கலைக்களஞ்சியம்/இத்தாலிய மொழி

இத்தாலிய மொழி: இத்தாலிய நாட்டில் ஆதியில் இருந்த மொழி லத்தீன். ஆனால் அந்த மொழி இத்தாலியில் பல பாகங்களிலும் பலவாறு பயிலப் பெற்று வந்தது. அதனால் ரோம் சாம்ராச்சியம் வீழ்ச்சியுற்றவுடன் அந்த வேறுபட்ட லத்தீன்மொழிப் பேதங்கள் தனித்தனி மொழிகள்போல் ஆயின. ஆயினும் டஸ்கனி என்னும் பகுதியில் பயின்ற மொழியே லத்தீனை விட்டு அதிகமாக விலகாததாகும். ஆதலால் 14ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் எழுந்த நூல்கள் அனைத்தும் லத்தீன் மொழியிலேயே ஆக்கப் பெற்றிருப்பினும், தாந்தே என்னும் உலகப் பிரசித்திபெற்ற பெரும்புலவர் தம்முடைய காவியத்தை டஸ்கன் மொழியிலேயே எழுதினபடியால், அதுமுதல் அதுவே இத்தாலி நாட்டின் இலக்கிய மொழியாக ஆயிற்று.

15ஆம் நூற்றாண்டில் பழைய கிரேக்க இலக்கியங்களையும் லத்தீன் இலக்கியங்களையும் கண்டுபிடிக்கவும் படிக்கவும் நேர்ந்ததும், மறுபடியும் லத்தீன் மொழியின் ஆதிக்கம் தலைதூக்கத் தொடங்கிற்று. அதனால் புலவர்கள் லத்தினையும் இத்தாலி மொழியையும் கலந்து மணிப்பிரவாளம் போல் எழுதத் தொடங்கினர். ஆனால் இந்தப் பழக்கம் 16 ஆம் நூற்றாண்டில் குறைந்து போய், இறுதியில் தாந்தேயின் மொழியே வெற்றி பெற்றது. 19ஆம் நூற்றாண்டில் இத்தாலிய அரசு ஏற்பட்ட காரணத்தால் அந்த வெற்றி நிலைத்து நிற்பதாயிற்று. இப்பொழுது நாட்டில் பல மொழிப் பேதங்கள் காணப்படினும், கல்வி கற்ற இத்தாலியர் அனைவரும் டஸ்கன் மொழியையே பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

இத்தாலிய மொழி கேட்பதற்கு மிகவும் இசை இனிமையுடையது. இத்தாலிய மக்களுடைய எழுத்து மொழிபோலவே பேச்சு மொழியும் இருக்கும். இம்மொழிச் சொற்களின் ஈற்றெழுத்துப் பெரும்பாலும் உயிரெழுத்தாகவே இருக்கும். மேலும் இம்மொழியின் உயிரெழுத்துத் தொகை ஏனைய மொழிகளின் உயிரெழுத்துத் தொகையினும் மிகுதி. உயிர்ப்பை அடக்கி இசைபாடுவதுபோலவேதான் இந்த மொழியைப் பேச வேண்டும். எந்த மொழியிலும் இத்தாலிய மொழியைப்போல் எளிதாக இசை பாட முடியாது என்பர்.

இலக்கியம்: 13ஆம் நூற்றாண்டில் வட இத்தாலியில் சமய சம்பந்தமான காவியங்களும் தென் இத்தாலியில் சமய சம்பந்தமற்ற பாடல்களும் உண்டாயின. II - ம் பிரெடரிக் சக்கரவர்த்தி கவிஞனாயிருந்ததோடு புலவர்களை ஆதரித்தும் வந்தான். அவனுடைய ஆதரவில் இத்தாலிய மொழி வளர்ந்து வருவதாயிற்று. புலவர்கள் அதை மேன்மையுறச் செய்வதற்காக அநேகமாக எல்லோரும் ஒரேவிதமான மொழியை உபயோகிக்கலானார்கள்.

மேலும் அந்த நூற்றாண்டில் தோன்றிய சமய மறுமலர்ச்சியும் மொழியின் வளர்ச்சிக்கும் இலக்கியச் சிறப்புக்கும் துணை செய்தது. அசிஸி பிரான்சிஸ் முனிவர் (1182-1226) எழுதிய தோத்திரப்பாடல்கள் ஆதி இத்தாலியச் சமயக் கவிதைகளில் தலைசிறந்து விளங்குவதாகக் கூறுவர். அவருக்குப் பின் வந்த ஜாக்கோ போன்டா தோடி என்பவருடைய கீதங்களும் உணர்ச்சி மயமானவை.

டஸ்கனி மாகாணம் 1282-ல் தலைமைப் பதவி வகிக்கத் தொடங்கியது. அதனால் அங்கு மிக உயர்ந்த இலக்கியங்கள் தோன்றின. அவற்றுள் எள்ளித் திருத்தும் கவிதை (Satire) களும், அரசியல் கவிதைகளும், காதலியை அரசியாகக் கொண்டாடும் பாடல்களும் அதுவரை தோன்றாத புதிய இத்தாலிய இலக்கிய இனங்களாகும். அவற்றுடன் சிறந்த ஒட்டுவமைக் (Allegory) கதைகளும் இயற்றப்பட்டன. 13ஆம் நூற்றாண்டில் கவிதைகளும் கதை நூல்களும் ஏராளமாகத் தோன்றியபோதிலும் வசன நூல்கள் வெகு சொற்பமாகவே இருந்தன.

பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்த தாந்தே (1265-1321) என்பவரே இத்தாலியக் கவிஞர்களுள் தலைசிறந்தவர். இவர் உலக மகா கவியுமாவார். இவருக்குப் புகழ் தந்து நிற்பது இவருடைய தேவ கீதம் (Divine Comedy).

13ஆம் நூற்றாண்டின் இறுதியில் உணர்ச்சிப் பாடல் (Lyric) திடீரென்று செழித்தோங்கத் தொடங்கிற்று. அதற்கு முக்கிய காரணர் காவல்கான்டி என்பவர். அவர் கலையின் அவசியத்தை உணர்ந்து, அதற்குத் தக்கவாறு தம்முடைய கவியைப் பயன்படுத்தினார். அவருடைய கவிதைகளைப் படிப்பவர் இத்தாலிய இலக்கியத்தில் புதியதோர் சகாப்தத்தைக் காண்பர். சினோ டா பிஸ்டியோ என்பவர் காதலின் இன்னல்களை வருணித்திருப்பது மிகுந்த சுவையுடையதாகும். அவருடைய பாடல்களில் காதல், துக்கம் இரண்டின் உளவியல் தத்துவம் பரிபூரணமாகக் காணப்படுகின்றது என்று கூறலாம். அவருடைய பாடல்களைவிட உயர்ந்தவை தாந்தேயின் பாடல்களே ; வேறு இல்லை.

அவருக்குப் பின்வந்த பீட்ரார்க் (1304-1374) சுதந்திர உணர்ச்சி உடையவர். அக்காலத்தில் அவருக்கு இணையான கவிஞர்கள் இல்லை. தற்கால மக்களிடம் காணப்பட்ட அதிருப்தி, உற்சாகமின்மை, திருப்தி அடைய முடியாமை என்னும் இம்மூன்றும் அவரிடம் எப்பொழுதும் குடிகொண்டிருந்தன. அவருடைய காதற் பாடல்கள் மிகுந்த சுவையுடையவை.

அவர் காலத்திய மற்றொரு பெரும்புலவர் பொக்காச்சியோ (1313-1375). அவருக்கு உலகப் புகழைத் தேடிக் கொடுத்த நூல், நூறு கதைகள் அடங்கிய டெக்கமெரான் என்பதாகும். அவருடைய கதைகளின் சிறப்புக்குக் காரணம் பாத்திரங்களின் வருணனையும்,ஆசாபாசங்களின் சித்திரமுமாகும்.

தாந்தேயைப்போல் பாசியோ (Fazio) போன்றவர்கள் காவியங்களும், பொக்காச்சியோவைப்போல் கயோவானி போன்றவர்கள் கதைநூல்களும் எழுதினர். 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய செயின்ட் காதரைன் அம்மையார் எழுதியுள்ள கடிதங்கள் பக்திச் சுவை சொட்டுவனவாக உள. கொலம்பினி என்பவருடைய கடிதங்களும் சிறந்தனவே.

14ஆம் நூற்றாண்டில் எழுந்த இலக்கியங்கள் பொதுமக்கள் சுவைக்கக் கூடியனவாக இருந்தன. நகைச்சுவை ததும்பும் நூல்களே அதிகமாக இயற்றப் பெற்றன. பல கவிஞர்கள் அரசியல் சம்பந்தமான காவியங்களும் செய்தனர். இந்தக் காலம் முதலாகத் தான் 'பீட்ரார்க்கியர்கள்' என்பவர் அதாவது பீட்ரார்க்கைப் போல் காதலைச் சிறப்பித்துப் பாடும் கவிஞர்கள் காணப்படுகின்றனர். ஆனால் பீட்ரார்க்குக்குப் பின்வந்த புலவர்கள் தாந்தே, பீட்ரார்க்கு, பொக்காச்சியோ ஆகியவர்களுடைய இத்தாலி லக்கியங்களைப் போற்றிய போதிலும், தங்கள் நூல்களை லத்தீன் மொழியிலேயே இயற்றி வந்தனர்.

15ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி இயக்கம் தோன்றிற்று. அதன் பயனாகப் பரலோகத்தைப் பற்றிய சிந்தனையே மக்கள் மனத்தில் குடிகொள்ளத் தொடங்கியது. புலவர்கள் இடைக்காலத்து மதநூல்களை வெறுத்துப் பழைய கிரேக்க நூல்களையே அதிகமாகப் போற்றத் தலைப்பட்டனர். அதனால் இத்தாலிய இலக்கிய வளர்ச்சிக்கு இடையூறு விளைவதாயிற்று.

ஆயினும் லாரென்சோ டி மெடிச்சீ என்னும் புகழ்பெற்ற சகலகலா பண்டிதர் பண்டைய நூற்புலமையும் இத்தாலிய இலக்கியப் பற்றும் உடையவராக இருந்தார். அவரும் அவருக்குப் பின்வந்த பொலிஷன் என்பவரும் பண்டைய நூல் அழகுகளுடன் மிகச் சிறந்த இத்தாலியக் கவிதைகளை இயற்றினர். இந்தக் காலத்தில் மூன்று இலக்கியக் கழகங்கள் (Academies) முறையே பிளாரன்ஸிலும் நேப்பிள்ஸிலும் ரோமிலும் தோன்றின.

மறுமலர்ச்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் இதிகாசக் காவியங்கள் எதுவும் தோன்றவில்லை. காதல், வீரம் பற்றிய கவிதைகளே ஏராளமாக உண்டாயின. அக்கதைகளும் லூகி புல்சி என்பவராலும், பாய் ராடோ என்பவராலும் புத்துயிர் பெற்றுப் புதிய மெருகுடன் இயற்றப் பெற்றன. இவை எல்லாம் பாமர மக்களிடையே பரவியிருந்த நாட்டுக் கதைகளையும் நாட்டுப்பாடல்களையும் ஆதாரமாகக்கொண்டவை. லாரன்சோவும் அவருடைய நண்பர்களும் பல விழாக்களுக்குப் பாடல்கள் பாடிக் கொடுத்தனர். அவை எல்லாம் கிரேக்க இலக்கியக் கொள்கைகளை உடையன வாகஇருந்தபடியால் சாவனரோலா என்பவர் கிறிஸ்தவ மதத்துக்கும் ஒழுக்கத்துக்கும் ஒவ்வாதவை என்று கூறி அவற்றை எதிர்த்தார். கிரேக்க இலக்கியங்களைக் கற்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தலாரென்சோவைத் தாக்கினார். ஆனால் அவருடைய நூல்கள் சிறப்புறவில்லை.

15ஆம் நூற்றாண்டில் எழுதிய வரலாற்றாசிரியர்கள் நடையழகைப் போற்றிய அளவு உண்மையைப் போற்றவில்லை. இந்த விதிக்கு விலக்காயிருந்தவர்கள் லியனார்டோ புரூனியும், லாரென்சோ வாலாவும் ஆவர்.

லியனார்டோ வீன்சீ ஓவியத்தைப் பற்றியும், ஆல்பெர்ட்டி சிற்பத்தைப் பற்றியும் சிறந்த நூல்கள் செய்தனர். பல துறைகளில் திறமையும் பலவிதமாக ஆராய்தலும் மறுமலர்ச்சிக் காலத்தில் காணப்படும் சிறப்பியல்புகள். அவை இரண்டும் இவ்வாசிரியர்களுடைய நூல்களில் மிகுதியாகக் காணப்படும்.

சரித்திர விஞ்ஞானத்தைத் தொடங்கி வைத்தவர்கள் மாக்கியவெல்லி என்பவரும், கைக்கார்டிசி என்பவரும் ஆவர். அரசியல் விஷயங்களில் விஞ்ஞானச் சோதனை முறையை முதன்முதலாகக் கையாண்டவர் மாக்கியவெல்லியே. கைகார்டிசி மனிதப் பண்புகளை நன்றாக அறிந்தவர். ஐரோப்பிய நாட்டு மக்களுடைய அறிவுத் திறன், பழக்கவழக்கங்கள். இயல்புகள் ஆகியவற்றை உள்ளது உள்ளவாறு எழுதியுளர்.

ஆரீயாஸ்டா (1474-1533) என்பவருடைய ஆர்லாந்தோ பூரியோசோ என்னும் காவியம் மிகவும் புகழ் வாய்ந்தது. அதைத் திருத்தித் திருத்தி அழகு செய்ய ஆண்டுகள் பல கழித்தார். பெட்ரார்க்குக்குப் பின் கவிஞர்கள் உணர்ச்சிப் பாடல்கள் இயற்றுவதில் பெட்ரார்க்கையே பின்பற்றினர். அவர்களுள் பல பெண்மணிகளும் காணப்படுகின்றனர்.

இக்காலத்தில் எழுந்த துன்ப நாடகங்களுள் டாசோ இயற்றிய டாரிஸ்மண்டோ என்பதும், இன்ப நாடகங்களுள் மாக்கியவெல்லி இயற்றிய மந்தரகோரா (Mondaragora) என்பதும் சிறந்தவை.

நகைச்சுவைக் கவிதை இயற்றுவதில் 15ஆம் நூற்றாண்டில் சிறந்தவர் காமல்லி. 16ஆம் நூற்றாண்டில் சிறந்தவர் பெர்னி, அத்தகைய கவிதைகள் 'பெர்னி கவிதைகள்' என்ற பெயரும் பெறுவனவாயின.

16ஆம் நூற்றாண்டில் இத்தாலிய இலக்கியத்தையும் கலையையும் பெரிதும் கவர்ந்த இரண்டு நிகழ்ச்சிகள் டிரென்ட் சபை (Council of Trent) கூடியதும், அரிஸ்டாட்டிலின் கவிதை இலக்கணம் (Poetics) என்னும் நூலைக் கண்டுபிடித்ததுமாகும். டிரென்ட் சபை அரசியல் விஷயத்திலும் சமய விஷயத்திலும் இன்ன விதமான நூல்கள்தாம் எழுதலாம் என்று விதித்தது. அரிஸ்டாட்டிலின் நூலைப் படித்ததன் காரணமாக அவரது முறையைப் பின்பற்றி எழுதும் நூல்களே இலக்கியமாகும் என்று அறிஞர்கள் கட்டுப்பாடு செய்தார்கள். 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய கவிஞர்களுள் தலைசிறந்தவர் டாசோ (1544-1595). காட்பிரே என்பவர் 11ஆம் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் கல்லறையை மீட்ட விஷயத்தை வைத்து, அவர் மிகவும் சிறந்ததோர் இதிகாச காவியத்தை இயற்றினார். அதன் பெயர் எருசலேமின் மீட்சி (Geruselemne Liberara) என்பதாகும்.

பதினாறாம் நூற்றாண்டின் நடுவில் இத்தாலி நாடு ஸ்பானியருக்கு அடிமையாயிற்று. அதன் காரணமாகச் சுதந்திரமாகச் சிந்தனை செய்யவும் எழுதவும் முடியவில்லை. சுதந்திரமாகச் சிந்தனை செய்ததற்காகக் காம்பெனெல்லா என்பவரைச் சித்திரவதை செய்தார்கள். புரூனாவைத் தீயிலிட்டுக் கொளுத்தினார்கள். இக்காரணங்களால் இக்காலத்தில் வெறும் உயர்வு நவிற்சியே இத்தாலிய இலக்கியத்தின் உயிராக இருந்து வந்தது.

இம்மாதிரி அணிகளிலும், அலங்காரங்களிலும் ஆழ்ந்து போனவர்களுள் முக்கியமானவர் மாரினி. 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய கவிஞர்கள் எல்லோரும் இவருடைய அடிச் சுவட்டையே பின்பற்றியவர்கள். அவர்களுடைய கவிதைகளில் பொருட்சுவை சிறிதும் கிடையாது. உண்மைக்கு மாறான உவமைகளும் உயர்வு நவிற்சியுமே மல்கியுள. இக்காரணங்களால் அக்காலத்தில் இத்தாலிய இலக்கியத்திற்கு ஐரோப்பிய நாடுகளில் மதிப்புக் குன்றுவதாயிற்று. இத்தாலிய மக்களும் வெறுக்கலாயினர்.

இதனால் புலவர்கள் எளிய நடையை மேற்கொண்டு இத்தாலிய இலக்கியத்தை மேன்மையுறும்படி செய்ய எண்ணினர். அவர்கள் சானெட் போன்ற பாடல்களும் எதுகையற்ற செய்யுள்களும் இயற்றினர். அவர்களுடைய நடையும் செயற்கையானதாகவே இருந்தது.

ஆயினும் காம்பனெல்லோ, புரூனா போன்ற சிலர் விஞ்ஞானம் பற்றிச் சிறந்த வசன நூல்கள் எழுதினர். கலீலியோ என்பவர் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியும், இத்தாலிய வசன நடையை இயற்கையான முறையில் அணி எதுவுமின்றி அழகாக எழுதுவதில் சிறந்தவருமாவர்.

சால்வாட்டர் ரோசா என்பவர் பெரிய ஓவியர், பாடகர், கவிஞர். நாட்டின் இழிநிலையையே கவிதையின் பொருளாக வைத்துப் பாடுமாறு இத்தாலியக் கவிஞர்களை அழைத்தார். டாசோஸி என்னும் சிறந்த புலவர் ஸ்பானியரைத் தாக்கி எழுதினர்.

18ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய ஆட்சி மறைந்தது. அனைத்தையும் விஞ்ஞான முறையில் ஆராயும் வழக்கம் உண்டாயிற்று. வரலாற்று உணர்ச்சி பெருகிற்று. இலக்கியத் திறனாய்வு எழுந்தது. சமுதாய ஆராய்ச்சி நிகழ்ந்தது.

இத்தாலியப் பிரபுக்கள் இழிவான முறையில் தம் வாழ்நாளைக் கழித்து வந்தபடியால் அதைக் கண்டித்துத் திருத்தும்பொருட்டுப் பல கவிதைகள் தோன்றின. அத்தகைய எள்ளித் திருத்தும் கவிதைகள் எழுதியவர்களுள் முக்கியமானவர்கள் பாரினி (Parini), கோஜி (Gozzi), பாரெட்டி (Baretti) ஆவர்.

மெட்டஸ்டாசியா (Metastasia)வும் கால்டானீ (Goldoni)யும் சிறந்த நாடகங்கள் இயற்றினர். கால்டானீ பிரபல பிரெஞ்சு நாடகாசிரியர் மோலியரைப் பின்பற்றிப் பாத்திரங்களின் குணவிசேஷங்களைப் பற்றிய இன்ப நாடகங்கள் பல இயற்றியுளர்.

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுதந்திரத்தாகம், சமத்துவ விருப்பம், அடிமையில் வெறுப்பு ஆகியவை தோன்றி, அரசியலிலும் மதத்திலும் கொடுங் கோன்மையை ஒழிக்கும் நோக்கத்துடன் கூடிய இலக்கியம் உண்டாகும்படி செய்தன. அரசியல் விமோசனம் உண்டாக வேண்டுமானால் பண்டைய கிரேக்க லத்தீன் இலக்கியங்களைப் பின்பற்றும் இலக்கிய எழுச்சியும் அவசியம் என்று அறிஞர்கள் எண்ணினர்.ஆகவே தேசபக்தியும் பண்டைய இலக்கிய பக்தியும் இத்தாலிய இலக்கியத்தின் உயிர்நாடிகள் ஆயின.

ஆல்பியெரீ (Alfieri,1749-1803), கொடுங்கோலனை ஆயுதம் கொண்டு எதிர்க்க வேண்டும் என்னும் கிரேக்கக் கொள்கையில் ஊறியவர். அவருடைய துன்ப நாடகங்கள் அனைத்தும் கொடுங்கோலனைக் கொன்று சுதந்திரம் தேடும் விஷயத்தை வைத்தே எழுதப் பெற்றுள. அதனுடன் அவர் அலங்கார நடையையும் தாக்கினர். விறுவிறுப்பான எளிய நடையையே ஆதரித்தனர். அவருக்குப் பின்வந்த புலவர்கள் அவருடைய கருத்துப்படியே நூல்கள் செய்யலாயினர். அத்தகையவர்களுள் சிறந்தவர்கள் பாஸ்கோலோ (Foscolo)வும் மாண்டியும் ஆவர். இத்தாலியர்கள் எப்பொழுதும் தங்கள் பழம் பெருமையைப் பாராட்டிக் கொள்வதில் அவாவுடையவர்கள். அதனை யொட்டியே பாஸ்கோலோ தமது சிறந்த காவியத்தைச் செய்துளார். அவருடைய வசன நூல்களுள் சிறப்புடையது ஆங்கில ஆசிரியர் ஸ்டொன் எழுதிய நாவலின் மொழிபெயர்ப்பாகும். மாண்டிக்குக் கிரேக்க மொழியில் பாண்டித்தியம் கிடையாதாயினும், இலியாது காவியத்துக்கு அவர் செய்த மொழிபெயர்ப்பு ஹோமருடைய உணர்ச்சி ததும்புவதாக இருக்கின்றது.

இவ்விருவருக்கும் பின்வந்த நிக்கொலீனி நாட்டுப்பற்றைச் சலியாது காக்கும்பொருட்டு அரசியற்பொருள்களை வைத்தே தம் துன்ப நாடகங்களை இயற்றினார். கார்லோட்ரோயா என்னும் வரலாற்றுப் புலவர் முந்தையோர் புகழ்ச்செயல்களை எழுதி மக்களுக்கு ஊக்கம் ஊட்டினார்.

அரசியல் கிளர்ச்சி நடந்த அந்தக் காலத்திலேயே மொழிபற்றிய வாதங்கள் கிளம்பின. சில புலவர்கள் தாந்தே முதலிய பண்டைய ஆசிரியர்கள் கையாண்ட இத்தாலிய மொழியே வேண்டுமென்றனர். அவர்கள் 'தூய மொழியினர்' என்று அழைக்கப்பட்டனர். மற்றவர்கள் பிரெஞ்சுச் சொற்களைக் கலந்து கொள்வதில் பிழையில்லை என்று விவாதித்தனர். தாந்தே மொழியே இத்தாலிய மொழி என்று மான்ஜானி (Manzoni) கூறியதே இறுதியில் வெற்றிபெற்றது. அக்காலத்தில் அரசியல், இலக்கிய வாதங்கள் போலவே இம்மொழி வாதமும் மிகக் கடுமையாக நடந்து வந்தது. அநேகமாக எல்லாப் புலவர்களும் அதில் கலந்துகொண்டனர்.

மான்ஜானீ எழுதிய பிரோமெசி ஸ்போசி (Promessi Sposi) என்னும் வரலாற்று நாவல் அமரத்துவம் வாய்ந்தது. அதில் மனிதனுடைய பண்புகளை எல்லாம் அழகிய ஓவியமாகக் தீட்டியுளார்.

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த கவிஞர் களுள் சிறந்தவர் லியாபார்டி. அவரே இத்தாலிய இலக்கியத்தில் இயற்கையைப் பற்றியும் துக்கத்தைப் பற்றியும் எழுதியுள்ள கவிஞர்களுள் தலைசிறந்தவர். அவரே தாந்தேக்குப் பின்வந்த கவிஞர்களுள் பெரியவர் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அதனுடன் உரை நடைக்குரிய பண்புகள் அனைத்தும் வாய்க்கப்பெற்ற நடை எழுதுவதில் திறமை யுடையவர்களுள் இவரும் ஒருவர்.

வீசோ (Vieusseau) வரலாற்று மாசிகை மூலம் நாட்டுப் பற்றை வளர்த்தார். ரஷ்ய அரசாங்கம் அதை வெளியிடவொட்டாமல் செய்தது. அக்காலத்தில் பிளாரன்ஸ் நகரமே, இத்தாலியின் இதர பகுதிகளிலிருந்து துரத்தப்பட்ட நாட்டுப் பற்றுடையவர்களுடைய புகலிடமாக இருந்தது. அவர்கள் எல்லோரும் வீசோவின் வீட்டில் கூடுவார்கள். அவர்கள் அரசிபலைவிட இலக்கியத்தைப் பற்றியே அதிகமாக சர்ச்சை செய்த போதிலும் அவர்களுடைய மனம் முழுவதையும் கொள்ளை கொண்டு நின்றது இத்தாலி நாட்டைப்பற்றிய எண்ணம் ஒன்றே.

குராஜி (Guerrazi, 1804-1873) குடியரசுக் கட்சியினர்; மாட்ஸீனியின் சீடர். இவர் கொடுங்கோன்மையை எதிர்ப்பதற்காகவே தம்முடைய எழுத்து வன்மை முழுவதையும் பயன்படுத்தினார். மாட்ளீனி இலக்கியம். கலை, இசை ஆகியவற்றைப்பற்றி எழுதினார். கயோபெர்ட்டி என்னும் பாதிரியார் சுதந்திர தாகத்தின் காரணமாகத் தம் பாதிரித் தொழிலைத் துறந்து சுதந்திர நூல்கள் எழுதினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த புலவர்களில் சிறந்தவர் கார்டூச்சீ (Carducci, 1835-1907) என்பவரும் அரசியல் நோக்கமுடைய இலக்கியக் கர்த்தாவாகவே விளங்கினார். அவர் சிறந்த உரைநடை நூல்களும் இலக்கியச் சுவை ஆராய்ச்சி நூல்களும் இயற்றியுளர், டான்னூன்சையோ (1F63- 1938) அவருக்குப் பின்வந்த கவிஞர்களுள் தலைசிறந்தவர்.

அன்டோனியோ போகஜாரோ (Antonio Fogazzero, 1842-1911) என்பவரையே எல்லோரும் இத்தாலிய நாவலாசிரியர்களுள் மிகச் சிறந்தவர் என்று பாராட்டுகிறார்கள். கிரேஜியா டெலெடா (Grazia Delada) என்னும் அம்மையாருடைய நாவல் 1926ஆம் ஆண்டில் நோபெல் பரிசு பெற்றது. பிராண்டலோ (1867-1986) என்னும் நாவலாசிரியர் அதை 1934-ல் பெற்றார்.