக்கு அடிமையாக இருந்த நெதர்லாந்தில் 1567-ல் கலகம் மூளவே, அதை அடக்க இவர் அங்கே அனுப்பப்பட்டார். இவர் அந்நாட்டின் கவர்னர்-ஜெனரலாகத் தம்மை நியமித்துக்கொண்டு பிராட்டெஸ்டென்டு மதத்தை ஒழிக்க முற்பட்டார். இவரது தலைமையில் நிறுவப்பட்ட நியாயக்குழுவொன்று பல மக்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றது. இவர் 18,000 மக்களைக் கொன்றவராக பெருமை பேசிக்கொண்டார். இவரை எதிர்த்து நடைபெற்ற பல கலகங்களில் இவர் வெற்றி பெற்றாலும், கடைசியில் இவர் அந்நாட்டினரது தொல்லை தாளாது திரும்ப நேர்ந்தது. 1583-ல் இவர் போர்ச்சுக்கல் நாட்டின்மேற் படையெடுத்து, லிஸ்பன் நகரைக் கைப்பற்றி அதைக் கொள்ளையடித்தார். இதன்பின் போர்ச்சுக்கல், ஸ்பானிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக ஆகி, 17ஆம் நூற்றாண்டுவரை ஸ்பானியர்களது ஆளுகையின்கீழ் இருந்தது.