கலைக்களஞ்சியம்/இந்தியத் தத்துவ சாஸ்திரம்
இந்தியத் தத்துவ சாஸ்திரம்: வரலாறு I. வேதகாலம்: இந்தியத் தத்துவ சாஸ்திரத்திற்கும் இந்திய சமயத்திற்கும் தொடக்கம் எது என்று அறிவதற்கு வேதத்தை ஆராயவேண்டும். சுமார் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் காணப்பெற்ற பெருவாரியான இலக்கியங்களிலிருந்து தேர்ந்து தொகுக்கப் பெற்றதே வேதம் என்பது. அது மந்திரங்கள், பிராமணங்கள் என இரு பிரிவுடையது. அவை ஒவ்வொன்றும் கருத்து வளர்ச்சியின் வெவ்வேறு படிகளைக் காட்டக் கூடியவை. ஆயினும் ஆதிமந்திரங்களை ஒரு பகுதியாகவும், ஏனைய மந்திரங்களையும் பிராமணங்களையும் ஒரு பகுதியாகவும் வைத்து ஆராயலாம்.
(1) ஆதி மந்திரங்கள் எளிதில் பொருள் விளங்குவனவாயில்லையாயினும், அவை இயற்கை வழிபாட்டையே குறிப்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். அதாவது மக்கள் இயற்கைச் சக்திகளைத் தெய்வங்களாக்கி, அவைகளிடமிருந்து நலம் பெறுவதற்காக அவைகளை வழிபட்டு வந்தார்கள். இத்தெய்வங்கள் பலவாயிருந்தபடியால் அவர்களுடைய வழிபாட்டைப் பலதெய்வ வணக்கம் என்று கூறலாம். ஆயினும், 'ஒளிரும்' என்னும் பொருள் படும் 'தேவன்' என்னும் மொழியையே எல்லாத் தெய்வங்களுக்கும் உபயோகித்திருப்பதால் அக்காலத்தில் தெய்வம் ஒன்றே என்னும் கருத்தும் நிலவி வந்ததென எண்ண இடமுண்டு.
(2) இந்தக் கருத்துப் பின்னால் வந்த மந்திரங்களிலும் பிராமணங்களிலும் முழு வளர்ச்சி அடைந்திருப்பதைக் காணலாம். ஆயினும் அவைகள் வகுத்த பரம்பொருள் மற்றத் தெய்வங்கள் போன்ற ஒரு தெய்வமன்று, தெய்வங்கள் அனைத்துக்கும் பொதுவான ஓர் இயல்பைக் குறிக்கும் தத்துவமாகும். முதலில் சில தெய்வங்களைக் குறிப்பதற்காக உபயோகித்து வந்த 'எல்லாவற்றையும் படைப்போன்' என்று பொருள்படும் விசுவகருமன் என்னும் பெயரைப் பிறகு பரம்பொருளைக் குறிப்பதற்கு உபயோகித்தனர். பரம்பொருளாகிய இலட்சிய தெய்வத்தின் பண்பைப் பலவாறு சிந்தித்து வந்தபடியால் அக்காலத்தில் இந்த ஒரு தெய்வக் கருத்துப் பலவிதமான மாறுதல்கள் அடைந்து வந்தது. இவைகளுள் மிக முக்கியமானது பிரஜாபதி என்பதாகும். இது உயிர்களின் தலைவன் என்று பொருள்படும். இம்மொழியை முதலில் இந்தத் தெய்வம் அந்தத் தெய்வம் என்று பல தெய்வங்கட்கு இட்டுவந்து, இறுதியில் பரம்பொருளுக்கே இட்டார்கள்.
(3) இவ்வாறு தெய்வங்களின் மூலத்தைக் காண மேற்கொண்ட முயற்சி நாளடைவில் எல்லாப் படைப்பின் மூலத்தையும் காண்பதில் முடிவடைந்தது. அதனால் ஒன்றே தெய்வம் என்னும் கொள்கையுடன் பொருளும் ஒன்றே என்னும் கொள்கையும் உண்டாயிற்று. இந்த ஒரு பொருட் கொள்கை இரண்டு விதமாக வளர்ச்சி அடைந்தது. பிரபஞ்சத்தின் மூலப் பொருளைக் காண முயன்று, 'பிரமம்' என்னும் கருத்தை வகுத்தார்கள். மனிதனுடைய இன்றியமையாத பண்பை ஆராய்ந்து, 'ஆன்மா' என்னும் கருத்தை வகுத்தனர். அதாவது பிரமம் பிரபஞ்சத்தின் தத்துவம்; ஆன்மா சீவனின் தத்துவம். இந்தக்கருத்து உபநிடதங்களிலே காணப்படுகிறது. உபநிடதங்கள் உண்மையில் சிந்தனை வளர்ச்சியின் வேறொரு தனித்த படியைச் சார்ந்தவையாயினும் சாதாரணமாகப் பிராமணங்களுடன் சேர்த்து எண்ணப்படுகின்றன. ஆனால் இந்தக் கருத்து உபநிடதங்கட்கே உரியதன்று. அவைகட்குப் பின்னால் எழுந்த வைதிக நூல்களுக்கும் உரியதேயாகும். பிரமதத்துவமும் ஆன்ம தத்துவமும் சேர்ந்தமைக்கியத் பிரம்மாத் தத்துவமே உபநிடதங்களின் முக்கிய போதனையாகும். பிரபஞ்சமும் மனிதனும் ஒரே பரம் பொருளின் தோற்றங்களே என்னும் இவ்வுண்மை, 'தத்துவம் அசி' அது நீயாக இருக்கிறாய் என்பது போன்ற மகாவாக்கியங்களில் பொதிந்து கிடக்கின்றது. இதுவே வேதங்களின் உபதேச மணிமுடி என்று கருதப்படுகிறது.
II. வேதங்கட்குப் பிற்பட்ட ஆதிகாலம்: வேதகாலத்தை அடுத்த நூற்றாண்டுகளில் ஒரு பொருட்கொள்கை என்னும் உபநிடதக் கருத்துடன் வேறு சில முக்கியமான கருத்துக்களும் தோன்றின.
(1) அவைகளில் ஒன்று ஒருதெய்வக் கருத்து. ஆனால் வேதகாலத்தில் அந்த ஒருதெய்வம் பண்பு மாத்திரமாகவே நின்றது. இப்பொழுது அதுவே உலகத்தை ஆக்கி அளிக்கும் மூர்த்தியாகக் கருதப்பெற்றது. வேத காலத்தில் அறக் கடவுளாகக் கருதப்பெற்ற வருணனுடைய வழிபாடு வேதகால இறுதியில் மறைந்துவிட்டது. ஆயினும் அந்தக் கருத்து மட்டும் மறையாதிருந்து, பிற்காலத்து ஒருதெய்வக் கொள்கையில் உருவாயிற்று. வேதங்களில் பர தெய்வங்களாகக் கூறப்படாத சிவனும் விஷ்ணுவும் பிற்காலத்தில் ஆகமங்கள் வாயிலாக முதன்மை பெற்றுச் சைவ வைணவ மதங்களை உண்டாக்கின. இவ்வாறு வேதத்தையும் ஆகமத்தையும் ஆதாரமாகக் கொண்ட இந்த மதங்களைப் பிற்காலத்தவர் உபநிடதக்கருத்துடன் இணைத்து வைத்தனர். உதாரணமாக நாராயணனே பிரமம் என்று கூறி இராமானுசர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை உருவாக்கினார்.
(2) வேறு இரண்டு முக்கியமான கருத்துக்கள், தேவதைகளின் செயல்களைச் சார்ந்து நிற்காத ஸ்வபாவவாதம் என்னும் இயற்கைக் கொள்கையும், ஜைன மதம் போன்றவற்றைத் தோற்றுவித்த துவைதம் அல்லது அனேகம் என்னும் கருத்துமாகும். இவை வேதங்கட்கு முரண்பட்டவை. ஆயினும் இவற்றைப் பற்றிய குறிப்புக்கள் வேதங்களிலும் உபநிடதங்களிலும் அடிக்கடி இல்லாவிடினும், சிற்சில விடங்களில் தெளிவாகக் காணப்படுவதால், இவையும் ஏதோ ஓர் உருவில் அப்போதே இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்தக் காலத்தில் எழுந்த மதங்களுள் முக்கியமானது பௌத்த மதம். அது தொடக்கத்தில் வேத போதனைக்கு முழுவதும் முரண்பட்டதாக இருக்கவில்லை. அது இப்பொழுது ஆசியாவின் பல பாகங்களிலும் பரவியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் அதைப் பின்பற்றுகின்றனர்.
III. தர்சனங்களின் காலம்: இவ்வாறு பல கருத்துக்கள் முரண்பட்டனவாக இருந்தபடியால் கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டுகட்கு முன் அறிஞர்கள் அவற்றை ஆராயலானார்கள். அதன் பயனாகவே ஆறு தர்சனங்களும் உண்டாயின. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தத்துவ நோக்கமுடையதா யிருக்கிறது. நியாயம், வைசேஷிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை, வேதாந்தம் என்னும் ஆறு தர்சனங்களும் வேதங்களைப் பிரமாணமாகக் கருதுவதால் வைதிக மதங்களேயாகும். இவற்றுடன் வேதங்களைப் பிரமாணமாகக் கொள்ளாத சார்வாகம், ஜைனம் அல்லது ஆருகதம், பௌத்தம் ஆகிய மூன்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். முதல் ஆறு தர்சனங்களும் அனேகம், துவைதம், ஏகம் என்பன போன்ற பலவிதமான தத்துவக் கொள்கைகள் அடங்கியவை.
(1) நியாயம், வைசேஷிகம், மீமாம்சை ஆகிய மூன்றும் அடிநிலைப் பொருள்களைப் பல என்றே கூறுவதால் அவை அனேகாந்தத் தன்மையுடையன. சடப்பொருள் அணுவாலாகியது. அவ்வணுக்கள் பல இனங்களாம். அணுக்கள் சேர்ந்தே பிரபஞ்சம் உண்டாயிற்று. எல்லையற்ற நித்தியமான ஆன்மாவும் பல திறப்பட்டதே. அது தன் தனிப் பண்பு நிலையில் எதனுடனும் உறவற்றது. ஆனால் சத்துடன் உறவு கொள்ளும்பொழுது உடலும் பொறிகளும் பெற்று, எல்லை உணர்ச்சி பெறுகின்றது.
(2) சாங்கியமும் யோகமும் பௌதிக உலக முழுவதையும் 'பிரகிருதி' என்று கூறும். வேறு வேறு இயல்புகளிருப்பினும், வேறு வேறாகப் பிரிக்க வொண்ணாத குணங்களாகிய சத்துவம், ராஜசம், தாமசம் என்னும் மூன்று குணங்கள் பிரகிருதிக்கு உண்டு. இந்தக் குணங்கள் பலவிதமாகச் சேர்வதனாலேயே பௌதிக உலகத்திலுள்ள பொருள்கள் அனைத்தும் உண்டாயிருக்கின்றன. ஆன்மா என்பதை இந்தத் தர்சனங்கள் 'புருஷன்' என்று கூறும். புருஷன் அந்தக்கரணம் போன்ற பௌதிகக் கூறுகளுடன் சேர்ந்தபோதிலும் அது தனித்தே நிற்கும் இயல்புடையது. புருஷர்கள் பலராயினும் புருஷன், பிரகிருதி என்னும் இரண்டு தத்துவங்களே பிரதானமாகக் கூறப்படுவதால் இவ்விரு தர்சனங்களும் துவைதத் தன்மையே உடையன.
(3) வேதாந்தம் ஒருபொருள் வாதத்தைச் சேர்ந்தது. அது உபநிடதக் கருத்துக்களை விவரித்துப் பிரமமே பிரபஞ்சத்துக்கும் ஆன்மாவுக்கும் மூலம் என்று கூறுகிறது. ஆயினும் பிரமத்துக்கும் பிரபஞ்சத்துக்குமுள்ள உறவும்,பிரமத்துக்கும் ஆன்மாவுக்குமுள்ள உறவும் வேறுவேறு விதமாகக் கூறப்பட்டிருக்கிறது. ஒரு கருத்து, பிரபஞ்சமும் ஆன்மாவும் பிரமத்தைச் சார்ந்தனவாயிருப்பினும், உள்ள பொருள்களே என்று கூறுகிறது. மற்றக் கருத்து அவை இரண்டும் பிரமத்தின் தோற்றங்கள் மட்டுமே என்று கூறுகின்றது. உள்ள பொருள்களுக்கெல்லாம் பிரமமே மூலம். அதுவே தனிப் பரம்பொருள் என்பதை இரண்டு கருத்துக்களும் ஏற்றுக்கொள்கின்றன. பிரமத்தின் பண்பைக் கூறும்பொழுது ஒன்று சகுணம் என்று கூறுகிறது. மற்றது நிர்க்குணம் என்று கூறுகிறது. சகுணக் கருத்தே முதலில் தோன்றியது. ஆனால் சங்கரருடைய இரண்டாவது கருத்தே நீண்ட நாளாக நிலைத்து நிற்பது
நோக்கம்: பிரபஞ்சத்தின் காரணம் யாது என்று சிந்திப்பது மனித அறிவின் இயல்பு. காரணத்தைக் கண்டுவிட்டால் அது திருப்தி அடையும். அதுவே தத்துவ சாஸ்திரத்தின் நோக்கம் என்பது மேனாட்டுத் தத்துவ சாஸ்திரிகளின் கருத்து. ஆனால் அது போதாது, அறவாழ்வு விஷயத்தைப் பற்றிய கருத்தையும் கூறி, மனிதனுடைய முழு இயல்பையும் திருப்தி செய்வதே தத்துவ சாஸ்திரத்தின் நோக்கம் என்று இந்தியத் தத்துவ சாஸ்திரிகள் கூறி வருகிறார்கள். ஆறு தர்சனங்களும் ஆன்மாவைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் வேறு வேறு விதமான கருத்துக்கள் உடையனவாயிருப்பினும், அவை ஒன்றுபோலப் பிரபஞ்சத்தைவிட ஆன்மாவையே பிரதானமாகக் கருதுகின்றன. இக்காரணத்தால்தான் இந்தியாவில் தத்துவ சாஸ்திரம், அத்யாத்ம சாஸ்திரம் அதாவது ஆன்ம விஞ்ஞானம் என்று கூறப்படுகிறது. ஆகவே அது பௌதிகக் கலையாக ஓதப்படுவதைவிட அதிகமாக ஆன்மக் கலையாகவே ஓதப்படுகிறது. தத்துவ சாஸ்திரம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாகும். கருத்தையும் வாழ்வையும் பிரிக்கக் கூடாது என்பது இந்திய அறிஞர்களுடைய திடமான எண்ணம்.
அதற்காகவே அவர்கள் உயர்ந்த உண்மையை அறிய விரும்புகிறார்கள். ஒவ்வொரு தர்சனமும் உண்மையான ஆன்மா என்றும், சீவாத்மா என்றும் வேறுபடுத்திக் கூறுகின்ன்றது. உதாரணமாக வேறு வேறாகத் தோன்றும் ஆன்மாக்கள் உண்மையிலேயே எல்லையற்ற ஏகவஸ்துவே என்பது வேதாந்தத்தின் கருத்து. சீவான்மா குறைபாடு உடையது. உண்மையான ஆன்மா அஃதில்லாதது. இந்தக் கருத்தை அறிவது அறிவைத் திருப்தி செய்வதற்காக மட்டுமன்று, அதைப் பயன்படுத்தி வாழ்வை நடத்துவதற்காகவுமாகும். அதாவது தாழ்ந்த தன்மையை விடுத்து, உயர்ந்த ஆன்ம தத்துவத்தின் பிரகாரம் நடப்பதற்காகவேயாகும். இதுதான் ஆன்ம விடுதலையாகிய முக்தி என்பது. இதுதான் மனிதனுடைய குறிக்கோளா யிருக்கத் தகுவது.
இந்த நிலையை அடைவதற்குக் கையாள வேண்டிய அனுஷ்டான நெறிகளை எல்லாத் தர்சனங்களும் வகுத்திருக்கின்றன. அவை இரு வகைப்படும். (1) கீதையில் கூறப்பட்டுள்ள நிஷ்காமியகருமம் என்னும் கருத்தைக் கையாண்டு, பற்றற்ற தன்மையாகிய வைராக்கிய நிலையை அடைவதற்காக ஏற்பட்டது ஒரு முறை. (2) தத்துவ சாஸ்திரத்தைக் 'கற்று அறிந்துகொண்டு, ஆன்ம உண்மையை அனுபவ வாயிலாக உணர்வதற்காக ஏற்பட்டது மற்றொரு முறை. உண்மையான ஆன்மாவைச் சதாகாலமும் தியானம் செய்வதால் அந்த அனுபவம் கைகூடும்.
இந்த இலட்சியம் கைகூடுமா என்பதில் இந்தியர்களுக்கு ஒரு நாளும் ஐயமில்லை. ஆனால் பரத்தில்தான் கைகூடும் என்று ஆதியில் எண்ணி வந்தார்கள்; இகத்திலேயே கைகூடும் சீவன் முக்தி (உயிருள்ளபொழுதே விடுதலை) பெறலாம் என்று பின்னால் கருதலானார்கள். ஆகவே எவரும் முயன்றால் இகத்திலேயே அந்த இலட்சியத்தை அடைய இயலும். ஆகவே மனிதனுடைய இலட்சியம் பரத்திலடையும் ஒன்று என்பதுமாறி, இகத்தில் அடையும் ஒன்றுக்காகச் செய்யும் இடைவிடாமுயற்சி என்று விரிவடைந்தது. இந்தக் கருத்தைச் சாங்கிய யோகமும் வேதாந்தமுந்தான் ஏற்றுக் கொள்கின்றன. ஆயினும் அவைகளும் யோகிகள் வாழ்வின் இறுதியில் விடுதலை பெறுவதாகவே கூறுகின்றன. வேறுபாடெல்லாம் வைராக்கிய, தியான அனுஷ்டான முறைகள் எதுவரை கையாளப்பட வேண்டும் என்பதிலேயே. உண்மை ஞானம் உதித்தபின் அவை தேவையில்லை என்று சாங்கிய யோகமும் வேதாந்தமும் கூறுகின்றன. மற்றத் தர்சனங்கள் இறக்கும்வரை தேவையே என்று கூறுகின்றன.
மேற்கூறிய வைராக்கிய, தியான முறைகளை மேற்கொண்டு சீவன் முக்தி பெற்றால், அப்பொழுது சுயநலக்கொடுமை நீங்கும். ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளும் காரியங்கள் நடைபெறா. ஏகவஸ்துக் கருத்தை அனுபவ வாயிலாக அறிவதால் சகல சீவர்களையும் தனக்குச் சமானமென மட்டும் கொள்ளாமல் தானாகவே பாவித்து அன்பு செய்யும் குணம் தோன்றும். அதன் காரணமாகத் தாமாகவே பிறர் துன்பம் துடைக்கும் வேலையில் ஈடுபடுவர். அனேகாந்த வாதத்தை ஏற்கும் தர்சனங்களை நம்புகிற ஞானிகளும் இவ்விதமே ஈடுபடுவர். ஆனால் அவர்கள் பிறரைத் தாமாக எண்ணி அன்பு செய்வதற்குப் பதிலாகப் பிறரிடம் கருணை பிறக்க அன்பு செய்வர். ஆகவே உண்மை ஞானம் பெற்ற பெரியோர்கள் ஆன்ம ஞானமும் விடுதலையும் பெற்றதோடு திருப்தி அடையாமல் பிறரையும் அடையுமாறு செய்ய முற்படுவர். புத்தரைப் பிரதானமான உதாரணமாகக் கூறலாம்.ஆனால் இந்தியாவில் அவர் போல் எண்ணிறந்த பெரியோர்கள் தோன்றியுளர். ஆன்ம ஞானம் பெறுவதே தத்துவ சாஸ்திரத்தின் நோக்கம் என்று கூறினும், எல்லா மக்களும் நன்மை பெற உழைப்பது என்பதும் அதன் பொருளாகும். எம். ஹி.