கலைக்களஞ்சியம்/இசைத்தமிழ்

இசைத்தமிழ்: சொல்லக்கருதிய கருத்துக்களைக் கேட்போர் விரும்பி யேற்றுக்கொள்ளும் வண்ணம் இனிய ஓசையோடு கூடிய சொற்களாற் புலப்படுத்துவது இசைத்தமிழ். “இசையாவது நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதி இசைகள்” எனச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் கூறுவர்.

மூலாதாரம் தொடங்கிய எழுத்தோசை ஆளத்தியாய்ப் பின் இசை யென்றும் பண்ணென்றும் பெயராம். பல இயற்பாக்களோடு இன்னோசையாகிய நிறத்தை இசைத்தலால் இசையென்று பெயராயிற்று. பாவினோடு இயைத்துரைக்கப்பட்ட இசையினை நெஞ்சு, கண்டம், நா, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை என்னும் எட்டிடங்களிலும் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண்வகைத் தொழில்களால் உருவாகப் பண்ணிச் சீர்ப்படுத்திப் பாடப்பெறுவது பண்ணாதலின் பண்ணென்பதும் காரணப் பெயராம்.

மிடற்றுப் பாடல், குழல், யாழ் முதலிய இசைக்கருவிகளின் ஒலி, அவற்றின் கால அளவினைப் புலப்படுத்தும் தாளம் ஆகிய இவை மூன்றும் ஒத்திசைத்து இயங்குவதே இசையென்பர். இன்பத்திலும் துன்பத்திலும் பாட்டுத் தோன்றி உள்ளத்திற்கு அறுதலளிக்கின்றது. செய்யுளில் எழுத்துக்கள் பெறும் மாத்திரையளவுரைக்கும் இலக்கணம் இயற்றமிழுக்கும் இசைத் தமிழுக்கும் பொதுவாகும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களுக்கும் உரிய செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்னும் ஓசை விகற்பங்கள் தாளத்தினை அடிப்படையாகக் கொண்டவை. தாளம் பிழையாது நிற்கப் பாவினது உருவம் செவிக்குப் புலனாகும்.

அழகிய செந்தாமரை மலரையும் அதனோடு கூடிய பசுமையான இலைகளையும் படத்தில் எழுதத் தொடங்கிய ஓவியன் முதலில் வெள்ளிய தளத்திலே நுண்ணிய வரைகளினாலே உருவத்தைத் தோற்றுவிக்கின்றான். இவ்வுருவத்தைப் போன்றது தாளத்தோடு பொருந்திய செய்யுளின் ஓசை. பின் அவ்வோவியத்தின் மேல் செம்மை, பசுமை யென்னும் நிறங்களைத் தீட்டிச் சித்திரத்தை முடிக்கின்றான். இயற்றமிழ்ப் பாவினோடு இசையினை இயைத்துப் பாடுதலென்பது இவ்வாறு நிறந் தீட்டுதல் போல்வதோர் செய்கையாகும். “நிறந்தோன்ற” எனச் சிலப்பதிகார வுரையாசிரியர் வழங்கியிருத்தலை நோக்குங்கால், நிறம் என்னும் தமிழ்ச் சொல் இராகம் என்ற பொருளில் வழங்கியதென்பது பெறப்படும்.

கடைச் சங்கத்தார் இயற்றிய பரிபாடல் நூலில் இப்போது கிடைத்திருக்கும் பாடல்களில் பலவற்றிற்குப் பாடினார் பெயரும், பண்ணின் பெயரும், இசை வகுத்தார் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகுத்தெழுதிய இசை முறையும், அம்முறை பற்றிய இசைக்குறிப்பும் இக்காலத்திற் கிடைக்கவில்லை.

“இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும், பிறவும், தேவ இருடி நாரதன் செய்த பஞ்சபாரதீயமும் முதலாகவுள்ள தொன்னூல்கள் இறந்தன” என அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.

சிகண்டியென்னும் செந்தமிழ் முனிவர் இயற்றிய இசைநுணுக்கமும், யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரதசேனாபதியமும், பாண்டியன் மதிவாணனார் செய்த மதிவாணர் நாடகத்தமிழ் நூலும் ஆகிய ஐந்து நூல்களும் அடியார்க்கு நல்லார் காலத்தே தமிழ்மக்களால் பயிலப்பெற்றன என்பதும், இவற்றிற் சொல்லப்பட்ட இசை நாடக முடிபுகளை ஒரு புடையொப்புமையாகக் கொண்டு சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் விரிவுரை யியற்றினரென்பதும் சிலப்பதிகார உரைப்பாயிரத்தே கூறப்பட்டன. இந்நூல்களும் பிற்காலத்தே மறைந்தன. (கலாக்ஷேத்திர வெளியீடான பரதசேனாபதீயம் ஆதிவாயிலார் இயற்றியதன்று). இவற்றிலிருந்து மேற்கோளாகக் காட்டப்பட்ட ஒருசில சூத்திரங்களே இந்நாளிற் கிடைக்கின்றன. சிலப்பதிகாரவுரைப் பகுதியிலும் இசைத்தமிழ்த் திறம் விளக்கும் கானல்வரியுரை கிடைக்கவில்லை.

இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களிலே பண்டையிசைத் தமிழ் மரபினையும், குழல், யாழ் முதலிய இசைக்கருவிகளையும், இசைபாடும் முறையினையும், அம்முறை தவறினால் ஏற்படும் வழுக்களையும் குறிப்பிடும் பகுதிகள் மிகப்பல உள்ளன. குமரியாறு கடல்கோளால் அழிவதற்குமுன் இடைச்சங்கத் தொடக்கத்திலே இயற்றப்பெற்ற தொல்காப்பியம் என்னும் இயற்றமிழ் நூலானது இன்றளவும் சிதையாது வழங்கி வருகின்றது. இயற்றமிழ்ச் செய்யுளாராய்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்பெறுவனவாகிய இசைநூல் முடிபுகளும் கூத்து நூல் முடிபுகளும் இந்நூலிற் கூறப்பட்டுள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் ஆகிய பழந்தமிழ் நூல்களிலும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்திலும் இசைத்தமிழ் பற்றிய அரிய நூன் முடிபுகள் பல பரந்து கிடக்கின்றன.

பண்டைநாளிலே இசைவளர்த்த குடும்பத்தார் பாணரென்னும் பெயரினராவர். “துடியன் பாணன் பறையன் கடம்பனென், றிந்நான் கல்லது குடியும் இல்லை” என வரும் 325ஆம் புறப்பாடலால் இப்பாணர் பழந்தமிழ்க் குடிகளென்பது புலனாகும். அன்னோர் வாசித்த யாழ்க்கருவியின் இயல்பும், அவர் தம் வாழ்க்கை முறையும் பழந்தமிழ் நூல்களிலே பேசப்படுகின்றன.

இற்றைக்கு 1800 ஆண்டுகளின் முன்பு காவிரிப்பூம் பட்டினத்திலே மருவூர்ப்பாக்கத்திலே பெரும் பாணர்க்கு இருக்கை அமைந்திருந்ததென்பதையும், அக்காலத்து வாழ்ந்த இசையறிஞர் துளைக்கருவி வாசிப்போர், தோற்கருவி வாசிப்போர், நரம்புக்கருவி யிசைப்போர், கண்டத்தாற் பாடுவோர் என நால்வகைப் பிரிவினராக அமைந்து இசை வளர்த்தார்களென்பதனையும் சிலப்பதிகாரத்தில் இந்திர விழவூரெடுத்த காதையால் அறிகிறோம்.

ஆடல் மகள் நாடக அரங்கிற் புகுந்து ஆடும்போது ஆடலாசிரியன், இசையாசிரியன், இயற்றமிழ் வல்ல கவிஞன், மத்தளம் முழக்குவோனாகிய தண்ணுமையாசிரியன், வேய்ங்குழலூதுவோன், யாழாசிரியன் என்னும் இவர்கள் அவளது ஆடலுக்குத் துணைபுரிந்தனர் எனச் சிலப்பதிகார அரங்கேற்று காதையால் அறிகின்றோம்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதி தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனப் பேசப்படுகிறது. அப்போது இசைக்கலை மிகவும் அருகி மறையத் தொடங்கியது. தமிழரது வாழ்க்கையோடு தொடர்பில்லாத வேற்றுச் சமயங்கள் தமிழ்நாட்டிலே புகுந்து வேரூன்றினமையால், தமிழ் மக்கள் மனவுறுதி யிழந்தவராய்த் தமது இசை முதலிய கலைநலங்களையும் இழந்து சோர்வுற்றனர். இத்தகைய அல்லற்காலத்தும் இசைத்தமிழ் வழக்கிழந்து சிதையாதபடி அருளாசிரியர் சிலர் தோன்றி இயலும் இசையும் வளர்த்தனர். இக்காலத்தே வாழ்ந்த காரைக்காலம்மையார் அருளிச் செய்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகமும், மூத்த திருப்பதிகமும் தெய்வத் தமிழிசைப் பாடலுக்குச் சிறப்புடைய இலக்கியங்களாகத் திகழ்கின்றன.

திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் வாழ்ந்த காலம் கி.பி. 650 வரையிலாகுமென ஆராய்ச்சியாளர் கூறுவர். திருவெருக்கத்தம்புலியூரில் வாழ்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் மனைவியார் மதங்க சூளாமணியாருடன் சீகாழிப்பதிக்கு வந்து, அளுடைய பிள்ளையாரை வணங்கி, அவர் பாடியருளிய திருப்பதிகங்களைத் தம் யாழிலிசைத்துப் பாடித் தமிழ் நாடெங்கும் சென்று இசைவளர்த்தார் என்பது வரலாறு. அவர் வாசித்த யாழ்க்கருவி சகோடயாழ் என்னும் பெயருடையதாகும். திருநாவுக்கரசு சுவாமிகள் காலத்தவனான மகேந்திரவர்மன் என்னும் பல்லவ மன்னன் இசை, நாடகம், ஓவியம் முதலிய கலைகளில் வல்லவன். புதுக்கோட்டையினை யடுத்துள்ள குடுமியா மலையில் இவ்வேந்தனாற் பொறிக்கப் பெற்றுள்ள கல்வெட்டின் முடிவிலே. “எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய“ எனத் தமிழிற் பொறிக்கப்பட்டுளது. இதனை ஊன்றி நோக்குங்கால் இக்கல்வெட்டு அக்காலத்து வழங்கிய பழந் தமிழிசை மரபினைக் கூறுவதென்பது நன்கு தெளியப்படும். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடிய திருப்பதிகங்களும் இக்கல்வெட்டும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வழங்கிய இசை மரபினைத் தெளிவாகத் தெரிவிப்பன.

கி.பி. எட்டாம் நூற்றாண்டிலே சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தே மதுரையில் வாழ்ந்த இசைப் பாணராகிய பாணபத்திரனார் திருவாலவாய்ப் பெருமான் பாடிக் கொடுத்த திருமுகப் பாசுரத்தைப் பெற்றுச் சென்று, சேரநாட்டினை யாண்ட சேரமான் பெருமாளைக் கண்டு பெரும்பொருளைப் பரிசிலாகப் பெற்றனர். தேவார ஆசிரியர் காலத்தை யடுத்துச் சோழ நாட்டில் உறையூரிலே தோன்றிய திருப்பாணாழ்வார் என்னும் பாணர் திருவரங்கச் செல்வனார்க்கு இசைத் தமிழ்த் தொண்டு செய்து ஈறிலாப் பேறு பெற்றனர். இசையில் வல்ல ஆனாய நாயனார் வேய்ங்குழலில் இறைவனது திருவைந்தெழுத்தை இசைச் சுரங்களாகக் கொண்டு வாசித்து, இசையுருவாகிய இறைவனது திருவருள் பெற்றனர். நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி பழந்தமிழ்ப் பண்களும் பழைய இலக்கணத்திற்கேற்ற தாளமும் அமையப் பெற்றதாகும். பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தினரெனக் கருதப்பெறும் அருணகிரியார் முருகப் பெருமானைப் பாடிய திருப்புகழ்ப் பாக்கள் சந்த இசையிலே சிறந்தவையாய் உள்ளத்தைக் கவரக்கூடியவை.

தெய்வத்தைப் போற்றிய இசைப்பாடலை வாரம் என்ற பெயரால் இளங்கோவடிகள் வழங்கியுள்ளார். இயற்றமிழுக்கும் இசைத்தமிழுக்கும் பொதுவாகிய செய்யுளியக்கம் நான்காம். அவை முதனடை, வாரம், கூடை, திரள் என்பன. மிகவும் தாழ்ந்த செலவினையுடையது முதனடை. மிகவும் முடுகிய நடையினையுடையது திரள். இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாய்ச் சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உடையது வாரப்பாடல். சொற்செறிவும் இசைச் செறிவும் உடையது கூடைப்பாடல். இந்நான்கினுள் இழுமென ஒழுகிய இன்னோசையும் செம்பாகமாகப் பொருளுணர்த்துந் தெளிவும் அமைந்தது வாரப்பாடலே யாகும். இயலிசைத் துறையில் வல்லவர்களே இவ்வார இசையினைப் பாடவல்லவராவர். இத்திறமையில்லாதார் அமைக்கும் இசை சிதைவுடையதென்பதைத் தொல்காப்பியனார் (தொல் - மரபு) நன்கு விளக்குகிறார்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் இறைவனது திருவருளை இன்சொற்படுத்தியும் இன்னிசைப்படுத்தி பாடிய செழும் பாடல்களே தேவாரம் என்ற பெயராற் போற்றப்பெறுகின்றன. இத் தேவாரத் திருப்பதிகங்களும், இவற்றின் பண்ணமைதியும் இடைக்காலத்தில் போற்றுவாரின்றி அருகி மறையும் நிலையிலே நம்பியாண்டார் நம்பிகள் ஆதரவு கொண்டு திருமுறைகளைத் தொகுத்தவனாகிய திருமுறை கண்ட சோழ மன்னன், திருவெருக்கத்தம்புலியூரில் திருலேகண்ட யாழ்ப்பாணர் மரபிற் பிறந்த பாடினியாரைக் கொண்டு தேவாரத் திருப்பதிகங்களுக்குரியபழைய பண்ணமைதியினை வகுத்தமைத்தனன் எனத் திருமுறை கண்ட புராணம் கூறுகின்றது.

கி.பி. 13ஆம் நூற்றாண்டில் வடநாட்டில் தௌலதாபாத் தேவகிரி இராச்சியத்தில் சிம்மணராஜ சபையில் சமஸ்தான வித்துவானாக விளங்கிய சாரங்கதேவர் என்னும் பெரியார் தமிழ்நாட்டிற்கு வந்து, இங்கு வழங்கிய தேவாரப்பண்களை நன்குணர்ந்து, அப்பண்கள் சிலவற்றின் இலக்கணங்களைத் தாம் இயற்றிய சங்கீத இரத்தினாகரம் என்னும் வடமொழி இசைநூலில் பொன்னேபோற் போற்றி வைத்துள்ளார். பாஷாங்க இராகங்களைக் கூறுமிடத்துத் தக்க இராகத்தின் விபாளையாகிய தேவாரவர்த்தனி என்றும், மாளவகைசிகமாகிய தேவாரவர்த்தனீ என்றும் முறையே தக்க இராகத்திற்கும் கௌசிகத்கிற்கும் இவ்வாசிரியர் கூறும் இலக்கணம் இதனை வலியுறுத்தும்.

திருவாதவூரடிகள் அருளிய திருவாசகத்துள் வரும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, திருவம்மானை, திருப்பொன்னூசல், திருப்பூவல்லி, திருக்கோத்தும்பி முதலியன முத்தமிழ்க்கும் இலக்கியமாகத் திகழ்கின்றன. கொங்குவேள் செய்த உதயணன் கதையாகிய பெருங்கதையும், திருத்தக்க தேவர் பாடிய சீவகசிந்தாமணியும், சொல் வளமிக்க கல்லாடம் என்னும் நூலும் பத்தாம் நூற்றாண்டிலும் பதினோராம் நூற்றாண்டிலும் தமிழ்நாட்டில் வழங்கிய இசைத் தமிழின் இயல்பினை ஒருவாறு புலப்படுத்துவன. சேந்தனார் முதலிய ஒன்பதின்மராற் பாடப்பெற்ற திருவிசைப்பாப் பாடல்கள் தேவாரத்தினை யொத்துப் பண்ணமைக்கப் பெற்றுள்ளன.

பதினோராந் திருமுறையிலமைந்த கோயில் நான்மணிமாலையிலுள்ள சந்தச் செய்யுட்கள் 15ஆம் நூற்றாண்டில் தோன்றி, முருகப்பெருமானை இசைத்தமிழாற் பரவிப் போற்றிய அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்ச் சந்தத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

பதினோராம் நூற்றாண்டிலே வாழ்ந்த சேக்கிழார் சுவாமிகள் காலத்திலே இசைமரபு அருகியதெனினும், முற்றிலும் மறையவில்லை யென்பது அவ்வாசிரியர் பெரிய புராணத்துட் கூறும் பழந்தமிழிசை நூற்குறிப்புக்களால் தெளிவாகத் தெரிகின்றது. கி.பி. 985 முதல் 1013 வரை சோழநாட்டை ஆட்சிபுரிந்த முதலாம் இராசராச சோழன் தான் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலில் தேவாரத் திருப்பதிகம் பாடுதற்கு நாற்பத்தெண்மரும், உடுக்கை வாசித்தற்கும் கொட்டி மத்தளம் வாசித்தற்கும் இருவரும் ஆக ஐம்பதின்மரை நியமித்தான் என்றும், சோழமண்டலத்திலுள்ள தளிச்சேரிப் பெண்களாகிய நடனமாதர் நானூற்றுவரும், இசைபாடுகிறவர்களும், ஆடலாசிரியர்களும், இசைக் கருவியாளரும் ஆக ஐந்நூற்றுவர்க்கு மேற்பட்ட மக்களை நியமித்து இசைநாடகங்களை வளர்த்தானென்றும் தஞ்சைக் கோயிலிலுள்ள கல்வெட்டுக்களால் அறியலாம்.

அரும்பதவுரையாசிரியர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள் காலத்திலே பண்டை யிசைமரபு ஓரளவிற்கு மறைந்து போயிற்று. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசைகளையும் ச ரி க ம ப த நி என்னும் எழுத்துக்களாகப் பிறழ வுணர்ந்த நிலை பிற்காலத்தில் ஏற்பட்டு விட்டது. 15, 16 ஆம் நூற்றாண்டுகளிலே இசைத்தமிழ் பிறமொழிக் குறியீடுகளால் முற்றிலும் மறைந்து போயிற்று. 17, 18ஆம் நூற்றாண்டுகளிலே தஞ்சையில் அரசுபுரிந்த நாயக்கரும் மகாராட்டிரரும் இசைவல்லோரை ஆதரித்து இசைக் கலையை வளர்த்தார்கள். எனினும் அவர்கள் தமிழல்லாத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராதலின், தமிழ்மொழி வாயிலாக இசை வளர்க்குந் தொண்டினை அவர்கள் மேற்கொள்ளுவதற்கு இயலாதுபோயிற்று. அச்சுதப்ப நாயக்கரிடத்து அமைச்சராயிருந்த கோவிந்த தீட்சதரின் குமாரர் வேங்கடமகியென்பார், கி.பி. 1660 ஆம் ஆண்டளவில் பண்டை யிசைத்தமிழ் மரபினின்றும் வேறுபட்டதோர் இசைமுறையினை வகுத்துச் சதுர்த்தண்டிப்பிரகாசிகை யென்னும் வடமொழி நூலினையாத்தமைத்தார். இவரால் அரிதில் முயன்று வகுக்கப்பட்டவை எழுபத்திரண்டு மேளகர்த்தா இராகங்களாம். இவற்றுள் மிக்க பழமையுடையனவாக வழங்கிவரும் 32 இராகங்களைத்தவிர, ஏனைய 40 இராகங்களும் அனுபவத்திற்குப் பயன்படுவன அல்ல என்று சமீப காலத்திலிருந்த மதுரை நாகசுர வித்துவான் பொன்னுச்சாமிப் பிள்ளையவர்கள் சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களின் ஆதரவு கொண்டு தாம் எழுதிய பூர்வீக சங்கீத உண்மை என்னும் நூலில் விளக்கியுள்ளார்கள். இற்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரபத்தநாவலர் இயற்றிய பரதசாத்திரமும், அறம்வளர்த்தான் என்னும் ஆசிரியர் இயற்றிய பரதசங்கிரகமும் ஆகிய இந்நூல்கள் இசைத்தமிழ் மரபினை ஓரளவு விளக்குவனவாயினும், பிற்காலத்தில் வந்து கலந்த வடமொழி இசைமரபினையும் வேற்றுமையின்றி விரவிக் கூறுகின்றன.

தமிழிசை யிலக்கியமாகக் கீர்த்தனைகளை இயற்றிய முத்துத்தாண்டவரும், இராமநாடகக் கீர்த்தனை பாடிய அருணாசலக் கவிராயரும் பிற்கால இசை மரபின் படி பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற முறையில் இசைப் பாடல்களை இயற்றித் தமிழ் வளர்த்தவராவர். அருணாசலக் கவிராயர் (1711-1776) அவர்களும் தெலுங்கில் கீர்த்தனைகளைப் பாடிய தியாகையர் (1767-1847) அவர்களும் ஏறக்குறையச் சமகாலத்தில் வாழ்ந்தவரென்பர். ஆனை ஐயா, கவிகுஞ்சர பாரதி, பெரிய புராணக் கீர்த்தனை கந்தபுராணக் கீர்த்தனை முதலியவற்றின் ஆசிரியராகிய இராமசாமி சிவன்,நந்தனார் சரித்திரக் கீர்த்தனை பாடிய கோபாலகிருஷ்ண பாரதியார், சர்வசமய சமரசக் கீர்த்தனை பாடிய மாயூரம் வேதநாயகம்பிள்ளை, தமிழ் மணங் கமழக் கீர்த்தனைகளும் நாமாவளிகளும் பாடிய இராமலிங்க அடிகள், காவடிச்சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியார், கீர்த்தனைகள் பாடிய மாரிமுத்தாப் பிள்ளை முதலியோர் 19-ஆம் நூற்றாண்டினை யடுத்து இசைத் தமிழ்ப் பாடல்களை இயற்றி இசை வளர்த்த பெரியோராவர்.

இனி இயற்றமிழிலக்கியத்திலே விருந்தின் வகையாய்ச் சிறு நூல்களெனக் கருதப்பெறும் குறவஞ்சியும் பள்ளும் இசையை வளர்க்கத் துணைபுரிந்தன. உழத்திப்பாட்டாகிய பள்ளு, நாட்டுப்பாடல் வகையிற் சேர்ந்ததாயினும் இலக்கியச் சுவையும் பொருந்தியது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தஞ்சையில் வாழ்ந்த செந்தமிழ்ச் செல்வரான ஆபிரகாம் பண்டிதரவர்கள் தமக்குள்ள தமிழார்வத்தாலும், இயலிசை யாராய்ச்சி பற்றிய நுண்ணறிவினாலும் பழந்தமிழ் நூல்களையும் இக்காலத்து வழங்கும் இசை மரபினையும் ஒப்புநோக்கி ஆராய்ந்து எழுதிய கருணாமிருதசாகரம் என்னும் இசைத் தமிழ் நூலானது இசைத் தமிழாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவதாகும்.

இசைத் தமிழ் ஆராய்ச்சி: சிலப்பதிகாரத்தில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என ஏழிசைகளும் குறிக்கப்பட்டுள்ளன. இவை முறையே ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என இக் காலத்தில் வழங்கும் முறையில் அமைந்தன எனப் பின்வந்த அறிஞர் பலரும் கருதி வந்தார்கள். இக்கருத்துத் தவறான தென்பதனை அருள்மிகு விபுலானந்த அடிகளாரால் இயற்றப்பெற்றுக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாரால் 1947-ல் வெளியிடப்பெற்ற யாழ்நூல் என்னும் இசைத் தமிழ் நூலால் நன்குணரலாம்.

இளங்கோவடிகள் காலத்தில் வழங்கிய சகோட யாழில் உழை முதல் கைக்கிளை யீறாகப் பதினான்கு நரம்புகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றுள் முதல் நான்கும் மெலிவுத்தானத்திலும் (மந்தரஸ்தாயியிலும்), அடுத்து நின்ற குரல் முதல் ஏழும் சமன்தானத்திலும் (மத்திமஸ்தாயியிலும்), இறுதியிலுள்ள மூன்றும் வலிவுத்தானத்திலும் (தாரஸ்தாயியிலும்) முறையாக அமைந்திருந்தன. சமன் தானத்தில் குரல் முதலாக அமைந்த இவ் வரிசை மத்திமக்கிரமத்திற்கு உரியதாகும். ஷட்ஜக்கிரமத்திலே ஷட்ஜம் முதலாகவும், காந்தாரக் கிரமத்தில், காந்தாரம் முதலாகவும், மத்திமக் கிரமத்தில் மத்திமம் முதலாகவும் நிற்கும். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் இவ் வேழும் முறையே மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம் என இக் காலத்தில் வழங்கப்படும் இவ் வேழிசைகளையும் குறித்து வழங்கிய பழைய தமிழ்ப் பெயர்களாகும்.

குரல் முதலாக எண்ணப்படும் இவ் வேழிசைகளுக்கும் இந் நாளில் ஷட்ஜம் முதலாகச் சொல்லப்படும் ஏழிற்கும் உரியனவாக நூல்களிற் சொல்லப்படும் இலக்கணங்களை இயைத்து நோக்குங்கால் அவை முரண்படுகின்றன. இவற்றை மத்திம முதலாகவுள்ள இசை நிரலாகக் கொண்டு நோக்கினால் இவ் விலக்கணங்கள் பொருந்தி வருகின்றன,

“பட்டடையென்றது நரம்புகளில் இளிக்குப் பெயர்; என்னை? எல்லாப் பண்ணிற்கும் அடிமணையாதலின்” என அடியார்க்கு நல்லார் கூறுதலால், ஏழிசைகளையும் இளி முதல் உழையீறாகக் கொண்டு இசைத்தலே பண்டை இசையாசிரியர் மரபென்பது நன்கு விளங்கும். இளி யென்னும் ஓசை ஏனை யோசைகளுக்கெல்லாம் அடிமணையாகும் என்பதனை யறிவுறுத்த 'வண்ணப்பட்டடை’ என்ற பெயரால் இளங்கோவடிகள் குறித்துள்ளார். இக் காலத்தில் ஷட்ஜம் என வழங்கும் ஓசை ஏனைய ஆறோசைகளும் பிறத்தற்கு இடமானது என்ற பொருளிலேயே ஷட்ஜம் என்ற காரணப் பெயரைப் பெற்றதென்பர். (ஷட் - ஆறு. ஷட்ஜம்-ஆறும் பிறத்தற்கு இடனாயது). ஆகவே பண்டையோர் வழங்கிய இளியும் இக் காலத்து வழங்கும் ஷட்ஜமும் ஒன்றேயென்பது புலனாம். பண்டையோர் விளரியென வழங்கிய இசைக்கும், இக் காலத்தார் ரிஷபம் என வழங்கும் இசைக்கும். பசுவின் ஒலியை ஒப்பாகக் கூறுதலால் விளரியும் ரிஷபமும் ஒன்றே யென்பது விளங்கும். இவ்வாறே குதிரையின் ஒலியை ஒத்ததெனக் கூறப்படும் தைவதமும் கைக்கிளையும் ஒன்றேயென்பதும், யானையின் ஒலியை யொத்த ஓசையினதெனக் கூறப்படும் உழையும் நிஷாதமும் ஒன்றே யென்பதும், ஆட்டின் ஒலியினை யொத்த பண்டைத் தாரமும் இக் காலத்துக் காந்தாரமும் ஒன்றே யென்பதும் நன்கு தெளியப்படும். இவை இவ்வாறாகவே, எஞ்சி நின்ற குரல் மத்திமமெனவும், துத்தம் பஞ்சமமெனவும் கொள்ளுதற்குரியன என்பது தானே பெறப்படும். இங்ஙனம் கொள்ளுதற்குரிய இயைபுகள் யாழ் நூலில் சுருதிக்கணக்குக் கூறுமிடத்து விபுலானந்த அடிகளாரால் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

ஏழிசைகளுள் தாரம் என்ற இசையே முதன் முதல் தோன்றியதென்பது பழந் தமிழ் இசை நூற்றுணிபு. தாரம் என்ற இசை ஆண் மக்களுடைய குரலிலும், குரல் என்ற இசை மகளிரது குரலிலும் இயல்பாகத் தோன்றுமென்பர். முதலில் தோன்றிய தாரத்தின் வழியோசையாக உழையும், உழையின் வழியோசையாகக் குரலும், குரலின் வழியோசையாக இளியும், இளியின் வழியோசையாகத் துத்தமும், துத்தத்தின் வழியோசையாக விளரியும், விளரியின் வழியோசையாகக் கைக்கிளையும் பிறப்பன என முதன்முதற் கண்டுணர்த்திய பெருமை தமிழ் மக்களுக்கே யுரியதாகும்.

மெலிவு, சமன், வலிவு என்னும் இம் மூன்றினையும் மூவகை இயக்கம் என்றும், மூவகைத் தானமென்றும் சிலப்பதிகாரம் கூறும். இம் மூன்றினையும் பிற்காலத்தார் வழக்கின்படி மந்தரம், மத்திமம், தாரம் என வழங்குவர் சேக்கிழார். இம் மூவகை யியக்கத்தையும் மந்தோச்சமம் என வழங்குவர் அடியார்க்கு நல்லார்.

வீணை நரம்பு மந்தக் குரலுக்கு இசை கூட்டப்பட்டிருப்பின் அதன் சரிபாதி நரம்பிலே சம இசையாகிய குரலும், அதன் நான்கிலொரு கூற்றிலே உச்ச இசையாகிய குரலும், மூன்றிலொரு கூற்றிலே குரலின் கிளை யிசையாகிய இளியும் ஒலிக்கும். குரல் முதலாக மேன்மேல் உயர்ந்து செல்லும் இசையினை ஆரோசையெனவும், குரல் முதலாகப் படிப்படியாகத் தாழ்ந்து செல்லும் இசையினை அமரோசை யெனவும் வழங்குவர் சேக்கிழார். இவ்விரண்டினையும் ஆரோகணம், அவரோகணம் என்ற சொற்களால் வழங்குவர் பின்னுள்ளோர்.

ஷட்ஜத்தோடு இயல்பாகவே தோன்றுகிற பஞ்சம இசையானது நரம்பின் மூன்றிலொரு கூற்றிலே ஒலிப்பதனை உணர்ந்த நாள் முதலாகவே நரம்புக் கருவிகளும் துளைக் கருவிகளும் கணக்கறிந்து அமைக்கப்பட்டன.

அலகு, மாத்திரை, சுருதி யென்பன ஒரு பொருட் சொற்கள். இரண்டு இசைச் சுரங்களின் இடையேயமைந்த ஓசை வேறுபாட்டினை யளத்தற்கு இச் சுருதி பயன்படுதலின் அலகு எனப் பெயர் பெற்றது. இச்சுருதிகள் நான்கு கூடி நிற்பது முற்றிசை. இம்முற்றிசை ஓரலகும் மூன்றல.குமாக இரண்டாய்ப் பிரிந்த நிலையில், ஓரலகினைக் குற்றிசை யெனவும் மூவலகினைப் பற்றிசை யெனவும் கொள்ளலாம். ஓரலகாகிய குற்றிசை யிரண்டும் ஒன்று சேர்ந்து நிற்பது நெட்டிசை. இவற்றுட் பற்றிசையாகிய சுருதி ஷட்ஜபஞ்சமமாக இசை நரம்புகளைப் பிறப்பித்தலாகிய கிளை இயைபினால் தோன்றுவது. குற்றிசையாகிய சுருதி ஷட்ஜமத்திமமாக இசை நரம்புகளைப் பிறப்பிக்கும் நட்பியைபினால் தோன்றுவது. பற்றிசையாகிய மூவலகிலிருந்து குற்றிசையாகிய ஒரு சுருதியை நீக்கினால். எஞ்சிநின்ற இரண்டு சுருதியும் விதியிசை யெனப்படும். இதனைப் பிரமாண சுருதி யென்பர் வட நூலார். கிளையியைபினால் பிறக்கும் பதினோரிசை நிலைகளும், நட்பியைபினால் பிறக்கும் பதினோரிசை நிலைகளும் ஆகிய இருபத்திரண்டுமே பழந்தமிழிசை மரபில் வழங்கிய இருபத்திரண்டு சுருதிகளாம்.

மேற்கூறிய இருபத்திரண்டு சுருதிகளையும் பன்னிரண்டு இராசி வீடுகளில் வைத்து ஆராய்ந்து, இசை நுட்பம் அறியும் முறை பழந்தமிழர் கண்டதாகும். ஷட்ஜம் ஒழிந்த பதினொரு வீட்டிலும் நட்பு முறையிற் பிறந்த சுருதியொன்றும் கிளைமுறையிற் பிறந்த சுருதியொன்றும் ஆக இரண்டிரண்டு சுருதிகள் நிற்பன. இவ்வாறு ஒரு வீட்டினுள் நிற்கும் நட்பு கிளையென்னும் இருவகைச் சுருதிகளுக்கும் இடையே யமைந்த வேறுபாடு முற்கூறிய பிரமாண சுருதியாகிய ஈரலகாகும். இது அளவிற் சிறியதாதலின் ஒரு வீட்டில் நின்ற இரு வகைச் சுருதிகளையும் இசைவாணர் கமக முறையினாலே வேறுபாடின்றிப் பயன்படுத்திக் கொள்வர்.

தாரக்கிரமத்தில் 4, 4, 4, 1, 4, 4, 1 எனவும், குரற்கிரமத்தில் 4, 3, 4, 2, 4, 3, 2 எனவும், இளிக்கிரமத்தில் 4, 3, 24, 4, 3, 2 எனவும் இருபத்திரண்டு சுருதிகளும் ஏழிசைகளாகப் பிரிந்து நிற்பன என்பர் யாழ் நூலார். ச ரி க ம ப த நி என எழுத்தாற் குறிக்கப்படும் ஏழிசைக்கும் முறையே 4,3,2,4,4,3,2 என்னும் சுருதிகள் உரியன எனக் கூறுவர். இளிக்கிரமத்தின் அலகுகள் இளிமுதலாக 4,3,2,4,4,3,2 என நின்றன. எனவே குரல் முதலாக எண்ணப்படும் ஏழிசைகளும் முறையே 4,4,3,2,4,3,2 என்னும் சுருதிகளைப் பெற்று நிற்பன என்பது புலனாகும்.

குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாம்
குரையா உழையிளி நான்கு – விரையா
விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார்
களரிசேர் கண்ணுற் றவர்

என வரும் சிலப்பதிகார உரை மேற்கோள் இதனை வலியுறுத்தும். இதனால் இளிக்கிரமத்து இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழையென்னும் ஏழிசைகளும் இக்காலத்தில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வழங்கப்படுவனவே யென்பது நன்கு தெளிவாகின்றது.

குறிப்பிட்ட ஓர் இராகத்திற்கு ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் இன்ன சுரங்கள் வருவன என நிச்சயித்து நிறுத்துவது பாலைநிலை எனப்படும். அவ்வாறு நிச்சயித்து நிறுத்திய சுரங்களிலே முதல்,முறை, முடிவு, நிறை, குறை, கிமமை, வலிவு, மெலிவு, சமன் என்பவற்றை யறிந்து, இசைப்புலவன் வைத்த தாளத்திற்குப் பொருந்த இராகத்தை ஆலாபனை செய்தால் பண்ணுநிலையாகும்.

மேற்செம்பாலை,செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்டாலை என்னும் ஏழ்பெரும்பாலைகளும், இவற்றின் அந்தரங்களாக வரும் அந்தரச் செவ்வழி, அந்தரவிளரி, அந்தரப்படுமலை, அந்தரக்கோடி, அந்தரச் செம்பாலை என்னும் ஐந்து சிறுபாலைகளும் ஆகிய பன்னிரண்டு மூர்ச்சனைகளும் பழந்தமிழர் கண்டுணர்த்திய பன்னிரு பாலைகளாகும். இவற்றை எல்லாக் கிரமங்களிலும் இசைக்கலாம். கிரகசுரம் மாற்றுதல் என்னும் பாலைத்திரிபினால் பன்னிருபாலைகளிலிருந்து பல்வேறு பண்களைத் தோற்றுவிக்கும் முறையினைப் பழந்தமிழர் கண்டறிந்திருந்தனர். மேற்செம்பாலையினை மேசகல்யாணி யெனவும், செம்பாலையினை அரிகாம்போதி யெனவும்,படுமலைப் பாலையினை நடபைரவி யெனவும், செவ்வழிப்பாலையினைச் சுத்ததோடி யெனவும், அரும்பாலையினைத் தீரசங்கராபரண மெனவும், கோடிப் பாலையினைக் கரகரப்பிரியா வெனவும், விளரிப்பாலையினை அனுமத்தோடி யெனவும் கொள்வர் யாழ்நூலார்.

“இவ்வேழு பெரும்பாலையினையும் முதலடுத்து நூற்று மூன்று பண்ணும் பிறக்கும்” என்பது வேனிற்காதை யுரையிற் கூறப்பட்டது. “பன்னிருபாலையின் உரு தொண்ணூற்றொன்றும் பன்னிரண்டுமாய்ப் பண்கள் நூற்றி மூன்றாதற்குக் காரணமாம் எனக் கொள்க” என்பர் அரும்பதவுரையாசிரியர்.

“பண்ணென்னாம் பாடம் கியைபின்றேற் கண்ணென்னாம்,
கண்ணோட்ட மில்லாத கண்”

என்னுந் திருக்குறளுரையிலே, “பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று” என்றார் பரிமேலழகர். “ஈரிருபண்ணும் எழுமூன்று திறனும்” என்பது பிங்கலந்தை. பாலை, குறிஞ்சி, மருதம்,செவ்வழி என்னும் நாற்பெரும் பண்ணுக்கும் இருபத்தொரு திறங்கள் கூறப்பட்டன. பாலையாழ்த்திறன் 5, குறிஞ்சி யாழ்த்திறன் 8, மருத யாழ்த்திறன் 4. செல்வழி யாழ்த்திறன் 4 ஆக 21. இவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என வகைக்கு நான்காய் எண்பத்து நான்காகுமென்பர்.

வேனிற்காதையினுள்ளே, “அகநிலை மருதமும் புறநிலை மருதமும், அருகியல் மருதமும் பெருகியல் மருதமும், நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி” என்புழிக் குறிக்கப்பட்ட நால்வகைச் சாதியும் அரும்பதவுரையாசிரியரால் ஒருவாறு விளக்கப்பட்டன. வேனிற்காதையுரையிலே, “மாத்திரை குறைந்ததிற் பண்ணைப் பாடும் ஏல்வைக்கண்” என வருந்தொடர், மாத்திரை வேறுபாட்டினாலே அகநிலை, புறநிலை அருகு, பெருகு என்னும் சாதி வேறுபாடுகள் தோன்றுவன என்னும் நுட்பத்தினைக் குறித்து நிற்றல் காணலாம். நாற்பெரும் பண்கள் அகம், புறம், அருகு, பெருகு என வகைப்படுங்கால் எய்தும் பெயர்களை ஊர்காண் காதையுரையிலும், ஆசான் திறத்தின் அகம், புறம், அருகு, பெருகு என்பன பெறும் பெயர்களைப் புறஞ்சேரியிறுத்த காதையிலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார். பிங்கல நிகண்டிற் காணப்படும் பண்களின் வகையும் தொகையும் ஆகியவற்றை வழு நீங்கிய தூயவுருவத்திலே யாழ் நூலாசிரியர் அமைத்துக் காட்டுவதை யாழ்நூலிற் காணலாம். ஏழுசுரங்களால் ஆகிய இராகங்களைப் பண் எனவும், ஆறு சுரங்களாலாகியவற்றைப் பண்ணியல் எனவும், ஐந்து சுரங்களாலாகியவற்றைத் திறம் எனவும், நான்கு சுரங்களாலாகியவற்றைத் திறத்திறம் எனவும் கூறுவர். இவை நான்கினையும் முறையே சம்பூரணம், சாடவம், ஔடவம், சதுர்த்தம் என வடமொழிப் பெயரால் வழங்குதல் பிற்கால வழக்காகும்.

நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்பப் பண்டையோர் இசை வகுத்திருந்தனர். காலையில் மருதப்பண்ணும், நண்பகலில் பாலைப்பண்ணும், மாலையில் செவ்வழிப்பண்ணும், நள்ளீரவில் குறிஞ்சிப்பண்ணும் வாசித்தற்குரியன என்பது இசை நூன்மரபு.

“குழலினிது யாழினிது என்ப” என்பர் திருவள்ளுவர். எனவே குழலும் யாழும் பழந் தமிழர் அமைத்த இசைக் கருவிகளென்பது பெறப்படும். மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியே காற்றுப் புகுந்து இயங்க, அத் துளைகளிலிருந்து உண்டாகிய இன்னோசையினைக் கேட்டுணர்ந்த முன்னோர் தம் உணர்வின் திறத்தால் அமைத்துக் கொண்ட இசைக்கருவி இக் குழலேயாகும். இதனைப் பின்பற்றிப் பெருவங்கியம் முதலாக இக் காலத்து வழங்கும் நாகசுரம் ஈறாக எத்துணையோ துளைக் கருவிகள் தோன்றி இசை வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன.

வில்லின் கண்ணே கட்டப்பட்ட நாணின் நாதத்தைக் கேட்டுணர்ந்த முன்னோர் பலவேறு ஓசையமைய நாண் கட்டப்பட்ட பலவிற்களை ஒன்றாகச் சேர்த்து முதன் முதல் வாசித்த நரம்புக் கருவி வில்யாழாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே சீறியாழ், செம்முறைக் கேள்வி யென்ற பெயருடைய சகோடயாழ், செங்கோட்டியாழ், ஆயிரம் நரம்புடைய பெருங்கலம் என்னும் பேரியாழ் எனப் பலவகை யாழ்க் கருவிகள் நுண்ணுணர்வுடைய பெருமக்களால் அமைக்கப்பெற்றன. பத்தர், போர்வைத் தோல், ஆணி, வறுவாய், மருப்பு, திவவு, நரம்பின் தொடர்ச்சி, உந்தி, கவைக் கடை என்பன யாழின் உறுப்புக்களாகச் சங்கச் செய்யுட்களிற் கூறப்பட்டன. யாழ்க்கருவியானது மருப்பென்னுங் கோடு வளையப் பெற்றதாய்க் காண்பதற்கு அத்துணை யழகிலதாயினும், கேட்பதற்கு மிகவும் இனிய இசை நலங்களைத் தோற்றுவிப்பது என்பர்.

“கணை கொடிது” எனத் தொடங்கும் திருக்குறளுக்கு, “அம்பு வடிவாற் செவ்விதாயினும் செய லாற் கொடிது; யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலாற் செவ்விது” என வரும் பரிமேலழகர் உரையாலும், “யாழிடைப் பிறவா இசையே என்கோ” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு “யாழ் கண்ணுக்கு இன்னாதாகலின் அதனிடைப் பிறவாத இசையே யென்பேனோ” என அடியார்க்கு நல்லார் கூறிய உரையாலும் யாழின் உருவம் வளைவுடையதென்பது நன்கு துணியப்படும். இத்தகைய யாழ்க்கருவி சேக்கிழார் காலத்திற்குப் பின் அடியோடு மறைந்து போயிற்று.

பண்டைத் தமிழர் வாசித்த யாழும் இக் காலத்தில் வழங்கும் வீணையும் ஒன்றே யென்பர் சிலர். ஒவ்வொரு சுரத்திற்கும் தனித் தனி நரம்பு கட்டப் பெற்றது பழைய யாழ்க்கருவியாம். ஒரு நரம்பிலே பல சுரங்களையும் வாசித்தற்கமைந்தது பிற்காலத்து வீணைக் கருவியாகும். வீணை யென்னும் கருவி சங்கத் தொகை நூல்களிற் கூறப்பட்டிலது. ”இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்” என வரும் திருவாசகப் பாடலில் வீணையும் யாழும் இருவேறு இசைக் கருவிகளாகக் கூறப்பட்டுள்ளன. யாழும் வீணையும் இருவேறு இசைக் கருவிகளென்பதனைச் சேக்கிழார் பெருமான் இனிது விளக்கியுள்ளார்.

முற்காலத்தில் யாழிற் கட்டப்பட்டிருந்த நரம்புகள் மாட்டு நரம்புகளே. அந் நரம்புகள் வெயில், மழை முதலிய கால வேற்றுமையால் நெகிழ்ந்தும் இறுகியும் இசை வேறுபடும் தன்மையன. பண்டைத் தமிழர் குழலோசையின் துணை கொண்டே யாழ்நரம்புக்கு இசை கூட்டினரெனத் தெரிகிறது.

யாழின்கண் அமைந்த பத்தர் என்னும் உறுப்பு, குமிழ், முருக்கு, தணக்கு என்னும் மரங்களாற் செய்யப்பட்டது. அதனது வளைந்த கோடு கொன்றை, கருங்காலி மரங்களாற் செய்யப்பட்டது. இன்பமில்லாத இசையாகிய செம்பகையும், மழுங்கி யிசைத்தலாகிய கூடமும், சிதறியொலித்தலாகிய அதிர்வும் இசைக் குற்றங்கள். முறுக்கப்பட்ட நரம்பினுள்ளே மயிர், தூசு, துரும்பு முதலியன இருத்தலும் அது கொடும்புரியாகவோ ஏறிய முறுக்காகவோ இருத்தலும் நரம்பின் குற்றங்களாம்.

குற்றம் நீங்கிய யாழ் நரம்புகளிலே அமைத்து வாசித்தற்குரிய சுரவரிசைகளாகிய பாலைநிலைகள் ஆயப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை என நால்வகைப்படும். ”ஆயப்பாலையாய் நின்ற பதினான்கு கோவை பொலிந்து செப்பமுடைத்தாய்ப் பாடவியல்பு ஒத்தமைந்த சிறப்புடைத்தாதலினால் அதிலே ஏழு பாலையினையும் இணை நரம்பாகத் தொடுத்து நிரம்ப நிறுத்திக் காட்டல் காரணமாக” என வரும் அரும்பதவுரையினை நோக்குங்கால், ஒரு பண்ணிற்குரிய இசை நரம்புகள் மாத்திரை வேறுபாட்டினாலே இரு நிரல்களாக இணைந்து நீன்றிசைப்பது ஆயப்பாலை யென்பது புலப்படும். இவ்வாறே ஒரு பண்ணிற்குரிய நரம்புகள் மாத்திரை வேறுபட்டு மூன்று நிரல்களாக ஒத்திசைப்பின் திரிகோணப்பாலை யெனவும், நான்கு நிரல்களாக ஒத்திசைப்பின் சதுரப்பாலை யெனவும் கூறப்படும். நரம்பு முறைப்படி யமைந்த இசைச் சுரக்கோவையாகிய ஒரு பாலையை முதலில் நிறுத்திக்கொண்டு, தாரத்தாக்கத்தினாலே பதினொரு முறை திரித்துப் பின்னுள்ள பதினொரு பாலைகளையும் பிறப்பித்துப் பன்னிரண்டாவது சுரக்கோவையின் இறுதி நரம்பின் இசை முதலில் நின்ற பாலையில் முதலில் தொடங்கிய இசை நரம்போடு அணைந்து ஒன்றும்படி வந்து வட்டமாய் முடிய வாசிக்கப்படுவதே வட்டப்பாலையாகும். இளங்கோவடிகள் கூறிய தாரத்தாக்கம் என்பது தார இசையினை ஆக்கிக் கொள்ளுதலாகும். இறுதியிலே தோன்றிய கைக்கிளை நரம்பு முதலில் தோன்றிய தாரநரம்பின் இசையோடு இயையாமையால், பிரமாண சுருதியினைத் தாரவிசையோடு சேர்த்து, அத்தாரம் கைக்கிளையோடு ஒன்றும்படி செய்தலே தாரத்தாக்கம் எனப்படும். இவ்வாறு தார இசையினை ஆக்கிக் கொள்ளுதல் வட்டப்பாலையின் இடமுறைத் திரிபாகும். வலமுறையிலே திரிக்க வேண்டுமாயின் பிரமாண சுருதியைக் கைக்கிளையோடு கூட்டி இசையும்படி செய்யவேண்டும்.

”ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி” என்பது. முதல் ”பொலியக் கோத்த புலமையோன்” என்பது ஈறாக யாழாசிரியன் இலக்கணங் கூறிய அரங்கேற்று காதைப் பகுதியிலே இளங்கோவடிகள் பண்டை இசைத்தமிழ் மரபுக்கு அடிப்படையான முடிபுகள் பலவற்றையும் சுருங்கிய சொற்களால் விளக்கியுள்ளார். இப் பகுதிக்கு அமைந்த விரிவுரையாக விளங்குவது விபுலாநந்த அடிகளார் இயற்றிய யாழ்நூலாகும். மேலெடுத்துக் காட்டிய இசைத்தமிழிலக்கணங்களை இந் நூலின் துணை கொண்டு தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

தோற்கருவிகளில் இசை வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுவது மத்தளமாகும். ”மத்து என்பது ஓசைப் பெயர். இசையிடனாகிய கருவிகட்கெல்லாம் தளமாதலால் மத்தளமென்று பெயராயீற்று” என்பர் அடியார்க்கு நல்லார். அவர் கருத்துப்படி மத்து + தளம் என்னும் சொற்களே மத்தளம் என்றாயின என எண்ண வேண்டியுளது. பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, துடி, பெரும்பறை என்பன தோற்கருவிகள் எனவும், இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாள் முழவு, காலை முழவு என எழுவகைப் படுமெனவுங் கூறுவர் அடியார்க்கு நல்லார்.

பண்டை நாளில் வழங்கிய தாளவகையோத்து முதலிய தமிழ் நூல்களில் தாளவிலக்கணம் விரிவாகக் கூறப்பட்டது. தாளமென்பது கொட்டு, அசை, தூக்கு, அளவு என்பவற்றோடு கூடியது. கொட்டு அரை மாத்திரை. அசை ஒரு மாத்திரை. தூக்கு இரண்டு மாத்திரை. அளவு மூன்று மாத்திரை. இம்மாத்திரைகளை முறையே க, எ, உ, ஃ என்ற எழுத்துக்களாற் குறிப்பிடுவர். கொட்டு - அமுக்குதல். அசை - தாக்கி யெழுதல். தூக்கு-தாக்கித் தூக்குதல். அளவு-தாக்கின ஓசை மூன்று மாத்திரை பெறுமளவும் வருதல். ஒரு தாளத்தின் முதல் எடுக்குங்காலம் பாணியென்றும், தாளத்தின் இடையே நிகழுங்காலம் தூக்கு என்றும், அத்தாளம் முடிந்து விடுங்காலம் சீர் என்றும் கூறப்படும். ”சச்சப்புட முதலான பஞ்ச தாளமும், அரைமாத்திரையுடைய ஏசுதாள முதலாகப் பதினாறு மாத்திரையுடைய பார்வதிலோசன மீறாகச் சொன்ன நாற்பத்தொரு தாளமும், ஆறன் மட்டம், எட்டன்மட்டம் என்பனவும், தாளவொரியல், தனிநிலை யொரியல் என்பனவும், ஒன்றன் பாணி முதலாக எண்கூத்துப் பாணி யீறாகக் கிடந்த பதினொருபாணி விகற்பங்களும், முதனடை, வாரம் முதலாயினவும் பண்டை நாளில் வழங்கிய தாளங்கள்” எனச்சிலப்பதிகார வுரையிற் குறுப்பிடப்பெற்றுள்ளன.

சிந்து, திரிபதை, சவலை, சமபாதவிருத்தம், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, வண்ணம் என்னும் ஒன்பது வகையது இசைப்பாட்டு என்பது அறிவனார் இயற்றிய பஞ்சமரபு வெண்பாவினாற் பெறப்படும். எவ்வுயிர்க்கும் இன்பமுண்டாக்க லும், அறிவினைத் தெளிவடையச் செய்தலும், மனத்தை ஒருமை நிலையில் நிறுத்தலும், புகழ்பட வாழச் செய்தலும். உறுதிப் பொருளை வற்புறுத்தலும், முடிந்த பயனைக் கூறுதலும், மெல்லோசையால் மன அமைதியைத் தருதலும், உச்சநிலையாகிய ஓசையால் மக்களது உணர்வைத் தூண்டித் தொழிற்படச் செய்தலும் இசைப் பாடலாற் பெறும் எண்வகைப் பயனெனக் கொள்வர். தமிழ் முன்னோர். க.வெ.

நூல்கள் : சங்கத் தொகை நூல்கள் : சிலப்பதிகாரமும் அதன் உரைகளும்: ஆபிரகாம் பண்டிதர், கருணாமிருத சாகரம்: விபுலாநந்த அடிகள், யாழ்நூல் : பூர்வீக சங்கீத உண்மை.