கலைக்களஞ்சியம்/இந்திய அரசாங்க சர்வே இலாகா
இந்திய அரசாங்க சர்வே இலாகா: இந்தியாவைப் பற்றிய முதல் தேசப் படம் 1752-ல் டா' ஆன்வில் (D′ Anville) என்னும் பிரெஞ்சுக்காரரால் வெளியிடப்பட்டது. ஆனால் கிளைவ் பிரபு 1767-ல் மேஜர் ஜேம்ஸ் ரென்னல் என்பவரை வங்காளச் சர்வேயர் ஜெனரலாக நியமித்த பின்னரே இந்தியாவைச் சர்வே செய்யும் வேலை தொடங்கப்பட்டது. ஆயினும் 1802-ல் சென்னையில் முக்கோண முறை என்பது கையாளப்பட்ட பின்னரே தேசப் படங்கள் துல்லியமாகத் தயாராயின. 1905 முதல் 1939 வரை ஆண்டு தோறும் 30-60 ஆயிரம் சதுர மைல் பரப்புள்ள நிலம் சர்வே செய்யப்பட்டு வந்தது. இந்த இலாகா எந்த இராச்சியமாயினும், நகரசபையாயினும், வியாபார நிலையமாயினும் பணம் தந்தால் சர்வே செய்தும் லித்தோ படங்கள் தயாரித்தும் தரும். இந்த இலாகா இந்திய விவசாய மந்திரியின்கீழ் வேலை செய்கிறது. தலைமை அலுவலகம் டெல்லியிலிருக்கிறது. தேசப்படம் தயாரிக்கும் தலைவருடைய அலுவலகம் டேராடூனில் இருக்கிறது.