கலைக்களஞ்சியம்/இத்தியோப்பிய மொழி

இத்தியோப்பிய மொழி : ஆப்பிரிக்காவின் கீழ்க் கரையிலுள்ள இத்தியோப்பிய நாடு தொடக்கத்தில் எகிப்தியரால் தூபியா என்றும், பின்னர்க்கிறீஸ்தவ வேதநூலின் பழைய ஏற்பாட்டில் குஷ் என்றும் அழைக்கப்பட்டது. ஆதிக்கிறீஸ்தவர்கள் இத்தியோப்பியா என்றனர். அராபியர் ஹபாஷ் என்று வழங்கினர். இச் சொல்லினின்று பிறந்ததே அபிசீனியா என்ற பெயர். இப்போது இந்நாட்டின் அரசாங்கப் பெயர் இத்தியோப்பியா என்பதாம்.

இந்நாட்டில் தொடக்கத்திலிருந்தவர் நீக்ரோக்கள். பின்னர் வரலாற்று முன்காலத்தில் ஹாமிட்டிக் வகுப்பினர் வந்து சேர்ந்தனர். கிறிஸ்துவுக்குப்பின் பல காலங்களில் செமிட்டிக் வகுப்பினர் தென் அரேபியாவிலிருந்து வந்து, தம்முடைய பண்பாட்டையே நாட்டின் பிரதானப் பண்பாடாகச் செய்தனர்.

இவர்கள் கொண்டு வந்த கீஸ் (Geez) மொழி இத்தியோப்பிய மொழியாயிற்று. ஆயினும் செமிட்டிக் நூல்கள் வலமிருந்து இடமாக எழுதுவதுபோல் எழுதாமல் இத்தியோப்பிய மொழியில் இடமிருந்து வலமாகவே எழுதினார்கள். கீஸ் மொழியானது டைகிரே, டைகிரினா, அம்ஹாரிக் என மூன்று உருவங்கள் பெற்றது. அவற்றுள் அம்ஹாரிக் மட்டுமே இப்போது வழங்கிவருகிறது. பண்டைய கீஸ் மொழி மத விஷயங்கட்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது.

இலக்கியம்: இத்தியோப்பிய நாட்டின் வரலாறு சாலமோன் கால முதல் உள்ளதாயினும் இதன் இலக்கியம் கிறிஸ்தவச் சகாப்தத்தின் தொடக்கத்திலிருந்து துவங்குகின்றது. ஆயினும் நாலாம் நூற்றாண்டில் நாட்டுமக்கள் கிறிஸ்தவர்கள் ஆனபிறகு உண்டான இலக்கியமே காணக்கிடைக்கின்றது. அதுவும் கிரேக்க இலக்கியத்தைத் தழுவி உண்டானதாகும்.

கிறிஸ்தவக் குருமாரே இலக்கியக் கர்த்தராக இருந்தனர். அவர்கள் முதன்முதல் செய்த பெரிய இலக்கிய வேலை கிறிஸ்தவ வேதநூலை மொழி பெயர்த்ததாகும்.

14ஆம் நூற்றாண்டுக்குப் பின் முஸ்லிம்கள் நாட்டைத்தாக்கினர். அம்தா சையான் (1312-42) என்னும் அரசன் முகம்மதியரை நாட்டினுள் வரவொட்டாமல் தடுத்தபோதிலும், அராபியரும் இத்தியோப்பியரும் இலக்கியத் தொடர்பு கொள்ள வழிசெய்தான். அதனுடன் இலக்கிய வளர்ச்சிக்கு இன்றியமையாத அமைதியையும் நாட்டில் உண்டாக்கினான். ஜாராயாகூப் (1434-68) அரசன் ஒரு சிறந்த எழுத்தாளனாக இருந்ததோடு புலவர்களை ஆதரித்தும் வந்தான். இக்காலத்தில் மொழிபெயர்க்கப் பெற்ற நூல்களுள் பெரும்பாலானவை அரபு நூல்களாம்.

இக் காலத்தைத் தோத்திரப் பாடற் காலம் எனலாம். இக் காலத்திற் பல பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டும் சுயமாக இயற்றப்பட்டும் வந்தன. மற்றும், கிறிஸ்தவச் சான்றோர் வரலாறுகளும் எழுதப்பட்டன. அவற்றுள் தெக்ளாவின் வாழ்க்கை வரலாறும், நக்கீட்டோலா ஆப்பின் வாழ்க்கை வரலாறும் சிறந்தவை.

இத்தியோப்பிய இலக்கியத்தில் மிகச் சிறந்த நூல்களுள் ஒன்று கெப்ரா நகாஸ்து (அரசன் புகழ்) என்பதாகும். ஜாரா யாக்கூபு மன்னன் இயற்றிய மஷாபா பெர்ஹான் (ஒளி தரும் நூல்) என்பது அக் காலத்து மூட வழக்கங்களையும் ஒழுக்கத் தவறுகளையும் அழகாகச் சித்திரித்துக் கண்டிப்பதாகும்.

இத்தியோப்பிய இலக்கியத்தின் சிகரமாக உள்ளது 17ஆம் நூற்றாண்டிலிருந்த ஜாரா யாக்கூபு இயற்றிய விசாரணை என்னும் நூலாகும். அதன் நடையே இத்தியோப்பிய மொழி நடையில் மிகச்சிறந்தது என்பர்.

13ஆம் நூற்றாண்டில் அரபு நூலை மொழிபெயர்த்து இயற்றிய பெதாநகாஸ்து (அரசர் சட்டங்கள்) என்னும் நூலே இப்போதும் இத்தியோப்பியாவின் மதச்சட்ட நூலாகவும் அரசாங்கச் சட்ட நூலாகவும் இருந்து வருகிறது.

இன்னும் இத்தியோப்பிய மொழியில் போற்றக்கூடிய சிறந்த எழுத்தாளன் ஒருவனுந் தோன்றவில்லை. ஆதிகால முதல் இத்தியோப்பிய மொழியில் பழமொழிகளும் பிதிர்களும் பாடல்களும் ஏராளமாக எழுதப்படாமலே இருந்து வந்துள்ளன." எழுந்து மறையும்; எப்போதும் மறவாது, அது யாது? ஞாயிறு" என்னும் பிதிர் மிக்க புகழ் பெற்றது.

இத்தியோப்பியாவில் இருபதாம் நூற்றாண்டில்தான் அச்சுப்பொறி ஏற்பட்டது. ஆதலால் ஏராளமான நூல்கள் இன்னும் அச்சாகாமல் இருந்து வருகின்றன.