கலைக்களஞ்சியம்/இக்கேரி நாயக்கர்கள்

இக்கேரி நாயக்கர்கள் : தற்காலம் மைசூர் நாட்டில் அடங்கிய ஷிமோகா பகுதியும் தென் கன்னடமும் சேர்ந்த பழைய கருநாடக தேசத்தில் கெ-ள-தி அல்லது இக்கேரி நாயக்கர்கள் ஆண்டார்கள். இவர்கள் முதலில் கெ-ள-தியையும் பிறகு இக்கேரியையும் தலைநகராகக் கொண்டிருந்ததால், இப்பெயர் பெற்றனர். பசப்பன் என்னும் குடியானவனுடைய மகன் சௌடப்பா காலத்திலிருந்து இவ்வமிசத்தின் வரலாறு தொடங்குகிறது. இவருக்குப் பிறகு இவருடைய மூத்த மகனான சதாசிவ நாயக்கர் பட்டம் பெற்றார் (1513-1560). இவர் மிகவும் திறமை வாய்ந்தவர். இக் காலத்தில் விசயநகரப் பேரரசர் இராமராயர் தட்சிண சுல்தான்களோடு போர் புரிய நேர்ந்தது. அவருக்குச் சதாசிவ நாயக்கர் பேருதவி செய்தார்; பிஜாப்பூர், பீடார் சுல்தான்களைப் போரில் வென்றார். கருநாடகத்திலுள்ள பாரகூர், மங்கலாபுரம், சந்திரகுத்தி என்ற கோட்டைகளை வென்றார். இக்கேரியில் ஈசுவரருக்குக் கோயில் கட்டினார். இதன் பிறகு, சதாசிவ நாயக்கர் தம் தம்பியான பத்திரப்ப நாயக்கருக்கு முடிசூட்டிவிட்டுத் துறவியாக வாழ்ந்தார். பத்திரப்ப நாயக்கர் இம்மடி சதாசிவ நாயக்கர் என்றும் அழைக்கப் பெற்றார். இவர் கொஞ்ச காலந்தான் ஆண்டார். இவர் காலத்தில் தலைநகர் கெ-ளெ-தியிலிருந்து இக்கேரிக்கு மாற்றப்பட்டது. இவருக்குப் பிறகு சதாசிவ நாயக்கருடைய குமாரர்களான தொட்ட சங்கண்ண நாயக்கரும், சிக்க சங்கண்ண நாயக்கரும் ஆண்டனர்.

சிக்க சங்கண்ண நாயக்கர் பிஜாப்பூர் சேனாதிபதியான மஞ்ஜுலகானைக் தோற்கடித்தார். கேருசொப்பாவில் ஆண்ட பைரதேவியை வென்றார். இவர் இக்கேரியில் புதிய நகர் ஒன்றையும் அரண்மனையையும் நிறுவினார்.

இவருக்குப் பிறகு இவருடைய தமயனாரின் மகனான I -ம் வேங்கடப்ப நாயக்கர் பட்டம் பெற்றார் (1582-1629). இவரே இவ் வமிசத்தில் புகழ் பெற்ற மன்னர். பட்டப் போட்டியாலும், உள்நாட்டுக் கலகத்தாலும் விஜயநகர சாம்ராச்சியம் 1616-ல் சீர்குலைய ஆரம்பித்தது. ஆகவே இவ்வரசர் சுயேச்சை பெற்றார். போர்ச்சுக்கேசியர்கள் இவருடைய நட்பை விரும்பினர். 1623-ல் இத்தாலி தேசத்துப் பீட்ரோ டெல்லா வாலே என்ற யாத்திரிகர் இவருடைய ஊருக்கு வந்ததாகக் குறிப்பு உளது.

இவருக்குப் பிறகு இவருடைய பேரரான வீரபத்திரர் பட்டம் பெற்றார் (1630-45). 1639-ல் இவர் பிதுநூருக்குத் தலைநகரை மாற்றினார். இவருக்குப் பிறகு பட்டம்பெற்று 1645-60 வரை ஆண்ட சிவப்ப நாயக்கர் விஜயநகர சக்கரவர்த்தியான மூன்றாம் ஸ்ரீரங்க தேவரின் நண்பர். அவருக்காக பிஜாப்பூர், கோல்கொண்டா சுல்தான்களோடு போர் புரிந்தார்.

சிவப்ப நாயக்கருக்குப் பிறகு II-ம் வேங்கடப்ப நாயக்கரும், II-ம் பத்திரப்ப நாயக்கரும் ஆண்ட பிறகு I-ம் சோமசேகரர் பட்டம் பெற்றார் (1663-71). இவர் காலத்தில் இவருடைய துறைமுகப்பட்டினமான பார்சிலோர் (Barcelor) கொள்ளை அடிக்கப்பட்டது (1665). 1671-ல் நாட்டிலுள்ள பிரபுக்கள் சோமசேகர நாயக்கரைக் கொலை செய்தார்கள். இவருடைய மனைவியான சென்னம்மாஜி 1697 வரை இராச்சியத்தை ஆண்டார். இக்காலத்தில் மகாராஷ்டிரர்கள் இந்த நாட்டின்மீது படையெடுத்துச் சௌத் வரியை வசூல் செய்தார்கள். சென்னம்மாஜியினுடைய சுவீகாரப் பிள்ளையான பசப்பர் பட்டம் பெற்றார் (1697-1714). இவர் ஒரு கல்விமான்; வடமொழியில் சிவதத்துவ ரத்தினாகரம் என்ற நூலை எழுதியுள்ளார். 1763-ல் ஐதர் அலி இந்நாட்டை வென்று இவ் வமிசத்தையும் இராச்சியத்தையும் அழித்தார். எஸ். ஆர். பா.