கலைக்களஞ்சியம்/ஆவிசென்னா

ஆவிசென்னா (976-1037) அராபிய மருத்துவர். தத்துவ சாஸ்திரி. புக்காராவிற்கு அருகிலுள்ள கார்மைதென் என்னும் ஊரில் பிறந்தவர். வட பாரசீகத்திலுள்ள ஹமாதானில் காலமானவர். புக்காராவில் கல்வி முற்றக்கற்றுப் பல நாடுகளில் பிரயாணம் செய்தார். சுறுசுறுப்பும் முயற்சியும் உள்ளவர். பல செயல்களைச் செய்து வந்த நிரம்பிய வாழ்க்கையினர். சிறையுற்றுமிருக்கிறார் ; அதனின்றும் தப்பியும் இருக்கிறார். இவர் எழுதிய மருத்துவ நூல்கள் பல அவற்றுள் தலைமையாக மருத்துவத் தத்துவம் (கானன் மெடிசினி) என்பது பதினேழாம் நூற்றாண்டுவரை மேனாடுகளில் சிறந்த பிரமாண நூலாக இருந்தது. இது பழங்கால அறிஞர் காலென், ஹிப்போகிரட்டீஸ், அரிஸ்டாட்டில் முதலானவர்களின் நூல்களினின்றும் திரட்டியது. இவர் கணிதம், தத்துவம் முதலிய அறிவுத் துறைகளிலும் மேன்மை பெற்றவர். இவரது புது-பிளேட்டானிக அரிஸ்டாட்டிலியன் தத்துவக்கொள்கை ஆவிசென்னிக் கொள்கை (Avicennism) எனப்படும். கழிமுகத்திலும் அதையடுத்த ஆற்றோரத்திலும் காணும் கண்டல் மரம் இவர் பெயரால் ஆவிசென்னியா என்று வழங்குகிறது.