கலைக்களஞ்சியம்/இந்திய அரக்கு ஆராய்ச்சிக் கழகம்
இந்திய அரக்கு ஆராய்ச்சிக் கழகம் (Indian Lac Research Institute): அரக்கின் தரமும் விலையும் அடிக்கடி மாறி வந்ததோடு, செயற்கை ரோசனங்களும் தோன்றியதால், அரக்குத் தொழிலை நிலை நிறுத்துவதற்கான கருத்துக்களைக் கூறுமாறு, முதல் உலக யுத்தத்தின் பின்னர் இந்திய அரசாங்கத்தார் ஒரு குழுவை அமைத்தனர். அக் குழுவின் கருத்துக்களை ஏற்று, அரசாங்கத்தார் 1922-ல் இந்திய அரக்குச் சங்கத்தை நிறுவினர். இச் சங்கம் 1924-ல் அரக்கு மிகுதியாக உண்டாகும் பீகாரில் ராஞ்சிக்கு அருகிலுள்ள நம்கும் என்னுமிடத்தில் இந்திய அரக்கு ஆராய்ச்சி நிலையத்தை அமைத்தது. இது 1931 முதல் இந்திய அரக்கு வரிக் கமிட்டியின் ஆதிக்கத்தின்கீழ் வேலை செய்து வருகிறது. தொடக்கத்தில் இதன் நோக்கம் அரக்கு விளைவிப்பதையும், அவல் அரக்குச் செய்வதையும் வளர்ப்பதாக இருந்தது. இப்போது அது அரக்கைப் பயன்படுத்தக் கூடிய புதிய வழிகளைக்கண்டு பிடிக்கவும் ஆராய்ச்சி செய்துவருகிறது. இதனுடன் மாணவர்க்கு அரக்குத் தொழில் பயிற்சி பற்றிய அளிப்பதும், அரக்கையும் அவலரக்கையும் பற்றி அறிய விரும்புவோர்க்குச் சொல்வதும் அதன் பணியாகும். ஆராய்ச்சியில் கண்ட பொருள்களைச் சிறு நூல்கள் வாயிலாகவும் இதழ்கள் வாயிலாகவும் மக்களுக்குத் தெரியச் செய்து வருகிறது. இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் நடக்கும் கண் காட்சிகளில் கலந்து கொள்கிறது. உலகத்தில் அரக்குப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிலையம் இது ஒன்றே.