கலைக்களஞ்சியம்/இந்தியத் தத்துவ சாஸ்திரக் காங்கிரசு

இந்தியத் தத்துவ சாஸ்திரக் காங்கிரசு: (Indian Philosophical Congress) தத்துவ நூல் துறையில் ஈடுபட்டிருக்கும் இந்திய அறிஞர்கள் ஒன்று கூடித் தமது ஆராய்ச்சிகளையும் கருத்துக்களையும் பிறருக்குப் பயன்படுமாறு செய்யும் பொது ஸ்தாபனம் ஒன்று தேவை என்ற எண்ணத்துடன் இது 1925ஆம் ஆண்டில் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பெருமுயற்சியால் நிறுவப்பட்டது. இக் காங்கிரசின் முதலாவது மாநாடு கல்கத்தாவில் கவியரசர் தாகூரின் தலைமையில் நடைபெற்றது. ஆண்டுதோறும் இது ஒரு பல்கலைக்கழகத்தின் ஆதரவில் மாநாடு கூட்டுகிறது. மாநாட்டின் விவாதங்கள் ஐந்து பிரிவுகளில் நடைபெறுகின்றன. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தொடக்கத்திலிருந்து 13 ஆண்டுகள் இதன் நிருவாகக் குழுவின் தலைவராக இருந்தார். இதன் நிருவாகக் குழுவில் இந்தியப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் அங்கம் வகிக்கின்றன.