கலைக்களஞ்சியம்/இடிமழை

இடிமழை (Thunderstorm) : மின்னல் (த.க.) என்ற சக்தி வாய்ந்த மின்சாரப் பொறி மேகங்களுக்கிடையே தோன்றும்போது வெளிப்படும் ஏராளமான வெப்பத்தினால் மின்னற் கொடி பாயும் பாதை மிக அதிகமாகச் சூடேறுகிறது. இதனால் அங்குள்ள காற்று அதிர்ச்சியுடன் வெளியேறி ஒலி அலைகளைத் தோற்றுவிக்கிறது. இடி யோசைக்குக் காரணம் இது தான். ஒரு மின்வெட்டுப் பல மைல் நீளமிருக்கலாம். ஆகையால் அதன் பாதை நெடுக ஆங்காங்குத் தோன்றும் ஒலி ஒரே சமயத்தில் நம்மை அடைவதில்லை. இதனாலும் ஒலியலைகள் மேகங்களில் பிரதிபலித்து வருவதாலும் இடி முழக்கம் நீண்ட நேரம் கேட்கிறது. உலகின் எல்லாப் பகுதிகளிலும் இடி மழை தோன்றக்கூடும். ஆனால் இது வெப்ப நாடுகளிலும், உயரமான மலைகளிலும் அதிகமாக இருக்கும். வெப்பப்பிரதேசங்களில் ஆண்டில் 200 நாட்கள் வரை இடிமழை பெய்யும் இடங்கள் உண்டு. இந்தியாவில் பருவமழைகளின் முன்னரும் பின்னரும் இவ்விளைவு சாதாரணமாகத் தோன்றுகிறது. சாதாரணமாக இடிமழை பிற்பகலில் உண்டாகிறது. இடிமழை உண்டாகும் நாளன்று வெயிலும் புழுக்கமும் அதிகமாக இருக்கும். காற்றில் அசைவே இராது. காற்று மண்டல அழுத்தம் குறையும், பெரிய மஞ்சு மேகங்கள் தோன்றி மிக விரைவாகக் கோபுரங்கள்போல் வளரும். இதன் பின்னர் மின்னலும் இடியும் தோன்றும். பெரிய மழைத்துளிகளும், சில சமயங்களில் ஆலங்கட்டிகளும் விழும். அசைவற்றிருந்த காற்று இப்போது கடுமையாக வீசும். மழை பொழியத் தொடங்கும். சிறிது நேரத்திற்குள் காற்றின் வேகமும் மழையின் வேகமும் தணியும். வானிலுள்ள மேகங்கள் மறையும். வெப்பநிலை உயரும். இதுவே இடிமழையின் முடிவாகும்.

ஓரிடத்தில் காற்றின் ஈரம் அதிகமாக இருப்பதும், ஏதோவொரு வகையில் அதில் செங்குத்தான காற்றோட்டம் நிகழ்வதும் இடி மழைக்கேற்ற சூழ்நிலையாகும். இத்தகைய காற்றோட்டம் பல வகைகளில் நிகழக்கூடும். நிலப்பரப்பு வெயிலில் நன்றாகச் சூடேறி, அடுத்துள்ள காற்றையும் சூடேற்றிக் காற்றோட் டத்தை விளைவிக்கலாம். குளிர்ந்த பகுதியிலிருந்து சூடான நிலத்தின்' மேலோ, நீர்ப்பரப்பின் மேலோ காற்று வீசிச் சூடேறலாம். குளிர்ந்த காற்றோட்டமொன்றும், சூடான காற்றோட்டமொன்றும் சந்தித்து வெப்பமான காற்று மேலெழும்பலாம். இவ் விளைவு சாதாரணமாக மிதவெப்ப மண்டலங்களில் நிகமும். காற்றோட்டம் ஒரு மலைச் சரிவையோ, மேட்டையோ அடைந்து மேலெழலாம். மிதவெப்பமண்டலச் சூறாவளிகளில் இத்தகைய விளைவுகள் நேர்கின்றன. இவ்வகைகளில் மேலெழும் காற்றில் போதிய ஈரமிருந்தால் குறிப்பிட்டதொரு உயரத்தில் அது குளிர்ந்து நீராகிறது.இதனால் வெளியாகும் வெப்பம் அதை இன்னும் சூடேற்றி மேலே கொண்டு செல்கிறது. இவ்வகையில் மேகமானது உயர வளர்ந்து இடி மேகமாகிறது. மேகத்தின் உச்சி வெகு உயரத்தில் இருப்பதால் அங்குள்ள நீராவி பனிக் கட்டியாகக் குளிர்கிறது. இதனால் இடி மேகத்தின் மேற்புறம் மென்மையான தோற்றங்கொண்டு பட்டடைபோல் விரிந்து காணப்படும்.

இடி மேகம் முழு வளர்ச்சி யடைந்த நிலையில் அதிலுள்ள நீர்த் துளிகளின் மின்னேற்றம் (Electric charge) பிரிகிறது. நீர்த் துளிகளோ பனிக் கட்டித் துணுக்குக்களோ சிறிதாகப் பிரிவதால் மின்னேற்றம் தோன்றக் கூடுமெனக் கருதப்படுகிறது. இப்போது மேகத்தின் மேற்புறத்தில் எதிர் மின்னேற்றம் திரள்கிறது. நேர் மின்னேற்றம் அதன் பல பகுதிகளில் இருக்கக் கூடும். இவ்வாறு சேரும் மின்னேற்றங்களின் அளவு குறிப்பிட்டதோர் அளவைவிட அதிகமானால் இந்த மின்னேற்றங் களுக்கிடையிலும், மின்னேற்றங்களுக்கும் தரைக்கும் இடையேயும் மின்பொறி தோன்றி மின்னலாகிறது.

நூல்கள்: A.K. Des anட்d B. N. Srivastava, Introdution to Meteorology : W. J. Hanphrey, Physics of the Air.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இடிமழை&oldid=1463162" இலிருந்து மீள்விக்கப்பட்டது