கலைக்களஞ்சியம்/இசைக்கவை
இசைக்கவை (Tuning Fork) நல்ல எஃகினாலான கவை.
இசைக்கவை (Tuning Fork) நல்ல எஃகினாலான கவை. இதன் கிளைகளில் ஒன்றைத் தட்டினால் அதன் இரு கிளைகளும் அதிர்ந்து கலப்பற்ற நாதத்தைவெளியிடுகின்றன. இந்நாதத்தின் சுதி கிளைகளின் நீளத்தையும் பருமனையும் பொறுத்திருக்கும். இசைக்கவையின் நாதம் ஒலியியல் சோதனைகளில் திட்ட ஒலியாகப் பயனாகிறது. ஒலியியற் கருவிகளை இசைக்கவையைக் கொண்டு சுதி மீட்டலாம். இசைக்கவையை மின்சாரத்தால் இயக்கித் தொடர்ந்து ஒலிக்குமாறு செய்யலாம். இதன் இயற்கை அதிர்வெண் ஏறக்குறைய எப்போதும் மாறாதிருக்கும். ஆனால் வெளி வெப்ப மாறுபாடுகளால் இதன் மீள் சக்தியில் விளையும் சிறு மாறுதல்களால் இதன் அதிர்வெண்ணும் சிறிதளவு மாறுபடலாம். ஆகையால் திருத்தமான சோதனைகளில் இதைப் பயன்படுத்துகையில் இதன் வெப்பநிலை மாறாது வைப்பது அவசியமாகிறது.