கலைக்களஞ்சியம்/இதிகாசம்

இதிகாசம்: இராமாயண மகாபாரதங்களுக்கு இதிகாசம் என்று பெயர். இச்சொல் இதி-ஹ-ஆஸ 'இப்படி முன் இருந்தது' என்ற பொருள் கொண்டது. வேதத்தொகுதியின் பிற்பகுதிகளில் இதிகாசம், புராணத்துடன் சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது. புராணம் என்ற சொல்லும் பழைய செய்தி என்ற பொருளையே குறிக்கும். ஆயினும் முதலில் புராணம் என்பது உலகம் முன்பு எவ்விதம் இருந்தது, எப்படிக் கடவுளால் படைக்கப்பட்டது என்ற முறையைமட்டும் சொல்வதாயும், இதிகாசம் முன்பு மக்கள், தேவர், அரசர் முதலியோருக்கிடையே நடந்த நிகழ்ச்சிகள், கதைகள் முதலியவற்றை உரைப்பதாயும் அமைந்திருந்தன. பின் சொன்ன இதிகாசக் கதைகளைக் கொண்டே வேதத்தில் வரும் பல மந்திரங்களுக்குப் பொருள் சொல்ல வேண்டியிருக்கிறது. இக்காரணம்பற்றி, இது வேதத்தைச் சார்ந்த பிராமணப் பகுதிகளில் இதிகாச வேதம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.

முதலில், இப்பழங்கதைகளை விளக்கும் சுருங்கிய பகுதிகளாக வேத நூல்களுக்கிடையே எவை காணப்படுகின்றனவோ அவற்றிற்கே இதிகாசம் என்ற பெயர் வழங்கிவந்தது; புராணம் என்பதும் அடிப்படிப்பட்ட பகுதிகளையே குறித்தது. ஆனால், பின் இப்படி வழங்கிவந்த கதைகளின் தொகுதி பெருகவே, இவை தனித்ததோர் இலக்கியப் பகுதியாய் அமைக்கப்பெற்றன. பண்டை அரசரின் வரலாறுகளெல்லாம் பாட்டில் அமைக்கப்பட்டுச் சூதர், மாகதர் என்ற மரபினரால் வேள்விகள் நடக்கும்போதும், மற்றச் சமயங்களிலும் அரசர் முன்னிலையிலும் பாடப்பட்டு வந்தன. பெரிய கேடுகளால் துயருற்றிருப்போருக்கு ஆறுதலாகவும் இவற்றைப் படிப்பதுண்டு. இக்கதைகளுக்கு ஆக்கியானங்கள் என்றும் பெயர் உண்டு. சிபி, நளன், சாவித்திரி - சத்தியவான், யயாதி முதலியோரின் ஆக்கியானங்கள் எல்லாம் இவ்வகையைச் சேர்ந்தவை. இவையெல்லாம் பின் பாரதத்தினுள் சேர்க்கப்பட்டுப் பாரதம் என்ற நூல் மகாபாரதமாயிற்று. குரு வமிசத்துக் கதையைச் சொல்லும் இதிகாசம் பாரதம்; சூரிய வமிசத்தில் தோன்றிய இராமனுடைய கதையைச் சொல்லும் இதிகாசம் இராமாயணம், இவையிரண்டும் முன் சொன்னதுபோல் வேள்விகளின் பொதுக்கூட்டத்தில் சூதரால் பாடப்பட்டன. பிற்காலத்தில் இவற்றை மக்களுக்குப் பௌராணிகர் எடுத்துரைத்தனர் ; இப்படிப் பாரத ராமாயணங்களை வக்கணிப்பாருக்கு அரசர் சர்வமானியம் விட்டிருந்தனர் ; பண்டைத் தமிழ்க் கல்வெட்டுக்களில் இதற்குப் 'பாரதப் பங்கு' என்று பெயர். இன்னோர் மரபில் வந்தவரே தற்காலத்துப் பௌராணிகரும், பாகவதரும், கதா காலட்சேபக்காரரும். இவர்கள் வழியாகவும் இவர்கள் விரித்துரைக்கும் இதிகாசங்கள் வழியாகவுமே மக்களுக்கிடையே இந்துக் கொள்கைகளும், கதைகளும், அடிப்படையான நோக்கங்களும் உறுதியாய் நிலைத்திருக்கின்றன. வே. ரா.