கலைக்களஞ்சியம்/இடைக்காடனார்

இடைக்காடனார் சங்ககாலப்புலவர். இடைக்காடு என்னும் ஊரினராதலின் இப்பெயர் பெற்றார். தஞ்சாவூர் ஜில்லா, பட்டுக்கோட்டைத் தாலுகாவில் இவ்வூருள்ளது. மலையாளத்தைச் சார்ந்ததென்றும் கூறுவர். இவர் கபிலருடைய தோழர், புலவர்களிடம் அன்புடையவர். சிறந்த கவிஞர். சுருங்கச்சொல்லிவிளங்கவைத்தலில் விருப்புடையவர். உவமையைத் திறம்பெற அமைப்பவர். இவருடைய செய்யுட்களில் முல்லைத் திணையும், மழையும், இடையர் பண்பும் காணப்படுவதால் இவரை இடையரென்பர். இவர் பாடிய செய்யுட்கள் 11 (நற். 142,221,316; புறம்.42; அகம். 139, 194, 274,284,304,374; குறுந்.251). மற்றும் இவர் ஊசிமுறி, அறுபது வருட வெண்பா, மூவடி முப்பதுமுதலான நூல்கள் செய்தாரென்பர். ”ஒழிந்தன இடைக்காடனார் பாடிய ஊசிமுறியுட் கண்டு அலகிட்டு கொள்க” என்று யாப்பருங்கல விருத்தியில் வருகிறது. மூவடி முப்பது பழைய வுரையுடன் வெளியாகியிருக்கிறது. ஊசிமுறி என்னும் நூலில் 54 செய்யுட்கள் பழைய உரையுடன் இருப்பதாகப் பூரணலிங்கம்பிள்ளையவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஊசி-எழுத்தாணி. இவர் ஒரு பாண்டியனிடம் சில செய்யுட்களைப் பாடிக் கொண்டு சென்றார் என்றும், அவன் மதியாமல் இருந்தான் என்றும், இவர் சினந்து சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட்டுவிட்டு, வடபுறத்திலே சென்று ஓரிடத்தில் தங்கியிருந்தார் என்றும், சோமசுந்தரப் பெருமான் சங்கப்புலவருடன் இவர் பின்சென்று இவருடன் தங்கிவிட்டாரென்றும், பாண்டியன் கலக்கமுற்று, இவரை வேண்டி வழிபட்டு வருத்தத்தைத் தீர்த்தானென்றும் திருவிளையாடற் புராணங்கள் கூறும். இவரைப்பற்றிக் கர்ணபரம்பரை கூறுவதை அபிதான சிந்தாமணியிற் கண்டு கொள்க.