கலைக்களஞ்சியம்/இந்திய அரசாங்க மானிடவியல் இலாகா
இந்திய அரசாங்க மானிடவியல் இலாகா (Department of Anthropology, Government of India) : மானிடவியல் நீண்டநாளாக விலங்கியல்இலாகாவின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. 1946-ல் தனியாக இந்திய மானிடவியல் இலாகா நிறுவப்பெற்றது. அதன் தலைமைத் தலம் முதலிற் சிலகாலம் காசியிலிருந்தது. பின்னர் 1948-ல் இது ‘மானிடவியல் இலாகா’ என்று பெயரிடப்பெற்றுக் கல்கத்தாவிலுள்ள இந்தியப் பொருட்காட்சிச்சாலைக்கு மாற்றப்பட்டது. இதற்கு வேண்டிய நூல் நிலையமும் சோதனைச்சாலையும் நிறுவப்பெற்றுள்ளன. இது செய்யும் ஆராய்ச்சிபற்றி இதழ்களும் நூல்களும் நாட்டு மொழிகளில் வெளியிடப்படுகின்றன. இது ஆராய்ச்சி வேலை செய்வதுடன் பட்டம்பெற்ற மாணவர்கட்குப் பயிற்சியும் அளித்து வருகிறது. அயல்நாட்டு மாணவர்களும் அயல்நாட்டு மானிடவியல் அறிஞர்களும் இங்கு வந்து ஆராய்ச்சி செய்வதற்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்படுகின்றன.