கலைக்களஞ்சியம்/ஆழங்காணல்

ஆழங்காணல் (Sounding) என்பது கடலின் ஆழத்தை அளத்தல் என இங்குப் பொருள்படும். கடல் ஆழங்காணும் முறைகள் நெடுங்காலந்தொட்டு மாலுமிகளால் கையாளப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் கடல் தந்தியனுப்பும் முறை தோன்றிய பிறகுதான் கடலின் அடித்தரையிலுள்ள மேடுபள்ளங்களை அறிய முடிந்தது. குறைவான ஆழங்களை அளக்க ஒரு சணல் கயிற்றின் முனையில் காரிய உருளையொன்றைக் கட்டி அதைக் கடலுக்குள் விடுவார்கள். உருளை தரையை அடைந்தவுடன் கீழேசென்றிருக்கும் கயிற்றின் நீளத்தை அளவிட்டுக் கடலின் ஆழத்தை அறியலாம். தற்காலத்தில் கயிற்றிற்குப் பதில் கம்பியைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆழங்காணும் கருவிகள் பலவகைப்படும். அவைகளுள் பெரிதும் உபயோகத்திலிருப்பது லூகாஸ் (Lucas) கருவியாகும். இதில் 36,000 அடி நீளமுள்ள கம்பி ஓர் உருளையின்மேல் சுற்றப்பட்டிருக்கும். உருளையைச் சுழற்றிக் கம்பியின் முனையிலுள்ள எடையைக் கீழே அனுப்பலாம். கடலடியை அடைந்தவுடன் ஒரு தடை தானாகவே இயங்கிக் கம்பிச் சுருளை நிறுத்தும். உருளையிலிருக்கும் கம்பி ஒரு சக்கரத்தின்மேல் செல்லுமாறு அமைந்திருக்கும். கம்பி எவ்வளவு ஆழம் விடப்பட்டிருக்கிறது என்பதை இச்சக்கரத்திலுள்ள அளவையிலிருந்து அறியலாம்.

சுமார் 6,000 அடியைவிட அதிகமான ஆழங்களை அளவிட, பெய்லி தண்டு (Baille Rod) என்ற கருவி பயனாகிறது. இது இரண்டடி நீளமுள்ள ஒரு குழாய். இதற்குள் ஓர் எஃகுத்தடி மேலுங்கீழும் நகருமாறு அமைந்திருக்கும் குழாயின் அடியில் ஒரு வால்வு இருக்கும். சுமார் 25 ராத்தல் நிறையுள்ள இரு எடைகள் இதன் முனைகளில் செலுத்தப்பட்டிருக்கும். இவை கம்பியிலிருந்து தொங்கவிடப்படும். இவை தரையை அடைந்தவுடன் கம்பி தளரும். குழாய்க்குள் இருக்கும் தண்டு நகர்ந்து மேலே செல்லும். குழாய்க்குள் அடித்தரையிலுள்ள மண் நிரம்பும். அதை மேலே இழுக்கும் போது வால்வுகள் மூடிக்கொண்டு இம்மண் வெளியே செல்லாது தடுக்கும். ஆகையால் குழாய் தரையை அடைந்ததா என்றும், தரையின் தன்மை எத்தகையது என்றும் அறிய இது உதவும். கம்பி கீழே இறங்கும் ஒவ்வொரு 3,000 அடிக்கும் அளவிடும் திருகாணியில் குறிப்புச் செய்யப்பட்டிருக்கும். இதிலிருந்து கம்பி இறங்கிய அழத்தை அளவிடலாம்.

எதிரொலி -ஆழங்காணல் (Echos) என்னும் நவீன முறையொன்று ஆழத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது. நீர்மட்டத்திலுண்டாகும் ஒலி நீரின் வழியே ஒரே வேகத்திற்சென்று அடித்தரையில் பிரதிபலித்து மறுபடியும் நீர்மட்டத்திற்குத் திரும்புகிறது. இதற்காகும் நேரத்தைக் கணக்கிட்டு, அதிலிருந்து கடலின் ஆழத்தைக் கணக்கிடுகின்றனர். இரண்டாவது உலக யுத்தத்தின்போது கண்டுபிடிக்கப்பட்ட ரேடார் என்ற சாதனம் இதே தத்துவத்தில்தான் வேலைசெய்கிறது. குறுகிய நீளமுள்ள மின்காந்த அலைகள் ரேடாரினின் அனுப்பப்படுகின்றன. இவ்வலைகள் ஒலி யலைகளைப் போலவே சென்று, பொருள்களில் பிரதிபலித்துத் திரும்புகின்றன. இதற்காகும் நேரத்திலிருந்து பொருளின் தொலைவை அறியலாம்.

கேள்விப் புலனுக்குப் புறம்பான மிகையொலி யலைகளைப் (Supersonic waves) பயன்படுத்திக் கடலிலுள்ள பனிப்பாறைகளின் தூரத்தைக் கண்டுபிடிக்கும் முறையை ரிச்சர்ட்ஸன் என்னும் ஆங்கில விஞ்ஞானி கண்டுபிடித்தார். அப்பிரகத் தகடொன்றை அழுத்தத்திற்குட்படுத்தி இத்தகைய அலைகளைத் தோற்றுவித்தார்கள். இந்நூற்றாண்டில் அழுத்த மின்சார விளைவு (த.க.) கண்டுபிடிக்கப்பட்டபின் இது மிகையொலி யலைகளைத் தோற்றுவிக்கப் பயனாகிறது. தக்கபடி வெட்டப்பட்ட ஒரு படிகக் கல் தகட்டின் இரு புறங்களில் உயர்ந்த அதிர்வெண்கொண்ட மாறுமின் மட்டத்தைத் (Alternating voltage) தொழிற்படுத்தினால், அது விரைவாகத் துடித்து இதே அலைகளைத் தோற்றுவிக்கும். இத்தகைய படிகத் தகட்டை நீரில் தொங்கவிட்டுக் குறைவான அலைநீளமுள்ள ஒலியலைகளை நீருக்குள் அனுப்பலாம். இவை நீரின் வழியே சென்று பிரதிபலித்துத் திரும்பி வேறொரு படிகத்தகட்டை அடைந்து அதைத் துடிக்கச் செய்யும். இதனால் அதில் மாறுமின்மட்டம் தோன்றும். தக்க கருவிகளால் இதைக் கண்டறிந்து தரையின் தொலைவை அறியலாம். இச்சாதனம் முதலில் அடித்தரையிலுள்ள பாறைகள் போன்ற பெரிய பொருள்களை மட்டும் கண்டறியப் பயனாயிற்று. ஆனால் இப்பொழுது ஆழவெடி, சுரங்கவெடி முதலிய சிறிய பொருள்களையும் கண்டு பிடிக்குமளவுக்கு இது முன்னேற்றமடைந்திருக்கிறது. ஒலி கிளம்பிச் சென்று, எதிரொலி திரும்பிவருதற்கான நேரத்தை அறிந்து பொருளின் தூரத்தை அளவிடலாம். நீரில் ஒலியின் வேகம் விநாடிக்குச் சுமார் 1,600 கஜம். ஆகையால் ஒலிதோன்றி இரண்டு விநாடிகளுக்குப்பின் அது திரும்பிவந்ததென்றால் பொருளின் தூரம் 1.600 கஜமாகும்.

இரண்டாவது உலகயுத்தத்தொடக்கத்தில் இரண்டு இரும்புத்தகடுகளின் நடுவே படிகத்தகடொன்றைப் பொருத்தி மிகையொலியலைகளைத் தோற்றுவித்தார்கள். சுமார் 20.000 அதிர்வெண் கொண்ட ஒலியலைகள் இவ்வகையில் தோற்றுவிக்கப்பட்டன. அக்கருவியை உபயோகித்துச் சுமார் 3 மைல் தூரத்திலுள்ள நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து வரும் எதிரொலியைப் பிடிக்கமுடியுமென்று கணக்கிடப்பட்டது. முன்னர் எதிரொலியை மின்சார அலைகளாக மாற்றி, டெலிபோனின் உதவியால் இவற்றைக் கண்டறிந்தனர். ஒலியைப் பதிவுசெய்ய ரசாயனக் கருவியொன்று பின்னர்க் கண்டு பிடிக்கப்பட்டது. இதில் மாப்பொருள் கொண்ட பொட்டாசியம் அயோடைடு தடவப்பெற்ற கடிதச் சுருள் இருக்கும். இதன் வழியே மின்சாரம் பாய்ந்தால் இதன் நிறம் மாற்றமடையும். காகிதத்தின் எப்பகுதியில் நிறம் மாறுகிறது எனக் கண்டு பொருளின் தொலைவை அறியலாம்.

கடலாழங்காணவும், நீர்மூழ்கியைக் கண்டறியவும் இம்முறை பயனாவதோடு, திமிங்கில வேட்டைக்கும் இக்கருவி பயனாகிறது. ஆழங்காணும் பழைய முறை பல்வேறு அழங்களில் கடலின் வெப்பநிலையைக் கண்டுபிடிக்கவும் பயனாகிறது. ஒரு வெப்பமானியைப் பல ஆழங்களில் விட்டு, அவற்றின் வெபநிலைகளை அளவிடலாம். கடலடியிலுள்ள மண்ணின் தன்மையை அறியவும் இம்முறை பயனாகிறது. கடலுக்குட் செலுத்தப்படும் ஒலியலைகளின் எதிரொலி தெளிவாகவும் வலிவாகவும் இருந்தால் அடித்தரை அழுத்தமானது என்றும், எதிரொலி தெளிவற்றோ வலிவற்றோ இருந்தால், அது சேறுபோன்ற மென்மையான பொருள்களினால் ஆனது என்றும் அறியலாம்.

கடலில் அழங்குறைவான இடங்களை அறிந்து எச்சரிக்கை செய்யக் 'கடலடிக் காவற்கருவி' (Submarine sentry) என்ற சாதனம் பயனாகிறது. இதில் தடித்த கம்பியொன்றின் நுனியில், மூழ்கி (Sinker) யொன்று தொங்கவிடப்பட்டிருக்கும். அது அடித் தரையைத் தொட்டவுடன் கழன்று மேலே வந்துவிடும். அதே சமயத்தில் எச்சரிக்கை மணியொன்றடிக்கும். தேவையான ஆழத்தில் இது தொங்கிக் கொண்டிருக்குமாறு அமைக்கப்படும்.

எதிரொலிக் கருவிகளை இயக்குபவர்கள் நல்ல தேர்ச்சி உள்ளவர்களாயின், எதிரொலியைத் தோற்றுவிக்கும் பொருள் நீர்மூழ்கியா, மறைந்திருக்கும் பாறையா, மீன்களா அல்லது வேறு பொருளா என்பதை எதிரொலியின் தன்மையிலிருந்து கண்டுவிடுவார்கள். இதை முன்னிட்டு இக்கருவிகளை இயக்குபவர்கள் சிறந்த இசை அறிவு உடையவர்களாயிருப்பார்களாம்.

தற்காலத்தில் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தும் எதிரொலிக் கருவிகள் அதிகமாக வழங்குகின்றன. இவை நீருக்குள் இருக்கும் நீர்முழ்கியின் தூரம், திசை, ஆழம், வேகம், பாதை முதலிய எல்லா விவரங்களையும் கண்டறிந்து கூறிவிடும். வேறுபல துறைகளைப்போல ரேடார் இத்துறையிலும் மிகப்பயனுள்ள சாதனமாக விளங்குகிறது. த. மு.