கலைக்களஞ்சியம்/இந்திய அரசாங்கப் புவியியல் சர்வே
இந்திய அரசாங்கப் புவியியல் சர்வே: இது உலகிலுள்ள மிகப் பழைய சர்வேக்களுள் ஒன்று. இது 1851-ல் நிறுவப்பெற்றது. இதன் தலையாய தொழில் இந்தியப் புவியியல் தேசப்படம் தயாரிப்பதாகும். அப்படமே தாதுப்பொருள் உள்ள இடங்களை ஆராய்வதற்குப் பயன்படும். இதன் தலைமை அலுவலகம் கல்கத்தாவில் இருக்கிறது. அங்குப் பொருட்காட்சிச் சாலையும் சோதனைச் சாலையும் உள்ளன. அங்குப் புவியியல் தேசப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இலாகாவின் ஆராய்ச்சி அலுவலாளர்கள் நாடெங்கும் சென்று கனிகள், நீர் உள்ள கீழ்ப்பகுதிகள் முதலியவை குறித்துத் தேடிப் பார்க்கிறார்கள். ஆராய்ச்சிச் சிறு நூல்களும், 'இந்தியத் தாதுப் பொருள்கள்' என்ற காலாண்டு இதழும் வெளியிடப்படுகின்றன.